| இ |
ருபதாம் நூற்றாண்டின் பகுத்தறிவுக் கவிஞரான பாரதிதாசன், தந்தை பெரியாரின் கருத்தியலை உள்வாங்கி இலக்கியத்தளத்திலும், இயக்கக் களத்திலும் செயல்பட்டவர். பார்ப்பனிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி – தீண்டாமை ஒழிப்பு எனத் தனது இலக்கிய ஆக்கங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்வு ஊட்டியவர். தமிழ் – தமிழர் – தமிழ்நாடு என்னும் அடையாளத்தைக் காண விரும்பிய பாவேந்தர், தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் தொண்டு செய்பவர்களைப் பாடுபொருளாக்கி தமது பாடல்களில் பதிவு செய்தார்.
வைதிகர்களையும் அவர்களின் பண்பாட்டையும் எதிர்த்துப் பார்ப்பனர் அல்லாத தலைவர்களையும், சான்றோர்களையும் ஏடறிந்த எழுத்தாக்கினார். தமிழர் நலனோடு பகுத்தறிவு, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இன விடுதலை, பெண் விடுதலை, வல்லாதிக்க எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு, தமிழ்நாடு, புதுவை அரசியல் நிலைமைகள் போன்ற சிந்தனைகளை அவரது இலக்கிய வகைமைகளில் காண்கிறோம்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை முதன்மைப்படுத்திய புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து பாவேந்தர் பாடிய பாடல்களை, சில கட்டுரையாக்கங்களை முன்வைத்து தமிழ்க் கருத்தாடல் களத்திற்குள் ஓர்மையைக் கொணர்வது நமது நோக்கமாகும்.
சமூகப் பணியில் எவர்க்கும் அணியில் முன் நின்ற அம்பேத்கரின் எரிமலை எண்ணமும் எழும் புயல் செயலும் விரிவுலகத்தையே விழிப்புறச் செய்தன.
நமது இந்தியத் துணைக் கண்டப் பரப்பில் ஜாதி – தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் பலகாலம் பலர் போராடி இருந்தாலும், எதிர்ப்பின் அணி வரிசையில் ஒப்பாரும் – மிக்காரும் இல்லாத முன்னவராக நின்றவர் அம்பேத்கர். அதனை ‘எரிமலை எண்ணத்தாலும் எழும் புயல் செயலாலும்’ என்று புரட்சித் தமிழில் பதியனிட்டார் புரட்சிக் கவிஞர். ஒப்பாரும் – மிக்காரும் இல்லாத முன்னவராக அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பது, வடவர் எதிர்ப்பு மரபில் தீவிரம் கொண்ட பாவேந்தர் மனதில், அம்பேத்கர் வகித்த இடத்தை அடையாளம் காண முடிகிறது.
‘வீரியம் கொண்ட வெஞ்சின வேங்கையான, அண்ணல் அம்பேத்கர் முன் மதத்திமிர் அழிந்தது; சமயம் மடிந்தது’ என்றெல்லாம் பாவேந்தர் அம்பேத்கரைப் பாட்டுடைத் தலைவன் ஆக்கிப் பாடினார்.
இலக்கியம், இசை, மொழி, இயக்கம் எனப் பல தளங்களில் தமிழ்ச் சான்றோர், இயக்க வீரர்கள் பார்ப்பன மேலாண்மைக்கு எதிராகப் போராடியதும், போராடிய இவர்களையெல்லாம் சிங்கம் என்றும், புலி என்றும், காளை என்றும் பாவேந்தர் உருவகித்திருப்பதைக் காணலாம். அதே நிலையில் பார்ப்பன மேலாண்மை, ஹிந்து மதம், வருணாசிரம தர்மத்துக்கு எதிராகப் போராடிய மூலவரான அம்பேத்கரை ‘வெஞ்சின வேங்கை’ என அடையாளப்படுத்திப் பாடிய திறத்தை, தமிழ் இலக்கிய உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜாதி, மத ஏற்றத்தாழ்வுக்கு எதிராக ஜாதி மறுப்பு மணம், மத நல்லிணக்கம், தீண்டாமை ஒரு குற்றம் முதலானவற்றைச் சட்டம் ஆக்கினார். அம்பேத்கரே தன்னளவில், ஜாதி மறுப்பு மணம் புரிந்து கொண்டார். ஜாதி மறுப்பு மணம் மூலமே ஏற்றத்தாழ்வு ஒழியும்; ஜாதி ஏற்றத்தாழ்வு ஒழிந்தால்தான் உடைமைச் சமூகம் ஒழியும்;உடைமைச் சமூகமே இந்த நாட்டில் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது என்கிறார். அந்த வரலாற்றை வரித்துக் கொண்ட பாடல்கள்:
‘ஜாதி வேற்றுமை களையத்தானே குலம் உயர்வென்ற ஆரியப் பெண்ணை மணந்தார். அதனால் ஓர் இனம் தனி இனம், ஒட்டோம் என்னும் தனியுடை படுவதால் உடைமையுடை படுமே, உடைமையால் அல்லவோ உயர்வும் தாழ்வும்’.
மேலும், அம்பேத்கர் போல் மணம் புரிந்தால் நாடு உருப்படும் என்று தனது பரிந்துரையைப் பாக்களில் வடித்தளித்தார் பாவேந்தர். இப்படிப், பாவேந்தர், விடுதலையாளர் அம்பேத்கரைப் பாடியதற்கு ஒரு சமூகவியல் பின்புலம் இருக்கிறது. அப்பின்புலத்தை நில வரலாற்று அடிப்படையிலும் உணர்வது இன்றியமையாதது.
புதுச்சேரி திராவிட இயக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை முதன்மையாக முன்னிறுத்து
வதையும், கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் சைவ வேளாளர் மட ஆதிக்
கத்தைக் கடுமையாகச் சாடுவதையும் தனது களப் போர் முறையாகக் கொண்டிருந்தது. புதுவை சுயமரியாதை இயக்கப் பொறுப்பாளரான
ச.சிவப்பிரகாசமும் (புதுவை சிவம்) இயக்கப் பாவலரான பாரதிதாசனும் இதில் தீவிர அக்கறையும் ஈடுபாடும் காட்டினார்கள். தாழ்த்தப்
பட்ட வகுப்புத் தோழர்களைத் தங்களுடன் இணைத்து அவர்கள் பல களங்களில் செயல்பட்ட
துடன் அவர்களின் தலைமையை ஏற்கவும் அணியமாயினர். ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதியே தேவை’ என்னும் தலைப்பில்
அம்பேத்கரின் முன்வைப்பு நியாயமானது என்று புதுவை முரசில் எழுதிய (16.12.1931) தலையங்கம் அங்கிருந்து திராவிட இயக்கத்தின்
உணர்வலைகளை உருத் திரட்டிக் காட்டுவதாகும்.
தாழ்த்தப்பட்டவர்களின் சரிநிகர் உரிமை
களுக்காகப் போராடுவதும், அவர்களோடு தங்களை இணைத்துக் கொண்டு அதைச் சமூகத்தில் வெளிப்படுத்தியதும் ஜாதி மறுப்பு மணம் போன்றவையும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மூலமாகத் திராவிடர் கழகத்தினருக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைமையின் கீழ் பகுதி சார்ந்து செயல்படுவதும் அவர்களுக்கு வழக்கமாகி இருந்தது. ஆகவே, அவ்வகுப்பினரின் தனிப்பெரும் விடிவெள்ளியாக அம்பேத்கர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அவரை முழுமையாக ஏற்றுக் கொள்வதில் திராவிடர் கழகத்தினருக்கு எந்தச் சிரமமும் இருந்திருக்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே!
பெரியாருடன், அண்ணல் அம்பேத்கரையும் தங்கள் தலைவர்களில் ஒருவராகப் புதுவை திராவிடர் கழகத்தினர் ஏற்றுக்கொண்டு செயல்பட்டதால் தான், 1945இல் திராவிடர் கழகத் திறப்பு விழா மாநாட்டில் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்து எழுச்சி ஊட்டினர். அதனால் ஜாதிய பழமைவாதிகளிடமிருந்து, பெரும் கலவரத்தையும் எதிர்கொண்டனர். மேலும், தங்கள் இயக்கம் ‘பறையன் கட்சி’ என்று அழைக்கப்பட்டதை அவர்கள் இயல்பாக ஏற்றுக் கொண்டனர். திராவிட இயக்க வரலாற்றில் ‘புதுச்சேரி திராவிட இயக்கம்’ என்ற ஒரு தனிப்பிரிவு திராவிட இயக்கங்களுக்கே ஒரு புதிய பரிமாணத்தையும், பொருண்மையையும் தரவல்லது என்பது வரலாற்று உண்மையாகும்.
புதுவையின் திராவிட இயக்க வரலாறு நமக்கு முற்றிலும் புதிதான உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. புதுவையின் மக்கள் வாழ்வியலில், இயக்கம் ஆற்றிய பணிகள் மிக முக்கியமான ஒன்றாகும். சைவ வேளாளர் மதத்தின் சக்திகளுக்கு எதிராகவும் கிறித்துவ மேலாண்மைக்கு எதிராக நாத்திக நோக்கில், புதுவை திராவிட இயக்கம் போராடியபோதும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளையும், சமூக சமத்துவ நோக்கில் கையில் எடுத்தது. அம்பேத்கரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் புதுவை முரசும் பிற இதழ்களும் தொடர்ந்து வெளியிட்டன. சான்றாக, பெரியார் தமிழில் அம்பேத்கரின் ‘சாதியை ஒழிக்கும் வழி’ என்னும் நூலை வெளியிட்டார். இந்நிகழ்வுகள் புதுவை திராவிட இயக்கத்தோடு இணைந்து செயல்பட்ட பாவேந்தர் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேற்கண்ட தொடர் நிகழ்வுகள்தான் அம்பேத்கரை இலக்கியப்படுத்தி பாவேந்தரைத் தூண்டிய காரணிகள் என்று கணிக்கலாம். இது மட்டுமல்லாமல் அம்பேத்கரும், பெரியாரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வுகள் ‘ஜஸ்டிஸ்’ கட்சியின் நடைமுறை குறித்த அம்பேத்கரின் விமர்சனம், அம்பேத்கரின் சமூக, அரசியல் செயல்பாடுகள் குறித்து ‘குடிஅரசு’ இதழ் (30.09.1944) எழுதிய எழுத்துகள், பார்ப்பன அல்லாதவரின் அரசியல் பிழைப்பு வாதச் செயல்பாடுகள் பற்றிய அம்பேத்கரின் காத்திரமான விமர்சனப் பேச்சுகள் (‘குடிஅரசு’, 30.09.1944) சென்னை மாகாண காங்கிரஸ் ஆட்சியின் தன்மைகள், தலைமைகளின் சுயநலப் போக்குகள், ஹிந்தித் திணிப்பு என்னும் பெயரால் பார்ப்பன மதத்தையும், கலைகளையும் பயன்படுத்தி பார்ப்பனியத்தை விரிவுபடுத்தும் நிலை என இது குறித்த பல்வேறு வாய்ப்புகளின் சந்திப்புகளில் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தொடர்ந்து உரையாடி வந்தார்கள். மேற்கண்ட இந்நிகழ்வுகள் எல்லாம் சுயமரியாதை இதழியல் வழி தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை உண்டாக்கினார். புதுவையின் அக்கால வரலாற்றை உற்றுநோக்கினால் நம்மால் அழுத்தமாக பாவேந்தர், அம்பேத்கரைப் பாடிய பின்புலத்தையும் அவரை ‘மருணீக்கியார்’ என்று சுட்டியதன் ஆழ்ந்த பொருளும் விளங்கும். w
