Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்!-மஞ்சை வசந்தன்

1925 இந்திய வரலாற்றில் முதன்மையான ஆண்டு. சமத்துவம், சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, சமவாய்ப்பு, மதச்சார்பின்மை, மக்களாட்சி என்ற மனித உரிமை, மனிதநேய அடிப்படையிலான சுயமரியாதை இயக்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு இது.

அதே காலத்தில் மறுபுறம், பாசிசம், மத ஆதிக்கம், மதவெறுப்பு, வர்ணபேதம். வர்ண அடிப்படையில் உயர்வு தாழ்வு, மனுசாஸ்திரச் சட்டப்படியான ஆட்சி, கார்ப்பரேட் முதலாளிகளைக் கட்டிக்காத்து, 90 சதவிகித அடித்தட்டு மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, 5 சதவிகித ஜாதியினர் ஆதிக்கம் செலுத்த, செயல்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உருவாக்கப்பட்ட ஆண்டும் அதுவே!

சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டாலும், அதன் கொள்கைகளைக் கொண்டவர்கள் வடமாநிலங்களிலும் இருந்தனர். சாகுமகராஜ், ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் போன்றோர் அவர்களுள் முதன்மையானவர்கள்,

இந்தியா விடுதலை அடைந்த போது, அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட நிலையில் மதச்சார்பற்ற, சமத்துவ இலக்குக் கொண்டவர்கள் ஒருபுறமும், ஆர்.எஸ்.எஸ்.கொள்கையை நிலைநாட்டத் துடிப்போர் மறுபுறமும் நின்று மோதினர். பெரியாரும், அம்பேத்கர் அணி ஒருபுறம்; ஆர்.எஸ்.எஸ்., சங்கராச்சாரி அணி மறுபுறமும் நின்றன.

அரசியல் சாசனம் உருவாக்கப்பட அமைக்கப்பட்ட குழுவில், அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர்களே இருந்த நிலையிலும், பெரியார், அம்பேத்கர் போன்றோரின் உறுதியான கொள்கைப் பிடிப்பின் காரணமாக அரசியல் சாசனம், சமத்துவம், மதச்சார்பின்மை கொண்டதாய் உருவாக்கப்பட்டது. நேரு போன்ற சமூகநீதி, சமதர்மபிடிப்புக் கொண்டவர்களின் உறுதியான செயல்பாடுகளால் மக்களாட்சி மாண்புகள் பெருமளவு காக்கப்பட்டு, சோசலிச அரசாக ஒன்றிய ஆட்சி நடத்தப்பட்டு, மன்னர் ஆட்சி எச்சங்கள் ஒழிக்கப்பட்டு, தனியார் மயம் குறைக்கப்பட்டு, அரசுடைமையின் அளவு அதிகரிக்கப்பட்டது. இடஒதுக்கீடும், மதச்சார்பின்மையும் மக்களைக் காத்து, வளர்ச்சியை அடையச் செய்தன.

சுயமரியாதை இயக்கப் போராட்டங்கள் சமதர்ம, சமூகநீதிக்குக் காப்பரணாக இருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு, அதைச் சிதைத்து பாசிச, மதவெறி ஆட்சியை, மனுச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டன. மதவெறி, மதமோதல்கள் மூலம் நாடெங்கும் மத உணர்வு, பிறமத எதிர்ப்பு வளர்க்கப்பட்டது. இராமஜென்ம பூமி, பாபர் மசூதி இடிப்பு போன்றவற்றால், வடமாநிலங்களில் மதவெறி உணர்வு தூண்டப்பட்டு, அது ஆர்.எஸ்.எஸ். அரசியல் கட்டமைப்புக்கு அடிப்படையாக்கப்பட்டு, அதன் உச்சநிலை வடிவமாக பா.ஜ.க. உருவாக்கப்பட்டது.

தொடக்கக்காலத்தில் 2 இடங்களை வென்ற பா.ஜ.க. பெரும்பான்மை பெற்று 10 ஆண்டுகள் ஆட்சி செய்ததோடு, அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், பிற மாநிலக் கட்சிகளின் உதவியுடன் ஒன்றியத்தின் ஆட்சியில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மாநிலக் கட்சிகளையெல்லாம் பிரித்து, அதனுள் ஊடுருவி, பின் அவற்றை விழுங்கி, பா.ஜ.க. ஆட்சியைப் பல மாநிலங்களில் உருவாக்கிவருகிறது. மராட்டியம், பீகார், உத்தரப்பிரதேசம், ஒரிசா என்று ஒவ்வொரு மாநிலமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கு பெற்றிருந்த கட்சிகளை ஒழித்துவிட்டு, பா.ஜ.க. ஆட்சியை அமைத்து வருகிறது.

தமிழ்நாடு குறிவைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு பெரியார் மண் என்கின்ற வகையில் இங்கு ஆர்.எஸ்.எஸ்.சின் அந்த முயற்சி எடுபடாமல் போனது என்றாலும், தங்கள் முயற்சியில் தளராத ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு, பல்வேறு வியூகங்களை அமைத்து தி.மு.க.வை வீழ்த்திவிட்டு, பா.ஜ.க. ஆட்சியை அமைக்க முயன்று வருகிறது.

அதற்கு, திராவிடக்கட்சி என்ற பெயரில் இயங்கும் அ.தி.மு.க.வைக் கருவியாகப் பயன்படுத்தி, காய்களை நகர்த்தி வருகிறது. அ.தி.மு.க.வும் பி.ஜே.பி.க்கு அடிமையாகி, இரையாகி வருகிறது. ஜெயலலிதா அவர்கள் இருந்தவரை பி.ஜே.பி.யை எதிர்த்து, அதன் செயல்திட்டங்களுக்கு ஆதரவளிக்காமல் இருந்தார். ஆனால், அவரது இறப்பிற்குப்பின் அ.தி.மு.க – பி.ஜே.பி. பிடியுள் சிக்கி, பி.ஜே.பி.யின் கைப்பாவையாக ஆக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. விழுங்கப்பட்டது போலவே, பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழ் மாநில காங்கிரசும், பி.ஜே.பி.யில் கலந்து கரைந்து வருகின்றன.

இரு அணிப் போர்

பெயரளவில் அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணி என்று கூறிக் கொண்டாலும், தேர்தல் முடியும் வரை அந்த நாடகம் நடத்தப்பட்டாலும், தேர்தலுக்குப்பின் அது பி.ஜே.பி. அணியாக உருப்பெறும். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் புலித்தோல் போர்த்திக் கொண்டு வரும் கட்சியானாலும், சமூகநீதிப் போராளிகளின் படத்தை மாட்டிக் கொண்டு, பா.ஜ.க.வின் கருவியாகச் செயல்படும் நடிகர் கட்சியானாலும் இவையெல்லாம், வாக்குகளைச் சிதைத்து மக்களை மடைமாற்றும் சூழ்ச்சிகள்தான்.

உண்மையில் இங்கு போட்டியென்பது, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற, சமூகநீதி அணிக்கும், பா.ஜ.க.வின் மதவெறி, பாசிச அணிக்கும்தான்.

திசை திருப்பும் சூழ்ச்சி எச்சரிக்கையுடன் இருங்கள்:

ஆனால், மேற்கண்ட உண்மையை மறைத்து, மாற்றி, இது மக்களவைத் தேர்தல் அல்ல, இது மாநிலச் சட்டமன்றத்திற்கான தேர்தல். எனவே, இங்கு டில்லி ஆதிக்கமா? என்ற கேள்விக்கு இடமில்லை. தமிழ்நாட்டை யார் ஆளவேண்டும் என்ற தேர்தல்தான் இது. தி.மு.க. ஆட்சி மீண்டும் வேண்டுமா? அல்லது அ.தி.மு.க. ஆட்சி வேண்டுமா? என்றே முடிவு செய்ய வேண்டும் என்று உண்மை நிலையை மறைத்து, மாற்றித் திசைத் திருப்பி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது ஒரு மோசடிப் பிரச்சாரம். அ.தி.மு.க. என்ற முகமூடியை அணிந்துக் கொண்டு பி.ஜே.பி. இங்கு ஆட்சியைப்
அமைக்க சூழ்ச்சி செய்கிறது. இந்த உண்மையை நுட்பமாகப் புரிந்துக் கொண்டு, இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. செய்தது என்ன?

மகாராஷ்டிரா, பீகார், ஒரிசா என்று வரிசையாக பல மாநிலங்களில், 20 இடங்கள், 30 இடங்கள் என்று பெற்றுக்கொண்டு, மாநிலத்தில் செல்வாக்கோடு இருந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்து பிறகு அந்த மாநிலக் கட்சியை உடைத்து, அதில் ஒரு பிரிவைத் தன்னுடன் வைத்துக்கொண்டு, அதன் பின் அந்த அணியுடன் கூடுதல் இடங்களைப் பெற்று, அடுத்தக் கட்டமாக, ஆட்சியில் பங்கு என்று வந்து, அடுத்த நிலையில் அந்தக் கட்சியைச் சிதைத்து பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்தும் சதிச் செயலைச் செய்து வருகிறது. பீகாரில் நடந்ததை, ஒரிசாவில் நடந்ததை, மகாராட்டிராவில் நடந்ததை நன்கு சிந்தித்துப் பார்த்து எச்சரிக்கையுடன் தமிழ்நாட்டு வாக்காளர்கள் செயல்பட வேண்டும்.

பீகாரில் லாலுவா, நிதிஷ்குமாரா? என்று இருந்த நிலை இப்போது எப்படி மாறியுள்ளது என்பதை நன்கு சிந்தித்து, தமிழக மக்கள் செயல்பட வேண்டும். நிதிஷ் குமாரைக் கருவியாகப் பயன்படுத்தி, சில இடங்களைப் பெற்று, பீகாரில் கால்வைத்த பி.ஜே.பி. தற்போது நிதிஷ்குமாரையே தூக்கி எறிந்துவிட்டு, பா.ஜ.க. ஆட்சியை அமைக்கிறது. இதுதான் தமிழகத்திலும் நடக்க வேண்டும் என்று பி.ஜே.பி. முயற்சிக்கிறது. அதற்கு அ.தி.மு.க. துணை போகிறது.

அ.தி.மு.க. அணிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், பி.ஜே.பி. வளர்ச்சிக்கு அளிக்கப்படும் வாக்கு. பி.ஜே.பி. ஆட்சியைக் கொண்டு வருவதற்கான வாக்கு என்பதை நன்கு சிந்தித்துச் செயல்படவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டம்

அ,தி.மு.க. அணி என்று மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று, பி.ஜே.பி. கட்சியை வளர்ப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் முதன்மைச் செயல் திட்டம்.

தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. இரண்டாக உடைக்கப்படும். அதில் ஓர் அணியை பி.ஜே.பி.
இணைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை அழிக்கும். இது எதிர்காலத்தில் நடக்கும்.

த.வெ.க. என்ற நடிகர் கட்சியை, வாக்குகளைப் பிரிக்க பி.ஜே.பி. பயன்படுத்துகிறது. கிறிஸ்துவர்களின் வாக்குகள் மொத்தமாக தி.மு.க. அணிக்குச் செல்வதைத் தடுத்து, பிரித்து, நடிகர் கட்சிக்குச் செல்ல பி.ஜே.பி. சூழ்ச்சி செய்கிறது.

ஒன்றியத்தில் தனக்குள்ள ஆட்சி அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி, தேர்தலுக்குப்பின், அ.தி.மு.க.வை விழுங்குவது போலவே, பா.ம.க., த.மா.கா., நடிகர் விஜய் கட்சியென்று எல்லாவற்றையும் விழுங்கும் இறுதியில் தி.மு.க.விற்கு எதிரணியாக பி.ஜே.பி. அணி என்ற நிலையை உருவாக்கும். இது தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பெரிய ஆபத்து! சிந்திக்க வேண்டாமா?

மதச்சிறுபான்மை மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்

மத உணர்வைத் தூண்டி, தி.மு.க.விற்குச் சென்று கொண்டிருக்கும் மதச் சிறுபான்மை
யினரின் வாக்குகளைப் பிரிக்க பி.ஜே.பி. செய்யும் சூழ்ச்சி வலையில் சிறுபான்மை மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது. நடிகர் விஜய் தன்னை ஒரு கிறிஸ்துவராகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். அந்தச் சூழ்ச்சிப் பொறிக்குள் கிறிஸ்துவர்கள் சிக்கக்கூடாது. இஸ்லாமியர்களின் வாக்குகளைச் சிதறச் செய்யவும் சில முயற்சிகள், சதிகள் நடைபெறுகின்றன. எனவே, இஸ்லாமியர்களும் சதிகாரர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல், மதச்சிறுபான்மையினரின் ஒரே காப்பரண் தி.மு.க. கூட்டணியே என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் திடமாகச் செயல்பட வேண்டியது கட்டாயமாகும்.

எடப்பாடியின் எட்டப்பன் வேலை!

தொடர்ந்து பல ஆண்டுகளாக மதச் சிறுபான்மையினருக்கும், விவசாயிகளுக்கும், தமிழர் நலத்திற்கு எதிராக பி.ஜே.பி.யுடன் இணைந்து செயல்பட்டுவிட்டு, இன்று தாம்தான் அவர்களுக்கு ரட்சகர் போன்று நாடகம் ஆடுகிறார். தமிழர்களையும், தமிழர்களின் நலத்தைக் காட்டிக் கொடுப்பதில், தமிழ்நாட்டை பி.ஜே.பி.யின் வேட்டைக் காடாக்குவதில் முனைந்து நிற்கிறார்.  தன் சுயநலத்திற்காக தமிழர் நலத்தை, தமிழ்நாட்டை அடகு வைக்கிறார். எனவே, எடப்பாடி பழனிசாமியின் கபட நாடகங்களில், பொய்ப் பிரச்சாரங்களில் மக்கள் மயங்காமல், உண்மை எது, சரி எது என்பதை அறிவதில் விழிப்போடு இருந்து இத்தேர்தலில் உறுதியுடன் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

பி.ஜே.பி.யுடன் அணி சேர்வோர் எதிரிகளே!

தமிழர் நலத்திற்கு, தமிழ்நாட்டின் நலத்திற்கு உகந்தவர்கள் யார்? எதிரானவர்கள் யார் என்பதில் பெரிய ஆய்வே தேவையில்லை. பி.ஜே.பி.யுடன் கைக்கோர்க்கின்றவர்கள் தமிழரின் எதிரிகள்; பி.ஜே.பி.யை எதிர்ப்போர் தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்றவர்கள், பாதுகாவலர்கள் என்று உறுதியாய் நம்பலாம். பி.ஜே.பி.யை எதிர்க்காமல், அதிகம் தாக்காமல், தி.மு.க.வை மட்டுமே அதிகம் தாக்குகின்ற விஜய் போன்றவர்கள் தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் முதன்மை எதிரிகள்; பி.ஜே.பி.க்கு துணை நிற்பவர்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்

ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. திட்டமிட்ட செயல்திட்டத்துடன், தங்கள் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இலக்குகளை அடைந்துவிட, அமல்படுத்த தீவிரமாய் முயன்று வரும் சூழ்நிலையில், மாநிலங்களையும் தங்கள் பிடிக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவின் தென்மாநிலங்களைக் கைப்பற்றத் தீவிரம் காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக, தங்கள் சித்தாந்த எதிர்க் களமான தமிழ்நாட்டைக் கைப்பற்றிவிட்டால், தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று முனைப்புக் காட்டுகின்றனர். அதனால், இத்தேர்தல் அ.தி.மு.க.வும், தி.மு.க.விற்குமான போட்டிக் களம் அல்ல. பி.ஜே.பிக்கும், தி.மு.க.விற்குமான போட்டிக் களம் என்ற சரியான உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பி.ஜே.பி. குறைவான இடங்களில் நிற்கிறது. என்ன செய்ய முடியும்? என்று அலட்சியம் செய்யக்கூடாது. பி.ஜே.பி., பா.ம.க. என்று சிலவற்றை ஒருங்கிணைத்து அ.தி.மு.க.வை உடைத்து, விலை கொடுத்து வாங்கி தங்களை ஒரு வலுவான சத்தியாகத் தேர்தலுக்குப் பின் கட்டமைப்பார்கள். இது மகாராட்டிரா, பீகாரில் அண்மையில் செய்யப்பட்ட செயல் திட்டங்கள்தான். எனவே, இத்தேர்தலை மாநிலக் கட்சிகளுக்கிடையேயான மோதலாகக் கொள்ளக்கூடாது.  பி.ஜே.பி.யுடனான மோதலாகவே கொள்ள வேண்டும்.

எதிர்நோக்கும் ஆபத்துகள்

தமிழகத்தில் தி.மு.க. ஆண்டாலும், அ.தி.மு.க. ஆண்டாலும் பெருமளவில் பாதிப்பு நிகழ்ந்து விடாது. ஆனால், பி.ஜே.பி. ஆட்சிக்குள், அதிகாரத்திற்குள் நுழைந்தால், தமிழ் மொழி, தமிழர் வேலைவாய்ப்பு, தமிழ்நாட்டின் வளர்ச்சி, மதச்சார்பின்மை, மாநிலக் கல்வித் திட்டம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியென்று எல்லாமும் பாதிக்கப்பட்டு மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கொண்டு வரப்படும். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்புகூட, நீட் தேர்வை விலக்க முன்வராதவர்கள், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியைத் தரமறுப்பவர்கள், மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிக்கின்றவர்கள், தமிழ்நாட்டிற்கு உரிய இரயில்வே, விமானப் போக்குவரத்து விரிவாக்கங்களை மறுப்பவர்கள், கீழடி அகழாய்வை ஏற்க மறுப்பவர்கள் தேர்தல் முடிந்து விட்டால் அவர்களின் செயல்பாடுகள் தீவிரமடையும் என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாசிச செயல்திட்டங்களை எதிர்த்து நிற்கும் வல்லமையுள்ள ஒரே அணி தி.மு.க. அணி மட்டும். கேரளம், மேற்கு வங்கம் அடுத்த நிலையில் எதிர்த்து நிற்கின்றன. இந்த நிலை மற்ற மாநிலங்களிலும் வளர்ந்து மாநில உரிமை நலன், வளர்ச்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், பி.ஜே.பி.யை எதிர்க்கின்ற, வீழ்த்துகின்ற நிலை வளரவேண்டும் என்றால், இத்தேர்தலில் பி.ஜே.பி.யையும், அதனுடன் அணி சேர்ந்துள்ள கட்சிகளையும் படுதோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்கு மக்கள் அனைவரும் விழிப்போடிருந்து உறுதியுடன் தி.மு.க. அணிக்கு வாக்களிக்க வேண்டும். இருக்கின்ற ஒரு வாரமும் மக்கள் அனைவரும் இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும்.  தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்ட வேண்டும்.  அதன்மூலம் பி.ஜே.பி. ஒன்றிய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

நம்மால் முடியும்!  நம்மால் விடியும்!