Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சர்.பிட்டி. தியாகராயர்-முனைவர் க. அன்பழகன்

மனித குலத்திற்கு தொண்டாற்றும் வாய்ப்பே மிகப்பெரும் சிறப்பு என்றும் ‘தொண்டறமே அழியாப் புகழ் தரும் பெருமைமிக்கது என்றும்’ வாழ்ந்து மறைந்த தலைவர் பெருமக்கள் பலரில் சர்.பிட்டி. தியாகராயர் ஒரு தனிப்பெரும் தலைவராவர்.

சென்னை, கொருக்குப்பேட்டையில் 27.04.1852இல் மிகப்பெரும் செல்வக் குடும்பத்தில்  பிறந்தார். சென்னை மாகாணத்தில்  “தேவாங்கர்
குலத்தில்” பட்டப்படிப்பு படித்த முதல் பட்டதாரி ஆவார். அன்றைய காலத்தில் இவர் பெற்ற பட்டம் B.A.(கணிதம்).

சிறந்த அறிவாற்றல் மிக்கவர் என்பதற்குச் சான்றாக கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் எழுத – பேச திறன் பெற்றிருந்தார். 1882ஆம் ஆண்டு சென்னை நகர சபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1925வரை அச்சபையில் அங்கம் வகித்த பெருமகனாவார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் நகரசபையில் அங்கம் வகித்து பணி புரிந்திருக்கிறார்.

1920, 1921, 1922 என தொடர்ந்து மூன்றாண்டுகள் நகரசபைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இவர் ஒருவரே ஆவார். அன்றைய நகரசபைத் தலைவர் பதவிக்கு “பிரசிடெண்ட்” என்று பெயர். இன்று அது 1933 முதல் “மேயர்” என்று அழைக்கப்படுகிறது.

இவர் நகரசபைத் தலைவராக இருந்த அந்தக் காலக்கட்டத்தில்தான் சென்னை நகராட்சிப் பள்ளியில் முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதுதான் இன்று சத்துணவு, காலைச் சிற்றுண்டி என பலவாறு பரிணமித்து ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை மகுடமாக, நீதிக்கட்சியின் சாதனை நீட்சியடைந்துள்ளது.

நகரசபையின் உரிமைகள், அதிகாரங்கள் பற்றியும், வருவாய் பெருக்கத்திற்கான வழிகள் குறித்தும் சிந்திக்கலானார். நகரசபையின் வளர்ச்சிக்கும் மிக முக்கியப் பங்காற்றினார். சாலைப் போக்குவரத்து, குடிநீர், வடிகால் வசதி, மின் வசதி, சுகாதாரம், தொடக்கக் கல்வி, பள்ளியில் மதிய உணவு போன்ற பல திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினர்.

அவரது தொண்டை நினைவு கூறவும்,  நன்றிப் பெருக்கை செலுத்திடவும் எண்ணிய சென்னை மக்கள் சார்பில், சென்னை நகர்மன்றத்தின் முன் சர்.பிட்டி.தியாகராயரின் கம்பீரச் சிலை நிறுவப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு நினைவு இடங்கள், சிறப்புகள் அவர் பெயரில் செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்பெல்லாம் அவர் ஆற்றிய நகர்மன்றப் பணியைச் சார்ந்து நிற்கிறது. இதைவிட மிகப்பெரும் வரலாற்றுச் சிறப்புமிகுப் பணியை, திராவிடர் இனத்து மக்களின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை உருவாக்கும் பணிக்கு, அவர் ஆற்றிய பெருமையே பெருஞ்சிறப்புக்குரியதாகும்.

பார்ப்பனர்களின் ஆதிக்கத்தால் அனைத்து உரிமைகளும் இழந்து, அடிமை வாழ்வை ஏற்கும் மக்களாக, அறியாமையில் மூழ்கி கல்வி, வேலைவாய்ப்புகளில்  அதிகாரத்தை முற்றிலும் இழந்து, சூத்திர வர்க்க மக்களாக இருந்திட்ட தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – பழங்குடியினரான பார்ப்பனரல்லாத மக்களின் அடிப்படை உரிமையான கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் உரிய உரிமையைப் பெற ஓர் அமைப்பு தொடங்கப்பட காரணமான இந்த மூவேந்தர்களில் முக்கிய இடத்தைப் பெற்றவராக சர்.பிட்டி. தியாகராயர் திகழ்கிறார்.

டாக்டர் சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர் இவர்களுடன் சர்.பிட்டி. தியாகராயர் மூவரும் சேர்ந்து, இவரது தலைமையில் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” எனும் பார்ப்பனரல்லாதார் உரிமைக்குப் போராடும் அமைப்பைத் தொடங்கினார்கள். இந்த அமைப்புப் பின்னாளில் “நீதிக்கட்சி” என்று அழைக்கப்பட்டது.

இந்த நீதிக்கட்சியின் அடிப்படையான கொள்கை,  கல்வி – வேலைவாய்ப்பில் “வகுப்புவாரி விரிவாக்கம்” தேவை. ஜாதி வாரியாக,  அந்தந்த ஜாதியின் எண்ணிக்கைக்கு ஏற்ப “வகுப்புரிமை” வழங்கப்படல் வேண்டும் என்பதேயாகும்.

இந்நோக்கத்திற்காகவே 20.11.1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ எனும் கட்சியின் சார்பில் “பார்ப்பனரல்லாதார்” அறிக்கையை (Non-Brahmin Manifesto) சர்.பிட்டி.தியாகராயர் வெளியிட்டார்.

இக்கட்சி 1920ஆம் ஆண்டு இரட்டை ஆட்சிமுறைத் திட்டத்தின் கீழ் தேர்தலில் நின்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதும் அன்றைய கவர்னர் லார்டு வெலிங்டன் முதலமைச்சராக பொறுப்பேற்க அழைத்த போது, எனக்கு அப்பதவி வேண்டாம் என்று கூறி முதலமைச்சர் பதவியை உதறித் தள்ளிய ஒப்புவமை இல்லா பெருமைக்கு உரியவர் தான் சர்.பிட்டி.தியாகராயர்.

சர்.பிட்டி.தியாகராயர் தலைமையில் டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் இணைந்த நீதிக்கட்சியின் வெற்றி தொடங்கியது. தொடர் வெற்றியின் விளைவாக 1928ஆம் ஆண்டு திரு.முத்தய்யா முதலியார் அமைச்சராக இருந்தபோது தான், முதல் வகுப்புரிமை ஆணை வழங்கப்பட்டது. அந்த ஆணையின் வளர்ச்சி நீட்சிதான் இன்று தமிழ்நாடு மாநிலத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற நிலைக்கு உயர்ந்து இருப்பதோடு, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நீதிமன்றத்தின் தலையீட்டிலிருந்து பாதுகாத்திட, சட்டப் பாதுகாப்பை தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைத்து தானே வரைந்தளித்து, இன்று 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு மாநிலத்தில் தான் அதிக அளவில் இடஒதுக்கீடு சமூக நீதி
வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிற மாநிலம் இம்முறையைப் பின்பற்றி இடஒதுக்கீட்டை 50 விழுக்காடுக்கு மேல் உயர்த்திடும் என்னும் நிலையை உருவாகியிருப்பதும் கோடிட்டுக் காட்ட வேண்டியதாகும்.

சமூகநீதி மட்டுமின்றி இன்று திராவிடர் இனத்து மக்கள் பல்முனையில் முன்னேற – இன்றைய தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி காரணமாகவும் இருக்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு இன்று மிகப்பெரும்பாலான துறைகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. பிற மாநிலத்தார் தமிழ்நாட்டைப் பார்த்து தங்களின் ஆட்சித் திசையை மாற்ற நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

இவ்வளவு சிறப்பிற்கும் காரணமான திராவிட இயக்கம் – நீதிக்கட்சி அதன் தொடக்கம் எனும் இடத்தில் இருப்பவர்தான் சர்.பிட்டி.தியாகராயர் ஆவார். ஒரு நூற்றாண்டு கடந்த வரலாற்றின் நாயகர் சர்.பிட்டி.தியாகராயர் 28.04.1925 அன்று மறைந்திட்டார். அவரின் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றக் கொள்கைகள் இன்று வெற்றிகள் பலவற்றை குவிப்பதோடு, “திராவிடம் வெல்லும் – அதையே நாளைய வரலாறு” சொல்லும் என்று முழங்குகிறது.

வாழ்க! சர்.பிட்டி.தியாகராயர்!! w