உலகப்
புத்தக நாள் ஏப்ரல்-23-nவை. கலையரசன்
| உ |
லகில் மனிதர்களின் அறிவை வளர்க்கும் மிகச் சிறந்த நண்பன் புத்தகம் ஆகும். நல்ல புத்தகங்கள் அறிவு நீர்வீழ்ச்சிகளாகும். அறியாமை இருளில் சிக்கி உள்ள மனித குலத்தை அறிவு வெளிச்சத்திற்கு அழைத்துச் சென்று மனிதர்களின் சிறப்பு அம்சமான ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை சாணைத் தீட்டி முனை மழுங்காமல் எப்போதும் கூர்மையாக வைத்திருக்க உதவும் கருவிகளே புத்தகங்களாகும்.
மனிதன் சிந்திக்கவும், தீர்வை நோக்கி கற்பனை செய்யவும், முன்னேறவும் உதவும் மிகப் பெரிய கருவிகள் புத்தகங்களே. அந்த புத்தகங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை 1995 ஆம் ஆண்டு UNESCO அறிவித்தது. ஏப்ரல் 23 என்பது புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் சேக்ஸ்பியர் நினைவு நாளாக இருப்பதால் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
‘‘உடல் நலத்திற்கு ஊட்டச்சத்துக்கள் வைட்டமின்கள் எவ்வளவு முக்கியமோ அது போன்று உள்ள நலத்திற்கும், வளத்திற்கும் புத்தகங்கள் அரிய ஊக்கச் சத்துக்கள் ஆகும்’’ என்பார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அத்தகைய புத்தகங்கங்களைப் பதிப்பிக்கும் பதிப்புத் துறையில் நுழைந்து அதன் போக்கையே மாற்றியமைத்தவர் தந்தை பெரியார். புத்தகத் துறையில் புரட்சி செய்து, தாம் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் மாபெரும் சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்.
1929ஆம் ஆண்டு சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களின் ‘ஞானசூரியன்’ என்னும் புத்தகத்தினை வெளியிட்டதுடன், தொடங்கியது ‘குடிஅரசு’ பதிப்பகத்தின் பணி. பெயர்கள் மாறினாலும் அதன் பதிப்புப் பணியில் எந்தக் கொள்கை மாற்றமும் இன்றி வெற்றி நடைபோடுகிறது. இன்று 97ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டு பரப்பி வருகிறது.
1930களில் பெண்களின் உரிமைகள் சார்ந்த, புரட்சிகரமான புத்தகங்களை வெளியிட்டு பரப்பியது இந்தப் பதிப்பகம். குறிப்பாக, “பெண் ஏன் அடிமையானாள்?”, “கர்ப்பத்தடை’’, “விவாக விடுதலை” போன்ற புத்தகங்கள் இன்றைய நவீன பெண்ணியத்தின் முன்னோடியான புத்தகங்களாகும்.
1935ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர்
அவர்களின் ஜாதியை ஒழிக்க வழி என்னும் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் மூலம் அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், அண்ணல் அவர்களின் ஜாதி ஒழிப்பு சிந்தனைகளையும் தமிழ் மண்ணில் முதலில் பரப்பிய பெருமையை பெற்றது.
மார்க்ஸ் ஏங்கல்ஸ் கூட்டு அறிக்கையான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியிட்ட தந்தை பெரியார், தொடர்ந்து புத்தகமாகவும் வெளியிட்டார். மேலும் பொது உடைமைத் தத்துவங்கள்’
‘புது ரஷ்யா’ ‘லெனினும் மதமும்’ ‘காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு’ ‘சோவியத் ரஷ்யாவின் அய்ந்தாண்டுத் திட்டங்கள்’ போன்ற பொதுவுடைமை சார்ந்த புத்தகங்களையும் காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டார்.
‘குடிஅரசு’ பதிப்பகம் பல்வேறு சமூகப் புரட்சிக்கான புத்தகங்களை வெளியிட்டு வந்த அதே நேரத்தில், கூடுதலாக பகுத்தறிவு நூற் பதிப்பு கழகம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார் தந்தை பெரியார். அதன் வழியாக உலக தத்துவ சிந்தனையாளர்களின் நூல்களை தக்க அறிஞர்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவர்களுள் முக்கியமானவர்கள் காரல் மார்க்ஸ், லெனின் அறிவுலக மாமேதை ராபர்ட் கிரீன் இங்கர்சால், பெர்ட்ரண்ட் ரசல், அறிஞர் பெர்னாட்ஷா, சார்லஸ் டி கார்கோம், டவுன் பாக்ஸ், ஜோசப் மெகாபி, மார்ஷல் ஜே காவின், பாதிரியார் செனிக்கியூ, பாதிரியார் ஜீன் மெஸ்லியர் போன்றவர்களின் புத்தகங்களை அனுமதி பெற்று தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். மேலும் சாக்ரடீஸ், லெனின், காரல்மார்க்ஸ்.
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் ‘கடவுளும் பிரபஞ்சமும்,’ ‘விஞ்ஞான முறையும், மூடநம்பிக்கையும்,’ ‘சமதர்ம உபநியாசம்,’ ‘சுயராஜ்யமா சமதர்ம ராஜ்யமா?’ போன்ற புத்தகங்களையும் வெளியிட்டார்.
மேலும், மூட நம்பிக்கைகளின் வேராக விளங்கும் கடவுள், மதம், புராணங்கள், இதிகாசங்கள் குறித்த நூல்களை ஆய்வு செய்து அங்கு காணப்படும் மோசடிகளைத் தோலுரித்து, அவற்றின் புரட்டுகளை மக்களிடம் சேர்க்கும் வகையில் ஏராளமான புத்தகங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்.
புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களுக்கு, அறிவாயுதங்களாக விளங்கிய புத்தகங்களைப் புதுப்பிக்கும் அறிவாயுதப் பட்டறைகளான பெரியாரின் பதிப்புகள், அவருக்குப் பின்னரும் இன்னும் மேலும் பறந்து விரிந்த பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பிலும் திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகத்தின் சார்பிலும் இன்று 97ஆம் ஆண்டில் 850-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு பரப்பி வருகிறது.
திராவிடர் கழகத்தின் பிரச்சார முறைகளில்
மிக முக்கியமானது புத்தகங்களை வெளியிட்டு பரப்புதல். எந்தக் காலகட்டத்தில் எது பற்றிய விவாதங்கள் இருந்தாலும் அது குறித்த உண்மைச் செய்திகளை பொது மக்களுக்கு விளங்கிடும் வண்ணம் எளிய மொழியில் குறைந்த விலையில் மக்கள் பதிப்பாக பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு பரப்பி வருகிறது.
திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்த புத்தகங்களைப் பதிப்பிப்பதோடு நில்லாமல் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு போய் சேர்ப்பதில் மிகுந்த கவனமாகச் செயல்படுகிறார். இத்தகையப் புத்தகங்களை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் வகையில் தமது தொடர் பிரச்சார பயணத் திட்டங்களை வகுத்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று அந்தப் புத்தகங்களை கொண்டு சேர்க்கும் களப்பணியாளர்களின் முன் வரிசையில் நிற்கிறார்.
சமூக நீதிக்குப் பிரச்சனையா? ஈழத் தமிழர் பிரச்சனையா? சேது கால்வாய்த் திட்டமா? தமிழ்நாட்டின் தமிழர்களின் நலன்களைப் பாதிக்கும் பிரச்சினைகளா? மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் திட்டங்களா, எதுவானாலும் அது பற்றிய சிறு வெளியீடுகளை மக்கள் பதிப்பாக மலிவு விலையில் ரூபாய் 10 முதல் வெளியிட்டு பரப்பி வருகிறார்.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள
‘நீட் தேர்வு கூடாது ஏன்?’ ‘புதிய கல்விக் கொள்கையா?’ ‘நவீன குலக்கல்வித் திட்டமா?’ “ஜாதி வாரிக் கணக்கெடுப்பு அவசியம் ஏன்?” ‘மகளிர் இடஒதுக்கீடும் சமூக நீதியும்’, ‘மீண்டும் குலக்கல்வித் திட்டமா?’ ‘குருகுலக் கல்வியா?’ சமஸ்கிருத பண்பாட்டு படையெடுப்பா?,
‘“வந்தே மாதரம் வாழ்த்துப் பாடலா? வசைப் பாடலா?” ‘“காந்தியார் பெயரையும் அழித்து 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க சூழ்ச்சியா?”
“பெண்கள் முன்னேற்றத்திற்கு தந்தை பெரியார் செய்தது என்ன?”.
போன்ற புத்தகங்கள் கடந்த சில ஆண்டுகளில் வெளியிடப்பட்ட புத்தகங்கள்.
பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தில் திராவிடர் கழகம் ஈடுபடும் போதும் தேர்தல் புத்தகங்களை வெளியிடும் பொழுதும் பெரியார் கொள்கையை பரப்ப வேண்டிய திராவிட கழகம் அரசியல் கட்சிகளுக்காக ஏன் பிரச்சாரம் செய்கிறது? ஏன் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறது என்று சிலர் தங்கள் அறியாமையால் கேள்வி எழுப்புகிறார்கள்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் முதன்மையான நோக்கங்
களின் முதல் நோக்கம் மக்களுக்கு அரசியல் கல்வியை, விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பதாகும். இந்த அடிப்படையில் தான் வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும்போது தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள், கடந்த கால ஆட்சிகள் மற்றும் கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட செய்திகளைத் தொகுத்து வெளியிட்டு வழங்கி அவைக் கடைகோடி மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றனர்.
தந்தை பெரியார் காலத்தில் ‘‘ஆச்சாரியார் ஆட்சியில் கொடுமைகள்’’, ‘‘காமராஜர் ஆட்சியில் சாதனைகள்’’, ‘‘கிளர்ச்சிக்கு தயாராவோம்’’ போன்ற புத்தகங்களை வெளியிட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கிய பின் ‘‘தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்’’ என்னும் புத்தகம், தி.மு.க. அரசு பெரியார் கொள்கைகளில் வேகமாக பணியாற்றிய செயல்பாடுகளையும், தமிழ் மக்களின் கல்வி பொருளாதார சமூக மேம்பாட்டுக்கான தி.மு.க. ஆட்சி செய்த சாதனைகளையும் தொகுத்து வெளியிடப்பட்டது.
தந்தை பெரியாருக்குப் பிறகும் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் தேர்தல் புத்தகங்களை வெளியிட்டு பரப்புகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது முத்தான புத்தகங்களை வெளியிட்டது. ‘‘மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை விரட்டியடிப்போம்,’’ ‘‘தேர்தல் பத்திரம் பிரீபெய்டு போஸ்ட் பெய்டு ஊழல்கள்’’ போன்ற புத்தகங்களை வெளியிட்டு, மக்கள் விரோத பாரதிய
ஜனதாக் கட்சியின் மதவெறி நடவடிக்கை
களையும், ஊழல்களையும் எடுத்துக் காட்டியது.
தற்போது 2026ஆம் ஆண்டு தேர்தலுக்காக மூன்று புத்தகங்களை மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளது திராவிடர் கழகம்.
1. ‘திராவிட மாடல்’ அரசு ஆட்சி தொடர வேண்டும் – ஏன்?
‘திராவிட மாடல்’ கல்வித்துறையில், முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு விளங்க அடித்தளமாக அமைந்தத் திட்டங்கள்
மகளிர் முன்னேற்றத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி உள்ள, பெண்களுக்கானத் திட்டங்கள் மற்றும் அரசாணைகள்
இந்திய அளவில் பொருளாதாரத் துறையிலும் தொழில்
துறையிலும் தமிழ்நாடு பெற்றிருக்கின்ற அபரிமிதமான வளர்ச்சி
உழவர் நலன், வேளாண் வளர்ச்சி, மற்றும் விளிம்பு நிலை மக்கள் விடியலுக்கான வளர்ச்சித் திட்டங்கள்
ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கையேடு
2. அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணிக்கு வாக்களிக்கக்
கூடாது – ஏன்?
இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை ஒழித்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க பாசிச பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்.
தேவையான, தரவேண்டிய கல்வி மற்றும் நலத்திட்டங்களுக் கான நிதியைத் தராமல், தமிழ்நாட்டை வஞ்சித்துப் பழிவாங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்கள்.
3. மீண்டும் தி.மு.க. – ஸ்டாலின் ஆட்சியே வரவேண்டும் – ஏன்?
ஒரு வரலாற்றுப் பின்னணியோடு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் பல்வேறு துறைகளில், திராவிடமாடல் ஆட்சி செய்துள்ள சாதனைகள்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் மற்றும் அவர்களது செயல்பாடுகளில் உள்ள முரண்பாடுகள்.
மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும், ஜனநாயகத்தையும் காக்க, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஒன்றிணைந்த செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்குகிறது.
மேற்கண்ட புத்தகங்கள் இன்று தமிழ்நாட்டில் வலம் வருகின்றன.
விழிப்புணர்வூட்டும் திராவிடர் கழகத்தின் புத்தகப் புரட்சி. w
