Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மாவீரன் பகத்சிங் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

விடுதலைப் போராட்ட வீரன் பகத்சிங்

கெடுதலை வீழ்த்தக் கிளர்ந்த எழுகதிரோன்!

பஞ்சாப்பில் பங்கா எனுமூரில் தோன்றிய

அஞ்சா அரிமா! அறிவன் பகத்சிங்காம்!

நாட்டில் புரட்சியே ஓங்கட்டும் என்றுரைத்த

மாட்சிமிகு நன்மறவன்! மானத்தை நல்லுயிராய்

எண்ணியவன்! ஆங்கிலேயர் தம்மை எதிர்த்துமே

மண்ணில் புரட்சி, மறுமலர்ச்சி வித்திட்டான்!

வெஞ்சிறையில் நூல்கள் விருப்புடனே தாம்பயின்றே

நெஞ்சுரத்தால் யாவர்க்கும் நாட்டுப்பற் றூட்டியவன்!

நான்ஏனோ நாத்திகன் ஆனேன் எனும்நூலால்

ஆன்றோர் மனங்களில் அன்றாடம் வாழ்கின்றான்!

மக்களது வாழ்வில் மதமே பெருந்தடையாம்!

எக்கணமும் தற்கொலை எண்ணம் வரக் கூடாது;

மங்காப் பொதுவுடைமை மாண்பார் சமத்துவமே

பொங்கும் புரட்சியின் நோக்கமெனத் தாமுரைத்தான்!

நற்கல்வி வேண்டும்நம் மாணவர்க்கே! அத்தோடு

பொற்பார் அரசியல் ஈடுபாடும், தேவைதான்

என்றே முழங்கி எழுச்சிவிதை ஊன்றியவன்!

தன்மணத்தை ஈரெட்டில் தாம்நடத்த ஒப்பாதான்!

செம்மாந்த சிந்தனையே சீர்புரட்சி வித்தாகும்

“சும்மா கிடைக்கா சுதந்திரமும்” என்றார்த்தான்!

நோக்கில் உயர்ந்தோன் நுவலரும்போ ராளியினைத்

தூக்கினில் இட்டார்இரு பான்மூன் றகவையிலே!

இராசகுரு வோடு சுகதேவ் மூவரையும்

மாசுடையோர் ஒன்றாய் மரணத்தில் சாய்த்தனரே!

தப்பியோட எண்ணாத் தறுகண்மை யாளன்தமைச்

செப்பரிய நாட்டின் விடுதலைக்கே ஒப்புவித்தான்!

பாழும் பதராக இன்றிப் பகுத்தறிவால்

வாழும் இளைஞர் வழிகாட்டி ஆனானே!

நற்புரட்சி யாளனாய் நாடே புகழ்கின்ற

பொற்புடைய வீரன் பகத்சிங்கைப் போற்றுவமே!