Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எக்குறள் யார்யார்வாய்க் கேட்பினும்… எக்குறள் எத்தன்மைத்தாயினும்…- திருப்பத்தூர் ம.கவிதா

குறைபாடுகளுடைய புத்தகங்கள் நிறைய உண்டு. ஆனால், ஒரு புத்தகத்தைப் படித்தபின் நமக்கு ஏக்கம் வருகிறது, ஏன் இத்தனை நாள் படிக்காமல் விட்டோமென்ற எண்ணம் தோன்றுகிறதென முனைவர் வா.நேரு அவர்கள் கூறினார்.

அந்தப் புத்தகம் ஓர் உரை வடிவத் தொகுப்பாகும். அதன் நூலாசிரியர் தம் உரையினூடே ஒரு செய்தியைத் தருகிறார்.

“ஒருவன், தன் தலை முடியை வெட்டும் நேரம், ஒரு அரை மணி நேரம் கூட தலையை ஆட்டாமல் உட்கார முடிவதில்லை. அப்படியிருக்கும்போது ஒரு கடவுள் வந்து தலையெழுத்தை இவன் தலையில் எழுதும் வரை, இவன் எப்படி அமைதியாக உட்கார்ந்திருந்திருப்பான்” என்று குன்றக்குடி அடிகளார் மேடையில் கேள்விக்குட்படுத்திய செய்தியைத் தம் உரையில் வேறு யார் எடுத்துக்காட்ட முடியும்? அந்நூலாசிரியர் – நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே! அந்நூல் “பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்” எனும் நூலாகும்.

ஜாதிகள் ஒழிய வேண்டுமென்றால்,
இந்துமதம்  அழிக்கப்பட வேண்டும். இந்துமதத்திற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் இருக்கிற கடவுள்களையும், சாஸ்திர புராணங்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படியில்லாமல், வருணாசிரமம் இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டு, ஜாதிகளும் ஒழிய வேண்டுமென்று யாராவது சொன்னால் – ஒன்று, அவர்கள் பித்தலாட்டக்காரர்களாக
இருக்க வேண்டும். அல்லது முட்டாள்களாக இருக்க வேண்டும்.
– ‘விடுதலை’, 30.05.1951

அதில், “ஆடு மாடு மேய்ப்பவருக்குக் கூட இராமாயணம் தெரியும், இராசராசனுக்குக் கூட குறள் தெரியாது” என்ற தந்தை பெரியாரின் கூற்றையும் ஆசிரியர் எடுத்துச் சொல்லி அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.

“காலிலே விலங்கு போடுவது அரசியல் அடிமைத்தனம்; கையிலே விலங்கு போடுவது பொருளாதார அடிமைத்தனம்; மூளையிலே விலங்கு போடுவது பண்பாட்டு அடிமைத்தனம் என்று மிகப்பெரிய சூழ்ச்சியைப் புரியும்படி விளக்கக்கூடிய ஆசிரியர்,

        ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்

   உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்திற்கு ஒரு நீதி’

என்ற மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலை எடுத்துக்காட்டி அதனால் தான் அவர்கள் திருக்குறளை யார் கண்ணிலும் படாமல் வைத்தார்கள் என்கிறார்.

திருக்குறள் ஆரியப் பண்பாட்டைத் தகர்க்கும் நூல் என்பதால் தான் அவர்கள் பரணில் வைத்து நமக்குக் கிடைக்காது செய்தார்கள், தீக்குறளை ஓதோம் என்றார்கள் என விளக்குகிறார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தத்துவம் எல்லாரிடத்திலும் போகக்கூடாது, வருணாசிரமம்தான் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்கள் என்கிறார்.

உழவுதான் உலகினுக்கே அச்சாணியாக அமைகிறது என்பது குறளாகவும், உழவு நீசத்தொழில்; அதைப் பார்ப்பனர்கள் செய்யக்கூடாது, என்று சொல்வது மநுநீதி என்பதும், ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பது வள்ளுவர் அணி எனவும், இன்னார்க்கு இன்னது என்பது இன்னொரு அணி எனவும் பிரிவறிய வைக்கிறார்.

18.2.2012 இராசபாளையத்தில் நடைபெற்ற 53ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருவிழாவில் ‘வள்ளுவரும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் ஆசிரியர் ஆற்றிய உரையும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

அவ்வுரையில்,

   “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்     

    மெய்ப்பொருள் காண்பது அறிவு”

   மற்றும்,

    “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

     மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்ற வெவ்வேறு அதிகாரத்தில் வரும்
இரண்டு குறளையும் ஒன்றுபடுத்தி இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவையான அறிவுரையை ஆசிரியர் இணைத்து வழங்கும் பாங்கு மிகச் சிறப்பானது.

ஜாதியின் கொடுமையால் நாற்றமெடுத்த
மலத்தைவிட மனிதன் கேவலப் படுத்தப்படுகிறான்.
மல உபாதைக்குச் சென்றவன் அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலில் மிதித்துவிட்டால் அந்தக் காலை மட்டும் தண்ணீரைவிட்டுக் கழுவிவிட்டால் அந்தக் குற்றம் போய்விடுகிறதாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால் அவனைத் தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால்வரை குளிர, நனையக் குளித்தாலொழியப் போவதில்லை என்கிறார்கள். ஆகவே மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகின்றான் என்பதைப் பாருங்கள்.
– ‘திராவிடன்‘, 05.10. 1929

‘யார்யார்வாய்க் கேட்பினும்’ என்று சொல்லுகிறபோது, பிறர் சொல்வதைக் கேட்பதை மட்டும் வைத்து ஒன்றை முடிவு செய்யாதே என்றும், ‘எத்தன்மைத்தாயினும்’ என்று சொல்லும் போது, நீ பார்ப்பதை மட்டும் வைத்து முடிவு செய்யாதே என்றும், ‘கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ என்ற பழமொழி போல நாம் மெய்ப்பொருளை மட்டுமே உணர வேண்டும் என்றும் விளக்கிச் சொல்கிறார்.

இப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் சொல்லி இருக்கிறாரென ஆசிரியர் சொல்கிற விளக்கத்தில்,

எந்தக் குறள் யார் சொன்னாலும் அது திருக்குறள் என்று, நம்பி விடாதே, எங்கு நீ பார்த்தாலும் (ஆளுநர் வழங்கும் விருது என்றாலும்) அது உண்மையான திருக்குறள் என்று நம்பிவிடாதே, திருக்குறள் தானா என்ற மெய்ப்பொருளை உணர்ந்து கொள் என்று சொல்லாமல் சொல்ல வள்ளுவரே எழுதி இருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

“வேதங்களின் சாரம்தான் திருக்குறள் என்று, நாகசாமி போன்றவர்கள் எழுதி அதை பெரிய அளவில் பரப்புரை செய்தார்கள். அந்தப் புத்தகத்தை அவர் தமிழில் எழுதவில்லை. ஏனெனில், எதிர்ப்பு வரும் என்று தெரியும். ஹார்வர்டில் இன்றைக்குத் தமிழிருக்கை ஒன்று இருக்கிறது. உலகம் முழுவதும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுகிற நிலை இன்று இருக்கிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் உள்ளே போகும்போது அவர்கள் அதைத் திசை திருப்ப நினைக்கிறார்கள். அதனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். நாகசாமி தனி நபர், அவர்தான் செய்கிறார் என்று நினைக்க வேண்டாம். ஒரு மிகப்பெரிய கூட்டம் அவருக்குப் பின்னால் இருக்கிறது. அந்தக் கூட்டத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் நம் பண்பாட்டின் மீது மிகப்பெரிய படையெடுப்பை எடுக்கிறார்கள். நம்மைப் போன்றவர்கள் இணைந்து செயல்பட வேண்டாமா” என்ற கேள்வியை ஆசிரியர் அவர்கள் இந்த உரையில் எழுப்புகிறார். பல ஆண்டுகளுக்கு முன் பேசியிருந்தாலும் இன்றைக்கும் அது எவ்வளவு பெரிய தேவையாக உள்ளது!

“ஆரியர் அல்லாத இந்நாட்டுப் பழங்குடியின திராவிட மக்களுக்கு வள்ளுவர் அருளிய திருக்குறள் மிகப் பெரிய செல்வமாகும். திருக்குறள் ஒன்றுதான் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எப்படிப்பட்ட அறிவாளிகளையும் ஈர்க்கக்கூடிய அளவிற்கு ஆதாரமாய் விளங்குகிறது. சிறிது காலத்திற்கேனும் மக்கள் திருக்குறளைப் படித்து மனத்தில் ஆழப் பதிய வைத்து வருவார்களேயானால், நம் மக்கள் உள்ளத்தில் ஒரு புதிய உணர்ச்சி உறுதியாக ஏற்படும் என்பதுதான் என் கருத்து” என்றார் தந்தை பெரியார்.

அகமுடைநம்பி அவர்கள் நடத்திய கருத்தரங்கத்திற்கு பெங்களூரிலிருந்து ஒருவர் வந்திருந்தார்; ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருக்குறளை இலவசமாகக் கொடுத்துக்கொண்டு வந்தார்; நான் கேட்ட பின் எனக்குக் கொடுத்தார். முழுக்க முழுக்க எதிரான கருத்துகளை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள். கருத்து முழுக்க ஆர்.எஸ்.எஸ், அடிப்படையில் ஹிந்துத்துவா அடிப்படையில் கொடுத்திருப்பதை வாசித்துப் பார்த்தேன்.

உலகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இருக்கின்றன. அவர்கள் திருக்குறளை எப்படியாவது திருடப் பார்க்கிறார்கள், திரிக்கப் பார்க்கிறார்கள். இதை ஒரு ஹிந்து மத நூலாகக் காட்ட வேண்டும் என்று பல்வேறு செயல்பாடுகளை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசால் மொழிபெயர்க்கக் கூடியவற்றை அவர்கள் செப்பனிட்டுச் சரிபார்த்து அனுப்புகிறார்கள். ஆனால், உலகம் முழுவதிலும் தனிப்பட்டவர்கள் யாராவது மொழி பெயர்த்தால் அதை உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழர்கள் நுட்பமாய் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நாம் திருக்குறளை விடாமல் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பது தான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அய்யாவின் “பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்” என்ற புத்தகமாகும். இது அனைவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் இருக்க வேண்டிய நூலாகும்.