Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழ் நாடுஅமைதிப்பூங்காவாகவே நிலைக்க உறுதியேற்போம்!

தமிழ்நாட்டில் எப்படியாவது மதக் கலவரத்தைத் தூண்டிவிட வேண்டும் என்னும் கெடு நோக்கோடு ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரத்தின் தொங்கு சதைகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த முயற்சிகளுள் ஒன்று தான் திருப்பரங்குன்றம் மலை விவகாரம். தொடர்ந்து பல ஆண்டுகள் இதற்கான அடித்தளங்களை மெல்ல மெல்ல போட்டுக் கொண்டிருந்தவர்கள், தேர்தல் நெருங்கியதையொட்டி, கடந்த ஆண்டு வேகமாகக் காய்களை நகர்த்தினர். அதன் விளைவாக ஒரு பதற்ற நிலை மதுரையைத் தொற்றிக் கொண்டது. திருப்பரங்குன்றத்தில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திற்குப் பதிலாக, தர்காவுக்கு அருகில் உள்ள சர்வே கல்லின் மீது தீபம் ஏற்றப்பட வேண்டுமென்று சில ஹிந்துத்துவவாதிகள் வழக்குத் தொடுத்தனர். ஹிந்துத்துவாவினருக்குச் சாதகமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜஸ்டிஸ் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் அதீத அவசர தீர்ப்பும் வழங்கப்பட்டதால், ஒரு நெடுங்கால ஆபத்துக்கான அறிகுறி தென்பட்டது.

ஆனால், இவ் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடும், சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, சமூக அமைதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சட்டப்படியான அனைத்து முயற்சிகளையும் செய்து, நிலைமையைக் கவனமாகக் கையாண்டது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு. அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு 25 கூறுவதை முறையாகப் பின்பற்றியதுடன், சட்டம் – ஒழுங்கையும், அமைதியையும் காப்பாற்றுவதற்காக, எந்தப் பின்விளைவையும் சந்திக்கத் தயார் என்ற துணிச்சலுடன் செயல்பட்டுப் பாராட்டுப் பெற்றது தமிழ்நாடு அரசு.

இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ளாமல், தனி நீதிபதியின் ஆணைகளைச் செயல்படுத்தவில்லை என்று கூறி, ஹிந்துத்துவாவினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கு அதே நீதிபதியால் விசாரிக்கப்பட்டது. அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சொல்லியும், தான் கொடுத்த ஆணைகளை செயல்படுத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் மீண்டும் மீண்டும் இப் பிரச்சினைக்கு உயிரூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேலும் சில ஆணைகளை அடுக்கிக் கொண்டே இருந்தார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜஸ்டிஸ் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன். அவை சட்டத்தின்பாற் பட்டதாகவோ, பிரச்சினையை முடித்து வைப்பதாகவோ இல்லாமல், மேலும் பிரச்சினைகளை வளர்த்துச் சிக்கலாக்கும் விதமாகவே இருந்தன. பொது அமைதியைச் சவாலாக்கும் வகையில் சூழ்நிலை உருவானது.

இதனால் அந்த உத்தரவுகளின் மீது தமிழ்நாடு அரசின் சார்பிலும், தர்கா தரப்பு சார்பிலும் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வின் முன் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தனி நீதிபதி கொடுத்த ஆணைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

அதைக் குறித்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, வழக்கில் தனி நீதிபதி (தான்) கொடுத்த உத்தரவுகளுக்கு மட்டுமே இருநீதிபதிகள் அமர்வு தடைவிதித்துள்ளதே தவிர, வழக்கை விசாரிக்கத் தடையில்லை என்று சொல்லி, பிடிவாதமாக வழக்கு விசாரணையைத் தொடர்ந்து வந்தார்.

இது தொடர்பாகத் தெளிவுபடுத்தக் கோரிஉரிமைப் பட்டய மேல்முறையீடு (Letters Patent Appeal-LPA) மூலம் மீண்டும் முறையிடப்பட்டபோது, கடந்த மூன்று நாள்களுக்கு முன் (ஏப்ரல் 8 அன்று) அதனை விசாரித்த இரு நீதிபதிகள் (ஜஸ்டிஸ் திரு.சதீஷ்குமார், ஜஸ்டிஸ் திரு.ஜோதிராமன்) அமர்வு, திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியால் வழங்கப்பட்ட உத்தரவுகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்படுகின்றன என்று உறுதிப்படுத்தியதுடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்பட திருப்பரங்குன்றம் தொடர்பான எந்த வழக்கையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தனி நீதிபதி விசாரிப்பதா, இரு நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதா என்று முடிவு செய்யப்படும்வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் சென்று ஹிந்துக்கள் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறி மற்றொரு ‘பொதுநல’ வழக்கை ஹிந்து தர்ம பர்ஷத் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் தொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் “திருப்பரங்குன்றம் தவிர வேறு பிரச்சினையே இல்லையா? திருப்பரங்குன்றம் தொடர்பாக எத்தனை மனுக்களைத் தாக்கல் செய்வீர்கள்? நீதிமன்றத்துக்கு இதை விட்டால்
வேறு வேலை இல்லையா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், வழக்கு தொடுத்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தனர். (இந்த நபருக்குப் பொழுது விடிந்தால் ‘பொது நல வழக்கு’ என்ற பெயரில் இதுவே வேலை! இதே பெயரில் மற்றொரு சிறீரங்கத்துப் பார்ப்பனரும் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உள்ளிட்ட பிரச்சினைகளில் வழக்கு தொடுத்து சமூக அமைதியையும், சமூக நீதியையும் குலைக்க முயற்சிப்பார்.)

பின்னர் வாழ்நாள் முழுக்க இப்படி வழக்குத் தொடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி வழங்கியதன் பேரில், அந்த நபருக்கு ரூ.50,000 ஆக அபராதம் விதித்து முடித்து வைத்துள்ளனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திர உரிமை என்பது லகான் இல்லாத குதிரையல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25-இன் படி, “Subject to Public order, health and morality and to the other provisions of this part” தெளிவாக அதன் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

அதை மனதில் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ள இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுகள் வரவேற்கத்தக்கவையாகும்.

மதக்கலவரங்களுக்கு உயர்நீதித்துறை துணை போகாமல் காப்பாற்றிய பெருமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் திரு.சதீஷ்குமார், ஜஸ்டிஸ் திரு.ஜோதிராமன் ஆகியோருக்கு உண்டு.

இதன் மூலம் தேர்தல் நடைபெறுவதற்குள் மத மோதல்களைத் தூண்டிவிட்டு, அரசியலில்
குளிர்காய நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ஹிந்துத்துவ கும்பலின் சூழ்ச்சி முறியடிக்கப்
பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்வதை உறுதிப்படுத்த இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு நொடியும் தமிழர்கள் உணர வேண்டியது அவசியம்!