Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆட்சியும் அதிகாரமும் -மஞ்சை வசந்தன்

   ஆட்சி என்றாலே போர்த் திறனால் பெறவேண்டியதும், காப்பாற்றப்பட வேண்டியதும் என்றிருந்த காலத்தில், அந்தத் தகுதியும் ஆற்றலும் ஆணுக்கே உண்டு என்று கருதப்பட்ட சூழலில், அதுவும் அந்த ஆட்சி பரம்பரையாக வரவேண்டும் என்று பின்பற்றப்பட்ட நிலையில், ஆணுக்கே, வாரிசுரிமை; அதுவும் மூத்த மகனுக்கே என்ற முடிவு நிலவியது.

ஆனால் இன்றைக்கு, போர் என்பது நாட்டுக்குள் என்ற நிலை மாறி நாடுகளுக்கு இடையே என்று ஆனபின், ஆள்கள் மோதுவதற்குப் பதில் அணுத்திறன் மோதுகின்ற – அறிவியல் மோதுகின்ற – நிலை வந்தபின் ஆணென்ன பெண்ணென்ன?

அன்றைக்கே கூட ஜான்சி இராணியும், இராணி மங்கம்மாவும் சாதனை புரிந்தார்கள் என்றால், இன்றைக்கு பெண்கள் ஆட்சி பீடம் ஏற ஏன் முடியாது?

முடியாட்சிக் காலத்தில் ஆண்களில்கூட மூத்த மகனுக்குத் தான் ஆட்சி உரிமை என்ற நிலை. குடியாட்சியில் அந்நிலை மாறியது என்றாலும், பெண்ணுக்குரிய பங்கு கொடுக்கப்படவில்லை.

வாய்ப்பும் வசதியும் பெற்ற ஒரு சில பெண்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருப்பினும், அனைத்துப் பெண்களுக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்து விட்டதாக இன்றுகூடச் சொல்ல முடியாது.

எனவே, பெண்களுக்கு ஆட்சி அதிகாரங்களில் 50 விழுக்காடு ஒதுக்கீடு கொடுத்து, கட்டாயம் பங்கு பெறச் செய்வது ஒன்றே சரியான வழியாகும்.

தற்போது பரிந்துரைக்கப்படும் 33 விழுக்காடு கூட நியாயம் அன்று. மக்கள் தொகையில் பாதி பெண்கள் என்கின்றபோது, வாக்களிப்போரில் பாதி பெண்கள் என்கின்ற போது, ஆட்சிப் பொறுப்பிலும் அவர்கள் சரிபாதி பெறுவது தானே நீதி?

“பெண்கள் பங்கு பெறாத அரசியல் இருக்கும் நாட்டில் முன்னேற்றம் என்பது அய்ம்பது சதவிகிதம்தான்” என்று காந்தியடிகள் சொன்ன கருத்து நூற்றுக்கு நூறு உண்மையல்லவா?

ஒதுக்கீடு இல்லாமல் அவர்களுக்கு வாய்ப்பு வரும் என்பது கற்பனையாகத்தான் அமையும். காரணம், பெண்ணுக்குரிய பங்கை, உரிமையைத் தானே முன்வந்து அளிக்கும் பக்குவத்தை இன்னும் இச்சமுதாயம் பெறவில்லை.

கொடுக்காத ஒன்றை எடுத்துக் கொள்ளுகின்ற விழிப்பு இன்னும் பெண்களுக்கு வரவில்லை. எனவே, அதை நன்கு உணர்ந்த அரசு, அவர்கள் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வதே நேர்மையாகும்!

பெண்களுக்கான அமைப்புகள் கிராமந்தோறும் படிப்பகங்களை ஏற்படுத்தி, அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்க வேண்டும். உள்ளாட்சி நிருவாகத்திலும் சட்டமன்ற, நாடாளுமன்ற நிருவாகத்திலும் பங்குபெறும் வாய்ப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அரசு இதற்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

முதற்படியாக, அரசியல் அமைப்புமுறை, பிரதிநிதித்துவ உரிமை, ஆட்சி நடத்தும் விதம், அடிப்படை உரிமை போன்ற பல்வேறு அரசியல் சார்ந்த அறிவை அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்து உருவாக்க வேண்டும்.

எல்லா பெண்களுக்கும் பயிற்சி அளிக்க இயலாது என்றால், முதல்கட்டமாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட, ஆர்வமுள்ள பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து ஆயத்தப்படுத்தலாம்.

அரசியல் துறையில் பயிற்சி என்பதோடு, மக்கள் நல நோக்கு, மனித நேயம், தொண்டு மனப்பான்மை, பொது நல வேட்கை – இவற்றை உள்ளத்தில் பதியும்படி செய்ய வேண்டும்.

பெண்கள் இயல்பாகவே ஊழல் செய்யத் தெரியாதவர்கள், வன்போக்கு அற்றவர்கள், மென் குணம் கொண்டவர்கள். இப்படிப்பட்ட பயிற்சியின் மூலம் ஊழலற்ற எதிர்காலத்தை உருவாக்க இது துணை நிற்கும்.

தற்போது கணவனுக்குப் பதில் மனைவி, தந்தைக்குப்பின் மகள் தலைவனுக்குப் பின் அவனது படுக்கைத் துணை என்ற வகையில் தான் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்நிலையை மாற்றி, தகுதியுள்ள பெண் களுக்குப் பதவி கிடைக்க வகை செய்ய வேண்டும்.

ஒரு காலத்தில் கல்வி என்றால் உயர் ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை இருந்தது. ஆனால், அனைத்து ஜாதியினருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டபோது, உயர்ஜாதியை ஓரங்கட்டி, மற்ற ஜாதி மாணவர்கள் முதல் மதிப்பெண் பெற்று முந்தி நிற்கின்றனர் என்பது தான் தற்போதைய நிலை.

அதேபோல், “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு?” என்ற அடிப்படையில், அடுப்படியில் முடக்கப்பட்டிருந்த நிலையை மாற்றி, அவர்களுக்குக் கல்வியளித்ததும் ஆண்களைப் பின்தள்ளி பெண்களே இன்று கல்வியில் முன்னணியில், முதல் தரத்தில் நிற்கின்றனர்!

அதேபோல் அரசியலிலும், அவர்களுக்கு வாய்ப்பளித்தால் ஆண்களைவிட சிறப்பாகவே நிருவாகம் செய்து காட்டுவர் என்று துணிந்து கூறமுடியும்.

கி.பி.2025அய்த் தாண்டிய இன்றைய நாளில், பெண்கள் அரசியலுக்கு வரலாமா? என்று ஆய்வு நடத்திக் கொண்டிருக்கின்ற அவல நிலையில் நாம் இருப்பதுவெட்கப்படவேண்டியது மட்டுமல்ல; வேதனைப்படத்தக்கதுமாகும்.

அரசியல் என்பது அலங்கோலங்கள் நிறைந்ததாயிற்றே! வன்முறையும், வார்த்தை ஜாலமும், தில்லுமுல்லும், மாற்றிப் பேசுவதும், மயக்கிப் பேசுவதும் மலிந்து கிடக்கும் மன சாட்சியற்ற துறையாகிப் போய்விட்டதே! இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுக்கப் பெண்களால் முடியுமா? என்று ஆண்கள் வாதாடுகின்றனர்.

பெண்களுக்குப் பிரச்சினைகளும் போராட்டங்களும் புதியதல்லவே! பிறப்பிலிருந்து இறப்புவரை பெண்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளும் ஏற்கின்ற சோதனைகளும், தாங்குகின்ற வேதனைகளும் கொஞ்சமா – நஞ்சமா?

அவர்கள் வாழ்வே ஒரு போராட்டம் தானே? இதில் போராட்டங்கள் அவர்களுக்கொன்றும் புதிதல்ல. வன்முறைக்குப் பலியாவதும், இழிவுகளை ஏற்பதும் அவர்களுக்கொன்றும் அச்சம் தரக் கூடியவையல்ல. இதையெல்லாம் இல்வாழ்வில் அவர்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பெண்களின் இன்னலும், இழிவும் நீங்கப் பாடுபட்ட அன்னை மணியம்மையார், அன்னை நாகம்மையார், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் – இன்னும் பல பெண் ஆளுமைகளெல்லாம் நெருப்பாற்றில் நீந்திக் கடந்தவர்கள் மட்டுமல்ல; நிலத்தில் பெண்களின் நிரந்தர விடிவுக்காய் வித்திட்டவர்கள்; நெஞ்சு நிமிர்த்தி வழிகாட்டியவர்கள்.

பெண்களின் பிரச்சினைகள் தீர, பெண்களே புறப்பட வேண்டியது அவசியம். உயர்ந்துவிட்ட பெண்கள் எடுத்துக்காட்டாய் மாறி, ஊரிலுள்ள பெண்களுக்கு உணர்வூட்ட வேண்டியதும், உடன் துணைநிற்க வேண்டியதும் அவசியம்.

தான் பெற்ற உயர்வு, தன் குடும்ப நலனுக்கும், தன் விளம்பரத்துக்கும் என்ற சுயநல வட்டத்துக்குள் சுருங்கிவிடுவார்களேயானால், இருண்டு கிடக்கும் எண்ணற்ற பெண்களின் வாழ்வுக்கு ஒளிகாட்டுவது யார்? இதையெண்ணியாவது அவர்கள் சமுதாயப் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

தனிமனித இராணுவமாய் “பெரியார்” தடம்பதித்து, இத்தமிழ்நாட்டில் சாதித்த சாதனைகள் கொஞ்சமா? நாம் உண்மையாய், தூய்மையாய் இருந்து, நாட்டுக்குத் தொண்டாற்றி வழிகாட்டினால், நம் சொல்லுக்கு ஆற்றல் இருக்கவே செய்யும் அந்த ஆற்றல்தான் மாற்றத்திற்கான மாமருந்து.

உறங்கிக் கிடந்த உள்ளாட்சிகளின் உறக்கங் கலைத்து, பெண்களை உயர் பதவியில் உட்கார வைக்கும் முயற்சியைச் செய்து, தற்போது ஓரளவிற்கு நாம் வெற்றியும் பெற்றுள்ளோம்.

பதவியிலுள்ள பெண்களுக்கு  எதிர்பாராமல்  தாக்குதல்கள், இழப்புகள் ஏற்படக்கூடும் என்றாலும் இதுபோன்ற எதிர்பாராத நிகழ்ச்சிகளை விபத்துகளாகக் கருதிக் கொள்ள வேண்டுமேயன்றி, வேண்டாம் வம்பென்று விலகிக் கொள்ளக் கூடாது.

இரயில் விபத்து ஏற்படுவதால் ரயில் பயணத்தை நாம் நிறுத்தி விடுவதில்லை. மின்சாரம் தாக்குகிறது என்பதற்காக அதைப் பயன்படுத்துவதை ஒதுக்க முடியாது. அவ்வாறுதான் பெண்களின் அரசியல் ஈடுபாடும். பாதிப்பைக் கண்டு பயங் கொள்ளக்கூடாது, பின்வாங்கக் கூடாது.

“வீட்டு வேலைகள், குடும்பப் பொறுப்புகள் இவற்றோடு சேர்த்து, அரசியலையும் கவனிக்க இயலாது என்று பெண்கள் கூறுகிறார்களே? அரசியல் ஈடுபாடு சில பெண்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது?” என்ற கேள்வி, திருச்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் மேயர் திருமதி புனிதவல்லி பழனியாண்டி அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு,

“மனம் இருந்தால் எல்லாம் சாதிக்க முடியும்”. ஒருபெண் நவீன சாதனங்களோடு தற்போது வீட்டை நிருவாகம் செய்கிறாள். ஒரு மணி நேரத்தில் சமைப்பது, துவைப்பது என, எல்லாவற்றையும் பெண்களுக்கு அறிவியல் முன்னேற்றம் எளிதாக்கிவிட்டன. சமுதாயச் சிந்தனையுள்ள எந்தப் பெண்ணும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிப்பார். நாட்டுக்கான பணி, வீட்டுக்கான பணி என்று பிரித்துப் பார்க்காமல் சமூகத்துக்கான நற்பணி இது என்று பெண்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது நேரமின்மை போன்ற தயக்க உணர்வுகள் விடைபெற்றுவிடுகின்றன” என்று பதில் அளித்தார்.

இவரது பதில் பெண்களை நிச்சயம் விழிப்படையச் செய்யும். எத்தகைய சூழலிலும் பெண்கள் அரசியலில் ஈடுபட இயலும் என்பதை உணர்த்தியுள்ளது.

இதில் இன்னொன்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அரசியலில் ஈடுபட்டாக வேண்டும் என்ற நிலை வந்துவிட்ட பெண்ணுக்குக்கூட, அடுப்படி வேலை அகலக்கூடாது என்பது எவன் வகுத்த இலக்கணம்? அது என்ன கட்டாயக் கடமையா? அடுப்படியிலிருந்து பெண்கள் விலக முடியாதா?

சமையல் வேலை பெண்ணின் வேலைதான் என்பது, ஆணாதிக்கச் சமுதாயத்தின் அடை யாளமேயன்றி, ஆரோக்கிய சமுதாயத்தின் அம்சமல்ல.

இல்வாழ்வில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் (கணவன், மனைவி) இருவரின் சூழ்நிலைக்கு ஏற்ப அடுத்தவர் அவ்வேலையை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு?

குலத் தொழிலையே செய்ய வேண்டும் என்ற கொடிய நிலைக்கும், பெண்தான் சமைக்க வேண்டும் என்ற பிற்போக்கு நிலைக்கும் அதிக வேறுபாடு இல்லை.

“பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது, உலகியல் மதிப்பீடுகள் எப்படியிருக்கின்றன?” என்று மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர்,

“நீண்ட காலம் அரசியலில் இருக்கும் பெண்களைப் பற்றி விமர்சனங்கள் அதிகம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அதைப் பொருட்படுத்தாத மன நிலைக்கு அவர்கள் பக்குவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். புதிதாக அரசியலில் நுழையும் பெண்கள்தான் ‘விமர்சனப் புயலில்’ சிக்கித் தடுமாறுகின்றனர். பெண்கள் பொதுவாகத் தோல்வியைக் கண்டு துவள்வார்கள். சுற்றியிருக்கும் நான்கு பேர் தன்னைப் பற்றிப் பேசும் பேச்சால் பாதிக்கப்படுவார்கள். இதுதான் இதுவரை நடந்து வந்திருக்கிறது. இனி பெண்கள் அரசியலில் புக வாய்ப்பு சட்டப்படி அளிக்கப்பட்டு விட்டதால், பெண்கள் இனி நேரடியாக அரசியலில் நுழைவார்கள். இதுவரை பெண்கள் நலனுக்காக ஆண்கள் பேசினார்கள். இனி தங்களுக்காக, தாங்களே பேசலாம், போராடிப் பெறலாம் என்ற தன்னம்பிக்கையைப் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கிறது என்பது உண்மையே!

ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மனசாட்சிக்குப் புறம்பாக நடக்காமல் நேர்மையாக, நியாயமாக நடந்தால் எந்த விமர்சனங்களும் அவர்களைப் பாதிக்காது.

துணிவும் தன்னம்பிக்கையும் வரும் வகையில் பல தலைவர்கள் எழுதிய புத்தகங்களைப் பெண்கள் படிக்க வேண்டும். நல்ல புத்தகங்களைத் தினமும் ஒரு மணி நேரமாவது படித்து, அதன்படி நடக்கும் மனப்பக்குவத்தையும் பெற ஒவ்வொரு பெண்ணும் முயன்றால், எத்தகைய விமர்சனத்தையும் தாங்கும் மனப் பக்குவத்தை அடைந்து விடுவார்கள் என்பது உறுதி” என்று அலசிக் கூறியுள்ளார் பெண் மேயர்.

அவர் கூறுவதுபோலவே பெண்களுக்காகப் பெண்களே போராடும் துணிவும், உலக அறிவைப் பெறுவதற்காகப் படிக்கும் முயற்சியும் அவர்களே மேற்கொள்ள வேண்டியவை. வெற்று முழக்கங்களும், வீர வசனங்களும் எந்தவொரு பயனையும் நல்கிவிடாது. விடாமுயற்சியும், விழிப்புணர்வுமே விடிவை விளைவிக்க முடியும்.

பெண்களுக்கென்று தனியே இடஒதுக்கீடு கொடுக்காமல் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருவது இன்றைய சூழலில் மிகவும் கடினம். அரசியல் கட்சிகளே முதலில் பெண்களுக்கு அதிக அளவு இடங்களை ஒதுக்குவது இல்லை.

உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கென்று ஒதுக்கீடு கொடுத்ததும், அந்த அளவுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கென்று ஒதுக்கீடு இல்லாததால் மிகச் சொற்பமான அளவுக்கே பெண்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

எனவே, பெண்களுக்குச் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் 50 விழுக்காடு இடங்களை ஒதுக்கிட வேண்டும். மக்கள் தொகையில் பாதியளவு உள்ளவர்கள் அந்த அளவுக்கே பிரதிநிதிகளாக வரவேண்டியதுதான் உரிமையும், நியாயமும், தர்மமும் ஆகும்.

“இன்றைய நிலையில் பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். இது பெருமைப்படும் ஒன்று தான். ஆனால், போட்டி
யில்லாத வெற்றியைப் பெண்கள்  புறக்கணிக்க வேண்டும். கல்வியிலும் சரி, வேலை வாய்ப்பிலும் சரி, பெண்களுக்குத் தனி இடஒதுக்கீடு தேவையில்லை. இதேபோல நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவையிலும் பெண்களுக்கு என 33 விழுக்காடு இடஒதுக்கீடு தேவையில்லையென்பது எனது கருத்தாகும். தகுதியும் திறமையும் இருந்தால் பெண்கள் எந்தத் துறையிலும் ஆண்களுக்கு நிகராகச் சாதனை படைக்க முடியும்” என்ற கருத்தும் சிலரால் கூறப்படுகிறது.

ஆனால், இக்கருத்து நடைமுறைக்குச் சாத்தியமானதன்று.

ஒரு மனிதனின் தகுதி – திறமையைத் தீர்மானிப்பதில் பல்வேறு பின்னணிகள் உள்ளன. ஆண்களுக்குள்ள வாய்ப்பு இன்றைக்கு சமுதாயத்தில் பெண்களுக்கு இல்லை. கல்வியில், வேலை வாய்ப்பில் வேண்டுமானால் பெண்கள் தங்களுக்கென்று இடஒதுக்கீடு இல்லாமல் முன்னுக்கு வரமுடியும். ஆனால், நாடாளுமன்ற-சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் இடஒதுக்கீடு இல்லாமல் பெண்கள் உரிய இடத்தைப் பெற இயலாது. சமுதாய அங்கீகாரம் பெண்களுக்கு இன்றளவும் குறைவே.

அரசியல் கட்சிகளே பெண்களுக்கு அதிக அளவு இடம் கொடுக்க முன் வராதபோது பெண்கள் போட்டியிடுவது எப்படி? வெற்றி பெறுவது எப்படி?

சுயேச்சையாக நின்று பெண்கள் வெற்றி பெற்று வருவது சாத்தியமன்று. ஆக, பெண்களுக்கென்று ஒதுக்கீடு கொடுக்கப்பட்டால், அரசியல் கட்சிகளுக்கு, பெண்களை நிறுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலைக்கு வரும். பெண்களுக்கும் போதிய வாய்ப்புக் கிடைக்கும்.

அரசியலில் மட்டுமின்றி, அதிகாரப் பதவிகளிலும் பெண்கள் அதிகப்படி அமரவேண்டும். 50 விழுக்காடு பதவிகளை அவர்கள் பெறவேண்டும்.

மனிதனுக்கு இழிவு – ஜாதியால்தான் உண்டாகி வருகிறது.ஜாதியோ மதத்தினால்தான் உண்டாகி வருகின்றது. மதமோ கடவுளால்தானே உண்டாகி வருகின்றது? இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள்.
– ‘குடிஅரசு’, 19.01.1936

பெண்களும் பல நூற்றாண்டுகளாக சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டாயம். ஆணாதிக்கச் சமுதாயத்தில் எத்தனையோ இடர்பாடுகளுக்கு இடையேதான் இதைச் செய்தாக வேண்டும்.

அற்பத்தன ஆண்களையும், ஆண் அதிகாரிகளின் அத்துமீறல்களையும் பெண் அமைப்புகள் கண்டித்துக் குரல் கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்படும் பெண்கள் தயங்காது, “பெண் அமைப்புகளிடம்” புகார் கொடுக்க வேண்டும்.

பெண்கள் அனைத்துத் துறையிலும் சமபங்கு ஏற்று, சம உரிமையுடன் இயங்கும் சமுதாயமே இரட்டைச் சக்கர சமுதாயமாகும். இல்லையெனில் ஒற்றைச் சக்கரத்தில் ஓடி ஓரம் சாய்ந்து ஒதுங்கும் உதவா வண்டியாக, விரைவான வளர்ச்சியின்றி தடுமாற்றம் அடையும்; அழியும். இதை அனைத்து மக்களும் உணர்ந்து வாழ வேண்டியது அவசியம். பெண்களின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டியதும் கட்டாயம்.

பெண்களின் சமவாய்ப்பு, சம உரிமை, சம முன்னேற்றம் என்பது, அவர்களுடைய நலத்திற்கு மட்டுமல்ல; அது சமுதாய நலத்திற்கும் ஆகும்!

இதைச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் கருத்தில் கொண்டு வாழவேண்டும். சமுதாயம் மேம்படவும் மனிதம் தழைக்கவும் அதுவே வழி!