Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கருணைக் கொலை ஏற்கத்தக்கதா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு – ஒரு பார்வை- சமா.இளவரசன்

ருணைக்கொலை – கடந்த நூற்றாண்டிலிருந்து உலகம் முழுக்க ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருங்கே பெற்று வரும் பிரச்சினைகளுள் ஒன்று.

மார்ச் 11ஆம் தேதி.இந்திய உச்சநீதிமன்றத்
தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மீண்டும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்துள்ளது. கருணைக் கொலை சரியா தவறா? எதுவாக இருந்தாலும் கொலை தானே? என்பது ஒரு வாதம். உயிருடன் இருப்பது மிகப்பெரிய தண்டனையாக இருந்தால், அதைவிட இறப்பு சரியானது அல்லவா? என்பது எதிர் தரப்பு வாதம்.

இத்தகைய குரல்கள் எல்லா இடங்களி
லிருந்தும் ஒலிப்பது இயல்பு. அவ்வளவு எளிதில் ஒருவரால் முடிவெடுத்துவிட முடியாத மிகவும் சிக்கலான, நெருடக்கூடிய கேள்விதான். 

“உலக உத்தமர் – அகிம்சாமூர்த்தி ஜீவகாருண்ய சீலர். அவரே வலியால் துடித்துக் கொண்டிருந்த கன்றுக்குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார் – அது கஷ்டமுறுவதைக் காணச் சகிக்காமல்!” பராசக்தி திரைப்படத்திற்காக முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய வசனம் இது. அந்த ஜீவகாருண்ய சீலர் – அண்ணல் காந்தியடிகள்தான்!

“என் குழந்தையை வெறிநாய்க்கடி (Rabies) நோய் தாக்கி, அவனது வேதனையைத் தணிக்க நம்பிக்கையூட்டும் தீர்வு எதுவும் இல்லாத பட்சத்தில், அவனது உயிரைப் பறிப்பது என் கடமை என்று நான் கருதுவேன். விதிவசம் என்று சொல்வதற்கும் எல்லைகள் உண்டு. எல்லாத் தீர்வுகளையும் முயன்று தீர்த்த பிறகே நாம் காரியங்களை விதியின் கையில் விட்டுவிடுகிறோம். வேதனைப்படும் ஒரு குழந்தையின் வேதனையைத் தணிப்பதற்கான தீர்வுகளில் இறுதித் தீர்வு, அதன் உயிரைப் பறிப்பதே ஆகும்” என்றார் காந்தியார். (‘யங் இந்தியா’, 18-11-1926)

ஆனால், காந்தியாரின் கருத்து பற்றியோ,
விதிவசம் பற்றியோவெல்லாம் பேசாமல், இந்திய அரசியலமைப்புச் சட்ட அடிப்படை
உரிமைகளுள் ஒன்றாக விளங்கும் உயிர்வாழ்வதற்கான உரிமை (உறுப்பு-21)யின் அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பை
வழங்கியிருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்.

உலகில் முதல் முறையாக கருணைக் கொலையையும் (Euthanasia) மருத்துவ உதவியோடு தற்கொலை (Assisted Suicide) செய்து கொள்வதையும் அனுமதித்த நாடு நார்வே! 2005ஆம் ஆண்டிலேயே பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு அனுமதித்தது அந்நாடு. 

அடுத்தடுத்து பெல்ஜியம், லக்ஸம்பர்க், கனடா, கொலம்பியா போன்ற பல்வேறு நாடுகள் கருணைக் கொலையைச் சட்டபூர்வமாக்கி உள்ளனர். ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்க அய்க்கிய நாடுகளின் சில மாகாணங்கள், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா போன்ற நாடுகள் கருணைக் கொலையை ஊக்குவிக்காமல், மருத்துவரின் உதவியோடு தன்னுடைய இறுதி முடிவை நோயாளியே எடுத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்கியிருக்கின்றன.

இங்கிலாந்து உள்ளிட்ட அய்க்கிய ராச்சியம், பிரான்சு, இத்தாலி போன்ற இன்னும் சில நாடுகள் வேறு வகையான தீர்வை அனுமதிக்கின்றன. அத்தகைய ஒரு தீர்வைத்தான் இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இந்தியாவும் தேர்ந்தெடுத்திருக்கிறது. அதனை ஆங்கிலத்தில் ‘Passive Euthanasia’ என்கிறார்கள். ‘ஒருவர் மரணமடைவதைப் பார்வையாளராகவே இருந்து அனுமதிப்பது’ என்று இதனைப் புரிந்துகொள்ளலாம். அல்லது இறப்பைத் தடுக்கும் முயற்சிகளைக் கைவிடுதல் எனலாம்.

மருத்துவ அறிவியலும், உயிரைத் தக்க வைப்பதற்கான வசதிகளும், கருவிகளும் இன்று ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் பெரும் பணக்காரர்களுக்கு என்று மட்டுமல்லாமல், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளிலும் இத்தகைய வசதிகள் உள்ளன. அவற்றின் பாதுகாப்பிலிருந்து ஒருவரை விலக்குதலின் மூலமாக, அதாவது சிகிச்சைகளை நிறுத்துவதன் மூலமாக அவர் இறப்பதை அனுமதிக்க முடியும்.

2018ஆம் ஆண்டுக்கு முன்பு அப்படிச் செய்வது சட்டப்படி கொலையாகத்தான் கருதப்பட்டு வந்தது.

2018ஆம் ஆண்டில் காமன் காஸ் Vs இந்திய ஒன்றிய அரசு (Common Cause Vs Union of India) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வகுத்தது. அந்த வழக்கில், “கண்ணியத்துடன் இறக்கும் உரிமை” என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21ஆம் உறுப்பின்படி “சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி (Procedure established by law) அன்றி, எந்தவொரு நபரின் உயிரையோ அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தையோ பறிக்கக் கூடாது” என்பதன் ஒரு பகுதியேயாகும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டில், மற்றொரு அய்ந்து நீதிபதிகள் அமர்வு இந்த வழிகாட்டுதல்களை மேலும் எளிமைப்படுத்தியது. சிகிச்சையை நிறுத்துவது மனிதநேயத்துடன் மேற்கொள்
ளப்பட வேண்டும் என்றும், அது நோயாளியைக் ‘கைவிடுதலாக’ மாறக்கூடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்குகளின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வாக ஹரீஷ் ராணாவின் வழக்கு அமைந்துள்ளது.

கடந்த மார்ச் 11 அன்று, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, 13 ஆண்டுகளாகக் கோமாவில் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் இல்லாத 32 வயதான ஹரீஷ் ராணாவுக்குச் சிகிச்சையை நிறுத்துவதற்கான (கருணைக் கொலை) அனுமதி கோரிய மனுவை ஏற்றுக் கொண்டது. பர்திவாலா முதன்மைத் தீர்ப்பை எழுத, விஸ்வநாதன் இணைத் தீர்ப்பை வழங்கினார். 

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியா
பாத்தைச் சேர்ந்த பஞ்சாப் பல்கலைக்கழக மாணவரான ஹரீஷ் ராணா கடந்த 2013ஆம் ஆண்டில் நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறிக் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக அவர் நினைவிழந்து உணர்வற்ற நிலையில் (கோமாவில்) இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அவருக்கு, கழுத்துக்குக் கீழ் இருக்கும் உடல் முழுமையாகச் செயல் இழந்ததுடன், 100% மாற்றுத்திறனாளியானார். அவர் மருத்துவ உதவியுடன் கூடிய ஊட்டச்சத்தும் நீர்ச்சத்தும் அளிக்கும் (CANH) முறையில், நேரடியாக இரைப்பைக்குக் குழாயின் மூலம் உணவும் நீரும் பெற்றார்.

இந்தச் சிகிச்சையை நிறுத்த அனுமதி கோரி, ராணாவின் வழக்கு முதலில் டில்லி உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 2024 இல், மருத்துவ உதவியுடன் கூடிய ஊட்டச்சத்தும் நீரும் அளிக்கும் முறை நிறுத்தப்பட்டால் அவர் பசியால் மரணம் அடைவார் என்பதால், அது சிகிச்சையை நிறுத்துவதன் மூலம் கருணைக் கொலை (Passive Euthanasia) செய்வதாகாது என்று கூறி உயர்நீதிமன்றம் மனுவை நிராகரித்தது. ஏனெனில், அவர் இயந்திரத்தின் மூலம் சுவாசிக்கும் வென்டிலேட்டரில் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியது.

2024 ஆகஸ்டில், மேல்முறையீடு செய்யப்பட்ட போது உச்சநீதிமன்றமும் முதலில் உயர்நீதிமன்றத்தின் இந்தக் கருத்துடன் உடன்பட்டது. ராணாவைச் சிறந்த பராமரிப்பு மய்யத்திற்கு மாற்றுவது குறித்து ஒன்றிய அரசிடம் கேட்டது. நவம்பர் 2024 இல், அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, உத்தரப்பிரதேச அரசு அவரது மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

பின்னர், 2025 அக்டோபரில் ஹரீஷின் பெற்றோர் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகள் பர்திவாலாவும், விஸ்வநாதனும், ஹரீஷின் பெற்றோரை நேரில் சந்தித்து விவரம் கேட்டறிந்தனர். மேலும், டில்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் தலைமையில் அமர்வு இரண்டு நிலை மருத்துவக் குழுக்களை அமைத்தனர். அவர்களின் அறிக்கையையும் பார்வையிட்டு, ஹரீஷ் உடல்நிலையில் இனிமேல் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும், தொடர்ந்து சிகிச்சை அளிப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

உச்சநீதிமன்றத்தின் கருத்தில்
முக்கிய மாற்றம்

கடந்த முறை உச்சநீதிமன்றம் மறுத்ததற்குக் காரணம் ‘மருத்துவ உதவியுடன் ஊட்டச்சத்தும், நீரும் தரப்படும் முறை’யை ஒரு சிகிச்சை என்று ஏற்றுக் கொள்ளாததே ஆகும். அதை உணவு தருதல் என்றே அணுகிய காரணத்தால் தான், அவரைப் பசியால் வாடவிட்டுக் கொல்வது கருணைக் கொலை ஆகாது என்று தீர்ப்பளித்தது. ஆனால், இம் முறை அதில் உச்சநீதிமன்றம் அறிவியல் ரீதியில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

CANH என்பதை அடிப்படைப் பராமரிப்பு மட்டுமே என்று கருத முடியாது. அது முழுமையான மருத்துவச் சிகிச்சையே என்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. குழாய் போன்ற தொழில்நுட்ப முறைகள் மூலம் வழங்கப்படுவதால், இது மருத்துவ முடிவுகளுக்குட்பட்டது. இதனால், மற்ற உயிர் தாங்கும் சிகிச்சைகளைப் போலவே, இதையும் தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்பதை மருத்துவ நெறிமுறைகள் தீர்மானிக்கலாம் என்பதே இதன் பொருள்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை வாரியங்கள், ஹரீஷுக்கான சிகிச்சையை நிறுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஆதலால் இதில் நீதித் துறை தலையிட வேண்டியதில்லை. எனவே, அவருக்கு அளிக்கும் சிகிச்சையை நிறுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளிக்கிறது. இந்த விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகுவது அவசியம். ஆதலால் சம்பந்தப்பட்ட நபரின் கண்ணியத்துக்கு எந்தப் பங்கமும் ஏற்படாமல் அவருக்கான சிகிச்சையை நிறுத்துவது தொடர்பான திட்டம் செயல்படுத்தப்படுவதை டில்லி எய்ம்ஸ் உறுதி செய்ய வேண்டும். கருணைக் கொலை தொடர்பான சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்றனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்
டுள்ள ‘மரணமும் கண்ணியத்துடன்’ நிகழ வேண்டும் என்பது சுயமரியாதையின் பாற்பட்டது. ஒருவரின் சுயமரியாதைக்குக் குறைவான நிலையை மரணத்திலும் ஏற்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. எப்போதும் சுறுசுறுப்புடன் ஓடியாடி வந்த மாணவர் ஹரீஷ் இன்று முடிவெடுக்கும் நிலையில் இருந்தால், எப்படி முடிவெடுத்திருப்பார் என்பதைக் கருதியும் நீதிமன்றம் இத் தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் மகனை நீங்கள் கைவிட்டு
விடவில்லை; கண்ணியமான விடை அளிக்கிறீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், படிப்படியாக மருத்துவக் கண்காணிப்புடன் சிகிச்சை நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை இறுதிக் கட்டப் (Palliative) பராமரிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது மனித நேயமும், துணிவும் இணைந்த முடிவு என்று நீதிபதி பர்திவாலா தெரிவித்துள்ளார்.

வாழ்வதைப் போலவே, மரணத்திலும் சுயமரியாதைக்கும், கண்ணியத்துக்கும்  சமமான முக்கியத்துவம் உண்டு என்பதை இத்தீர்ப்பு வலியுறுத்துகிறது. இன்றைய மருத்துவ அறிவியல் எவரையும் எளிமையில் சாகவிட்டுவிடாது. உயிர் காக்கும் மருத்துவ வசதிகளும் மட்டுமல்லாமல், உயிரை நீட்டிக்கச் செய்யும் வசதிகளும் ஏராளமாக இருக்கின்றன. ஒருவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்காணிப்பதற்கான பல்வேறு வசதிகள் மருத்துவத் துறையில் உருவாகியுள்ளன. மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. ஒருவருக்குத் தொடர்ச்சியாக வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும், அதன்மூலம் அவரது உடம்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் தெளிவாகக் கணக்கிட்டு, அவருக்குச் சிகிச்சை முறை தொடர்வதனால் பலன் உண்டா இல்லையா என்பதை மிகத் தெளிவாக ஆய்ந்து முடிவுகளைப் பெறுவது எளிது.

எனவே, தவறாகவோ அல்லது கெட்ட நோக்கத்தோடோ ஒருவருக்குக் கருணைக் கொலை வாய்ப்பை வழங்குவது அவ்வளவு எளிதில் நடந்துவிடாது.

உயிரைக் கொடுத்தது கடவுள். எனவே, அதை எடுக்கும் உரிமையும் கடவுளுக்கு மட்டுமே உண்டு என்று பழமைக் கருத்தைப் பெரிதும் பரப்பும் இந்தியா போன்ற நாட்டில், ஒருவரின் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் அளித்து, சட்டத்தின் மேற்பார்வையில், மருத்துவத்தின் பரிந்துரையோடு இத்தகைய முடிவை எடுப்பதற்கு உரிமை உண்டு என்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, பண்பாட்டுப் பார்வையில் மிக முக்கியமான மாற்றமாகும்.

விதவைத் தன்மை என்னும் கொடுமை
யால் நடைப் பிணங்களாக மகளிர் பெருந்துயரம் அனுபவித்து வருவதைப் பார்த்த தந்தை பெரியார், உடன்கட்டை ஏற்றிக் கொன்ற சதியை விட விதவைத் தன்மையே மிக மோசமானது என்றார். உடன்கட்டை ஏற்றுதல் சரியென்று அதற்குப் பொருளல்ல. ஒருவரை உயிருடன் வைத்திருந்து வதைக்கும் கொடுமையின் உச்சத்தை அப்படி வெளிப்படுத்தினார் தந்தை பெரியார். கூனிக் குறுகி, சமூகத்தின் கண்களில் இருந்து மறைந்து, தன்னை வருத்திக் கொண்டு, உணர்வுகளை ஒடுக்கிக் கொண்டு, தெரிந்தே துயரை அனுபவிப்பது எத்தகைய கொடுமை! சுயமரியாதை என்பதையும் எண்ணியும் பார்க்கமுடியாத நிலையை வாழ்க்கை என்று சொல்ல முடியுமா என்பதுதான் தந்தை பெரியாரின் வாதம். அத்தகையதொரு சிந்தனையைத்தான் உச்சநீதிமன்றம் முன்னிறுத்தி, இத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு முறையும் இதற்கு நீதிமன்றம் போக வேண்டிய அவசியம் இப்போது இருப்பது உண்மைதான். ஆனால், இதற்கான முறையான வழிகாட்டும் சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மிக நெருக்கடியான நேரங்களில் மிகக் கடுமையான முடிவுகளை ஒருவர் எடுக்க வேண்டிய சூழல் எப்போதும் அமையலாம். அத்தகையதொரு கடுமையான முடிவு தான் என்றாலும், இதுவே மனிதநேயம் மிக்க முடிவாகும். ஹரீஷ் என்ற அந்த இளைஞருக்கு மட்டுமல்ல, அவரைப் பிரியவிருக்கும் பெற்றோருக்கும்கூட இது விடுதலையே ஆகும். சுயமரியாதை ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை என்றார் பெரியார். அதைத் தான் ஒருவருக்கான இறப்புரிமையை வழங்கும்போதும் உச்சநீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது. இதுவே மனிதநேயத்தின் அடிப்படையில் ஏற்கத்தக்கதும் ஆகும்.  |