Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அண்ணல் அம்பேத்கர் வழிநடப்போம்!

பாவலர் சுப. முருகானந்தம்
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.

ண்டுபல நூறாக அடிமை யாக்கி

அரிச்சுவடி படிப்பதற்குந் தடையைப் போட்டு

வேண்டாத சாதிமதச் சாத்தி ரங்கள்

விதித்ததிவை என்றேதான் சொல்லி நம்மைத்

தீண்டாத குலமென்று தள்ளி வைத்துத்

தெருக்கூட்ட மலமள்ள ஏவி நின்றார்!

மாண்டாலும் சுடுகாடு தனியே வைத்து

மனிதரென மதிக்காது இழிவும் செய்தார்!!

ஏனென்றே கேட்பதற்கு வந்தார் அண்ணல்!

இருண்டநிலம் வெளிச்சமுறக் களமும் கண்டார்!!

தானென்றே தலைவழியாய்ப் பிறந்தோ மென்றோர்

சதியெல்லாம் முறிப்பதற்குச் சட்டம் செய்தார்!!

தேனென்றே அறிவுநலம் ஆறா யோடித்

திசையெங்கும் பரவுதற்குத் திட்டம் தந்தார்!

கூனென்றே கிடந்தோம்நாம் எழுந்து நின்றோம்!

குவலயத்தில் மனிதரென்றே நிமிர்ந்தே வென்றோம்!!

தொல்லைதரும் மதவுணர்வைத் தூக்கிக் காட்டித்

தொடருகின்றார் கலவரங்கள்.. முடிப்போம் வா!வா!

அல்லல்தரும் சாதிவெறி அடக்கி வென்றே

அனைவர்க்கும் அனைத்துமென அமைப்போம் வா, வா!!

கல்லையெலாம் கடவுளெனக் காட்டு கின்ற

காவிகளின் கதைமுடிக்க விரைந்து வா, வா!

இல்லையிங்கே பேதமென்ற அண்ணல் வாக்கை

எடுத்துரைப்போம் வீதியெல்லாம் வா, வா தோழா!

மண்ணுக்கே விடுதலையை மற்றோர் கேட்க

மனிதருக்கு விடுதலையை யார்தான் கேட்டார்?

பெண்ணுக்குப் பெற்றோரின் சொத்தில் பங்கு

பெரியார்போல் யார்கேட்டார்? அண்ணல் தானே!

கண்ணென்று கல்விகற்றே ஒன்றாய்ச் சேர்ந்தே

களங்கண்டு புரட்சிசெய யார்தான் சொன்னார்?

அண்ணல்நம் அம்பேத்கர் வழியில் சென்றே

அடைவோமே நமதுரிமை வாயென் தோழா !!  |