Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

போராட்டமே இரத்த ஓட்டமாய்…! முனைவர் வா.நேரு

மார்ச் 8 – உலகப் பெண்கள்  நாள். பெண்ணாகப் பிறந்ததால் மட்டுமே பல கொடுமைகளைத் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பெண்கள் பலர். பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக மட்டும் பார்த்து, அவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக அழிக்கும் கொடுமைகள் உலகில் நடந்து கொண்டேயுள்ளன. திடீர் திடீரென்று இளம்பெண்கள், சிறுமிகள் காணாமல் போகும் நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

உலகம் முழுவதும் பெண்கள், சிறுமிகள் காணாமல் போவது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. புதுடில்லியில் ஜனவரி முதல் தேதியிலிருந்து 15ஆம் தேதிக்குள் 509 பெண் குழந்தைகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என்று புள்ளி விவரம் கூறுகின்றது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடல்லாமல், விரைவில் கண்டுபிடியுங்கள் என்று சொல்லி காவல்துறைக்கு உத்தரவும் பிறப்பித்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் காணாமல் போகும் பெண்கள் எண்ணிக்கை 8324. ஒவ்வொரு நாளும் அந்த மாநிலத்தில் 23 பெண்கள் காணாமல் போகிறார்கள் என்று ஒன்றிய அரசின் புள்ளி விவரமே குறிப்பிடுகிறது.

அண்மையில் வெளிவந்த எப்ஸ்டீன் பைல்கள் உலகையே திடுக்கிட வைத்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட எப்ஸ்டீன் சம்பந்தப்பட்ட வீடியோக்கள், ஆவணங்கள், ஒளிப்படங்கள் இந்த உலகத்தின் பல நாடுகளின் தலைவர்களும், ஆட்சியாளர்களும் எப்படிப்பட்ட அயோக்கியர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. மிகப்புகழ் பெற்றவர்கள் பலரின் இருண்ட பக்கங்களையும் இந்த எப்ஸ்டீன் பைல்கள் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. சிறுமிகளைக் கடத்திச் சென்று கட்டாயப்படுத்திப் பாலியலுக்கு உட்படுத்தும் ஒருவனோடு – ஒரு கூட்டத்தோடு – பலர் வைத்திருந்த தொடர்பு என்பது திடுக்கிட வைத்துள்ளது. இதற்குத் தீர்வு என்ன? இப்படிப்பட்டவர்கள் எப்படி ஆட்சிக்கு, அதிகாரத்திற்கு வருகிறார்கள்? எப்படி ஆட்சியில், அதிகாரத்தில் நிலைத்து நிற்கிறார்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு ட்ரம்ப் சர்வாதிகார மன நிலையில் இருக்கின்றார். பல உலக நாடுகளுக்கு வரியைத் தாறுமாறாக விதித்துள்ளார். நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம். அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் இந்த வரிவிதிப்புத் தவறு என்று தீர்ப்பைக் கொடுத்தாலும், 1974இல் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை வைத்து, மீண்டும் 15 சதவிகித வரியை விதிக்கிறார். திருநங்கைகளுக்கு எதிராக இருக்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உடன்பட மறுத்து எதிராகப் பேசுகிறார். வெனிசுலாவின் அதிபரை ஓர் இரவில் சிறைப்பிடித்து, தனது நாட்டுக்குக் கொண்டு வருகின்றார். இவரது பெயரும் எப்ஸ்டீன் பைல்களில் உள்ளது. முதலாளித்துவத்தின் தலைமை நாடாக இருக்கும் அமெரிக்காவின் போக்கு, உலகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

நம்மைச் சுற்றி இருக்கும் மடமை இருளைக் குறிப்பிட கருப்பு நிறத்தில் கொடியினை வடிவமைத்த தந்தை பெரியார் அவர்கள், தனது இறுதி இலக்காக,தாம் அடைய விரும்பும் இலட்சியம் பொதுவுடைமை என்பதைக் குறிக்கச் சிவப்பு வட்டத்தை, கருப்புக் கொடியின் நடுவில் இடம்பெறச் செய்தார். பொதுவுரிமையும், பொதுவுடைமையும் ஏற்படவேண்டும் என்று முழக்கமிட்டார்.

வரலாற்றில் நாம் படிக்கின்றோம். போரில் வென்ற மன்னர்கள் செய்யும் முதல் செயல், தோல்வியுற்ற நாட்டில் இருக்கும் பெண்களைக் கடத்துவது, கொடுமைப்படுத்துவது, பாலியல் பலாத்காரம் செய்வது என, அன்று முதல் இன்று வரை பெண் என்பவள் போகப்பொருளாகவே கருதப்படுகிறாள், நடத்தப்படுகிறாள்; அடிமைப்படுத்தப்படுகிறாள்.

உலக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை, மூன்று பெண்களில் ஒருவருக்கு நடப்பதாகப் புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. உடல் ரீதியான வன்முறை, மன ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான வன்முறை, இணைய வழியிலான வன்முறை என்று பெண்களை ஆணினம் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. அண்மையில் மத அடிப்படையில் அமைந்த ஆப்கானிஸ்தான் அரசின் நீதிமன்றம்,காயம் இல்லாமல் பெண்களை அடிக்கலாம் என்று ஒரு விநோதத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

மதமற்ற, ஜாதியற்ற கொடுமைகள் அற்ற மனிதநேய ஒரு பொதுவுடைமை உலகமே பெண்களுக்கு முழுப் பாதுகாப்பைத் தர இயலும். மதமே பெண் அடிமைத்தனத்திற்கு அடிப்படை என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி கடவுள் மறுப்பு வாசகங்களை உலகுக்குக் கொடுத்தார்கள்.

தங்களுக்கு எதிரான செயல்பாடுகளைப் பெண்கள் உணர்வதும்,அதனை எதிர்ப்பதற்குத் தங்கள் குழந்தைகளுக்கு இளம்வயது முதலே அந்த உணர்வை ஊட்டுவதுமே எதிர்கால உலகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றும். அதற்குப் பெண்களின் மத்தியில் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைக் கொண்டு செல்லவேண்டும்.

‘அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாமல், அநீதி களைய முடியாது‘. இது வெறும் முழக்கம் மட்டுமல்ல; இதுதான் செயல்முறை.போராட்டம் இரத்த ஓட்டமாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் என்ற எண்ணம் ஓங்கவும், அநீதிகளுக்கு  எதிராகப் போராடவும், ’பெண்ணே, பெண்ணே, போராடு பெரியார் கொள்கையின் துணையோடு’ என்னும் முழக்கத்தை ஒலிக்கும் நாளாக மார்ச் 8, உலகப் பெண்கள் நாள் அமையட்டும்!

அனைத்துப் பெண் தோழர்களுக்கும் இனிய உலகப் பெண்கள் நாள் வாழ்த்துகள் !