முனைவர் கடவூர் மணிமாறன்
பார்வியக்கும் பைந்தமிழை உயிராய்ப் போற்றிப்
பழந்தமிழர் பண்பாட்டை மரபை மீட்க
ஆர்த்தெழுந்தார் பாவேந்தர்! பகைந டுங்க
அரிமாவாய் உணர்வோடு முழங்கி வந்தார்;
சீர்திருத்தச் சிந்தனைகள் விதைத்தார்; நந்தம்
செந்தமிழாம் செம்மொழிக்குச் சிறப்புச் சேர்த்தார்;
நார்போல கவிஞரெலாம் வாழ்ந்த வேளை
நறுமலராய்த் திகழ்ந்தவர்பா வேந்தர் அன்றோ!
கண்மூடித் துயின்றிருந்த தமிழர் எல்லாம்
காரிருளில் தவித்திருந்த நேரம் தன்னில்
மண்ணகத்தின் இருள்விலக்கும் கதிரோன் போல
மனக்குகையில் சிறுத்தையென பெரியார் வந்தார்!
உண்மைமிகு பகுத்தறிவு கருத்தை யெல்லாம்
உணர்வுடனே மக்களிடை உரைக்க லானார்
எண்ணம் சொல் செயல்களிலே மாற்றம்தோன்ற
எழுச்சிமிகு பாக்களை பாவேந்தர் தந்தார்!
பெண்ணுரிமை பெறுவதற்குத் தூண்டி வந்தார்;
பீடுறவே தொழிலாளர் நலன்கள் நாடிப்
பண்ணிசைத்தார்! பற்பலவாய்க் காப்பி யங்கள்
படைத்தளித்தார்; சமத்துவத்தைப் போற்றும் வண்ணம்
எண்ணத்தைப் புரட்சிமிகு பாக்கள் மூலம்
எல்லாரும் ஏற்றிடவே வழங்க லானார்!
கண்ணெனவே தமிழ்மொழியை, தமிழி னத்தைக்
காத்திட்டார் பாவேந்தர் மறுப்பார் உண்டோ?
தமிழ்மொழியின் மேன்மையினை, அடிமைப் பட்ட
தமிழ்நாட்டு விடுதலையை மொழிந்து வந்தார்!
தமிழினத்தின் உயர்வுக்கே முழங்க லானார்;
தமிழ்நாடும் தமிழினமும் உய்வ தற்கே
தமிழ்ப்பாட்டுக் குயிலாகக் கூவி வந்தார்!
தறுகண்மைப் போராளி இவரே யாவார்!
உமியனைய தமிழ்ப்பகைவர் நடுங்கும் வண்ணம்
உயிர்ப்பான இனமான உணர்வைத் தந்தார்.
ஆரியத்தின் பொய்க்கரவை, புரட்டை வீழ்த்தும்
அரிமாவாய் ஆர்த்தெழுந்தார்! புரட்சிப் பாக்கள்
வீரியமாய்க் குவித்திடவே தமிழர் எல்லாம்
விழிப்புற்றார்! பழிநீக்கும் ஆர்வம் கொண்டார்!
நேரியநற் சிந்தனைகள் வழங்கி நாட்டின்
நிலையுயர்த்தும் வேட்கையுடன் களத்தில் நின்றார்!
பாரெங்கும் வாழ்கின்ற தமிழர்க் கெல்லாம்
பகுத்தறிவின் ஒளிதந்தார்! மீட்சி கண்டார்!
பொதுவுடைமைக் குமுகாயம் மலர்வ தற்கும்
பூவையர்கள் போர்ப்பரணி இசைப்ப தற்கும்
புதுமையெலாம் தமிழ்நாட்டில் விளைவ தற்கும்
போலிகளை இனம்கண்டு பொசுக்கு தற்கும்
மதுரமிகு தீம்பாடல் இயற்றி வந்த
மறுமலர்ச்சிப் பாவேந்தர் கனவு கண்ட
புதியதொரு தமிழகத்தைப் படைப்போம்! மீண்டும்
பொற்காலத் திராவிட நல்ஆட்சிக் காண்போம்! w
