பெண்கள் மென்மையானவர்கள் என்பது ஒரு பொதுவான கருத்து. பெண்கள் என்றாலே அன்பு, கருணை, பரிவு மற்றும் உணர்வுப் பூர்வமானவர்களாக இருப்பதால் அவர்கள் மென்மையானவர்கள் என்று கூறப்படுகிறது.
பெண்களின் மென்மை என்பது அவர்களின் உணர்வுப்பூர்வமான தன்மை
யைக் குறிக்கிறது. இந்த மென்மைத் தன்மையாலேயே அவர்கள் அன்பானவர்
களாகவும், கருணையானவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
உண்மையிலேயே பெண்கள் மென்மையானவர்களா இல்லை. மென்மைத் தன்மை மட்டுமே கொண்டவர்களா? சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரை அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகைக் குணங்களும் பெண்களுக்காக வரையறுக்கப்பட்டு உள்ளன.
அச்சமற்றும், மதிநுட்பத்தோடும், வீரம் மிகுந்தும் பெண்கள் வாழக்கூடாதா? வாழவும் இல்லையா?
என்றைக்கும் கதவின் பின் நின்றே காலம் கழிக்கும் மென்மையான பெண்கள் தான் இங்கே தேவையா?
உலக வரலாற்றிலும் இந்திய நாட்டிலும் பெண்களின் வீரம் போற்றப்பட
வில்லையா? எத்தனை நாளைக்குத்தான் பெண்கள் மென்மையானவர்கள் என்று சொல்லியே ஏமாற்றப் போகிறார்கள்? பெண்கள் மெல்லினமல்ல; பெண் வலிமைமிக்கவள்; ஆக்கம் நிறைந்தவள்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பெண்ணாகப் பிறந்தாலும் கல்வி மறுக்கப்பட்டாலும்
கடுமையான எதிர்ப்புக்கு இடையிலும் கல்வி கற்றுத் தேர்ந்தவர் சாவித்திரிபாய்
பூலே. தான் கற்றக் கல்வியை, தன்னைப் போன்ற பிற மாணவர்களுக்கும் கற்பித்தே
தீருவேன் என்ற உறுதியில் மலத்தை தன்மீது வீசினாலும் சாணத்தை எறிந்தாலும் ஆடையெல்லாம் துர்நாற்றம் வீசினாலும் மாற்று உடையோடு மாணவர்களுக்குப் பாடம் கற்பித்த சாவித்திரி பாய் மெல்லினமா?
பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற கட்டுப்பாட்டைத் தகர்த்து மருத்துவக் கல்லூரியில் ஒரே பெண்மணியாக படித்து மருத்துவராகி, பின்னாளில் ஸநாதனத்தை எதிர்த்து, தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் எழுப்பிய மருத்துவர் முத்துலட்சுமி மெல்லினமா?
தேவதாசிக் குலத்தில் பிறந்து தேவதாசி முறையை எதிர்த்தும், மூடநம்பிக்கையை எதிர்த்தும் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தவர் மூவலூர் ராமாமிர்தம் அவர்கள். அவர் உரையாற்றிக்கொண்டு இருந்த மேடை யிலேயே அவரது தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்தியபோதும் தொடர்ந்து உரையாற்றிய ராமாமிர்தத்தம்மையார் மெல்லினமா?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி விட்டபோதிலும், அது அவர்கள் வாழ்க்கை
யில் மிகப்பெரிய தழும்பாக இருந்த போதிலும் மனம்தளராமல் தங்களுக்குச் சமூகநீதி வேண்டும் என்று 31 ஆண்டுகளாகப் போராடி வெற்றி பெற்ற வாச்சாத்தி கிராமத்துப் பெண்கள் மெல்லினமா?
நல்ல கல்வி கற்று, விண்வெளியில் பயணம் மேற்கொண்டு விண்வெளியில் தங்கி, சாதனை படைத்த கல்பனா சாவ்லாவும், சுனிதா வில்லியம்சும், சிரிசா பந்தலாவும் மெல்லினமா?
ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய ராணி வேலு நாச்சியாரும், ஜான்சி ராணி லட்சுமிபாயும் மெல்லினமா?
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மும்பை மைதானத்தில் இந்திய தேசியக்
கொடியை ஏற்றிய அருணா ஆசாப் அலி மெல்லினமா?
ஸநாதனத்தின் கொடுமைகளை எதிர்த்து கருப்பு ஆடையோடு உரிமைக்குரல் எழுப்பும் திராவிடப் பெண்கள் மெல்லினமா?
இந்தியாவே வியந்து பார்க்கும் அளவு தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியலை முன்னின்று நடத்திய நாகம்மையாரும், கண்ணம்மாவும் மெல்லினமா?
எத்தனையோ பழிச்சொற்களுக்கு ஆளான போதும், வசவு வார்த்தைகளால் தூற்றப்பட்ட போதிலும் பெரியாருக்குப் பணி விடை செய்து, அவருக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைமையை ஏற்றவர் அன்னை மணியம்மையார். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இராம லீலாவுக்கு எதிராக இராவண லீலா நடத்திக்காட்டிய மணியம்மையார் மெல்லினமா?
குஜராத் கலவரத்தின் போது, 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் மூன்று வயது குழந்தையையும் கொன்ற கொடுமைக்காரர்களை எதிர்த்து வழக்குத் தொடுத்து, தங்களின் அதிகாரத்
தைக் காட்டி வெளியே வந்த அவர்களை மீண்டும் 11 ஆண்டுகள் போராடி சிறையில் தள்ளிய பில்கிஸ் பானு மெல்லினமா?
மொழிப் போராட்டத்தின்போது நிறை மாதக் கர்ப்பிணியாக போராட்டத்தில் கலந்து
கொண்டு சிறை சென்று, சிறை அதிகாரிகள் மன்னிப்புக் கடிதம் தந்தால் விடுதலை செய்கிறேன் என்று சொன்னபோதும் அதற்குத் தயங்காமல் சிறை சென்ற பெண்கள் மெல்லினமா?
ஆணுக்கு இணையாக அனைத்து வேலை களையும் செய்யும் பெண்கள் மெல்லினமா?
குடிகாரக் கணவனையும், துன்புறுத்தும் கணவனையும் எதிர்த்துத் தனியே வந்து, பிள்ளைகளையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு போகும் பெண்கள் மெல்லினமா?
இல்லை… பெண்கள் மெல்லினமல்ல; அவர்கள் வீரம் மிகுந்தவர்கள். விவேகம் மிகுந்தவர்கள். அறிவு மிகுந்தவர்கள். ஆற்றல் மிகுந்தவர்கள். உள்ள உறுதி உடையவர்கள். பொறுமை அவர்கள் குணநலன் எனினும் அநீதிகளைக் கண்டு புயலென ஆர்ப்பரித்து எழக்கூடியவர்கள்!
பயிற்சி மேற்கொண்டால் ஆண்களையே வீழ்த்தும் உடல் வலிமையும் கொண்டவர்கள். குத்துச்சண்டையில் ஆண்களை வீழ்த்தியும் காட்டியவர்கள்!
பெண்களை, பூக்களோடு ஒப்பிட வேண்டாம்! மென்மையானவர் என்று முத்திரை குத்த வேண்டாம்!
பெண்கள் வலிமையானவர்கள், ஆளுமை மிக்கவர்கள் எதையும் திறம்படச் செய்யும் திறன் படைத்தவர்கள்! இதை உலகளவில் ஒவ்வொரு நாளும் பலதுறைகளிலும் உறுதி செய்து வருகிறார்கள். ஆம் மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும்!
வாழ்க பெண்கள்!
வளர்க பெண்கள்!! w




