Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அரசு ஆராயவேண்டியது அவசரம்!

1)     கே : சுயமரியாதை இயக்கமும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தியா முழுமையும் ஆர்.எஸ்.எஸ். பரப்பப்பட்ட நிலையில், சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டளவில் நின்றது ஏன்?

– ஏ. விக்னேஷ்வரி, விழுப்புரம்

ப : சுயமரியாதை இயக்கம் வெளிப்
படையானது; ரகசியம் அற்றது. இரட்டை நாக்கு, இரட்டைப்போக்கு இல்லாத – வன்முறையில் நம்பிக்கை
யற்ற – கொள்கைப் பிரச்சாரம் மூலம் – புது உலகம் காண விரும்பிய
இயக்கம். கடவுள், ஜாதி, மதமூட
நம்பிக்கைகளை எதிர்த்து எதிர்நீச்சல் போடும் இயக்கம்.

இதற்கு நேர்மாறானது ஆர்.எஸ்.எஸ்.இயக்கம். சுயமரியாதை இயக்கம் முதலில் தமிழ்நாட்டில் தனது கொள்கை லட்சியத்தை ஆழக் காலூன்றிப் பதியவைத்து, அதன் வெற்றியின் வெளிச்சத்தாலேயே உலக நாடுகளுக்கும் பரவச் செய்யும் அறிவியல் போன்ற ஓர் இயக்கம்.

இந்த இயக்கம் நோய்க்கிருமி போன்ற
தல்ல; நோய்க்கிருமி
களை அகற்றிக் குணப்படுத்தும் மருந்து. எனவே, இதன் பணி மெல்ல மெல்லத் தான் பரவும்.

திராவிட நாகரிகம், பண்பாடு இவற்
றுக்கு வலிமையான அடிக்கட்டுமானம் உள்ளதால் உறுதியாய் நிலைக்கிறது. அதன் தேவை, உலக நாடுகளில் விரும்பித் தேடப்படும் நிலை படிப்படியாக ஏற்படும்.

மதம், கோயில், கடவுள், திருவிழா என்று ஆற்று வெள்ளத்தில் செல்வது RSS இயக்கம். அவற்றை எதிர்த்துப் போராடும் இயக்கம் சுயமரியாதை இயக்கம்.

எனவே, காலத்தைக் கணக்கிடக்
கூடாது; அதன் பணி, வெற்றிகளையே பல மடங்கு என்று கருதிய அளவீட்டின் மூலம் அளந்து பார்ப்பதே சரியான அணுகுமுறையாகும்.

 

2)     கே : Gen Z தலைமுறையின
ருக்குப் பெரியார் சிந்தனைகளைக் கொண்டு செல்வதற்குத் தங்கள் திட்டம் என்ன?

– எம்.சேகுவேரா, பிள்ளையார்பட்டி

 

ப : பிரச்சாரம், போராட்டம் மூலமும், புதிய உத்திகளைக் காலமாறுதலுக்கு ஏற்பவும், அடுத்த
கட்டமாக டிஜிட்டல் உலகத்தில் ‘அமைதிப் புரட்சி’ மூலமும் பல்திசை நோக்கிய பெரியாரின் சிந்தனைப் புரட்சி தொடரும்.

 

3) கே : தமிழ்நாட்டில்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் அரசுக்குக் கெட்ட
பெயரை ஏற்படுத்தும் நோக்கத்
துடன் திட்டமிட்டுச் செய்யப்படும் சூழ்ச்சியா? என்பதை ஆராய வேண்டியது கட்டாயமல்லவா?

– தே.சிவக்குமார், பெருங்களத்தூர்

ப : நிச்சயமாக. உங்களுடைய பார்வையில் நிச்சயம் உண்மை புதைந்துள்ளது. ஆராய்ந்து அம்பலப்படுத்துதல் அவசரம்.

 

4)     கே : மேகதாது அணை கட்டும் முயற்சியைத் தடுக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கையை எப்படிப் பார்க்
கிறீர்கள்? தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

– எஸ். அசோக், அண்ணாநகர்

ப : ஏற்கனவே தமிழ்நாடு என்னென்ன செய்ய வேண்டுமோ, பற்பல களங்களில் அதனைச் செய்ய முழு ஆயத்தத்துடன் உள்ளதே!

 

5)     கே: அண்மையில் பரங்கி
மலையில் பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் 156 பேரில் 35 பேர் பெண்கள் என்பது தந்தை பெரியாரின் தொலைநோக்குக்குக் கிடைத்த வெற்றியல்லவா? இது மேலும் வளரும் தானே?

– த. அளகேசன், திருப்பத்தூர்

ப : ஆம், ஆம்! சுயமரியாதை இயக்க மூன்றாவது மாநில மாநாடு விருதுநகரில் 1931இல் நடைபெற்றதில் போட்ட தீர்மான விதை இப்போது முளைத்து, வளர்ந்து, காய்த்து, கனிந்து வருகிறது!

 

6)     கே : எழுதாத பேனாவுக்கு 82 கோடி ரூபாயில் சிலை எதற்கு என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதைப்பற்றித் தங்கள் கருத்து என்ன?

– ஜே. விஜயா, சின்னாளப்பட்டி

ப : ஒரு ராணுவ வீரரின் சிலையை
அமைக்கும்போது அவர் கையில் துப்பாக்கியும் வைக்கப்படுகிறது. அவர் எத்தனை போரில் எவ்வளவு பேர்களைச் சுட்டுத் தள்ளினார் என்று கேட்டால்… கேட்பவர்களைப் பார்த்து, சிரிப்பதைத் தவிர, வேறு என்ன பதில்?

 

7)     கே : மருத்துவர் இராமதாஸ் பா.ஜ.க.வுடன் சேர்ந்து மாம்பழச் சின்னத்தில் போட்டியிட 5 இடங்கள் கேட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

– வீ. ராகவன், சின்னசேலம்

ப : அவர் நிலை இப்படியா! பரிதாபத்திற்குள்ளான கொடுமை!

 

8)     கே : சமத்துவத்தைக் குழந்தைப் பருவத்திலிருந்தே, வீட்டிலிருந்தே கற்பிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அவர்களின் கருத்து ஏற்புடையது தானே?

– கு. ரகு, பெரியபாளையம்

ப : வரவேற்க வேண்டிய கருத்து. பிரபா ஸ்ரீதேவன் ஒரு ஜஸ்டிஸ்,  முற்போக்குச் சிந்தனையாளர் ஆவார்!

 

9)     கே : திருப்பரங்குன்றத் தீபத்தூண் அவமதிப்பு வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர் அதிகாரிகளைக் கடுமையாக எச்சரித்து வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்று அவசரங்காட்டுவது போல், எல்லா வழக்குகளிலும் காட்டுவதுதானே நீதியாக இருக்க முடியும்?

– மா. துரைராஜ், மதுரை

ப : உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறதே! அது சாலும்!  q