Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மகளிர் உரிமைகளைக் காப்போம்! முனைவர் கடவூர் மணிமாறன்

மகளிரின் உரிமை நல்கி

மானுட நேயம் காப்போம்!

தகவுற மகளிர் வாழ்வோ

தழைத்துமே ஒளிரச் செய்வோம்!

அகமெலாம் எழுச்சி தோன்ற

ஆளுமை பெறவேண் டாமோ?

மகளிரின் வாழ்வில் மாற்றம்

மலர்ந்திடச் சூளு ரைப்போம்!

 

கல்வியில் சிறந்தே என்றும்

களங்கமே இல்லா வாழ்வில்

நல்லவர் துணையால் யார்க்கும்

நல்லன துணிந்து செய்தே

வல்லவர் ஆவீர்! என்றும்

வாழ்வினில் வாய்மை நேர்மை

எல்லாமும் ஏற்போர் ஆகி

எதிலுமே வெற்றி காண்பீர்!

 

‘அச்சமில் பெண்கள் நாட்டின்

அழகிய கண்கள்’ என்றே

மெச்சிட வியக்கும் பண்பால்,

மிடுக்குறத் துடிப்புக் கொண்டே

துச்சமாய்ப் பகையை வீழ்த்தித்

தொண்டற மணியம் மைபோல்

உச்சமாப் புகழால் என்றும்

உலகமே போற்ற வாழ்க!

 

அறிவினில் சிறந்தும் யாண்டும்

அரும்பணி யாற்றி ஆன்றோர்

நெறியினில் உறுதி பூண்டே

நெஞ்சுரப் பெரியார் பாதை

பொறுப்புடன் ஏற்போ ராகிப்

பூவையர் புரட்சி வாழ்வில்

திராவிட ஒளியால் ஓங்கித்

திகழ்ந்திட உயர்த்து வோமே!