Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கொடி வணக்கம்!- செல்வ மீனாட்சி சுந்தரம்

காரிருளைப் போக்கவந்த செம்பரிதி ! – எங்கள்
கழகத்தின் செங்கருப்பு வண்ணக்கொடி !
தூரிகையால் வரைந்ததல்ல இந்தக்கொடி ! – எங்கள்
தோழர்குருதி சிந்திவரைந்த ஈகக்கொடி !

சிந்தையெலாம் இருள்படிந்து சிந்திக்குந் திறனிழந்து
திராவிடர்கள் சீரழிந்த பொழுதிலே – எங்கள்
தந்தைபெரி யாரெழுந்து தன்மானப் போர்தொடுக்கத்
தலைநிமிர்ந்தோம் எனவுயர்ந்தாய் வானிலே!

தந்தைபெரி யார்வடித்து மணியம்மை காத்தெடுத்துத்
தாங்குதின்று தமிழர்தலைவர்  கைகளே! – எங்கள்
சந்ததியைக் காத்ததற்கும் சனாதனம் சாய்த்ததற்கும்
சாட்சியாக நிலைகொண்டாய் தெருவிலே!

வீதியிலே நடப்பதற்கும் மேலாடை அணிவதற்கும்
சாதிவந்து தடைவிதித்த பொழுதிலே – பாழும்
வேதியத்தின் கருத்தொழித்து
வேதனையைத் துடைத்தெடுத்து
வீறுகொண்டு பறக்கின்றாய் வெளியிலே!

கல்விவேலை வாய்ப்பிழந்து கடையரெனத் தாழ்ந்திருந்த
தமிழர்களை ஏற்றிவைத்த ஏணியே! – நீ
பள்ளிகளில் பணியிடத்தில் எமக்கிடத்தைப் பிரித்தொதுக்கிப்
பத்திரமாய்க் கரைசேர்த்த தோணியே!

பெண்ணடிமைத் தளையறுத்துப் பெண்ணுரிமை மீட்டெடுத்துக்
கண்ணிமைபோல் காப்பளித்த காவலே – நீ
விண்வெளியை அளப்பதற்கும் வெற்றிக்கொடி நாட்டுதற்கும்
பெண்களுற்ற வினையூக்கி ஏவலே!

செந்தமிழைக் காத்தருளித் தீயர்இந்தித் திணிப்பகற்றிச்
சீர்திருத்தம் கொண்டுவந்தாய் எழுத்திலே! – நீ
எந்தமிழர் ஆட்சிகண்டும் எம்பகையின் சூதுவென்றும் எமக்களித்தாய் வெற்றிமாலை கழுத்திலே!

மண்டல்குழுப் பரிந்துரையைச் செயல்படுத்தக் களத்தினிலே
மறப்போரில் உரிமைவென்ற போர்ப்படை! – நீ
சுண்டல்குழு சூதுமன்றச் சூழ்ச்சிகளை முறியடித்துச்
சூத்திரர்க்கு வாழ்வுதந்த கார்ப்படை!

ஆதிக்கம் அற்றொழித்தும் அனைவர்க்கும் அனைத்துமெனும்
அறம்படைத்தே அருள்பொழிந்த வானமே! – நீ
சாதிவாலை நறுக்கிவைத்த சாதனையைப் படைத்தளித்துத்
தழைக்கவைத்தாய் தமிழர்களின் மானமே!

எமதினத்தின் காவலுனை இதயங்களில் ஏற்றிவைத்தோம்!
எழுகதிராய் உன்னாட்சி நீள்கவே! – நீ
சமத்துவத்தின் சாட்சியெனச் சமூகநீதி மாட்சியெனச்
சரித்திரமுன் புகழுரைக்க வாழ்கவே !
w