Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மனச்சோர்வு போக்கும் மாமருந்து ! – இறைவி

நான் ஒரு லட்சியத்திற்காகவே வாழ்கிறேன், உன்னையும் ஒரு லட்சியவாதி ஆக்கவே விரும்புகிறேன்” என்று அய்யா பெரியார் அவர்கள், தன் வயதில் சரிபாதி வயதுக்கும் குறைவான வயதுடைய ஒரு பெண்ணிடம் கூறியிருக்கிறார் என்றால், அந்தப் பெண் அவர் கொள்கைகளை, அவர் எண்ணத்தை, அவர் செயல்களைச் சரிவரப் புரிந்து கொண்டவராக இருக்கிறார் என்பதால் தானே?

தன் 23 வயதில் 64 வயது முதிர்ந்த ஒரு தலைவரிடம், நாடு முழுவதும் எந்தத் தலைவரின் சொற்களுக்கு மதிப்பளித்து வந்தனரோ, எந்தத் தலைவரின் செயல்கள் இன எதிரிகளை நடுநடுங்க வைத்ததோ அந்தத் தலைவரிடம் வந்து சேர்கிறார். அவரது உடல்நலம் பேணுவதற்காகவும், அவர்தம் இயக்கச் செயல்கள் தொய் வில்லாமல் நடைபெறுவதற்காகவும் தன்னையே ஒப்படைத்துக் கொண்ட ஒருவரை என்னவென்று புகழ்வது!

இப்படி வந்து ஒரு செவிலியர் போன்று இருக்க வேண்டிய நிலையில், அவர் குடும்பம் ஒன்றும் ஏழ்மை நிலையில் இருக்கவில்லை. அவரே குறிப்பிட்டுள்ளபடி, பெரிய பணக்காரக் குடும்பம் இல்லை என்றாலும், வாழ்க்கைக்குப் போதுமான அளவுக்கு, யாரிடமும் எந்த ஆதரவும் எதிர்பார்க்கத் தேவையில்லாது, மனக்குறை இல்லாது வாழத் தகுதியுடைய வகையில் இருந்த குடும்பம் தான். எனினும், அந்த வாய்ப்புகளையும் உதறித் தள்ளிவிட்டு, பள்ளிப் படிப்பையும் செம்மையாக முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு வந்தார் என்றால், சிறுவயதிலிருந்தே பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவராகவும், அதில் அவர் பெற்றிருந்த தெளிவும், உறுதியும், அந்தக் கொள்கைகளை நாட்டுக்கு அளிக்கும் பெரியார் அவர்களின் உழைப்பு எவ்வளவு தேவை என்ற தொலைநோக்கும் ஒருசேரப் பெற்றவரானதால் தானே?

அய்யாவின் உடல்நலம் பேணுதல் என்பது மட்டுமன்றி, இயக்க நடவடிக்கைகளிலும் மாநாடுகளில் கொடியேற்றி உரையாற்றியும், ‘குடிஅரசு’ இதழில் ஹிந்து மதம், கடவுள், புராணங்கள், தேவர்கள் குறித்து தெளிவான அறிவுடன் கூடிய கட்டுரைகள் எழுதியும், நாடு, மொழி, கலை, கடவுள் என அனைத்திலும் பார்ப்பனர்களால் கொண்டாடப்பட்ட பாரதியார் ஆரியப் பற்று உள்ளவராக எப்படி வாழ்ந்திருக்கிறார் என்பதைத் தெளிவாக அவர் கவிதை வரிகளை எடுத்துக்காட்டி கட்டுரைகளை எழுதியும், தந்தை பெரியாரின் சுற்றுப் பயணங்களில் உடன் செல்பவராக, அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து புத்தகங்கள் விற்பனை செய்பவராக என அறிவு, எளிமை, தீவிர ஈடுபாடு போன்ற அவரின் செயல்பாடுகள் தந்த நம்பிக்கையே, ‘இயக்கத்தின் பாதுகாப்புக் கருதி செய்யப்படும் ஏற்பாடாக’ சட்டப்படி திருமணம் என்பதாக ஒன்றைச் செய்ய, இயக்கத்தின் மூத்த இளைய தலைவர்கள், நண்பர்கள் என அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தாலும் முடிந்த முடிவாக்கினார் பெரியார் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தத் திருமணத்திற்குப் பிறகு தன் மீது பொழியப்பட்ட ஏச்சுகளையும், ஏளனங்களையும் மணியம்மையார் எப்படித் தாங்கிக் கொண்டார் என்று சிந்திக்கும்போது மலைப்பே உண்டாகிறது. சரி, ஒரு மாபெரும் தலைவரின் மனைவி என்றானதால் ஏதேனும் சிறு மாற்றம், கர்வம், பெருமை சிறிய அளவிலேனும் உருவாக்கியதா என்று நோக்கினால், அதிலும் மாபெரும் ஏமாற்றம்தான் மிஞ்சும்!

அதன்பிறகு அவரது செயல்பாடுகள், பெரியார் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக, ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றின் காப்பாளராக, மாநாடுகளில் தலைமை ஏற்று நடத்துபவராக, போராட்டங்களில் கலந்து சிறை செல்பவராக, ‘விடுதலை’ இதழ் வெளியீட்டாளராக என வீரியமிக்க தலைவராக வாழ்க்கை விரிவடைவதைக் காணமுடிகிறது.

தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றி, ‘பெரியாருக்குக் காணிக்கை’ என ஒப்படைக்கவந்தபோது, சிறு துளிகூட காழ்ப்புணர்ச்சி இல்லாமல் நடந்து கொண்டதாகட்டும், தன் மீது வழக்குத் தொடர்ந்த ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகள் திருமணத்தில் முதன்மையாக இருந்து வரவேற்றதாகட்டும், இந்தத் திருமணம் நன்மை பயக்காது என்று அறிவுரை வழங்கிய ராஜாஜி அவர்களின் மேல் எந்த வெறுப்பும் இல்லாது மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்ததாகட்டும், எப்படி ஒருவரால் இப்படி நடந்து கொள்ள முடியும் என்ற வியப்பே மேலிடுகிறது!

தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவசியமான, அதிசயமான, நாத்திக இயக்கமாக விளங்கிவரும் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, 1973 டிசம்பர் 24இல் பெரியாரின் மறைவுக்குப்பிறகு, 1974, ஜனவரி 6 அன்று தலைவராகப் பொறுப்பேற்றது முதல் 1978 மார்ச் 16ஆம் நாள் மாரடைப்பால் காலமாகும் வரை,
4 ஆண்டுகள், 2 மாதங்கள், 10 நாள்களுக்குள் அவர்கள் ஆற்றியுள்ள பணிகளைப் பார்த்தாலே அவர் மீது பெரியார் கொண்ட நம்பிக்கைக்குச் சிறிதும் குறைவில்லாமல், ஏன் அதற்கும் மேலாகவே செய்துள்ளார்கள் என்பதை உணரலாம்.

பொறுப்பேற்று முதல் மூன்று மாதங்கள் அய்யாவின் சுற்றுப்பயணம் நிறுத்தப்பட்ட திருவண்ணாமலையில் இருந்து தொடங்கி, தமிழ்நாடெங்கும் இடையறாது சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்தித்துள்ளார்.பெரியாரின் மறைவுக்குப் பிறகு 101ஆம் நாளில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் தொடங்கி, அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய வேலை நிறுத்தத்தின் போது எம்.ஜி.ஆர். அரசுக்கு அறிவுரை கூறி, தாம் இறப்பதற்கு ஒரு வார காலத்துக்கு முன்பாக எழுதிய அறிக்கை வரை மணியம்மையார் அவர்களின் ஆளுமைத் திறனும், அறிவும், தமிழ்நாட்டு மக்கள் மேல் அவர்கள் கொண்டிருந்த அன்பும் மிகத் தெளிவாக தெரிகிறது.

தந்தை பெரியாரின் குறிப்பேட்டில் இருந்த இராவண லீலா முதல், தந்தை பெரியார் விரும்பியபடி சிலை திறப்பு, பெரியார் திடல் நூலகம் – ஆய்வகம், ஏழு அடுக்கு கட்டடம் ஆகியவற்றை நிறைவேற்றினார்.

பட்டமேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வாய்ப்பு பறிபோகும் நிலைக்காக மத்திய அரசிடம் வலியுறுத்தியதும், அவசரநிலை அடக்குமுறையை ஏவிய இந்திராகாந்திக்குக் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்ததும், கலைஞர் ஆட்சியின்போது அதனைக் கட்டிக் காக்க வேண்டியது நமது கடமை என வலியுறுத்தி உரைகள், அறிக்கைகள் வெளியிட்டதும், இயக்கத் திற்கு உள்ளே எழுந்த சில சலசலப்புகளை மிகச்சரியாகக் கையாண்ட விதமும், கழகத் தோழர்கள், சொற்பொழிவாளர்கள் தங்கள் பொறுப்பினை உணரும் வண்ணம் அறிவுரைகள் கூறியதும், தி.மு.க பிளவுண்ட போது ஒரு தாய் நிலையில் இருந்து இரண்டு பக்கமும் அறிவுரைகள் வழங்கியதும், 1977இல் ஏற்பட்ட புயல் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட இயக்கத் தோழர்களையும் மத்திய, மாநில அரசுகளையும் வேண்டிக் கொண்டதும் என இன்னும் ஏராளமாகச் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

இவை அனைத்தையும் 1950களிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டதன் பிறகு, 1972இல் பெரியார் சிலை திறப்பின் போது மீண்டும் பாதிப்புக்குள்ளாகி, அய்யாவின் மறைவுக்குப் பிறகும் கண் அறுவை சிகிச்சை, இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தும்கூட, ‘எந்தப் பற்றும் இல்லை, எனக்கு மானிடப் பற்றினைத் தவிர’ என்று முழங்கிய தந்தை பெரியார் அவர்கள் மீது கொண்ட பற்று ஒன்றின் காரணமாகவே இவை அனைத்தையும் சாதித்த அன்னை மணியம்மையாரின் வாழ்வினை அறிந்து கொள்ள வேண்டியதும், தங்களைத் தொண்டறப் பணியில் ஈடுபடுத்தி, கொள்கையில் சோர்வகற்றும் மாமருந்தாக அதைக் கொள்ளவேண்டியதும் கடமையாகும்!