Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சரித்திரச் சாதனைகள் மேலும் படைக்க மீண்டும் முதலமைச்சராக துணை நின்று வாழ்த்துகிறோம்! மஞ்சை வசந்தன்

 

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திராவிடத்தின் காப்பரண்! நம்பிக்கை நாயகர்! மாண்பின் மறு வடிவம்! ஆளுமையின் அடையாளம்!

அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தாயுள்ளம் அவரது தனித்தன்மை. மாற்று அணியில் நின்று அரசியல் செய்யக்கூடியவர்களும் உள்ளுக்குள் வியக்கும் தகுதியாளர்!

அரசியல் காழ்ப்பில் சிலர் அவரை விமர்சித்தாலும், உண்மையில் அவர் உளச்சான்றின்படி. முடிந்த மட்டும் நேர்மையாக மக்களுக்காகவே பணியாற்றுகிறார் என்பதை, நடுநிலையில் நோக்கின் நன்கு அறியலாம்.

அரசியல் பின்புலத்திலே பிறந்து வளர்ந்தவருக்கு கட்சி, ஆட்சி எல்லாம் கைவந்தவையே! இளைஞர் அணியில் தலைமைப் பொறுப்பில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர், இன்று தமிழ்நாடு முதலமைச்சராக முகட்டில் நிற்கிறார். கட்சியின் தலைமைப் பொறுப்பிலும், தனித்தன்மையுடன் சிகரம் தொட்டுள்ளார். கட்சியைக் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளார். அதிகாரம் செலுத்தாது,அன்பு, பாசம், நலம் நாடல் என்றஅணுகுமுறையால் பிணைத்து வைத்துள்ளமை பெரும் வியப்புக்குரியதாகும்.

தமிழ்நாட்டைக் காலமாற்றத்திற்கேற்பக் கட்டமைத்த சாதனையாளர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் அமைத்த தமிழ்நாட்டை இடையில் வந்த எதிர்க்கட்சியினர் சீர்குலைத்து, பா.ஜ.க.வின் பிடியுள் சிக்கிச் சீரழிந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பை ஏற்று, இன்று இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளார். சில திட்டங்களின் மூலம் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இன்று வடமாநிலத்தவரும் இவரது வழிகாட்டலை, தலைமையை நாடி நிற்கும் பெருமையும் பெற்றுள்ளார்.

அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்பட, அவர்களின் பிள்ளைகள் கற்றுச் சிறக்க ஆழமாய்ச் சிந்தித்து திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறார்.

பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி செல்லும் அடித்தட்டு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- உதவித் தொகை, தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு தந்து, அன்னை தெரசா, வள்ளலார் பெருமான், காமராசர், போன்றோரின் கூட்டுக் கலவையாக மாட்சிமை பெற்றுள்ளார்.

இத்திட்டங்களில் அடித்தட்டு மக்கள் பெற்றுள்ள பலன்கள், உயர்வுகள் அளவிடற்கரியவை. இதனால் ஏற்படப்போகும் தொலைதூர எதிர்காலப் பயன்கள் மிகப் பெரிதாய் அமையும் என்பதை ஆய்வு நோக்கின் மூலம் அறியலாம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி இவரது ஆட்சிக்காலத்தில் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது என்பதை இந்த ஆட்சிக்கு எதிராய்ச் செயல்படும் ஒன்றிய ஆட்சியின் அறிக்கைகளே ஒத்துக்கொள்கின்றன.

அயல் நாட்டுத் தொழிலதிபர்கள், உள்நாட்டுத் தொழிலதிபர்கள் என்று பலருடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தொழில் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும், வருவாய்ப் பெருக்கத்திற்கும் வழிசெய்து வருகிறார்.

ஒவ்வொரு துறையிலும் சிறப்புத் தேர்ச்சி உடையவர்களை ஆலோசனைக் குழுவில் அமர்த்தி, அவர்களின் வழிகாட்டலைப் பரிசீலித்து, தமது பட்டறிவின் துணை கொண்டு, செம்மையான செயல்திட்டங்களை அவர் வகுத்துச் செயல்படுத்துவதால், அவரது ஆட்சி எடுத்துக்காட்டான ஆட்சியாக மிளிர்கிறது. பாசிச சக்திகளை உறுதியுடன், துணிவுடன் எதிர்த்து, மதச்சார்பின்மை சமூகநீதியின் கொள்கை நெறி நின்று நல்லிணக்கத்தை, ஒற்றுமையை, மனித மாண்பை வளர்ப்பதால், மற்ற மாநிலத்தவரும் இந்த உணர்வுகளைப் பெறவும் இந்த நெறியில் நிற்கவும் ஆர்வம் கொள்கின்றனர். இந்தியா முழுமைக்கும் தலைமை ஏற்க வாருங்கள் என்று அவர்களே தன்னெழுச்சியாக அழைக்கும் நிலை வளர்ந்து வருகிறது.

மொழித் திணிப்பு, சமூகநீதித் தகர்ப்பு, ஸனாதன நுழைப்பு போன்றவற்றைத் தடுத்து, தகர்த்து, முறியடித்து சமத்துவம், சமஉரிமை, சமவாய்ப்பு, நல்லிணக்கம், தனி நபர் விருப்பம், தனி மனித சுதந்திரம், பாதுகாப்பு இவற்றைக் காக்க இவர் இந்தியாவுக்கே வழிகாட்டியாகவும், தூண்டுகோலாகவும், முன்மாதிரியாகவும் உள்ளார்.

இளைய சமுதாயம், மூன்றாம் பாலினத்தவர், ஒடுக்கப்பட்டச் சமுதாயத்தினர் என்று ஒவ்வொருவருக்கும் சிறப்புத் திட்டங்களைத் தீட்டி அவர்களை வாழ்வில் உயர்வு பெறச் செய்கிறார்.

விளையாட்டுத் துறை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு, அயல்நாட்டுக் கல்வியென்று நம் மாணவர்கள் சாதிக்கத் துணை நிற்கிறார்.

மக்களை அடிக்கடி சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிகிறார். தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும், தாமே முதல்வர் என்ற உண்மையை மனதிற் கொண்டு, விருப்பு, வெறுப்பின்றி, எல்லோருக்குமான ஆட்சியை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு துறை சார்ந்த ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை பெருமளவுக்கு நிறைவேற்றி வருகிறார்.

முதலமைச்சரின் மாண்பு, ஆளுமை, இலக்கு, செயல்திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை மட்டுமல்ல; இந்தியாவையே புதியதொரு பரிமாணத்திற்கும், பரிணாமத்திற்கும் இட்டுச் செல்லும் ஆற்றலுடையவை.

அவருடைய பெருமைகளும், முயற்சிகளும் சிறந்தோங்க, அவர்தம் இலக்கை அடைய, அவர் மீதான நம்பிக்கை தழைக்க, நிலைக்க தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வலியுறுத்திக் கூறுவதுபோல், தி.மு.க. தொண்டர்கள், பொறுப்பாளர்கள், பல்வேறு நிலையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவரின் நோக்கத்திற்குக் குந்தகமோ, களங்கமோ, தடையோ, சீர்குலைவோ ஏற்படாத வகையில் பொறுப்புடன், விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். மக்கள் தொடர்ந்து தி.மு.க. ஆட்சிக்குத் தங்கள் முழு ஆதரவும் தரத் தயாராக உள்ளார்கள்.

அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்துறைப் பணியாளர்கள் முதலமைச்சரின் நம்பிக்கைக்கு உகந்த வகையில், அவரது உயரிய லட்சியங்களை எட்டும்படியாக அர்ப்பணிப்பு உணர்வுடன், தூய்மையாக, நேர்மையாக, வாய்மையாக மக்கள் நலன் கருதிச் செயல்பட வேண்டும்.

யார் தவறு செய்தாலும் அதை முதலமைச்சர் ஏற்க மாட்டார். எனவே, முதலமைச்சரின் நல்லெண்ணத்திற்கு ஏற்ப அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

எனவே, அனைத்து நிலையில் உள்ளவர்களும் முதலமைச்சரோடு முழு ஒத்துழைப்புடன், பொறுப்போடு, நேர்மையாகப் பணியாற்றி, முதல்வரின் இலக்குகளை அடையப் பாடுபடுவதே அவரது பிறந்த நாளில் அவருக்கு வழங்கும் உண்மையான வாழ்த்து ஆகும்.

இந்தியாவின் நம்பிக்கை ஒளியாய் விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நூறு வயதையும் கடந்து நலமுடன் வாழ மக்களோடு சேர்ந்து வாழ்த்துகிறோம்.

வாழ்க முதலமைச்சர் மு..ஸ்டாலின்!