| த |
மிழ்நாடு இப்போது எதிர்நோக்கும் சட்டமன்றத் தேர்தல் என்பது வழக்கமான தேர்தல் அல்ல. இது ஓர் போராட்டம். மதவாத, பாசிச பா.ஜ.க. ஒன்றியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிற காரணத்தால், தனது மதவாத ஆதிக்க அரசியலை தென் மாநிலங்களில் உருவாக்கத் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றது. அதிலும், குறிப்பாகத் தமிழகத்தில் எப்படியாவது தனது ஆட்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதை, ஒரு நீண்டகால இலக்காகக் கொண்டு, அதற்கான செயல்திட்டங்களை தனது அடிமை அரசியல் கட்சிகளின் துணையுடன் நிறைவேற்றி வருகிறது.
“தமிழ்நாடு பெரியார் மண்” என்பதால் அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அது இயலாமலே போகிறது என்றாலும், அவர்கள் தங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தனது சுயநலத்திற்காக, பி.ஜே.பியை தமிழ்நாட்டில் வளர்க்கின்ற, காலூன்றச் செய்கின்ற பெரும் துரோகச் செயலைத் தொடர்ந்து செய்துவருகிறார். சமூகநீதி அக்கறையுடன் தொடங்கப்பட்ட கட்சி இன்று, பாசிச பா.ஜ.க.வுக்குப் பக்கபலமாக நின்று ‘பராக்’ போடும் பணியைச் செய்து வருகிறது. அன்புமணி தன் சுயநலத்திற்காக பா.ம.க.வை பா.ஜ.க. கட்சியுடன் கரைத்து விட்டார். பல ஊர்களில் பா.ம.க. கட்சியினர் பா.ஜ.க. கட்சியில் சேர்ந்து வருகின்றனர் என்பது யதார்த்த நிலை.
அ.தி.மு.க., எடப்பாடியார் தலைமையில் வந்தபின் அது ஒன்றிய பா.ஜ.க.வின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும். அடிமைக் கட்சியாகி விட்டது. வெளியில் வீரவசனம் பேசினாலும் உள்ளுக்குள் ஒத்து ஊதும் போக்கே உள்ளது.
கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமை
யென்றாலும், பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் பல சிறுகட்சிகள். அந்தச் சிறுகட்சிகள் தாமரைச் சின்னத்தில் தேர்தலில் நிற்கின்றன. இது எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் என்பதை நுட்பமாய் சிந்திக்கின்றவர்களுக்குத் தெரியும். எதிர்காலத்தில் இதன் பாதிப்புகள் பெருமளவில் வெளிப்படும்.
புதிதாக வந்துள்ள நடிகர் கட்சியும், பா.ஜ.க.வை எதிர்ப்பதில் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வாக்குகளைப் பிரிக்கும் செயலைச் செய்து வருகிறது. அக்கட்சியில் இருக்கும் முதன்மையானவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். சார்பு உடையவர்கள். அதை பி.ஜே.பி. எப்போது வேண்டுமானாலும் விழுங்கிவிடும்.
ஆக, தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பொதுவுடைமைக் கட்சிகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் வலுவான கொள்கைப் பிடிப்புடன் ஒரே கூட்டணியில் இருக்கின்றன. இடம் குறைந்தாலும் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகமாட்டோம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி, கூட்டணியில் இருந்தாலும் தங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கக் கூடியவர்கள். தி.மு.க. தவறு செய்தால் தயங்காது சுட்டிக்காட்டி எதிர்க்கக்கூடியவர்கள். சுருங்கச் சொன்னால்,
பி.ஜே.பி. எதிர்ப்பில் மிகஉறுதியுடன் இருக்கக்கூடியவர்கள். இதில் புதிதாகச் சேர்ந்த தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை, அவர்கள் அ.தி.மு.க. அணியில் இருந்தவர்
கள். சூழ்நிலையால் அவர்கள் தி.மு.க. கூட்டணிக்கு வந்துள்ளார்கள். அதேபோல சூழ்நிலை கருதி தி.மு.க.வும் அவர்களைத் தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் பி.ஜே.பி. எதிர்ப்பில் உறுதியுடன் இருக்கக்கூடிய அணி தி.மு.க.அணி என்பதால், டில்லி ஆதிக்கம், பி.ஜே.பி.யினுடைய மதவாத அரசியல் இவற்றை எதிர்த்து தமிழ்நாட்டின் தனித் தன்மையை, தனி உரிமைகளைக் காக்க, தி.மு.க. அணியால் மட்டுமே முடியும் என்பது அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ள உண்மை. மாநில சுயாட்சிக் கொள்கையில் தி.மு.க. அணி மட்டுமே உறுதியுடன் நிற்கிறது என்பதால், அக்கூட்டணியை ஆதரிப்பது மட்டுமே தமிழ்நாட்டின், தமிழர்களின், தமிழ் மொழியின் நன்மைக்கும், பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும்.
இந்தியாவும் பி.ஜே.பி. ஆட்சியில், கார்ப்பரேட், காவி பாசிசத்தின் பிடியில் மிகப்பெரிய சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள், இளைஞர்கள், வறுமையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும் உள்ளனர். மதச் சிறுபான்மையினர் அச்சத்திலும், வெறுப்புக்குள்ளாகியும் உள்ளனர். தலித் மக்கள், பழங்குடியினர் உயர் ஜாதியினரின் ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர்.
நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கடுமையான பாதிப்புள்ளாகும் நிலையில், விரல்விட்டு எண்ணத்தக்க கார்ப்பரேட் குடும்பங்கள் மட்டும் கோடிக்கணக்கில் குவித்து, ஆதிக்கமும், அபகரிப்பும் செய்து நாட்டைச் சுரண்டி வருகின்றன.
மக்களாட்சி நடைமுறைகள், உரிமைகள் சிறுகச் சிறுக பறிக்கப்பட்டு, பாசிச காட்டாட்சியில் நாடு சிக்கித் தவிக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வை முறையாகத் தராமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. அரசுத் துறைகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் பொருளாதாரச் சீரழிவு தொடர்ந்து நடக்கிறது. எல்.அய்.சி., பி.எஸ்.என்.எல்., ரயில்வே, ஏர்வேஸ் போன்ற பெரும் துறைகள் சீரழிக்கப்பட்டு, தனியாருக்குத் தாரை வார்க்க தயார்ப்படுத்தப்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பி.ஜே.பி. ஆட்சியை, ஆதிக்கத்தை கொல்லைப்புற வழியாகக் கொண்டுவர, அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.அய்., தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற எல்லாத் துறைகளையும் கைப்பாவையாக்கி முயற்சி செய்து வருகிறது. மாநில மொழிகளை அழித்து ஹிந்தியையும், அதன் வழி ஹிந்தியில் சமஸ்கிருதத்தையும் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு கொடுஞ்சூழலில்தான் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதைத் தேர்தலாகப் பார்க்காமல். டில்லி பாசிசத்திற்கு எதிரான போராகவே நாம் அணுகிச் செயல்பட வேண்டியது கட்டாயமாகும்!
திசை திருப்பல், அவதூறுகள் எச்சரிக்கை! எச்சரிக்கை!
பாசிச பி.ஜே.பி.க்கு எதிராய் ஓர் அணி அமைத்து அதன் ஆதிக்கத்தை முறியடிக்க நாம் முயற்சித்தால், உடனே ஊடகங்கள் துணையுடன் மக்களை ஏமாற்றும் வகையில் அவதூறுகளைப் பரப்பி, தப்பான செய்திகளைச் சொல்லி வருகின்றனர். எனவே, எது உண்மை, எது மோசடியென்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
சில பத்திரிகையாளர்கள், பா.ஜ.க.வின் கைக்கூலிகள் நடுநிலையாளர்கள் என்ற பெயரில் தப்பான செய்திகள், அவதூறுகளை அள்ளிவீசி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். எனவே, எது உண்மை, எது சரியென்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டியது மதச்சார்பற்ற, ஜனநாயகப் பிடிப்புள்ளவர்களின் முதன்மையான கடமையாகும்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பாசிச செயல்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டித்து பிரச்சாரம் செய்தால், உடனே அவர்கள் காங்கிரஸ் மட்டும் என்ன? அவர்களும் முதலாளிகளின் ஆள்கள் தானே? அவர்களும் மொழித் திணிப்பு செய்பவர்கள்தானே? அவர்களும் பிறமதப் பொறுப்பாளர்கள்தானே? அவர்களும் மாநில உரிமைகளைப் பறித்தவர்கள்தானே?
காங்கிரஸ் கட்சியில் தொடக்கக் காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பற்றுள்ளவர்கள் கலந்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது! என்றாலும், நேரு முதல் மன்மோகன்சிங் வரை காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் மதநல்லிணக்கத்தைப் பெருமளவு காத்தனர். அரசுடைமையாக்குவதில் முனைப்புக் காட்டினர். அரசுத் துறைகளை வளர்த்தனர். மொழித்திணிப்புச் செய்யப்படமாட்டாது என்று உறுதியளித்தனர். ‘நீட்’ தேர்வை காங்கிரஸ் அறிமுகப்படுத்தினாலும், அதை நடத்துவதும், மறுப்பதும் மாநில விருப்பத்திற்கு விடப்பட்டது. எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்தவில்லை.
ராகுல் காந்தியின் கொள்கை உறுதி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மதச் சார்பின்மை. மாநில உரிமைகள், இடஒதுக்கீடு, மாநில மொழிகள் பாதுகாப்பு, ஜாதி ஒழிப்பு, கார்ப்பரேட்டுகளின் ஆதிக்க எதிர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கல், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துதல், பெண்கள் பாதுகாப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு, சமூகநீதி, அரசியல் சட்டப் பாதுகாப்பு போன்றவற்றில் தெளிவுடனும், உறுதியுடனும் உள்ளார். அதற்காகவே, அவர் முழங்கி வருகிறார், போராடி வருகிறார். ஆக. அவர் மீதுள்ள நம்பிக்கை, இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. எனவே, பா.ஜ.க. ஆட்சியை ஒன்றியத்தில் அகற்றுவதும், மாநிலங்களில் பா.ஜ.க. காலூன்றாமல் ஆட்சி அமைக்காமல், ஆட்சியில் பங்கு பெறாமல் தடுப்பதும், முக்கியக் கடமையாகும். அப்போதுதான் கொள்கைப் பிடிப்புள்ள ராகுல் காந்தியின் முயற்சி வெற்றி பெறும். எனவே, பா.ஜ.க.வுடன் காங்கிரசை ஒப்பிட்டு, காங்கிரசும், பாசிசக் கட்சிதானே என்று வினா எழுப்புவதும், விமர்சிப்பதும் அறியாமையாகும். காங்கிரசிடம் குறைபாடுகள் இருப்பினும் அது சரிசெய்யக்கூடியது. ஆனால், பி.ஜே.பி. போராட்டத்தை உருவாக்கக்கூடியது; பேரழிவைத் தரக்கூடியது. ஜனநாயகத்தை ஒழித்து, அரசியல் சட்டத்தை அகற்றிவிட்டு, மநுதர்மத்தை நிலைநாட்டி, ஸநாதனத்தை நிலைநிறுத்தக் கூடியது. பத்து சதவிகித உயர் ஜாதியினரின் நலத்துக்காக, 90% மக்களின் நலத்தை, பாதுகாப்பை, உரிமையை, முன்னேற்றத்தைத் தகர்க்கக் கூடியது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முன் இந்த உண்மைகளை மனதிற்கொண்டு வாக்களிக்க வேண்டும். நடப்பது சட்டமன்றத் தேர்தல் தானே? இதில் ஒன்றிய ஆட்சியை எப்படி அகற்றமுடியும்? என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும். ஒன்றிய ஆட்சி என்பது பல மாநிலங்களின் வாக்குகளைப் பெற்று அமையக் கூடியது. மாநிலத் தேர்தலில் பி.ஜே.பி. வலுப் பெற்றால், அது நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு வலுசேர்க்கும். எனவே, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர, மாநிலங்களில் பி.ஜே.பியை வெற்றி பெறாமல் செய்வதோடு, அறவே துடைத்தெறிய வேண்டும். பா.ஜ.க. வழக்கமாக மாநிலக் கட்சிகளைச் செரித்து, தன்னை வளர்த்து, மாநிலத்தைக் கைப்பற்றும். அந்த முயற்சியைத் தமிழ்நாட்டிலும் அக்கட்சி அ.தி.மு.க.வைப் பயன்படுத்திச் செய்ய முயற்சிக்கிறது. உதிரிக் கட்சிகளின் உதவியுடன் தன் வாக்குவங்கியை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறது. எனவே, இம்முயற்சியை முறியடிக்க, தி.மு.க. கூட்டணிக்கு தமிழ்நாட்டு
மக்கள் வாக்களிப்பதே சரியான செயலாகும்.
பா.ஜ.க., அ.தி.மு.க.வின்
அவதூறுப் பிரச்சாரங்கள்
தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டது; பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; லஞ்சம், ஊழல் அதிகமாகிவிட்டது; நிருவாகம் சீர் கெட்டுவிட்டது; மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பன போன்ற தப்பான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர். அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடக்கும் தவறுகளை, நாடு முழுவதும் நடப்பதாகக் கூறி மக்களைத் திசை திருப்ப முயற்சி செய்கின்றனர். ஊடகங்களும் அதற்குத் துணை நிற்கின்றன.
மு.க.ஸ்டாலின் அவர்களின்
முத்திரை பதித்த ஆட்சி !
மற்ற மாநிலங்கள், முந்தைய ஆட்சியில்
நடந்தவை இவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்நாட்டில் இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் மிகச் சொற்பமானவை. தப்பு நடந்தாலும் அதற்குத் துணை நிற்காமல், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். அவ்வகையில் தி.மு.க. அரசு தன் கடமைகளை மிகச் சரியாகவே செய்து இந்திய அளவில் முதன்மை மாநிலமாகத் திகழ்வதை நாம் மனதிற் கொள்ள வேண்டும்.
கடந்த அய்ந்தாண்டுகளில் திராவிட மாடல் ஆட்சி சாதித்த சாதனைகள் பல. தமிழ்நாடு பெற்ற வளர்ச்சி மிக அதிகம். முதல்நிலை மாநிலமாக உயர்ந்து நிற்கிறது. அனைத்து தரப்பு மக்களும் மனநிறைவுடன் வாழ்கின்றனர். மாணவர்கள், பெண்கள் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வருவாய் பெருக்கம் உயர்ந்துள்ளது.
ஊழல், கிரிமினல் கூடாரம் பா.ஜ.க.
பா.ஜ.க. கட்சியில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் அரவணைத்துப் பாதுகாக்கப்
படுகின்றவர்களும் மிகப் பெரிய ஊழல் பேர்வழிகள், கிரிமினல் குற்றவாளிகள்.. விஜயமல்லையா, நீரவ் மோடி. முகுல் சோஷி இவர்கள் பா.ஜ.க.வின் உதவியுடன் அடித்த கொள்ளை எவ்வளவு! விஜய மல்லையா சுருட்டியது மட்டும் 900 கோடி ரூபாய்; முகுல் ஜோஷி வங்கியை ஏமாற்றியது 13,000 கோடி. தேர்தல் பத்திர ஊழல், வியாபம் ஊழல், ரபேல் ஊழல் என்று பி.ஜே.பி. ஊழல் ஒருபுறம்; அம்பானி ஊழல், அதானி ஊழல் மறுபுறம்; நிலக்கரி, தொலைத் தொடர்பு, வங்கிக் கொள்ளை, வரி ஏய்ப்பு என கார்ப்பரேட்களின் கணக்கில்லா ஊழல்கள். பி.ஜே.பி. கையாள்களான அமலாக்கத் துறை, வருமானவரித் துறை என்று பல்துறைகளில் ஊழல். பி.ஜே.பி.யுடன் கைகோத்து துணை நிற்கும் அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகளின் ஊழல் என்று ஊழல் பேர்வழிகள் உத்தமர்கள் போல தி.மு.க. ஆட்சியின் மீது பழிசுமத்துவது பச்சையான பித்தலாட்டம் என்பதை மக்களுக்கு நாம் எடுத்து விளக்க வேண்டும்.
நமது கடமை
தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பதோடு, நமது கடமை முடிந்துவிட்டதாக, நாம் எண்ணக்கூடாது. நாம் தெளிவாக இருப்பதோடு மக்களுக்கும் தெளிவு உண்டாக்க வேண்டும். டில்லி ஆதிக்கம் தமிழ் நாட்டில் வராமல் தடுக்கவும்; திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகள் மீண்டும் தொடரவும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
வரவுள்ள சட்டமன்றத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. அதுவோர் உரிமைப்போர்; ஆதிக்க ஒழிப்புப் போர்; தமிழ்நாட்டை பாசிசப் பிடியில் சிக்காமல் காப்பாற்றும் போர் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் ஓயாமல் சுழன்று உழைக்க வேண்டும்! வெற்றி நமதே! |
