Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கொள்கைப் பயணம்… ஆறு. கலைச்செல்வன்

தனிமை என்பது  மிகவும் கொடுமையானது என்பதை நன்கு உணர்ந்தார் செல்வமாதவன். அவரது தனிமை குடும்பத்தால் ஏற்பட்டதல்ல.  நண்பர்களால் ஏற்பட்ட தனிமை. மனைவி, பிள்ளைகள், பெயரன், பெயர்த்திகள் என எல்லோரும் இருந்தாலும், ஏனோ அவர் மனதில் ஒரு குறை இருக்கவே செய்தது.

தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று பதினைந்தாண்டுகள் உருண்டோடி விட்டன.

அவர் பணி செய்தது ஒரு தனியார் பள்ளி.  முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். அய்ந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர்.  அவர் பணியேற்ற புதிதில் ஆசிரியர்கள் பலரும் மிரண்டனர்.  காரணம், அவரது
தோற்றம். பெரிய முறுக்கு மீசையுடன் வந்த அவரைப் பார்த்த அனைத்து ஆசிரியர்களும், “இவர் எப்படி இருப்பாரோ, நம்மிடம் கடுமையாக நடந்து கொள்வாரோ, நேர மேலாண்மையில் அதிக கவனம் செலுத்துவாரோ” என்றெல்லாம் பலவாறாகப் பேசிக் கொண்டனர்.

ஆனால், அவர் பதவி ஏற்ற சில மாதங்களில் அவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டனர். அவர் மாணவர்கள் நலன் காக்கும் தலைமை ஆசிரியர் என்பதோடு, ஆசிரியர்கள் நலன் காக்கும் தலைமை ஆசிரியராகவும் விளங்கினார்.

யாரையும்  மிரட்டிப் பணிய வைப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை.  ஜனநாயக முறைப்படியே எந்தச் செயலையும் செய்தார். பல ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வந்தாலும் கூட ஒரு சில ஆசிரியர்கள் தாமதமாகவும் வந்து கொண்டிருந்தனர்.

“நம்மை நம்பி மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.  மாணவர்களுக்கு ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு நாமே பொறுப்பு என்பதை
மறக்கக் கூடாது.  அதனால் காலதாமதமாக வருவதைத் தவிர்க்க வேண்டும்.”

இவ்வாறு அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல், பள்ளிக்கு முதலாவதாக வரும் பத்து ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

வீட்டுத் தோட்டத்தில் விளைந்த எலுமிச்சை, வாழை, தேங்காய் போன்ற பொருள்களையே பரிசாகக் கொடுத்தார். தலைமை ஆசிரியரிடம் பரிசு வாங்க வேண்டும் என்ற ஆவலில் பலரும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே பள்ளிக்கு வர ஆரம்பித்து விட்டனர். அதிலும் அய்ஸ்வர்யா என்ற ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம்  பரிசு வாங்க வேண்டும்  என்பதற்காகவே நாள்தோறும் முதலாவதாக வர ஆரம்பித்தார்.

“குறித்த நேரத்தில் வருவது பெரிதல்ல. வந்தவுடன் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். மாணவர்களைத் தொடர்ந்து கண்காணித்து பயிற்சியளிக்கவேண்டும்” என்பதிலும் கவனமாக இருப்பார் செல்வமாதவன். அதோடு மட்டுமல்லாமல், வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்களுக்கு முன்னால் மிஸ்டர், மிஸர்ஸ்  ~மதி என்பவற்றையெல்லாம் மாற்றி திரு, திருமதி செல்வி என எழுதினார். பெரும்பாலும் பெண் ஆசிரியர்களே அதிகம் இருந்தனர். பெண்களையும் அவர் ஆசிரியர்கள் என்றே குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல் பள்ளியில் நடைபெறும் விழாக்களையும் மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பார்.  விளையாட்டு விழா, பள்ளி ஆண்டு விழா, சமூக நீதிநாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் போன்ற விழாக்களை எல்லாம் சிறப்பாக நடத்துவார். அதிலும் குறிப்பாக சமூக நீதி நாளை மிகச் சிறப்பாக நடத்தி முடிப்பார்.

விழாக்கள் நடத்துகையில் அவர் எந்த விதமான பரபரப்புடனும், பதை பதைப்புடனும் காணப்படவே மாட்டார்.  மிக அமைதியாகவே இருப்பார்.  அவரது நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, விழா சிறப்பாக நடைபெறுமா என்பது பலருக்கும் சந்தேகமாகவே இருக்கும். ஆனால், விழா மிகச் சிறப்பாகவே நடைபெற்று முடியும். திலகம் என்ற ஆசிரியர் இது பற்றி செல்வ மாதவனிடம் நேரடியாகவே பலமுறை சொல்வார்.

“நீங்க எதுக்குமே அலட்டிக் கொள்வதே இல்லை சார்.  ஆனாலும் எல்லா விழாக்களும் வெகு சிறப்பாக நடந்து முடியுதே சார்” என்று வியந்து சொல்வார் திலகம்.

ஆனாலும் பிரியாவுக்கு மட்டும் சிறிது வருத்தம். ஏனென்றால் விஜயதசமி, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை போன்ற விழாக்களைக் கொண்டாடுவதே இல்லை என்பதுதான் அந்த வருத்தம்.

ஒரு நாள் இது பற்றி செல்வ மாதவனிடமே கேட்டார் பிரியா. அதற்குச் சில விளக்கங்களைச் சொன்னார் செல்வமாதவன்.

“விஜயதசமி என்பது உண்மையில் பவுத்தர்கள் பண்டிகை. “விஜய” என்றால் அதன் பொருள் ‘வெற்றி’ என்பதாகும். அதுபோலவே தசமி, அதாவது ‘தசம்’ என்றால் ‘பத்து’. மாமன்னர் அசோகர் கலிங்கப்போரில் வெற்றி பெற்றார். பத்தாம் நாளில் அந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் அவர் கொண்டாடும் வேளையில் புத்த பிட்சு ஒருவர் அசோகரிடம்,

“மன்னா! நீ வெற்றி பெற்றதாக மகிழ்ச்சி அடையாதே! போய் போர்க்களத்தைப் பார்த்து வா!’’ என்றார்.

அவர் சொன்னபடியே அசோகர் போர்க்களம் சென்று பார்த்தார். அங்கே குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த வீரர்களையும், கைகால்களை இழந்து துடித்த வீரர்களையும் பார்த்து, கண் கலங்கினார்.

“நான் உண்மையில் வெற்றி பெறவில்லை. தோற்று விட்டேன்” என்று புத்த பிட்சுவிடம் கண்ணீர் சிந்திய அசோகர், போர் நடந்து முடிந்த பத்தாம் நாளில், ‘‘இனி நான் போர் செய்யப் போவதே இல்லை” என்று உறுதி எடுத்தார். அந்தப் பத்தாம் நாளே விஜயதசமி எனக் கொண்டாடப்படுகிறது. அசோகர் மனம் மாறிய இந்த நிகழ்ச்சியை ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய வசனத்தைப் பேசி மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

 

ஆயுத பூஜை என்றால் வீட்டில் உள்ள காய்கறி நறுக்கும் கத்தி, கரண்டி
போன்றவற்றை வைத்துப் பூஜை செய்வதில்லை.  மன்னர்கள் போர்க்கருவி
களை வைத்துப் பூஜை செய்வதாகும். போர் செய்வதில்லை என்று முடிவெடுத்தபின் அடுத்தது படிப்பு.  அதைத்தான் சரஸ்வதி பூஜை என்கிறார்கள்.  அதனால்தான் நான் அந்தப் பூஜைகளைச் செய்வதில்லை.  அந்த விழாக்களை நடத்த விடுவதுமில்லை. விஜயதசமி என்ற பெயரில் மாணவர் சேர்க்கையை நடத்துவதுமில்லை.  அதற்கு முன்பாகவே எல்லா வேலைகளையும் நடத்தி முடித்து விடுவேன்”.

இந்தத் தெளிவான விளக்கத்தைக் கேட்ட பிரியாவும் மற்ற ஆசிரியர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த விழாக்களைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை.

அதுபோலவே விடுமுறை பற்றி சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அலுவலகப் பணி
யாளர்களுக்கும் அனுப்பும் போது எந்த ஒரு மதப் பண்டிகைக்கும் வாழ்த்துச் சொல்ல மாட்டார்.  இத்தனை நாள் விடுமுறை என்று மட்டுமே குறிப்பிடுவார். பொங்கலுக்கு மட்டும் அனைவருக்கும் வாழ்த்து சொல்வார்.  பொங்கல் பண்டிகையை, பள்ளியில் சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடுவார்.

இருபதாண்டுகள் அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்றபின் ஆசிரியர்கள் அனைவரும் நாள்தோறும் அவரைத் தொலைப்பேசி மூலம் விசாரிப்பார்கள். அவர் தலைமை ஆசிரியராக இருந்தபோது நடைபெற்ற சிறப்பான செயல்களைப் பாராட்டி மகிழ்வார்கள்.  சிலர் பள்ளிக்கு வந்து செல்லுங்கள் என அழைப்பு விடுப்பார்கள்.

ஆனால் செல்வமாதவன், தான் பணி செய்த பள்ளிக்கு மீண்டும் தேவையில்லாமல் செல்வதை விரும்ப மாட்டார்.  அப்படி அவர் சென்றால் பள்ளி நடைமுறைக்கு இடையூறு ஏற்படும் என்பது அவரது கருத்து.  அவரைப் பற்றி ஆசிரியர்கள் புகழ்ந்து பேசினால் அவருக்குப் பின் வந்த தலைமை ஆசிரியருக்கு அது பிடிக்காமல் போகலாம் என்பதும் அவரது கருத்து.

ஆண்டுகள் சில கடந்தன.  நாள்தோறும் செல்பேசியில் தொடர்பு கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள், நண்பர்கள் அனைவரும் வாரம் ஒருமுறை, பிறகு மாதம் ஒரு முறை எனத் தொடர்பு கொண்டனர்.  அவருடன் சம காலத்தில் பணியாற்றிய சிலர் மாவட்டக் கல்வி அலுவலர்களாகவும், தலைமை ஆசிரியர்களாகவும் பணியேற்றனர். மாணவர்களும் பல்வேறு பணிகளில் சேர்ந்தனர். சிலர் காலமாகி விட்டனர்.

ஒரு கட்டத்தில் அவரைத் தெரிந்தவர்கள் அனைவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். செல்வமாதவனுக்கும் வயது எழுபத்தைந்தை நெருங்கிவிட்டது.  இப்போது எந்த ஆசிரியரும் அவருக்கு செல்போனில் தொடர்பு கொள்வது கிடையாது. நண்பர்கள் யாருமே இல்லாதது போன்றும், தனிமையில் இருப்பது போன்றும் அவர் உணர ஆரம்பித்தார்.

பணியாற்றிய பள்ளிகளின் தற்போதைய நிலை, ஆசிரியர்கள், நண்பர்களின் நலம் எதுவுமே அவருக்குத் தெரியவில்லை.  யாருக்காவது செல்போனில் தொடர்பு கொண்டாலும் யாரும் விரிவாகப் பேசுவதில்லை. பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இப்போது யாருமே இல்லை. இருந்தாலும் யாரும் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை. இதனால் தனக்குத் தானே நினைவுகளைப் பகிர்ந்துகொள்வார்.  அவருக்குப்பின் அப்பள்ளியின் தற்காலிகத் தலைமை ஆசிரியராக பிரியா முதலில் பணி ஏற்று, பிறகு நிரந்தரமாக தலைமையாசிரியராகப் பணியேற்றார்.

இந்நிலையில் ஒரு நாள் தலைமை ஆசிரியர் பிரியா, செல்வமாதவன் வீட்டுக்கு வந்தார்.  அவர் கையில் ஓர் அழைப்பிதழ் இருந்தது. இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதற்குப் பிறகு தான் வந்த நோக்கத்தைத் தெரிவித்தார் பிரியா.

“அய்யா,  நம் பள்ளியின் பொன் விழா
ஆண்டு வருகிறது. அதற்காக
விழா கொண்டாட ஏற்பாடாகி
யுள்ளது. அடுத்த மாதம் விழா நடைபெற
வுள்ளது. அதற்கான அழைப்பிதழைக் கொடுக்கத்தான் வந்துள்ளேன் அய்யா.”

அதைக் கேட்டு செல்வ மாதவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாலும் நீண்ட காலமாக யாரும் தொடர்பு கொள்ளாததால் அவர் முகத்தில் ஒரு பக்கம் சோகமும் ததும்பி வழிந்தது.

அந்தச் சோகத்தை அவர் வார்த்தைகளால் கொட்டவும் தவறவில்லை.

“எனக்குப் பிறகு தலைமை ஆசிரியராக நீங்கள் பணி ஏற்றது குறித்து மிகவும் மகிழ்ச்சி
யடைந்தேன். ஆரம்பத்தில் எல்லோருமே என்னிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள். ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டீர்கள். என்னை எல்லோரும் அடியோடு மறந்து விட்டீர்களே! எழுபதை எப்போதோ கடந்து விட்ட  நான் யாருடைய நட்புமின்றி தனிமையை உணர்கிறேன்.”

அவரது வார்த்தைகளைக் கேட்ட பிரியா மிகவும் கவலை கொண்டார்.

“அப்படியெல்லாம் இல்லை அய்யா, உங்கள் நினைவு எங்களுக்கு எப்போதுமே உண்டு.  பல்வேறு சூழ்நிலை காரணமாகவும், வேலைப் பளு காரணமாகவும் உங்களுடன் பேச முடியாமல் போயிருக்கலாம்.  ஆனால், நீங்கள்தான் இப்போதும் தலைமை ஆசிரியராக நம் பள்ளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்”, என்றார் பிரியா.

“அது எப்படி?” என்பது போல் பிரியாவைப் பார்த்தார் செல்வமாதவன்.

“பள்ளியில் நீங்கள் வகுத்தளித்த பாதையில்தான் நாங்கள் பயணம் செய்கிறோம்.  பள்ளியில் உங்கள்கருத்து, கொள்கைகள்தான் நடைமுறையில் உள்ளன.  நம் பள்ளியில் மதவிழாக்கள் கொண்டாடப்படுவதில்லை.  குறிப்பாக விஜதசமி, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி என எதுவுமே கொண்டாடப்படுவதுமில்லை, அவற்றுக்கு வாழ்த்துச் சொல்வதுமில்லை.  சமூகநீதி நாள், கல்வி வளர்ச்சி நாள், சமத்துவப் பொங்கல் விழா போன்றவையே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இவை நீங்கள் எங்களுக்கு வகுத்தளித்த பாதையல்லவா?  எனக்கு அடுத்து வரும் தலைமை ஆசிரியரும் இதைப் பின்பற்றுவார்.  எப்போதும் நீங்கள் பள்ளியில் கொள்கை வழியாக வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.  உங்களை நாங்கள்  மறந்துவிட்டோம் என்று நினைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை அய்யா”.

இதைக் கேட்ட செல்வமாதவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.  பேச்சைவிட செயலே முக்கியம் என்பதை அறிந்து பிரியாவிடம், “நான் நிச்சயம் விழாவிற்கு வருவேன்” என மகிழ்வுடன் உறுதியளித்தார்.