1761 இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் ஆப்கான் மன்னன் (ஆப்கானை ஆண்ட நாதிர் ஷாவை வஞ்சகமாகக் கொலை செய்து அரசனான அவன் படைத் தலைவன்தான் அப்தாலி. நாதிர்ஷாதான் டில்லிமேல் படையெடுத்து புகழ் வாய்ந்த “கோஹினூர் வைர”த்தையும் ஷாஜஹான் அமர்ந்து ஆட்சி செய்த வைரங்கள் பதித்த “மயிலாசன”த்தையும் கொள்ளையடித்துச் சென்றவன்) அகமத் ஷா அப்தாலி பேஷ்வாக்களை நிர்மூலமாக்கி அவர்கள் ஆட்சி டில்லி வரை பரவாமல் தடுத்தான். பாலாஜி பாஜிராவால் (மறு பெயர் “நானா சாகிப்”) அனுப்பப்பட்ட அப்படையின் தலைமைத் தளபதி, நானா சாகிபின் தம்பி சதாசிவராவும், நானாவின் இளைய மகன் (துணைத் தளபதி) விஸ்வாஸ்ராவும் போரில் கொல்லப்பட்டனர் என்ற செய்தி நானாசாகிபை உருக்குலைய வைத்து விட்டது. (ஆதாரம்: பேஷ்வாக்கள்.wikkypedia)
மராட்டிய அரசர்களைத் தங்கள் கைக்குள்ளே வைத்திருந்தும், பிறகு நாட்டையே தங்களதாக்கிக் கொண்ட பேஷ்வாக்களின் மிகவும் புகழ் பெற்றவனான நானாசாகிப் என்னும் பாலாஜி பாஜிராவ் மராட்டியப் பேரரசை மிகவும் பெரியதாக்கினான். அதை நிருவாகிக்கும் பொருட்டே ஹோல்கர், சிந்தியா, போன்ஸ்லே ஆகிய பகுதிகளில் சிறு அரசர்களை ஆள அனுமதித்தான். ஆனால், முதல் சுதந்திரப் போர் என்றும், “சிப்பாய்க் கலகம்” என்றும் அறியப்பட்ட போரில் “கான்பூரை”க் காக்கப் போர்க்களத்திற்குச் சென்ற நானாசாகிப் கிழக்கிந்திய கம்பெனிப் படைகளால் தோற்கடிக்கப்பட்டு காணாமல் போனான் (1859). அதற்குப் பின் மராட்டியப் பேரரசும் மெல்ல மெல்ல வீழ்ச்சியைச் சந்தித்தது (ஆதாரம்: பாலாஜி பாஜிராவ் – பேஷ்வா)
மராட்டியத்தில் மகர்களும் சிறந்த போர் வீரர்களே! மராட்டியப் பேரரசின் வெற்றிக்கும், விரிவாக்கத்திற்கும் மராட்டிய (சூத்திர) வீரர்களைப் போல் “மகர்”களுக்கும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கும்) பெரும் பங்கு இருந்ததால் சிவாஜியின் படைப் பிரிவில் நிறைய மகர்களும் இருந்தனர். ஆனால், நாளடைவில் பேஷ்வாக்களின் ஆதிக்கம் தலை தூக்கியதாலும், பின் பேஷ்வாக்களே ஆட்சியாளர்களாக மாறியதாலும் மகர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக்கூறி படையிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டனர். இச்செய்கை மகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பேஷ்வாக்கள் முழுமையான ஆட்சியாளர்கள் ஆனவுடன் சமூக நிலைகளிலும்பலவகையாகவும் மகர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள். அதன் விளைவைப் பிறகு பேஷ்வாக்கள் எதிர்கொண்டார்கள். (ஆதாரம்:”வினவு”).
மகர்களைப் பேஷ்வாக்கள், படையிலிருந்து மட்டும் வெளியேற்றவில்லை. சமூக நிலையிலும் ஏராளமான கொடுமைகள் அவர்கள் மேல்நிகழ்த்தப்பட்டன. அவர்கள் மேல் தீண்டாமைக்கொடுமைகள் திணிக்கப்பட்டன. கழுத்தில்மண்சட்டியும் இடுப்பில் பனை ஓலையால் ஆன விளக்குமாரும் கட்டித்தான் தெருவில் செல்ல வேண்டும். பகலில் தெருவுக்கே வரக்கூடாது, நல்ல உடைகளை உடுத்தக்கூடாது. விலையுயர்ந்த அணிகலன்கள் அணியக்கூடாது. தாழ்ந்த நிலை வேலைகளான கழிப்பறை
வேலைகள் (சில ஆண்டுகளுக்கு முன் மோடி அதை “தெய்வசேவை” எனக் குறிப்பிட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்), தெருக்கூட்டுதல் போன்ற வேலைகள்தான் அவர்கள்செய்யப் பணிக்கப்பட்டனர். காணாமை, கற்காமை, தீண்டாமை போன்ற அனைத்து மனித உரிமைகளும் மகர்களுக்கு மறுக்கப்பட்டன. மராட்டியப் படையில் பெரும் வீரச்செயல்கள் புரிந்த தலித்துக்கள் ஜாதியின் பெயரால் இத்தனைக் கொடுமைகளுக்கும் ஆளாகினர். (ஆதாரம்: வினவு.)
தலை சிறந்த போர் வீரர்களும், மராட்டியப்பேரரசை சிவாஜி நிறுவியதில் பெரும் பங்கு வகித்தவர்களுமான மகர்கள், பேஷ்வாக்கள் ஆட்சியில் தீண்டத்தகாதவர்கள் என முத்திரைகுத்தப்பட்டு சமூகநிலையில் மிகவும் கேவலப்படுத்தப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களைக் கையாளக்கூடாது என்று தடுக்கப்பட்டனர். 1818இல், பேஷ்வாக்களின் ஜாதியக் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்பொழுது ஆங்கிலேயர்கள், மராட்டியர் மேல் படையெடுத்தனர். மூன்றாம் ஆங்கிலேய, மராத்தியப் போர் என்றழைக்கப்படும் இப்போரில் மகர்கள்,பேஷ்வாக்களிடம் தாங்களும் மராட்டியத்தின் சார்பில் போட்டியிடக் கேட்டனர். ஆனால்,பேஷ்வாக்கள் அவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்றும், ‘ஆயுதங்களைத் தொடக்கூடாது என்றும், அவர்கள் தொட்ட ஆயுதங்கள்’ தீட்டானவை என்றும், அவற்றைப் பயன்படுத்திப் போரிட்டால் தோல்வியடைவோம் என்றெல்லாம் கூறி அவர்களை அவமானப்படுத்தி விரட்டிவிட்டனர். மகர்கள் மிகவும் வருந்தியவாறே,கோபத்தோடு வெளியேறினர். (ஆதாரம்: வினவு.)

கோபத்துடன் வெளியேறிய “மகர்”கள், கிழக்கிந்தியக் கம்பெனிப் படையின் தளபதிகளைச் சந்தித்தனர். அவர்களும் இவர்களைத் தங்கள் படையில் சேர்த்துக் கொண்டனர். அவர்களுக்குப் போர்ப் பயிற்சிகளை அளித்தனர். சொந்த மக்கள் அவர்களைக் கேவலப்படுத்திய நிலையில், அந்நியர்கள் அவர்களைஅணைத்துக் கொண்டதால் மகர்கள் ஆங்கிலத் தலைமைக்கு நன்றியோடு இருக்கும் நிலை ஏற்பட்டது. 800 பேர் கொண்ட மகர்கள் நிரம்பிய பயிற்சி முடிந்த படைப்பிரிவு பூனாவில் உள்ள படைகளோடு இணைந்து பூனாவில் ஏற்கனவே இருந்த கம்பெனிப் படையை வலிமையாக்கச் சென்று கொண்டிருந்தது. கேப்டன் ஃபிரான்ஸிஸ் ஸ்டேன்டன் தலைமையில் மகர்கள் படை, “கோரேகான்” என்ற ஊரை அடைந்தது. அதே நேரம் பூனாவைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 28000 வீரர்கள் கொண்ட மராட்டியப்படை இரண்டாம் பாஜிராவ் தலைமையில் கோரேகானாவை நெருங்கியது. 1817 டிசம்பர் 31ஆம் தேதி இரவு ஜாதி வெறி தலைக்கேறிய பேஷ்வா பாஜிராவின் 28000 வீரர்களோடு, வெறும் 800 மகர் வீரர்கள் கொண்ட படை போர் செய்தது. தங்களுக்கு ஏற்பட்ட இழிவைத் துடைத்தெறிய வேண்டும் என மகர்கள் வீரப் போர் புரிந்தனர். போர் ஆங்கிலேயர்களுக்கும், மராட்டியர்களுக்கும் என்றாலும் உண்மையில் அது பார்ப்பனர்களுக்கும் (சித்பவன்) தாழ்த்தப்பட்டவர்களுக்கும் நடந்த போராகவே வரலாற்று ஆசிரியர்களால் பார்க்கப்படுகிறது. (ஆதாரம்: www.bbc.com.tamil)
(நிறைவு)




