தந்தை பெரியாரின் நூல்களும் அவரின் வழித்தோன்றல் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நூல்களும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அவ்வாறு மொழி பெயர்ப்புச் செய்வதில் நமது அண்டை மாநிலமான கேரளம் முன்னிலை வகிக்கிறது. கேரள மாநிலத்து ஒடுக்கப்பட்டவர்கள் வைக்கம் தெருவில் நடக்க வேண்டும் என்பதற்காக, தியாகம் செறிந்த போராட்டங்களை நடத்தி, சிறைபட்டு, உரிமையினை வாங்கித் தந்த ‘வைக்கம் வீரர்’ தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய புத்தகங்கள் மலையாள மொழியில் வரவேற்கப்படுவதில் வியப்பு ஏதுமில்லை.
2026, பிப்ரவரி கடைசி வாரம், திருவனந்தபுரம் சென்றபோது, திருவனந்தபுரத்தில் இருக்கும் மைத்திரி (Mythri Books) புத்தகநிலையம் சென்றிருந்தேன். தந்தை பெரியார், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி, மஞ்சை வசந்தன் போன்றவர்களின் புத்தகங்களை மட்டுமல்லாது, அண்ணல் அம்பேத்கர், நாராயணகுரு மற்றும் இந்தியா முழுவதும் சமூகநீதிக்காகப் பாடுபட்ட – பாடுபடும் தலைவர்களைப் பற்றிய நூல்களை மலையாள மொழியில் கொண்டு வருவதில் பேரார்வம் காட்டுகின்ற பதிப்பாளர் லால் சலாம் (FIRAவின் துணைத் தலைவர்) அவர்கள். அவரின் இணையர் மாயா லால்சலாம் அவர்கள் – மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அவர் பதிப்பு வேலைகளோடு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். லால்சலாம் அவர்களைச் சந்தித்து உரையாடியபோது, “ஒரு மகிழ்ச்சியான செய்தி” என்றார்.
என்ன என்று கேட்டபோது, தமதுமைத்திரி புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்ட ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக்குவது எனும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட “The Joy Of Living” என்னும் புத்தகத்தை இளம் தோழர் எம்.எஸ்.அஞ்சு மலையாளத்தில் ‘வாழ்க்கையை இன்பமாக்க’ என்னும் தலைப்பில்
மொழி பெயர்த்திருக்கிறார். அவருக்கு விருது கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார். அவரைச் சந்திக்க வேண்டும். பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்ட
போது தனது இல்லத்தில், மாலை சந்திக்கலாம் என்று குறிப்பிட்டார்.

மலையாள இலக்கியத்தில் மிக உயர்ந்த பரிசுத் தொகை வழங்கப்படும் விருதான ‘இண்டிவுட் மொழி மற்றும் இலக்கிய விருதுகள்’ (Indywood Bhasha Sahitya Puraskaram), வழங்கும் விழா பிப்ரவரி 25, 2026 அன்று கேரளாவில் உள்ள புனலூரில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் மொத்தம் 13 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றனஅத்துடன் ‘பாஷா கேசரி விருது’ மற்றும்‘எழுத்தம்மா’ விருதும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த விழாவில் சிறந்த மொழி பெயர்ப்பாளர்க்கான விருது தோழர் எம்.எஸ்.அஞ்சு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ரூபாய் 10,000 பரிசுத் தொகையும், பதக்கமும்,
பாராட்டுச் சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அவர் மொழி பெயர்த்தபுத்தகம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘வாழ்க்கையை இன்பமாக்க’ (‘ஜீவிதம் ஆனந்தபிராயம்’) என்னும் புத்தகமாகும்.


பிப்ரவரி 26 மாலை, தோழர் லால்சலாம் அவர்களது இல்லத்தில் எம்.எஸ்.அஞ்சு அவர்களையும், மாயா லால்சலாம் அவர்களையும் சந்தித்தோம். எம்.எஸ்.அஞ்சு தான் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ள 6 புத்தகங்களும் தந்தை பெரியார் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் புத்தகங்கள் என்றார். அவர் பெற்ற விருதைப் பற்றிக் கேட்டபோது, ‘‘மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்’’ என்றார். அந்த விருதினைப் பற்றியும், அந்த விருதினை அளித்த அறக்கட்டளையைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். தான் மொழிபெயர்த்த நூல் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து என்றார்.
‘‘கல்லூரியில் நான் படிக்கும் காலத்தில் மலையாளத்தில் கவிதைகள் எழுதினேன். சில சிறுகதைகளும் எழுதினேன். கல்லூரியில் வெளியாகும் இதழ்களில் அவை வெளிவந்தன. நான் பி.ஏ. (மலையாளம்), பி.எல்.அய்.சி (இளங்கலை – நூலக அறிவியல்) & முதுகலை நூலக அறிவியல் படித்துள்ளேன். இப்போது நூலகராக ஒரு பள்ளியில் வேலை பார்க்கிறேன்’’ என்றார்.
ஆசிரியர் அவர்களின் முன்னெழுத்து தமிழில் கி; ஆங்கிலத்தில் கே. நீங்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த காரணத்தால் டாக்டர் கே.வீரமணி என்று மலையாளத்தில் போட்டிருக்கிறீர்கள். நாமெல்லாம் ஒரே மொழிக் குடும்பம். நீங்கள் அடுத்த நூலைப் பதிப்பிக்கும்போது. மலையாள எழுத்தில் இருக்கும் கி, என்னும் எழுத்தை முன்னெழுத்தாகப் போடுங்கள் என்றேன். அவரது தந்தையின் பெயர் கிருஷ்ணசாமி என்றேன். ‘அப்படியா, சரி. அந்த மாதிரியே போடுகிறேன்’ என்றார்.
இந்த மொழிபெயர்ப்புத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? என்று கேட்டபோது, ‘‘லால் சலாம் என்னிடம் கூறினார், சரி என்று சொல்லி நான் மொழிபெயர்த்து வருகிறேன்’’ என்றார். எத்தனை புத்தகங்கள் இதுவரை மொழி பெயர்த்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, 6 என்றார். 4 நூல்களைத்தான் மட்டும் தனியாகவும், இரண்டு நூல்களைத் தானும், திருமதி மாயாலால்சலாமும் இணைந்து மொழி பெயர்த்திருக்கிறோம் என்றார். இந்த ஒரு புத்தகம் தவிர மற்ற 5 புத்தகங்களும் தந்தை பெரியாரின் புத்தகங்கள்தாம் என்றார்.
அஞ்சு மட்டும் மொழி பெயர்த்த நூல்கள்:
- தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’
- தந்தை பெரியார் எழுதிய ‘சுயமரியாதைத் திருமணம் ஏன்?’
- தந்தை பெரியார் எழுதிய ‘பெண்களின் உரிமைகள் பற்றி’
- ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ‘வாழ்க்கையை இன்பமாக்க’
அஞ்சு மற்றும் மாயா லால்சலாம் இணைந்து மொழி பெயர்த்த நூல்கள்:
- பெரியாரின் பொன்மொழிகள்
- தந்தை பெரியார் எழுதிய ‘சமூகச் சீர்திருத்தமா? சமூகப் புரட்சியா?”
‘நீங்கள் எப்படி தந்தை பெரியார் கருத்து
களால் ஈர்க்கப்பட்டீர்கள்?’ என்று கேட்ட
போது, ‘‘என் வாழ்க்கையில் சில மோசமான நிகழ்வுகள் நடந்தன. அப்போது ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் புத்தகத்தை ஆங்கிலத்தில் படித்தேன். லால் சலாம் கொடுத்
தார். அந்தப் புத்தகம் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது’’ என்றார்.
தந்தை பெரியார் பற்றித் தங்களின் தனிப்பட்ட கருத்து என்ன? என்று கேட்டபோது, ‘பெரியார் இஸ் எ க்ரேட் மேன்’. அவர் 100 ஆண்டுகளுக்கு முன்னர், பெண்களின் நிலையை எண்ணி ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது இன்றைக்கும் எங்களுக்கு உதவுகிறது. பெண்களின் நிலையை மாற்றுவதற்கு ஒவ்வொரு நோக்கிலும் சிந்தித்து, சிந்தித்துப் பெண்களாகிய எங்களுக்குக் கற்பிக்கின்றார்’’ என்றார்.
‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தை முதன்முதலில் படித்த பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதைப் பற்றிப் பலர் என்னோடு பகிர்ந்திருக்கின்றார்கள். ‘‘நீங்கள் முதன்முதலில் அதனைப் படித்தபோது என்ன உணர்ந்தீர்கள்?’ என்று கேட்டோம்.
‘‘எனது வாசிப்பு வேறுவிதமாக இருந்தது. நான் அதிர்ச்சி அடையவில்லை. நான் பட்ட வேதனைகளையும், துன்பத்தையும் எண்ணி எனக்காகவே எழுதியது போல இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பு என்னைநினைத்துப் பார்த்து, சிந்தித்து எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. நான் ஒரு துன்பத்தில் இருந்தேன். அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட, நான் இயல்பாக ஆவதற்கு இந்தப் ‘பெண் ஏன் அடிமையானாள்?‘ புத்தக வாசிப்பு எனக்கு உதவியது.
நான் அந்தப் புத்தகத்துக்கு அடுத்து, மலையாளத்தில் வெளிவந்திருக்கும் பெரியாரின் புத்தகங்களை எல்லாம் வாசிக்கஆரம்பித்தேன். பெரியார் எழுதிய, அவரைப்
பற்றி வந்திருக்கும் மலையாளப் புத்தகங்களை எல்லாம் எனக்கு வாசிக்கக் கொடுத்தார்.வாசித்தேன். பின்பு பெரியாரின் புத்தகங்களை மலையாளத்தில் மொழிபெயர்க்க முடியுமா? என்று கேட்டார். எனக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம் நன்றாகத் தெரியும். எனவே, ஆங்கிலத்தில் வந்திருக்கும் பெரியாரின் நூல்களைக் கொடுத்து, என்னை அவற்றை மலையாளத்தில் மொழி பெயர்க்கச் சொன்னார். தொடர்ந்து இப்போது மொழி பெயர்த்துக் கொண்டு வருகிறேன்’’ என்றார்.
‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தில் ‘விதவைகள்’ என்னும் தலைப்பில் பெரியார் அக்காலத்திய விதவைகள் நிலைமை பற்றிப் பேசுகிறார். அது பற்றி ஏதும் சொல்ல நினைக்கிறீர்களா? என்று கேட்டேன்.
‘‘அந்த அத்தியாயத்தைப் படித்தபோது அவ்வளவு வேதனையாக இருந்தது. 7,8 வயது, 10 வயது விதவைகள். என்னுடைய அக்காவின் மகளுக்கு இப்போது 10 வயது. அய்ந்தாம் வகுப்பு படிக்கிறாள். அந்த வயதில் அவள் விதவை, அந்த விதவைக்கோலம் என்பதை நினைத்தால் மனதுகலங்குகிறது (அழுவது போல உடைந்து பேசுகிறார்) அந்தச் சின்னக் குழந்தையை ஒருவனுக்குக் கட்டிக் கொடுத்து, அவன் இறந்து, இந்தக் குழந்தை கொடுமைப்படுவதை நினைத்துப் பார்த்தால் உள்ளம் வலிக்கிறது. இதற்கெல்லாம் தீர்வைச் சொன்னவர் தந்தை பெரியார். இதனைத் தடுத்து நிறுத்தியது பெரியாரின் இயக்கம்’’ என்று பெருமிதப்பட்டார்.
(தொடரும்)




