Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

காடு – ஆறு. கலைச்செல்வன்

“என் கிராமத்திற்கு வா. இங்கு ஒரு சிறிய அளவிலான காடு உள்ளது. அங்கு நிறைய மூலிகைச் செடிகள் உள்ளன. உனக்குத்தான் நிறைய ஆர்வம் மூலிகைச் செடிகள் மேல் உள்ளதே! உன் மளிகைக் கடையில் நிறைய மூலிகைப் பொருள்கள் விற்பதும் எனக்குத் தெரியும். வந்து நேரில் பார்” என்று தொலைதூரத்தில் இருக்கும் தன் நண்பர் நீதிராசனை அழைத்தார் செல்வழகன்.

“மலைப் பகுதியில் உள்ள காடுகளையெல்லாம் சாமியார்கள் அழித்து வரும் நிலையில், உங்கள் கிராமத்தில் காட்டைப் பாதுகாப்பது என்பது அரிதான செயல்தான். விரைவில் வருகிறேன்” என்று பதில் சொன்னார் நீதிராசன்.

அவர் சொன்னபடியே, ஒரு நாள் வனக்குப்பம் கிராமத்திற்கு வந்தார்.

செல்வழகன், அவரை அன்புடன் வரவேற்றார். மறுநாள் காலை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார். உடன், அதே ஊரைச் சேர்ந்த விவரம் அறிந்த அன்பானந்தம் என்ற இளைஞனையும் அழைத்துச் சென்றார்.

ஒரு குறுகிய பாதை வழியாக நீதிராசனை அழைத்துச் சென்றார்கள்.

உள்ளே சென்றதும் அடர்ந்த காடு. அதைப் பார்த்து வியந்தார் நீதிராசன். மரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன. மரங்களுக்கிடையில் செடி கொடிகளும் படர்ந்திருந்தன. தரையில் இலைகள் உதிர்ந்து மக்கிப் போயிருந்தன. பறவைகள் எழுப்பிய ஒலி எங்கும் எதிரொலித்தன.

“இங்கே விலங்குகள் இருக்குமா?” என்று கேட்டார் நீதிராசன்.

“இருக்காது. காரணம் சுற்றிலும் கிராமங்கள் இருக்கின்றன அல்லவா! அதனால்தான். அதுமட்டுமின்றி கொடிய விஷமுள்ள பாம்புகள் கூட அதிகம் இருக்காது. நாம் இந்தப் பாதையில் நடக்கும்போது ஏற்படும் காலடி ஓசை கேட்டு அவை ஓடிவிடும். அதனால் துணிச்சலாக வரலாம்.

செல்வழகன், அன்பானந்தம் இருவரும் முன்னே செல்ல, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார் நீதிராசன்.

செடி கொடிகளிலிருந்தும், மூலிகைச் செடிகளிலிருந்தும் கிளம்பிய அருமையான நறுமணம் இதமாக இருந்தது.

அப்போது மரங்களில் பின்னிப் படர்ந்திருந்த ஒரு தாவரம் நீதிராசன் கண்ணில்பட்டது.

“செல்வழகன், இது என்ன கொடி? இது பற்றிச் சொல்லேன்”,

“இதன் பெயர் செம்பிரண்டை, இது ஓர் அரிய வகைத் தாவரம். மூட்டு வலி, வாயு பிடிப்புக்கு நல்லது. உடைபட்ட எலும்புகளையும் இது குணப்படுத்தும். இதன் இலைகள், பழங்கள், வேர்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. என் தாத்தாவிடமிருந்து இவை பற்றித் தெரிந்து கொண்டேன்”, என்று பதில் சொன்னார் செல்வழகன்.

அடுத்து ஒரு முக்கியமான தாவரத்தை அறிமுகம் செய்தார் செல்வழகன். அதுதான் செங்காந்தள் மலர்ச் செடி. இச்செடிகார்த்திகை மாதத்தில் பூ பூக்கும். அதனால் இதற்குக் கார்த்திகைப் பூச்செடி என்றும் பெயர். இதன் பூக்கள் சிவப்பாக, தீப்பந்தம் போல் இருக்கும். இதைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் வலிக்குமாம். அதனால் இப்பூவிற்கு கண் வலிப்பூ என்ற பெயரும் உண்டாம். அதோடு மட்டுமல்லாமல் இதன் வேர்க்கிழங்கு கலப்பை வடிவத்தில் இருக்கும். எனவே, அதற்கு கலப்பைக் கிழங்கு என்று பெயர். மேலும், முக்கியமாக… என்று சொல்லவந்த செல்வழகனை இடைமறித்த நீதிராசன்,

“இது தமிழ்நாட்டின் மாநில மலர்”, என்று சொல்லி முடித்தார்.

“ஆமாம்”, என்று தலையசைத்தார் செல்வழகன்.

இந்த விவரங்களையெல்லாம் அறிந்து கொண்டு மிகவும் உற்சாகமடைந்தார் நீதிராசன். செங்காந்தள் செடியைப் பார்த்தது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் வந்து அதன் பூக்களையும் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அடுத்து அன்பானந்தம் ஒரு செடியைக் காட்டி அதுபற்றி விவரித்தான்.

“இதன் பெயர் காட்டுவள்ளிக் கிழங்குச்செடி. இதன் கிழங்கு பெரிய அளவில் இருக்கும். இது சிறுநீரகக் கோளாறுகளைச் சரி செய்யுமாம். இதை அவித்து சாப்பிடுவார்கள்”, என்று சொல்லிக் கொண்டே அந்தச் சிறிய செடியைத் தோண்டி எடுத்தான் அன்பானந்தம். அதில் சிறிய அளவிலான கிழங்கு இருந்தது.

“செடி இன்னும் வளர்ந்தால் கிழங்கு பெரியதாகி விடும்”, என்று சொல்லிக் கொண்டே தோண்டி எடுத்த செடியை மீண்டும் நட்டு. வேர்கள் நன்கு மறையும்படி மண்ணால் மூடினான் அன்பானந்தம்.

மூவரும் மேலும் நடந்தார்கள். பெரிய அளவிலான நாவல் மரம், இலந்தை மரம் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தார் நீதிராசன். அந்த மரங்களை வெளியில் பார்ப்பது அரிதாகி விட்டதே!

அப்போது முட்களுடன் கூடிய ஒரு கொடி படர்ந்திருப்பதைக் கண்டார் நீதிராசன். அந்தக் கொடி பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. அந்தக் கொடி பற்றி அறிய விரும்பினார்.

அவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அன்பானந்தம் அந்தக் கொடி பற்றி விளக்கினான்.

“இந்தக் கொடிக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு என்று பெயர். சதாவரி என்றும்
சொல்வார்கள். இதன் காய்கள் முருங்கைக் காய்களைப் போல் நீண்டிருக்கும்.”

“அதனால் ஏதேனும் பயன் உண்டா?” என்று கேட்டார் நீதிராசன்.

“நிறைய உண்டு. இதன் காயை இரண்டாகக் கிழித்தால் நடுவில் நரம்பு இருக்கும். அதை நீக்கி விட வேண்டும். மேல் தோலையும் நீக்கிவிட வேண்டும். அதைத் தூளாக்கி பாலில் போட்டு காய்ச்சிக் குடித்தால் ஆண்மைக் குறைவு சரியாகும். மேலும் மாதவிடாய்க் கோளாறுகளும் நீங்கும். வெட்டைச் சூடும் தணியும்”.

தண்ணீர் விட்டான் கிழங்கு பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறார் நீதிராசன். நேரில் பார்த்து அறிந்தது மிகவும் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதே நேரத்தில் அங்கு ஓர் ஆண் மயில் தோகையை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. இந்தக் காட்டிலும் அதையடுத்த வயல்வெளிகளிலும் மயில்கள் அதிகமாகக் காணப்படுமாம்.

அதையடுத்து சற்று தூரம் சென்றபின் முந்திரிக்காடு குறுக்கிட்டது. ஏராளமான முந்திரி மரங்கள் தரையில் தாழ்வாகப் படர்ந்திருந்தன.

“இந்த மண்ணில் முந்திரியும் விளையுமா?”, என்று கேட்டார் நீதிராசன்.

“நன்றாகவே விளையும்”, என்று பதில் சொன்னார் செல்வழகன்.

காய்ச்சான் என்ற ஒரு வகைச் செடியையும் அறிமுகப்படுத்தினார். அடுத்தடுத்து அவர் அறிமுகப்படுத்திய அனைத்துத் தாவரங்களும் முக்கியமானவைகளே!

நார்த்தங்காய் தாவரத்தின் முன்னோடித் தாவரத்தைக் கண்டு மகிழ்ந்தார் நீதிராசன்.

கள்ளிச் செடிகள் மிக உயரமாக வளர்ந்திருந்தன. எங்கும் காணக் கிடைக்காத பராய் மரம் இங்கிருந்தது. இந்த மரம் பிராய் மரம், பிற மரம், குட்டிப்பலா, இடிதாங்கி மரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வடியும். அந்தப் பால் கட்டிகளையும், சிரங்குகளையும், பித்த வெடிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தவல்லது. இதன் பட்டைகள் தோல் நோய்களைக் குணப்படுத்தும். இது இடி தாங்கி மரம் என்று கூறப்படுவதற்குக் காரணம், இந்த மரம் வளர்ந்திருக்கும் இடங்களைச் சுற்றி 5கி.மீ. தூரத்திற்கு இடி நம்மைத் தாக்காதாம். முக்கியமாக இதன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் “வலாட்டைல்” எனப்படும் எண்ணெய் புற்றுநோயைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

இப்படிப்பட்ட சிறப்புகள் மிகுந்த இந்தப் பராய் மரத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார் நீதிராசன்.

பிரம்புச் செடிகள் நெருக்கமாக வளர்ந்திருந்தன. இதன் தண்டுகள் நாற்காலி, மேசை, கைவினைப் பொருள்கள் செய்யப் பயன்படுகின்றன. பிரம்புச் செடிகளை வஞ்சிக் கொடி என்றும் சொல்வார்கள். தப்பித் தவறி இந்த வஞ்சிக் கொடிக்குள் நுழைந்து விட்டால் வெளியே வரவே முடியாதாம். காரணம் அவை முட்கள் நிறைந்த செடிகள்.

இவை பற்றி அறிந்த பின் மேலும் நடந்தார்கள். அப்போது காட்டின் நடுப் பகுதியில் ஒரு மண்டபம் தென்பட்டது.

அந்த மண்டபம் பற்றிக் கேட்டார் நீதிராசன்.

“இது ஒரு கோயில். சிறிய அளவில் இருக்கும் இந்தக் கோயிலை ஊர் மக்கள் ஒன்றுகூடி நிதி திரட்டி விரிவுபடுத்த உள்ளோம்”, என்றார் செல்வழகன்.

அதைக் கேட்டு சற்றே அதிர்ச்சியடைந்தார் நீதிராசன்.

“விரிவுபடுத்துவது என்றால் என்ன செய்ய உத்தேசம்?”

“இந்தச் சிறிய கோயிலை இடித்துவிட்டு பெரிய கோயிலாகக் கட்டப்போகிறோம்.”

“அந்தப் பகுதிக்குள்ளேயே கட்டப் போறீங்களா?”,

“அதெப்படி முடியும்? இன்னும் பெரிய இடம் தேவை”

“அதற்கு என்ன செய்யப் போறீங்க?”

“காட்டை அரை ஏக்கர் அளவுக்கு அழித்துத்தான் கோயில் கட்ட வேண்டும்”.

செல்வழகன் இப்படி சொல்லியதைக் கேட்டு, மிகவும் அதிர்ச்சியடைந்தார் நீதிராசன்.

“கோயில் கட்ட காட்டை அழித்துத்தான் தீர வேண்டுமா?”, என்று கேட்டார் நீதிராசன்.

“ஆமாம் நீதிராசன். இந்தக் காடு பாதுகாப்பாக இருப்பதே இந்தக் கோயிலால்தான். இந்தக் காட்டில் உள்ள மரங்களை வெட்டினாலோ, எதையாவது திருடினாலோ, கீழே விழுந்து கிடக்கும் தழைகளை எடுத்துச் சென்றால்கூட, அது தெய்வக் குற்றம் ஆகிவிடும். அச்செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு கடும் துன்பம் ஏற்படும். இப்படிப்பட்ட அச்சம் நிலவுகின்ற காரணத்தினால்தான். இந்தக் காடு இத்தனை ஆண்டு காலமாக அழிக்கப்படாமல் உள்ளது,” என்றார் செல்வழகன்.

அவரே மேலும் தொடர்ந்தார்.

“தற்போது இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க வேண்டிய பெரும் பொறுப்பை நான்தான் ஏற்றுள்ளேன். நான் என்ன செய்ய வேண்டும், என்ன முடிவெடுக்க வேண்டும், எப்படிக் கோயில் கட்ட வேண்டும் என்பதையெல்லாம் நானே முடிவெடுத்து செயல்படுத்தலாம் என்கிற அதிகாரத்தையும், ஊர்ப் பொதுமக்கள் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

“கோயிலைக் காட்டி, சாமியைக் காட்டி, மதத்தைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி வைப்பது நல்லதாக எனக்குப்படவில்லை செல்வழகன். இந்தக் காட்டின் அவசியம் பற்றியும், இந்தக் காட்டால் ஊருக்கு ஏற்படும் புகழ் பற்றியும், இங்குள்ள மரங்கள், தாவரங்கள், மூலிகைச் செடிகள் பற்றியும், அதன் குணங்கள், பயன்கள் பற்றியும் உலகளவில் எடுத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் இந்த ஊர் மக்களும், இதைச் சுற்றியுள்ள மக்களும் இந்தக் காட்டைப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். இந்த உணர்வுதான் நிலைத்து நிற்கும். சாமியைக் காட்டி பயம் காட்டுவது தற்காலிகமானதுதான். மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்து வருவது உனக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதே நேரத்தில் பக்தியை வியாபாரமாக்குவதும் வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் இந்தக் காட்டை, சாமியைக் காட்டி, மதத்தைக் காட்டி அரசியல்வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது துணையுடன் ஏதாவது ஒரு கார்ப்பரேட் சாமியார் ஆக்கிரமித்து சீரழித்து விடுவான். காட்டை அழித்து கேளிக்கை விழாக்களை ஆடல் பாடல்களுடன் நடத்துவான்”, இவ்வாறு நீண்ட நேரம் பேசி, செல்வழகனுக்குப் பல உண்மைகளை விளங்கவைத்தார் – நீதிராசன்

“சரி, நீதிராசன். நீ ஒரு பகுத்தறிவாதி என்பது எனக்குத் தெரியும். உனது மளிகைக் கடையான பிரியா அம்மா மளிகைக் கடையையே பகுத்தறிவாதிகள் வந்து கூடும் இடமாகத்தானே ஏற்படுத்தி வைத்துள்ளாய். நீ பேசியதில் உண்மை உள்ளது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் நீதிராசா?” என்று கேட்டார் செல்வழகன்.

“சொல்கிறேன் செல்வழகா! இந்தக் காடு பற்றிய செய்தியை உலகளவில்
எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன. அரசும் இந்தக் காட்டைப் பாதுகாக்க உதவும். இருக்கிற கோயில் மண்டபமே போதும். விரிவுபடுத்துவதாகச் சொல்லி நீயே காட்டின் ஒரு பகுதியை அழிக்க வேண்டாம். காட்டைப் பாதுகாப்போம். நானும் உன்னுடன், ஊர் மக்களுடன் உறுதுணையாக இருப்பேன்” என்று சொன்ன நீதிராசனின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வதாக செல்வழகன் முடிவு செய்தார்.