இயக்க வரலாறான தன் வரலாறு 380
கி.வீரமணி
சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையில் உருவாக்கப்பட்டிருந்த பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்
கட்டளையின் சார்பில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நடத்திட வேண்டும் என்று இலக்கியத் துறை சார்பாக எம்மைக் கேட்டுக் கொண்டார்கள்.
பேரா. ந. சுப்பிரமணியன் தமிழ்நாட்டின் வரலாற்று அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக விரிவான ஆய்வுகளைச் செய்துள்ளார். தமிழிலக்கியம் ஆவணங்கள் ஆகியவற்றைத் தரவுகளாகக் கொண்டு சிறப்பான ஆய்வுகளை மேற்
கொண்டவர். சங்ககால அரசியல் என்ற
இவரது ஆய்வு சங்க காலத்தில் உருப்பெற்ற
அரசு உருவாக்கம் குறித்து அறியப் பெரிதும் உதவுகிறது. “Pre-Pallava Index”
என்று சென்னைப் பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ள நூல் இவர் உருவாக்கிய
தாகும். வரலாற்று வரைவியல் “Historiography”
குறித்த இவரது நூல் அரிய பாட நூலாகும். சென்னைப் பல்கலைக்கழகத்தில்
பேரா.ந.சுப்பிரமணியன் தமது பெயரில் இந்த அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.
அவர்களது வேண்டுகோளுக்கிணங்க 17.4.2008 அன்று சென்னை பல்கலைக்
கழகத்தின் பவள விழா அரங்கில் ‘‘தமிழ்நாடு
வரலாறும் சுயமரியாதை இயக்கமும்’’ என்னும்
தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்தினோம். அது தனி நூலாகவும் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழநி புள்ளையண்ணன்-ரத்தினம் ஆகியோரின் செல்வன் பு.கலைவாணன் மற்றும் டேனிஷ் பேட்டை, சந்திரன்-தங்கம் ஆகியோரின் செல்வி சி.வெண்ணிலா ஆகியோர் திருமணத்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் தலைமையில் மாண்புமிகு வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், வேளாண்மைத் துறை அமைச்சர், மாவட்டச் செயலாளர், தி.மு.க., முன்னிலையில் 26.4.2008 அன்று காலை நடத்தி வைத்தோம்.
அன்று மாலை ஈரோட்டையடுத்த தாராபுரத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நம் தலைமையில் நடைபெற்ற மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் அன்றைய ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் (இன்றைய முதலமைச்சர்) மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து
வைத்து வரலாற்று சிறப்புமிக்க ஓர் உரையாற்றி
னார். அந்த உரை திராவிடர் கழகத்தின் சார்பில் தனிப் புத்தகமாக வெளிவந்துள்ளது.
மாநில அமைச்சர்கள் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன், என்.கே.கே.பி.ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளு
மன்ற உறுப்பினர்கள், வணக்கத்திற்குரிய ஈரோடு மேயர். தி.மு.க. விவசாய அணித் தலைவரும். முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பெரியசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்ட
ராக, தீரமிக்கக் கருஞ்சட்டை வீரராக அப்பகுதியில் வீறுநடைபோட்ட
எஸ்.வி.சக்கரை மொய்தீன், எளிமையின்
சின்னமாக ஒரு எம்.ஏ. பட்டதாரி என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்குக்கூட இல்லாமல், அவ்வளவு பணிவாக, கனிவாகக் களப்பணி மாத்திரம் அல்ல – மேடையில் கர்ச்சனை செய்த காளை, மானமிகு சேதுபதி ஆகியோரின் பெயரில் அமைந்திருந்த நினைவரங்கத்தில் விழா சீரும் சிறப்புடனும் நடைபெற்றது.
நகரின் மிக முக்கியப் பகுதியில் கம்பீரமாக
தந்தை பெரியார் சிலை அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.
மறுநாள் காலை தற்போதைய கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் – தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகள் மருத்துவர் கனிமொழி
மற்றும் கி.பாண்டியராஜன் – ரேவதி ஆகியோரின் மகன் பா.பொன்மதி ஆகியோரின் இணையேற்பு விழாவினை ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா முன்னிலையில் தலைமை ஏற்று நடத்தி வைத்தோம். கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
தமிழ் நாடக மேதை, முத்தமிழ்க் கலா வித்வ ரத்னம் அவ்வை டி.கே.சண்முகம் 96ஆம் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று மலரினை வெளியிட்டு உரையாற்றினோம். இவ்விழா 28.4.2008 அன்று மாலை ராணி சீதை
மன்றத்தில் நடைபெற்றது. கலைமாமணி
டி.கே.எஸ்.கலைவாணன் வரவேற்புரை
யாற்றினார்.
சி.வசந்தா (டி.கே.எஸ். நாடக சபை) வாகை சந்திரசேகர் (திரைப்பட நடிகர்); அரித்துவாரமங்கலம் டாக்டர் கே. பழநிவேல் (தவில் இசைக் கலைஞர்); டாக்டர் அவ்வை நடராசன் (தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள்
துணைவேந்தர்); கவிவேந்தர் கா.வேழவேந்தன்
(மேனாள் அமைச்சர்) ஆகியோருக்கு விருதுகளை வழங்கி உரையாற்றினோம்.
பெரியார் மணியம்மை பல்கலைக்
கழக ஆண்டு விழா 1.5.2008 அன்று நடைபெற்றது. ஆண்டு விழாவில், “கோர்ஸ் மெட்டிரியலை” பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் நாம் வெளியிட்டோம். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவிக்கு, பணி நியமன ஆணையினை நீதியரசர் எலிப்பி தர்மாராவ் வழங்கினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து தயாரித்த 14 வகை “மென்பொருள்” குறுந்தகடினைப் பல்கலைக்கழக இணைவேந்தர் “வீகேயென்” அவர்கள் வெளியிட, நீதியரசர் எலிப்பி தர்மாராவ் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் துணை வேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், பார்கவுன்சில் தலைவர் வழக்குரைஞர் சந்திரமோகன், திருச்சி மாவட்ட நீதியரசர், முதன்மை தஞ்சை மாவட்ட நீதியரசர் சபருல்லாகான் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
திராவிடர் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் 3.6.2008 அன்று திருச்சியில் கழகத்தின் செயலவைத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சமூகநீதி சார்ந்த பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மதவாத சக்திகளுக்கு எதிரான சக்திகள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானங்களை நிறைவேற்றினோம். அதுபோல ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் போக்கினைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றினோம்.
அப்போதைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம், அந்த அமைப்பை உருவாக்கிய கன்சிராம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் பகுஜன் சமாஜ் என்ற ஒரு ஒற்றுமைக் கோட்பாட்டை உருவாக்கி பகுஜன் சமாஜ் கட்சி என்று பெயரிட்டார். ஆனால், மாயாவதி அவர்கள் அந்த அமைப்பின் கோட்பாட்டை ‘சர்வஜன்’ என்று மாற்றம் செய்து பார்ப்பனர்களையும் தம் அமைப்புக்குள் இணைத்துக் கொண்டு சமூக நீதியின் அடிப்படையையே சிதைக்கும் காரியத்தில் ஈடுபட்டார். அதன் மூலம் 206 சட்டமன்ற உறுப்பினர்களில், 51 பேர் பார்ப்பனர்கள், தங்களின் அதாவது தங்கள் விகிதாச்சாரத்திற்குப் பல மடங்கு அதிகமாக வெற்றி பெற்றனர். அமைச்சரவையிலும் ஏழு பார்ப்பனர்களுக்கு இடம் அளித்தார். தமக்கு பதவி வரவேண்டும் என்பதற்காக அடிப்படை கொள்கையையே பலி கொடுத்து விட்டார்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய சமூக நீதிக் கட்சி சார்பில் அதன் அலுவலகத்தில் தந்தை பெரியார் உருவம் குறித்த விளம்பரச் சுவரொட்டி வைக்கப்
பட்டிருந்தது. பாரதிய
ஜனதா கட்சியினர் அத்துமீறி அந்தக்
கட்சி அலுவலகத்
திற்குப் புகுந்து தந்தை
பெரியார் சுவரொட்டி
யைக் கிழித்து அவமதித்தனர். அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய இந்திய சமூக நீதிக் கட்சியின் தலைவரான உதித்ராஜ் மற்றும் அவர்களது கட்சித் தொண்டர்களை மாயாவதி தலைமையிலான உத்தரப்பிரதேச அரசுக் காவல்துறை, கடுமையாகத் தாக்கியதுடன் சிறையில் அடைத்தது. இந்த நிகழ்விற்குத் தனித் தீர்மானம் மூலம் கடும் கண்டனத்தைப் பொதுக்குழுவில் நிறைவேற்றினோம். இதன் விளைவு எதிர்காலத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு வழி கூறும் என்றும், மாயாவதி காணாமல் போவார் என்றும், கடுமையாக நம் கருத்தினைத் தெரிவித்தோம்.
அடுத்த நாள் (4.5.2008) விருத்தாச்
சலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக சிதம்பரம் மாவட்டத்தின் தலைவர் இளங்கோவன் – சுகந்தி ஆகியோரின் செல்வன் அருண் சாக்ரடீஸ் மற்றும் பா.நடராசன் – கலைச்செல்வி ஆகியோரின் மகள் காயத்ரி ஆகியோரின் திருமண விழா
வினை தலைமை ஏற்று நடத்தி வைத்தோம்.
முன்னாள் மேயர், சட்டமன்ற உறுப்பினர்
சா.கணேசன் அவர்களின் துணைவியார் ராணியம்மாள் மறைந்தார். அடுத்த நாள் காலை சென்னை சென்றவுடன், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினோம்.
பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. மாடத்தில் அமர்ந்து அவை
நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டி
ருந்த பொழுது, முதலமைச்சரின் கீழ் வரும் தொழில் வளர்ச்சித்துறை சம்பந்த
மான மானியக் கோரிக்கை விவாதத்தில், அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்ததை
நேரில் கண்டு, மறுநாள் ஒரு வாழ்த்து அறிக்கை வெளியிட்டோம். அன்று மாலை சென்னை அடையார் பார்க் ஓட்டலில் நடைபெற்ற முரசொலி சிங்காரம் அவர்களின் மகள் அன்புமலர் – கோதண்டராமன் ஆகியோர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தோம்.
(நினைவுகள் நீளும்)
