அடுத்தநாள் 28.2.2008 அன்று காலை பிரபல பர்ஜ்அல் அரபு ஓட்டலில் காலைச் சிற்றுண்டி விருந்து அளித்தார். குடந்தை சாமிமலை தோழர் சோமு என்றழைக்கப்படும் சோமசுந்தரம், மதுரை – காரியாபட்டி தோழர் கண்ணன் – (இவர்கள் அங்கே பணியாற்றும் தோழர்கள்) காலைச் சிற்றுண்டி விருந்தில் நம்முடன், அஜ்மான் அருள் அவர்களும், அட்லஸ் இண்டஸ்ட்ரியின் உரிமையாளர் குடந்தை சாக்கோட்டை அன்பழகனும், சிராஜ்தீனும் கலந்து கொண்டனர்.
அங்கிருந்து திரும்பியவுடன் விருந்தினர் விடுதியில், பிரபல தொழிலதிபர் சந்திரசேகரன் அவர்கள் வரவேற்று, கட்டார் நாட்டின் பிரபல தொழிலதிபரும், கல்வி கர்னல் சார்லஸ், அவருடைய துணைவியார் ஸ்டெல்லா மற்றும் நிருவாகிகளை அறிமுகப்படுத்தி உரையாடினர். பிறகு மதியம் 2 மணியளவில் அல்தராமா பகுதியில் உள்ள ‘சிவ்ஸ்டார் உணவு விடுதி’யில் அதன் உரிமையாளர் திரு.கோவிந்தராஜன் சிறந்த தொழிலதிபர் விருது பெற்ற கல்வி வள்ளல் (பட்டுக்கோட்டை செண்டாக்காடு அவரது ஊர்) அவர்கள் எங்களுக்கும் குடந்தை சாக்கோட்டை அன்பழகன், சிராஜ்தீன் மற்றும் அமீரகத் தமிழர் அமைப்புகளின் பொருளாளர் நாம் பங்கேற்க முக்கியக் காரணமான அப்துல் லத்தீப் அவர்களுக்கும் மதிய விருந்தினை அளித்தார். திருமதி.கோவிந்தராசன் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடிய பிறகு சுமார் 3.30 மணி அளவில் விடுதிக்குத் திரும்பினோம்.

அமீரகத் தமிழர்கள் அமைப்பின் (துபாய்) 7ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பாராட்டு விழா 28.2.2008 அன்று மாலை துபாய், இந்திய உயர்நிலைப்பள்ளி ஷேக் ராஷீத் உள்ளரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு ஈ.டி.ஏ. ஸ்டார் குழுமங்களின் தலைவர் திரு.சையத் சலாவுதீன் தலைமை வகித்தார். பின்பக்கீத் குழுமங்களின் தலைவர் திரு.சுல்தான் அப்துல்லா பஷீத் அல் மஸ்தூரிஷி மற்றும் நடிகர் ‘இனமுரசு’ சத்யராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
எம்மைப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்து விழாவில் ஏற்புரை ஆற்றியபோது பேசியதாவது:
“இங்கே அரங்கம் நிறைந்து எங்களைக் கவுரவிக்க வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்றுப் பாராட்டுகிறேன். தமிழர்கள் செல்லுமிடமெல்லாம் சிறக்கவேண்டும் என்று பெரியார் நினைத்தார். அதை உங்கள் வடிவில் பார்க்கிறேன்.
வேகமாக வளர்ந்து வரும் இந்த நாட்டில் நீங்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது இங்குள்ள சட்ட திட்டங்களை மதியுங்கள். அதுதான் முதல் பணி. பிறகு மனிதநேயத்துடன் பிறருக்கு உதவக் கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களைப் பாராட்ட ஒருபோதும் தயங்காதீர்கள். அமீரகத் தமிழர்கள் அமைப்பு பரிந்துரை செய்யும் 2 மாணவ, மாணவிகளுக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இலவசமாகக் கல்வி தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே, ஆண்டு தோறும் 2 ஏழை எளிய மாணவ / மாணவியரைத் தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்.

இங்கே பேசிய சையத் சலாவுதீன் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்து பெரும் தொழில்களைத் தொடங்கி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களுக்கு வாழ்வும் கொடுத்துள்ளார். அவர் தமிழ்நாட்டில் மேலும் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்களைத் தொடங்கவேண்டும். தமிழர்களுக்கு வழிகாட்டியாக மனிதநேயம் கலந்து பணிகளைச் செய்துவரும் அவரை வாழ்த்துகிறேன்” என்று உரையாற்றினோம்.
அதற்குப் பின் ஹோட்டல் கராச்சி தர்பாரில் – திருமதி திரு. அப்துல் லத்தீப் குடும்பத்தினர் இரவு விருந்தளித்தனர். விருந்து முடியும் போது இரவு 1 மணியாகிவிட்டது.
29ஆம் தேதி காலை, பிரபல தொழிலதிபரும் ‘சினாதானா’ என்று அழைக்கப்படும் திரு. அப்துல்காதர் அவர்களும், பிரியா விடை தரவும் தங்கும் விருந்தினர் விடுதிக்கு காலை 8.30 மணிக்கு வந்து உரையாடியபோது, இவரது நற்சிந்தனை நூல் பற்றி நாம் மேடையில் பேசும்போது குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்தார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவர்கள் இருவர் படிப்புக்கும் ஆகும் செலவை ஆண்டுதோறும் ஏற்பதாகச் சொல்லி விடை பெற்றார்.
அதன் பிறகு எம் நெடுநாள் குடும்ப நண்பரும், கல்வி வள்ளலும், பிரபல மருத்துவருமான டாக்டர் எம்.முத்துசாமி அவர்கள் தமது இல்லத்திற்கு (பர்துபாய் பகுதியில்) அழைத்துச் சென்று உரையாடி காலைச் சிற்றுண்டி வழங்கினார்.
எங்களை கற்பகவள்ளி முத்துசாமி, அசோக் முத்துசாமி, சித்ரா அசோக், பேரன் அஸ்வின், தொழிலதிபர் கோவை குமாரசாமி ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.
அடுத்து, பகல் 12 மணியளவில் விடை பெற்றுத் திரும்பி, சில நண்பர்களுடன் விருந்தினர் விடுதியில் சந்திப்புகள் நிகழ்ந்தன.
பகல் 1.30 மணியளவில் கேப்டன் கர்னல் சார்லஸ், (கட்டார்) ஸ்டெல்லா சார்லஸ் குடும்பத்தினர், லத்தீப் ஆகியோருக்கு சரவண பவனில் சந்திரசேகரன் பகல் விருந்தளித்தார்.
அதன் பிறகு சுமார் 3.30 மணியளவில் துபாய்பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தோம்.
அங்கு அமீரகத் தமிழர் அமைப்புகள் சார்பில்,ஏ.எஸ்.மூர்த்தி, துபாய் அமைப்பு தலைவர் அமுதரசன், பொருளாளர் நயீம், அஜ்மான் அமைப்பின் பொருளாளர் லத்தீப், ஜே.வி.ராகவன், ஜெயக்குமார், வாசு, வானிலை வளர்தமிழ் தலைவர் எல்.கோவிந்தராஜ். செயலாளர் காவிரி மைந்தன், ஈமான் அமைப்பு உப தலைவர் அப்துல் ரஹ்மான், செயலாளர் லியாகத் அலி. சுடர் வம்சம் தலைவர் ராஜேஷ், திருமதி ஏ.எஸ். மூர்த்தி, அருள், ஷார்ஜா தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் எஸ்.கே.மூர்த்தி, முகம்மது அலி, குவைத் நாட்டிலிருந்து அதன் தாய் மண் கலை இலக்கியம், பேரவைப் பொறுப்பு வழக்குரைஞர் நிதி அறிஞர் அப்துல் ரசாக், பட்டுக்கோட்டை ராதாகிருஷ்ணன், சா. இளையராஜா முதலிய பலரும் விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பினர்.
29.2.2008 மாலை துபாய் பன்னாட்டு விமான நிலையத்தில் விடைபெற்றுக் கொண்டு, தாய் ஏர்வேஸ் மூலம் நான், என் வாழ்விணையர் மோகனா அம்மையார், சத்யராஜ் குடும்பத்தினர், குடந்தை சாக்கோட்டை அன்பழகன், வழக்குரைஞர் த.வீரசேகரன், அவருடைய வாழ்விணையர் டாக்டர் வசந்தி ஆகியோர் இரவு 12 மணி அளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தோம்.

மறுநாள் 30.02.2008 காலை இன்றைய முதலமைச்சரும், அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தோம். எம்முடன் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களும் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் இருந்தனர்.
சிதம்பரம் நடராசர் கோயில் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடுவது பற்றிய சர்ச்சை நெடுநாள்களாக இருந்து வந்தது.
திருவாளர் ஆறுமுகசாமி என்ற சைவ மெய்யன்பர் அப்பாடல்களை திருச்சிற்றம்பலத்தில் பாட முயன்றபோது, கோயில் தீட்சிதர்களால் தாக்கப்பட்டார் கையெலும்பு முறியும் அளவுக்கு பார்ப்பனர்களால் வன்முறை ஏவப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஹிந்து அறநிலை யத்துறை அதிகாரிகளுக்கு ஆறுமுகசாமி மேல்முறையீடு செய்தார். மயிலாடுதுறை ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கோயில் பார்ப்பனர்களுக்குச் சாதகமாக ஆணை பிறப்பித்தார். ஆனால், ஆறுமுகசாமி விடுவதாக இல்லை. ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் பிச்சாண்டி அவர்களிடம் மேல்முறையீடு செய்தார். சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம். திருவாசகம் பாடலாம் என்று அவர் ஆணை பிறப்பித்தார்.
கோயில் தீட்சிதப் பார்ப்பனர்கள் அதன்மேல், ஹிந்து அறநிலையத்துறைச் செயலாளர் சந்தானம் அவர்களுக்கு மனுச் செய்தனர். செயலாளர் மனுவைப் பரிசீலனை செய்து. ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த ஆணை செல்லும் என்று ஆணையிட்டார்.
அதன் அடிப்படையில் 2.3.2008 அன்று ஆறுமுகசாமி, பக்தர்கள் புடைசூழ சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்று தேவாரம், திருவாசகம் பாட முனைந்தார்.
ஆனால், நடராசர் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்களான தீட்சிதர்கள் வழக்கம் போல தங்கள் பாணியில் வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறையினரைத் தாக்கினர். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரின் சட்டையைக் கிழிக்கும்அளவுக்கும், அவரைப் பிடித்துக் கீழே தள்ளும் அளவுக்கும் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டனர். காவல்துறை யினரைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தனர்.
வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றனவே தவிர. தீட்சிதர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை!
இந்த நிலையில் இதனை ‘விடுதலை’ இதழில் கடுமையாகக் கண்டித்தோம். அரசின் ஆணையை நடைமுறைப்படுத்த முடியாது என்று நடந்துகொண்ட வகையிலும், ஆறுமுகசாமி அவர்களையும் காவல்துறையினரையும் தாக்கிய வகையிலும், கோயில் தீட்சிதர் – பார்ப்பனர்கள்மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கக் காவல்துறை சற்றும் தயங்கக் கூடாது. மேலும் சிதம்பரம் கோயிலை ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வர வேண்டும் என்றும், தேவாரம் பாடுவதைத் தடுக்கும் தீட்சிதர்களைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டோம். திருப்பதி கோயில் கூட ஹிந்து அறநிலைத்துறையின் கீழ் உள்ளதைச் சுட்டிக்காட்டி திருப்பதி தேவஸ்தானம் மற்றும் குருவாயூர் கோயில் ஆகியவற்றைக் கையகப்படுத்த அரசு தனிச் சட்டம் இயற்றியது போல், சிதம்பரம் கோயிலையும் அதன் நிருவாகம், வருமானம், சுகாதாரம், வழிபடும் வசதி ஆகியவற்றையும் பேணிப் பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் தேவையான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து விட்டு பின்னர் சட்ட மசோதாவாகக் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டோம்.
புதுடில்லியில் மார்ச் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற சமூக நீதிக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டோம். புதுடில்லி நாடாளுமன்ற குழு அரங்கில் காலை தொடங்கிய மாநாட்டிற்கு வரவேற்புக் குழுத்தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான ரன்வீர் யாதவ் வரவேற்புரையாற்றினார். சமூக நீதிக்கான வழக்குரைஞர் அமைப்பு கடந்த காலங்களில் ஆற்றி வந்த செயல்பாடுகளை விளக்கி உச்சநீதிமன்ற வழக்குரைஞரும் அமைப்பின் டிரஸ்டிகளில் முக்கியமானவருமான சுப்பாராவ் உரையாற்றினார்.

நாடாளுமன்றத் துணைச் சபாநாயகர் சரஞ்சித்சிங் அட்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் தலைவருமான வி.அனுமந்தராவ், நாடாளுமன்ற எஸ்.சி., எஸ்.டி., உறுப்பினர்களின் தலைவரான ராதாகாந்த் நாயக், ஆகியோர் உரையாற்றினர். வரவேற்புக் குழுச் செயலாளர் வினோத் திவாகர் நன்றியுரை ஆற்ற முதல் அமர்வு முடிவடைந்தது.
பின்னர் இரண்டாம் அமர்வு சுதர்சன நாச்சியப்பன் குழுப் பரிந்துரைகளை நீதித் துறையில் அமல்படுத்த வேண்டுமென்று எடுத்துரைத்தது. மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சுகுமாரன் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்து எடுத்துரைத்தார். அரசியலமைப்புச் சட்ட தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கக் கோரும் தலைப்பில் பேராசிரியர் கே.ரவிவர்மகுமார் தலைமை ஏற்க, மூன்றாவதாகத் தொடங்கியது. இந்த அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமதாஸ்பந்த் அடாவல், முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன் நிறைவுரையாற்றினார்.

நீதித்துறையில் கொண்டுவரப்பட வேண்டிய சீர்திருத்தம், தவறு செய்கின்ற நீதிபதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல், நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் என்ற பெயரால் சென்னை நீதிமன்ற நீதிபதிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் தகுதி வாய்ந்த வழக்குரைஞர்கள் உள்ளபோது உள்நோக்கத்துடன் அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு உயர் ஜாதியினரை நீதிபதிகளாக நியமிப்பதற்குக் கண்டனம் ஆகியவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு வலியுறுத்தப்பட்டன. மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த பார்ப்பனர் ஒருவர், தன் மகளை இளம் வயதில் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆக்கி இருந்ததையும், அவர் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதியாக வருவார் என்பதையும் சுட்டிக்காட்டி, இவற்றையெல்லாம் நீக்க வேண்டுமானால் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியைச் செயல்படுத்தக் கூடிய வகையில் தேசிய நீதி ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஆந்திர உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி பி,எஸ்.ஏ.சாமி சிறப்பாக உரையாற்றினார். அப்பொழுது அவர் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி மற்றும் நீதிபதிகளின் ஒழுங்கீனங்களை விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆகியவை குறித்து விரிவாக உரையாற்றினார். பின்னர் பேசிய மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழில் தாம் ‘படித்த நீதித்துறையில் இட ஒதுக்கீடு’ என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையைப் பற்றி உரையாற்றினார்.
அய்ந்தாவது அமர்வு ‘தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு தேவை மற்றும் கிரீமிலேயர் நீக்கப்பட வேண்டும்’ ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது, இந்த அரங்கில் பேராசிரியர் ரவிவர்மகுமார் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக, மாநாட்டு நிறைவு அரங்கிற்கு அகில இந்திய தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் உதித்ராஜ் தலைமை வகித்தார்.
அடுத்த நாள் காலை இரண்டாம் நாள் மாநாடு நடைபெற்றது அம்மாநாட்டில் நாம் பங்கேற்று உரையாற்றினோம். அப்பொழுது ‘விடுதலை’ ஏடு சமூக நீதிக் களத்தில் சுமார் 75 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் களம் ஆடி வருவதைச் சுட்டிக்காட்டினோம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ‘விடுதலை’யில் நாம் வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி நீதிபதிகள் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் அதற்கேற்ப சமூகநீதி பிரதிநிதித்துவம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். மேலும் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதையும் தெரிவித்தோம்.
திராவிடர் கழக மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் தலைமையில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வழக்குரைஞர்கள் பங்கேற்று இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் 41 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க அழைத்திருந்த நிலையில் 5.3.2008 அன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினோம். அப்பொழுது மனித குலத்தின் அறியாமையைப் போக்க மாணவர்களின் அறிவுத்தரத்தை, ஆற்றலைப் பயன்படுத்தி புது உலகம் சமைக்கப் புறப்படுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினோம்.

ஏறத்தாழ 600 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தோம். இந்தப் பட்டமளிப்பு விழாவுக்குக் கல்லூரி முதல்வர் இப்திக் காரூதீன், வரலாற்றுத் துறைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் ஜெயந்தி பாய் உள்ளிட்ட பெருமக்கள் வரவேற்றனர். விழாவுக்கான விருந்தினர் அறிமுக உரையைப் பேராசிரியர்
ஏ.ஆர்.ராசாமணி வழங்கினார். தாவரவியல் துறைத் தலைவர் தேவதாஸ், இயற்பியல் துறைத் தலைவர் எம்.ஆகாயமாம் ஆகியோர் தொகுத்து விழாவைச் சிறப்பாக நடத்தினர். திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் செய்யாறு பா.அருணாச்சலம் அவர்கள் கல்லூரி வளர்ச்சி நிதிக்காக ரூபாய் ஒரு
லட்சத்தை எமது முன்னிலையில் வழங்கினார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் பெரியார் புத்தக விற்பனை நிலையத்தைத் தொடங்க முயற்சி செய்து, ஒரு வழியாக அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அதன் திறப்பு விழா 6.3.2008 அன்று நடைபெற்றது. உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தக விற்பனையைத் தொடங்கி வைப்பார் என்று நாம் அறிவிக்க, அவரிடம் இருந்து ஏராளமான தோழர்கள் புத்தகங் களைப் பெற்றுக் கொண்டனர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கோரியும், இந்திய ஜுடிசியல் கமிஷனை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சிதம்பரம் நடராஜர் கோயிலை ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியும், இலங்கை ராணுவம் செய்யும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்று கோரியும், தமிழ்நாடு முழுவதும் 8.3.2008 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை மெமோரியல் ஹால் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தலைமை வகித்து நீதிபதிகளே, நீதிபதிகளை நியமிக்கும் முறை கூடாது என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்ய ஜுடிசியல் கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர் கு.வெ.கி. ஆசான், கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
(நினைவுகள் நீளும்)




