| த |
ியாகராயர் திராவிடர் கழகத்தின் 33ஆம் ஆண்டு விழாவும், கடவுள் மறுப்புக் கல்வெட்டுத் திறப்பு விழாவும் ஆகிய இந்த விழாவில், தலைவர்கள் முதல் பல அறிஞர்கள் அருமையான சொற்பொழிவு ஆற்றினார்கள். இந்த விழா நம் திராவிடச் சமுதாயத்திற்கு பெரிய பண்டிகை என்று சொல்ல வேண்டும் திராவிடர் கழகத்தார் கடவுள் – மத- சம்பந்தமான விழாக்கள், மூடநம்பிக்கை விழாவானதால், அயோக்கியர்களான பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்பதால் கொண்டாடுவது கிடையாது. அவர்களுக்கு இதுபோன்ற விழாக்கள் தான் பண்டிகையாகும்.
நமது திராவிடர் கழகத்திற்கு அடிப்படையான
தலைவர் தியாகராயர் என்பவர் ஆவார். அவரால் 50 வருடங்களுக்கு முன் திராவிடர்
கழகம் என்னும் பெயரால் இந்த இயக்கம் ஆரம்பிக்
கப்பட்டது. மலையாளம், ஆந்திரம், கன்னடம் முதலிய நாட்டு மக்கள் அதிலிருந்ததால் திராவிடர்
கழகம் என்பதை தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று வைத்துக் கொண்டனர். அதிலிருந்து
தான் நாம் – திராவிட மக்கள், தமிழர்கள் – உத்தியோகத்தில் பங்கு பெற முடிந்தது.
இந்தத் திராவிடர் கழகம் ஏற்படுவதற்கு முன், நாம் 4ஆம் ஜாதி மக்களாக, சூத்திரர்களாக நடத்தப்பட்டு வந்தோம். சூத்திரன் என்றால் ஆதாரப்படிப் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்- அவனுக்கு அடிமை என்பதாகும். இந்த நிலை மாறுவதற்காகத்தான், 1916இல் தியாகராயரால் திராவிடர் கழகம் – பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்றாலும், அப்போது இதன் கொள்கை பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பதவி – உத்தியோகங்களில் பங்கு பெற்றுத் தருவதே ஆகும்.
நம்மை ஈன ஜாதி என்று சொல்வதுதான் இந்து மதம்; நம்மை ஈன மக்களாகப் பிறப்பித்தது தான் நாம் வணங்குகின்ற கிருஷ்ணன், ராமன், கந்தன், சிவன், விஷ்ணு, பிரம்மா, பிள்ளையார் போன்ற கடவுள்கள் யாவுமாகும். தியாகராயரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் பார்ப்பனர் அல்லாதாருக்கு உத்தியோகத்தில் பங்கு வேண்டுமென்று போராடியதே தவிர, நம் மானமற்ற தன்மை இழிவு ஒழிக்கப்பட வேண்டுமென்று அது பாடுபடவில்லை.
நான் தோன்றியபின் தான் இந்த இழிவுகள் ஒழிக்கப்பட வேண்டுமென்று பாடுபடுகின்றோம். நாம் இதற்காகப் பாடுபடுவதற்கு முன் ஜாதியின் காரணமாக, நாம் 100-க்கு 7 பேர்தான் படித்திருந்தோம். தியாகராயர் இயக்கம் துவக்கும்போது நாம் 100-க்கு 5 பேர் தான் படித்திருந்தோம்.
சுதந்திரம் பெற்றும் 1950 வரை நாம்
100-க்கு 10 பேர்தான் படித்திருந்தோம். பிறகு பெரிய கிளர்ச்சி செய்து புரட்சிகரமான காரியங்கள் செய்து, 1952இல் காங்கிரசைத் தோல்வியடையச் செய்ததால், காமராசர் கைக்குக் காங்கிரஸ் வந்ததாலே நாம் மளமளவென்று படிக்க முடிந்தது. அவர் போனதும் மீண்டும் பார்ப்பனராட்சி வந்தது.
அது ஒழிந்து திராவிடர் கழகத்தில் ஒரு பாகமான தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் நம் மக்கள் 100-க்கு 50 பேர் படித்தவர்களாகி விட்டார்கள். நாம் ஏன் பார்ப்பனர்களை வெறுக்கிறோம் என்றால், நாம் 100-க்கு 7 பேர் படித்திருந்தபோது 2500 பள்ளிக்கூடங்களை மூடி, ஹிந்தி படிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டது பார்ப்பனர். அடுத்து நாம் 100-க்கு 10 பேர் படித்திருந்த போது 6,000 பள்ளிக்கூடங்களை மூடியதோடு, பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒருபாதி நேரம் தங்கள் ஜாதித் தொழிலைச் செய்ய வேண்டுமென்று உத்தரவு போட்டதும் பார்ப்பனர். இதை இந்தியாவில் இருக்கிற – இந்த நாட்டில் இருக்கிற யாரும் எதிர்க்கவில்லை.
கம்யூனிஸ்டு, தமிழரசுக் கட்சி, மற்றக் கட்சி எல்லாம் பார்ப்பானோடு சேர்ந்து கொண்டுவிட்டன. சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் ஒன்றுதான். அதை எதிர்த்தது. இந்த ஆத்தூரில்தான் மாநாடு போட்டு ஒரு மாதத்திற்குள் இந்த உத்தரவை மாற்றா விட்டால் எதிர்ப்படுகிற பார்ப்பானைக் குத்துவது அக்கிரகாரத்திற்குத் தீ வைப்பது என்று தீர்மானம் போட்டோம். வாய்தா நெருங்க ஆரம்பித்ததும் இராஜாஜி பதவியை விட்டு விலகிக் கொண்டார். அப்போது காமராசர் பதவிக்கு வர நேர்ந்தது.
அவர் பதவிக்கு வந்ததும் 300 மக்கள் இருக்கிற ஊரில் எல்லாம் ஓர் ஆரம்பப் பள்ளி வைத்தார். 5 மைல்களுக்கு ஓர் அய்ஸ்கூல் என்று வைத்தார். அவர் ஆட்சியின் பயனாக நம் மக்கள் 100-க்கு 30-க்கு மேல் படித்தவர்களாகி விட்டார்கள். அவர் அகில இந்தியக் காங்கிரசின் தலைவராகப் போனதும், இங்குப் பார்ப்பனச் சார்புள்ள பக்தவத்சலம் ஆட்சிக்கு வந்து, அவர் செய்து விட்டுப்போன நன்மைகளை எல்லாம் கெடுத்து, பார்ப்பனர்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய ஆரம்பித்தார்.
அதன் காரணமாக மக்களிடையே காங்கிரஸ் என்றாலே வெறுப்பு ஏற்படும் படியாகிவிட்டது. அடுத்து 1967இல் நடைபெற்ற தேர்தலில் நாம் காங்கிரசை முழு மூச்சுடன் ஆதரித்தும் கூட, அது வெற்றி பெறாமல் போய் தி.மு.கழகம் பெரும் பெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.
ஆட்சிக்கு வந்ததும் முதல் காரியமாக சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுமென்று சட்டமாக்கினார்கள். அரசாங்கப் பணிமனைகளில் இருக்கிற கடவுள் படங்களை எல்லாம் அகற்றவேண்டும் என்று உத்தரவு போட்டார்கள். கல்லூரி படிப்புவரை சம்பளமில்லாமல் படிக்கலாம் என்று ஆக்கினார்கள். ஒரு மனிதனுக்கு 30 ஏக்கராவுக்குமேல் நிலம் இருக்கக் கூடாது என்று காங்கிரஸ்காரன் உத்தரவுப் போட்டான். இவர்கள் வந்ததும் அதை 15 ஏக்கராக்கி விட்டார்கள். நம்மவர்களுக்கு நிறைய உத்தியோகங்கள் கொடுத்திருக்கிறார்கள். பெரிய பதவிகளில் எல்லாம் நம்மவர்கள் இருக்கும்படியான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இப்படி நம் கொள்கைக்கு ஆதரவாகப் பல காரியங்களைச் செய்து வருகிறார்கள் என்பதால், இப்போது இராஜாஜி காங்கிரசிற்குப் போய் இருக்கிறார். இருவரும் சேர்ந்து இப்போது செய்யப் போவது என்ன என்றால், இந்த முன்னேற்றக் கழக ஆட்சியை ஒழிப்பது தானாகும்.
எதற்காக முன்னேற்றக் கழகத்தை ஒழிக்க வேண்டும். காங்கிரஸ்காரன் செய்யாத எந்தத் தவறை முன்னேற்றக் கழகத்தான் செய்து விட்டான். அவன் வாங்காத லஞ்சத்தைவிட இவன் அதிகம் வாங்கி விட்டானா? அவன் குடிக்காத கள்ளுச் சாரயத்தைவிட இவன் அதிகம் குடித்தானா? என்ன கேடு செய்தான் என்று சொல்ல முடியவில்லை.
மதத்திற்கு, ஜாதிக்கு, சாஸ்திரத்திற்கு விரோதமாக நடந்து கொள்கின்றான்; தங்கள் ஜாதியின் ஆதிக்கம் குறைகிறது என்பதால் இராஜாஜி இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பார்க்கிறார். காமராஜர் நம் கொள்கை உடையவரானாலும் டில்லிக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவராக இருப்பதால், அவரும் எதிர்க்கிறார்.
எப்படி மூன்றடி இடத்திற்குள் நீட்டிப் படுக்க
முடியாதோ, அதுபோல டில்லிக்குக் கட்டுப்
பட்டிருப்பதால் காமராஜரால் நம் கொள்கையை எடுத்து சொல்ல முடியாதிருக்கிறது.
இன்றைய ஆட்சியின் பயனாக நம் மக்கள் இன்று 100-க்கு 50 பேர் படித்திருக்கிறார்கள்; உத்தியோங்களில் பகுதிக்கு மேல் நம் மக்கள் இருக்கிறார்கள். இன்னும் 10 ஆண்டுகள் இந்த ஆட்சியானது இருக்கும்படிச் செய்தால், நம் மக்கள் 100-க்கு 100ஆம் படித்தவர்களாகி விடுவார்கள். உத்தியோகங்களில் நம் விகிதாசாரப்படி இடமளிக்கப்படுகிறது.
இவர்கள் இப்போது இல்லாதிருந்தால் சேலம் இரும்பாலைக்கு அனுமதி கிடைத்
திருக்காது. வேறு எந்த மாநிலத்திற்காவது கொடுத்திருப்பார்கள். இதனால் என்ன பலன் என்றால் பல, பத்தாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் வரும். அரசாங்கம் மேலும் பல நன்மைகள் செய்ய வாய்ப்பும் ஏற்படும். மேலும் இவர்கள் ஒருவரால் தான் நம் இழிவை ஒழிக்க முடியுமே தவிர, மற்ற நம் நாட்டிலுள்ள எவராலும் முடியாது. எனவே, இன்றைய இந்தத் தி.மு.க. ஆட்சியை ஆதரிக்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
ஒவ்வொரு மனிதனும் மடையனாக இருப்பதற்குக் காரணம், எவனும் தன் பகுத்தறிவு என்ன சொல்கிறது என்று சிந்திப்பது கிடையாது. சாஸ்திரம் என்ன சொல்கிறது? முன்னோர் என்ன சொன்னார்கள்? என்று பார்ப்பதாலேயே ஆகும். இதன் காரணமாக எம்.ஏ., பி.ஏ., டாக்டர் படித்தவன் எல்லாம் மடையனாக இருக்கிறான். 30, 40 வருடமாக எழுதிப் பார்த்தும், சொல்லியும் இன்னும் நம் மக்கள் திரும்பவில்லை. இனி உயிரைக் கொடுத்தாவது நம் மக்களின் இழிவைப் போக்க வேண்டும் என்பதால் தான் இப்போது இந்தக் கடவுள் மறுப்பு வாக்கியங்களைப் பரப்புகின்றோம்.
வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகப் புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை தீமையை அறியும் குணமும், ஆய்ந்து ஒய்ந்து பார்க்கும் தன்மையும் ஆகியவைகள் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள்.
- ‘குடிஅரசு’, 19.01.1936
கடவுள் இல்லை என்கின்றோம், இருக்கிறது என்று பக்தனால் தான் காட்ட முடியவில்லை என்றால், சர்வசக்தியுள்ள கடவுளால் கூட தான் இருப்பதாகக் காட்டிக் கொள்ள முடியவில்லையே! இன்னொருவன் சொல்லித் தான் ஒருவன் கடவுள் இருக்கிறது என்று உணருகின்றானே தவிர, இயற்கையாக எந்த மனிதனுக்கும் கடவுள் எண்ணம் தோன்றுகிறது என்று சொல்ல முடியாது. எந்த மனிதனும் தானாகக் கடவுளை உணர்ந்ததாகச் சொல்ல முடியாது என்பதை விளக்கியதோடு, மற்றும் கடவுள், மதம், ஆத்மா, புராண, இதிகாசம் ஆகியவற்றிலுள்ள புரட்டுகளை எல்லாம் தக்க ஆதாரத்தோடு எடுத்து விளக்கி, இவற்றின் மேலுள்ள நம்பிக்கையாலேயே நம் நாட்டு மக்கள் அறிவற்ற மடையர்களாக, இழிஜாதி மக்களாக, சூத்திரர்களாக, மற்ற நாட்டு மக்களால் காட்டுமிராண்டிகள் என்று அழைக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தக்க ஆதாரங்களுடன் எடுத்து விளக்கி மக்களைத் தெளிவுபடுத்தினார்கள்.
26.7.1970 அன்று சேலத்தில்
ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (‘விடுதலை’: 4.9.1970)
