Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திருப்பரங்குன்றம் மலைப்பதிகம் தெளிவாய்க் கூறும் உண்மை வரலாறு !‌

திருப்பரங்குன்றம் மலை மதுரை மாவட்டம்‌ மதுரை தெற்கு வட்டத்தில்‌, தெற்கே 8 கி.மீ தொலைவில்‌ விருதுநகர்‌ செல்லும்‌ சாலையில் உள்ளது. மதுரையைச்‌ சூழ்ந்துள்ள எண்பெருங்குன்றங்கள்‌ பற்றிக்‌ குறிப்பிடும்‌ பழம் பாடல்‌ ஒன்றில் முதலாவதாகக்‌ குறிப்பிடப்பட்டுள்ள மலை  இதுவே. மலையின் மேற்குப்‌ பகுதியில்‌ உள்ள குகையில்‌ 10 கல்படுக்கைகளும்‌ தொன்மையான மூன்று தமிழ்‌ பிராமி கல்வெட்டுகளும்‌ உள்ளன.  திருப்பரங்குன்றம்‌ மலையின்‌ அடித்தளத்தில்‌ உள்ள பழனியாண்டவர்‌ கோயிலின்‌ பின்புறமுள்ள சுனையின்‌ உட்பகுதியில்‌ மகாவீரர்‌, பார்சுவர்‌, பாகுபலி சிற்பங்களும் வட்டெழுத்துக்‌ கல்வெட்டுகளும்‌ உள்ளன. மலையின்‌ முகட்டில்‌ உள்ள சுனையை ஒட்டிய பெரும்பாறையில்‌ பார்சுவநாதர்,‌ பாகுபலி சிற்பங்கள்‌ உள்ளன.  மலையின்‌ தென்பகுதியில்‌ குடைவரைக்‌ கோயில்‌ கி.பி.8-9ஆம் நூற்றாண்டுவரை சமணக்‌ கோயிலாக இருந்தது. பின்னர்‌ சைவத்தலமாக மாற்றப்பட்டுவிட்டது.‌ இதைக் கீழ்க்கண்ட பதிகங்கள் தெளிவாய்க் கூறுகின்றன.

  1. சூடம றந்தே சுச்சுதன் தாளை உச்சிமிசை

   ஆடுதல்‌ மேய நெஞ்சகம்‌ கொண்டே அனுதினமும்‌

   தேடுத லொன்றே செல்வம தாகத்‌ திரிவீர்காள்‌!

   பாடுவம்‌ வம்மின்‌ திருப்பரங்‌ குன்றின்‌ தீர்த்தரையே!

(சுச்சுதன் – சுருதங்களை மொழிந்தவன்; தாளை உச்சிமிசை சூடமறந்தே என மாறுக; வம்மின்‌ – வாருங்கள்‌; தீர்த்தர்‌-மகாவீரர்‌, பார்சுவநாதர்,‌ பாகுபலி ஆகியோர்‌)

  1. பற்றுவி டற்கே பற்றுவம் வாமன் பதமலரைச்

   சொற்றிய தீஞ்சொல் உள்ளகம் கொள்ளா நீர்மையராய்

   வெற்றுரை யாளர் வாய்மொழி பார்த்தே உழல்வீரே

   நற்றவர் தீர்த்தர் திருப்பரங் குன்றம் நாடுவிரே!

(சொற்றிய – அருகனாலருளப்பட்ட; வெற்றுரை-மித்யாவாதியர் கூறும் சொற்கள்)

  1. பங்கய ஊர்திப்‌ பரமரை நாளும்‌ சேவித்தே

   பொங்கிடும்‌ ஓகை தாம்கொள பூரித்‌ தேத்தாதே

   பங்கயம்‌ பூக்கும்‌ செங்கழ னிச்சூழ்‌ பரங்குன்றை

   அங்கையின்‌ நெல்லிக்‌ கனியெனக்‌ கண்டும்‌ கழிவீரோ?

(பங்கயம் – தாமரை; ஊர்தி – வாகனம்; ஓகை – உவகை கழிவீரோ – பூசிக்காமல்) போவீரோ?; அங்கை – உள்ளங்கை)

  1. ஆர்சரண்‌ என்றே அலமர லுற்றே அலைவீரே

    சார்புறு மன்பின்‌ தந்தையும்‌ தாயும்‌ சுற்றமுமே

    நேர்பட என்றும்‌ சரணம ளித்தல்‌ தாமுண்டோ?

    கார்கவின்‌ குன்ற நிரம்பரன்‌ நும்மைக்‌ காத்திடுவான்‌

(அலமரல்‌-மனம்‌ வருந்தல்; கார்‌-மேகம்‌; நிரம்‌பரன்‌-ஆடை அணியாதவன்)

  1. சத்திய வார்த்தை ஒன்றினைச்‌ சாற்றக்‌ கேளீரே!

    முத்தியும்‌ ஏகம்‌ முதல்வனும்‌ ஏகம்‌ மூடர்சிலர்‌

    கத்துவர்‌ வேறாய்‌ காதுகொ டாதீர்‌! பரங்குன்றின்‌

    அத்தனு ரைத்த திருவறம்‌ கேட்டே உய்குவிரே!

(முக்தி நிலையும்‌ ஒன்றுதான்‌ அதைச்‌ சாதிக்கும்‌ தலைமகனும்‌ தனியனே என்க; கத்தி-ஒன்றுக்கொன்று மாறுபட உரத்துப்‌ பேசி; மூடர்‌-மித்தியாவாதியர்;)

  1. காதள வோடும்‌ கண்ணியர்‌ மீதே மயல்கொண்டு

   பாதக மேசெய்‌ பாழ்பிற விக்காம்‌ வினையாற்றித்‌

   தீதுகள்‌ போற்றித்‌ தென்பரங்‌ குன்றின்‌ தீர்த்தரை

   ஆதர வாய்சென்‌ றடிமலர்‌ தாழா தழிவீரோ?

(தென்‌ – அழகு; அழிதல்‌
– நரகில்கிடந்து வருந்துதல்‌)

 

  1. எண்பெருங்‌ குன்றில்‌ திருப்பரங்‌ குன்றின்‌ இறைமூவர்‌

   திண்ணிய நெஞ்சர்‌ பார்சுவர்‌ மற்றும்‌ மகவீரர்‌

   அண்ணலாம்‌ தன்முன்‌ பரதரை வென்ற பாகுபலி

   விண்ணவ ரேத்த வீற்றிடு வார்‌ தமை ஏத்துவிரே!

(தம்முன் ‌- தமையன்‌)

  1. ஐம்புல வேட்கை கயத்தினில்‌ மூழ்கித்‌ திளைக்கின்ற

   வெம்பிய நெஞ்சப்‌ போதகம்‌ தன்னைக்‌ கட்டவல

   உம்பரும்‌ ஏத்தும்‌ உறுவரர்‌ பாதம்‌ மறந்தீரோ?

   வம்பல ரிட்டே வாமரை வாழ்த்தி உய்குவிரே!

(கயம் ‌- குளம்‌; வெம்‌பிய – சினங்கொண்ட; போதகம் ‌- மதயானை; உம்பர்‌ –  தேவர்;‌ வம்பலர்‌
– அன்றலர்ந்தமலர்)‌

  1. அறுமுக னாக அரவணி ஈசன்‌ தாமாக

   துறுவரை நின்றார்‌ என்பது பற்றித்‌ தொழவலரோ?

   செறுகொடு மாரன்‌ செய்கை யழித்தார்‌ இவரலரே?

   பொறிகள வித்த தீர்த்தரை வாழ்த்தப்‌ போதுவிரே!

(சமணர்‌ மலையாகவிருந்த திருப்பரங்
குன்றத்தில்‌ பிற்காலத்தில் முருகக்கடவுளுக்கும்‌, சிவபெருமானுக்கும்‌ கோயில்‌ எடுப்பிக்கப் பெற்றன. துறுவரை – பெரியமலை; செறுகொடு-பகைகொண்டு; மாரன்‌-மன்மதன்)

  1. மலர்மணம்‌ வீசும்‌ தண்சுனை யார்ந்த மலைமிசையே

   நிலைகுலை யாத்தவம்‌ நோற்றிடும்‌ நிகரில்‌ ஜிநவரராய்‌

   வலைவினை அறுத்த பார்சுவர்‌ பாகுப லிப்பரமர்‌

   பொலிவுடன்‌ உறைவார்‌ பொற்பா தம்தொழப்‌

போதுவிரே!

   (வினைவலை என மாறுக)