1) கே :“காங்கிரஸ் கட்சியின் பிடிவாத அணுகுமுறையாலே ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியா கூட்டணி பலமிழக்கிறது, பா.ஜ.க.பலம் பெறுகிறது” என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஆம் எனில், காங்கிரஸ் இத்தேர்தல்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
– கு.வசந்த், நாகர்கோவில்
ப : ஒரு கசப்பான உண்மை. காங்கிரஸ் தலைமை, ஆளுமை, தனது நிலைப்பாட்டை யதார்த்தத்திற்கு ஒட்டியதாக்கி, காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி அரசியலைக் களைந்து நடத்த வழிவகை காணுவது அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிடக்கூடும்.
2) கே: மதம் மாறினாலும், சமூக நிலை மாறிவிடாது என்பது 100% உண்மையாய் இருக்கும் நிலையில், மதம் மாறிய தாழ்த்தப்பட்டோர், பட்டியலினத்துக்குரிய இடஒதுக்
கீடு பெறமுடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏற்புடையதா?
– பி.சி. பாண்டியன், சிந்தாதிரிப்பேட்டை
ப: தற்போதுள்ள சட்ட அமைப்புப்படி அத்தீர்ப்பில், பவுத்தத்திற்கு மாறிய
வர்களுக்கு இதைக் கூறாது அனுமதித்துள்ளது. மற்ற மதங்களில் கிறித்துவ, இஸ்லாமிய மதங்களில் சேர்ந்தால் என்ன நிலை என்பது பற்றிக் குறிப்பிடுகிறது. அவ்வளவுதான்!
3) கே : கபாலீஸ்வரரை வணங்கி விட்டு, மயிலாப்பூரில் எடப்பாடி தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளாரே! பி.ஜே.பி.யில் அ.தி.மு.க. கரைகிறதா?
– த.தேவதாஸ், திருச்செங்கோடு
ப : ஏற்கனவே கரைந்துவரும் நிலையில், இதுவும் ஒரு சாஸ்திரோக்க, ஜோசியர் கூறியபடியான நடவடிக்கையாக இருக்கக்கூடும். அக்கூட்டணியில் – அதிலும் குறிப்பாக எடப்பாடியார் தேர்வுக்கு ஜோசியமும் நாள் நட்சத்திரமும் முன்பிருந்தே நடைமுறைதானே!
4) கே : ஜி.கே. வாசன் தாமரைச் சின்னத்திலே நிற்க முடிவு செய்துள்ளார். பி.ஜே.பி. கட்சியிலே இணைந்துவிடலாமே! இது, ஜி.கே.மூப்பனாருக்குச் செய்யும் துரோகமல்லவா?
– கே. மலர்விழி, பட்டிவீரன்பட்டி
ப : ஜி.கே. மூப்பனார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதும் ஒரு காரணமோ? வெட்கம் – மகா கொடுமை!
5) கே : தமிழகக் கவர்னர் மாற்றப் பட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா?
– க. அர்ச்சுனன், செங்கல்பட்டு
ப : உள்நோக்கம், வெளி நோக்கம்! எல்லாம் ஒரே நோக்கம் ஆர்.என்.ரவியால் தி.மு.க. வெற்றி வாய்ப்பு கூடிவிடுமோ என்ற பயம் அமித்ஷா கட்சியினர்க்கு!
6) கே : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை இடங்களைத் தீர்மானித்
தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக் கப்படும் என்பதால், தற்போதுள்ள மக்களவை இடங்களின் விகிதத் திற்கு ஏற்ப உயர்த்தப்படும் இடங்களைப் பகிர்ந்தளிப்பது தானே சரியாக இருக்க முடியும்?
– ந. அசோகன், ஸ்பிக்நகர்
ப : மக்கள் தொகை அடிப்படையில், குடும்பக் கட்டுப்பாடு திட்டம் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை வெற்றிகரமானதாக்கச் செய்ததால், பாராட்டுக்குப் பதில் தண்டனை தானே இது! நமது முதலமைச்சர், தமிழ்நாட்டுக் கட்சிகள் பல மாதங்களுக்கு முன்பிருந்தே வற்புறுத்தி வருகின்றனரே!
7) கே : கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– மு.நாசர், புதுக்கோட்டை
ப : யதார்த்தத்தைப் புரிந்து, தி.மு.க. கூட்டணிக்குப் பெரும் உதவியை – ஆக்கமாகவே பார்க்கிற அவரது சிறந்த முடிவு, வரவேற்கத்தக்கதே!
8) கே : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை செய்யப்பட்டபோது, அவர்கள் உடல்நலக்குறைவால் இறந்ததாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, இப்போது தண்டனை கிடைத்துவிட்டதாகக் கூறுவது நாணயமா?
– அ.சத்யா, வேளச்சேரி
ப : அவர் ‘ஆரிய மாயை’யில் சிக்கி நெடுநாளாகிறது.“பேச நா இரண்டுடையாய் போற்றி போற்றி!“ என்று அண்ணா எழுதியது நினைவுக்கு வருகிறது!
9) கே : மாநிலங்களவைத் தேர்தலில் கட்சிமாறி வாக்களித்த துரோகத் தாலே பி.ஜே.பி. அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்று ‘தினமணி’ நாளேடு தலையங்கம் எழுதியுள்ளது சரிதானே?
– ந. பிரகாஷ், சுங்குவார்சத்திரம்
ப : உண்மையைச் சொன்ன ‘தினமணி’ தலையங்கத்திற்குப் பாராட்டு.




