Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

விழிப்பூட்டி விசையேற்றிய தஞ்சை மாநாடுகள்! வை.கலையரசன்

இந்தியாவின் முதன்மை மாநிலமாக இன்று தமிழ்நாடு விளங்குகிறதென்றால், அதற்கு முழுமுதற் காரணம் திராவிட அரசியலும், அதற்கு அடித்தளம் தந்தை பெரியாரின் கொள்கைகளும் என்பதை ஆய்வுலகம் அழுத்தமாய் அறிவிக்கிறது.

தம் கொள்கைத் திட்டங்களை மாநாடுகள் வாயிலாக மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் பிரகடனப்படுத்தினார் தந்தை பெரியார். அவரது வழியில் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகளின் தீர்மானங்களே இந்த நாட்டின் சட்டங்களாகவும், கொள்கைத் திட்டங்களாகவும், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகளாகவும் திகழ்கின்றன.

அந்த வரிசையில் தஞ்சையில் 21.02.2026 அன்று நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக மகளிர் அணி. திராவிட மகளிர் பாசறை ஆகியவற்றின் மாநில மாநாடுகள் தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்பூட்டும் மாநாடுகளாக நடந்து முடிந்தன. 15 நாள்கள் இடைவெளியில் அறிவிக்கப்பட்டு, குறுகிய காலமாக இருந்தாலும் எழுச்சியோடு நடந்து முடிந்துள்ளது. தஞ்சை, குடந்தை, பட்டுக்கோட்டை, மன்னை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, லால்குடி, துறையூர் ஆகிய மாவட்டக் கழகத் தோழர்கள் பம்பரம் போலச் சுழன்று பணியாற்றினார்கள்.

21.2.2026 அன்று காலை 9 மணியளவில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி நினைவரங்கில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறையின் மாநாடு நடைபெற்றது. முதல் நிகழ்வாக ‘கலைமாமணி’ திருத்தணி பன்னீர்செல்வம் பாவரசு குழுவினரின் இன எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழிசையில் பாடல்கள் எழுச்சியாகப் பாடப்பட்டன.

மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்லி தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார். கழகத் துணைப்பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தொடங்கி வைத்தார். மகளிர் பாசறை மாநாட்டில் கழகத்தின் இலட்சியக் கொடியை பலத்த ஒலி முழக்கங்களுக்கிடையே லால்குடி குழந்தை தெரசா ஏற்றி வைத்தார்.

அன்னை நாகம்மையார் படத்தை மாநில மகளிரணித் துணைச் செயலாளர் இறைவியும், அன்னை மணியம்மையார் படத்தை மாநில மகளிர் அணிச் செயலாளர் வி.கே.ஆர். பெரியார்செல்வியும் திறந்து வைத்து  உரையாற்றினர்.

தொடர்ந்து மூத்த பெரியார் தொண்டர்களுக்கு பாராட்டரங்கம் நடைபெற்றது; அதனைத் தொடர்ந்து கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி தலைமையில் தீர்மான அரங்கம் நடைபெற்றது.

சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இந்திய அளவில் நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்துக்கான ஆணையம் அமைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், எப்ஸ்டீன் என்பவரும், அவருடன் இயங்கிய பல நாடுகளைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்களும் நிகழ்த்திய
மனிதத் தன்மையற்ற, கொடூரமான செயல்
களைக் கண்டித்தும், எப்ஸ்டீன் ஃபைலில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் இந்தியத் தலைவர்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் போன்றவற்றைத் தடுக்க முயல்வோரைக் கண்டித்தும், ‘திராவிட மாடல்’ அரசின் பெண்களுக்கான பொருளாதார உதவிகள், இலவசத் திட்டங்கள் அல்ல – பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைத் திட்டங்களாகும் என்பதை விளக்கியும், அர்ச்சகராகும் உரிமை பெண்களுக்கும் தேவை;
என்பதை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நூற்றாண்டு காணும் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற தந்தை பெரியாரின் நூலினை ரூ.20 நன்கொடையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டி
ருப்பதை வெகு மக்களிடம் கொண்டு செல்வோம் என்றும்,100 நாள் வேலைத் திட்டத்தைச் சிதைக்கக் கூடாது என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு சமூக நீதியுடன் கூடிய 33% இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான அரங்கத்தை திராவிடர் கழக மகளிரணி மாநிலத் துணைச் செயலாளர், மத்தூர் இந்திராகாந்தி ஒருங்கிணைத்தார்.

அதனைத் தொடர்ந்து “சுயமரியாதைச் சுடரேந்துவோம்” என்னும் தலைப்பில் இளைய தலைமுறையினரின் சூளுரை அரங்கம் நடைபெற்றது. ‘சமூக நீதிக் களத்தில்’ என்னும் தலைப்பில் இரா. அன்புமதியும் ‘அரசியல் தளத்தில்’ என்னும் தலைப்பில் தேவ.நர்மதாவும், ‘கல்விப்புலத்தில்’ என்னும் தலைப்பில் க.அ.யாழினியும், ‘பொருளாதாரத் தளத்தில்’ என்னும் தலைப்பில் இ.பொ.பகுத்தறிவும்  உரையாற்றினர். இளைய தலைமுறையினரின் சூளுரை இந்த இயக்கத்தை எவராலும் அசைக்க முடியாது என்பதைப் பறைசாற்றியது.

அடுத்து, புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தின் கட்டுரை எழுதப்பட்டு நூறாண்டுகள் ஆன நிலை – அதனையொட்டிய சிறப்பு – அய்ம்பதாம் பதிப்பு மக்கள் பதிப்பாக வெளியிடப்பட்டது. தமிழர் தலைவர் அவர்கள் நூலை வெளியிட கழகத் துணைத் தலைவர், கவிஞர் கலி.பூங்குன்றன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

அடுத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட “பெண்கள் முன்னேற்றத்துக்குத் தந்தை பெரியார் செய்தது என்ன?” என்னும் நூல் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களால் வெளியிடப்பட்டது. அதனை திராவிட மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர்கள் க.அம்பிகா, காயத்ரி, பெ.பாக்கியலட்சுமி, வழக்குரைஞர் கோ.திலகவதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அவர்களைத் தொடர்ந்து ‘அறிஞர் அண்ணாவின் (உயில்) கடைசிக் கடிதம்’ என்னும் புத்தகத்தை ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தின் தலைவர் அனிச்சம் கனிமொழி அவர்கள் வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரையாற்றினார். அவரது உரையில், திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை ஆகியவை இன்றைய சமூக அரசியல் சூழலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விளக்கினார்.

மாலை 4 மணிக்கு திராவிடர் இன எழுச்சிப் பேரணியில், காண்போரின் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் ஒவ்வொரு அணியினரும் அணிவகுத்தனர். குறிப்பாக குழந்தைகள் தொடங்கி குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் வரை அனைவரும் திரண்டு சாதனை படைத்தனர்.

இந்தப் பேரணி தஞ்சாவூர் புது ஆற்றுப்பாலம் தந்தை பெரியார் நினைவுத்தூண் அருகில் தொடங்கி, பல்வேறு முக்கியச் சாலைகள் வழியாக திலகர் திடலில் நிறைவடைந்தது. பேரணிக்கு திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மானமிகு இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்றார், பேரணியை கழக ஒருங்கிணைப்பாளர்கள் வி. பன்னீர்செல்வம், ஊமை ஜெயராமன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலை இயக்குநர் மு.பசும்பொன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் தொடங்கி வைத்தார்.

காலை 9 மணி  முதல் இரவு 9.15 மணி வரை இவ்வளவு ‘கருஞ்சட்டைப் படை’ கூடி இருந்தாலும் எள் அளவு குறையும் இல்லாமல் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் அனைத்திலும் கட்டுப்பாடுடனும் ஒழுக்கத்துடனும் மாநாட்டை நடத்தி வரலாறு படைத்தனர்.

திராவிடர் கழகத்தினுடைய தனித்தன்மை அதுவும் மகளிரணி-மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் என்பவர்கள் ததன்மையோடு இருக்கிறாரகள். இராணுவ வீரர்களைவிட ஒரு படி மேல் உயர்ந்தவர்கள் ‘கருப்புச் சட்டைக்காரர்கள்’ என்பதை ஒவ்வோர் இடத்திலும் பறைசாற்றினார்கள். இடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேரணியை தனி மேடையில் இருந்து பார்வையிட்டார்..

மாலை 6 மணி அளவில் தஞ்சை திலகர் திடலில் சுயமரியாதைச் சுடரொளியும், வழக்குரைஞருமான மானமிகு முத்து.சித்தார்த்தன் நினைவு அரங்கத்தில் தெற்கு நத்தம் சித்தார்த்தன், ஒரத்தநாடு டாக்டர் கயல் கோபு குழுவினரின் ‘திராவிடம் வெல்லும்’ எனும் தலைப்பில் இன எழுச்சிப் பாடல்களுடன் தொடங்கி, திராவிடர் கழக மாநில இளைஞரணி திராவிடர் மாணவர் கழக மாநில மாநாடு நடைபெற்றது.

கழகத்தின் இலட்சியக் கொடியை பலத்த ஒலி முழக்கங்களுக்கிடையே மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் ஏற்றி வைத்தார். இளைஞரணி சார்பில் இரா.வெற்றிக்குமார், மாணவர் கழகம் சார்பில் செந்தூரபாண்டியன் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தனர்.

திராவிடர் கழகம் ஏன் மாநாடுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். பதவி பவிசுகளை விரும்பாத ஓர் இயக்கம் திராவிடர் கழகம். ஆனால், கழக மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சட்ட வடிவமாகி வரலாறு படைத்துக் கொண்டே தான் இருக்கின்றன.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழக மாநாடுகளில் தந்தை பெரியார் அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிற்காலத்தில் அரசுகளால் சட்டமாக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். வரவேற்புரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு வாய்ப்பளித்த கழகத் தலைவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

திராவிடர் கழகத்தின் லட்சியக் கொடியேற்றிவைத்த திராவிடர் கழக இளைஞரணி மாநில இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் கொடி வரலாற்றினை எடுத்துரைத்து உரையாற்றினார்.

மாநாட்டைத் திறந்து வைத்து, திராவிடர்கழக இளைஞரணி மாநிலச் செயலாளர் நாகை நாத்திகப் பொன்முடி உரை நிகழ்த்
தினார். அதனைத் தொடர்ந்து, மாநாட்டின் தலைமையுரையை திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர்  இரா.செந்தூரபாண்டியன் ஆற்றினார்.

மாநாட்டு நிகழ்வுக்குத் தஞ்சை மாவட்டக் காப்பாளர்  மு.அய்யனார்,  தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் தா.தம்பி பிரபாகரன், எ.சிற்றரசு, மு.அருண்குமார், மாநில திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர்கள் இரா.ராகுலன், சீ.தேவராஜபாண்டியன், சு.ச.திராவிடச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக மாநாட்டின் முத்தாய்ப்பான தீர்மான அரங்கத்திற்கு திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் தலைமை வகித்தார்.

தீர்மானங்கள் முன்மொழிதலை திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர்  ஒருங்கிணைத்தார்.

நாட்டில் வேலையின்மை 5 விழுக்காடு அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், இந்திய நாட்டின் அதிகார வர்க்கம் முழுவதும் பார்ப்பன மயமாக இருகிறது என்பதை விளக்கி சமூக நீதிக்கான போராட்டத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், ஜாதியற்ற சமுதாயத்தைப் படைத்திட நமது அரசு சட்டம் இயற்றி, ஜாதி மறுப்பாளர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்து இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், படித்துவிட்டு தற்காலிகமாகப் பணியாற்றும் கிக் (GIG) பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், ‘வந்தே மாதரம்’ மதவெறிப் பாடலைத் திணிக்கக் கூடாது என்றும், கல்வி நிறுவனப் பாகுபாடுகளுக்கு எதிராக யு.ஜி.சி விதித்துள்ள புதிய விதிமுறைகளைச் செயல்படுத்தவேண்டும் என்றும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் எட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றியது.

முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமான – சாதனை படைத்த திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி வரவேண்டும்; வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கறையோடு பாடுபடுவோம்; கூட்டணிக் கட்சிகளும் வெற்றிபெற, வாக்காளர் பெருமக்கள் ஆதரவுதர வேண்டும், என்னும் ஒன்பதாவது  தீர்மானத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்மொழிந்தார்.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டின் நோக்கத்தைப் பாராட்டி வாழ்த்தி தஞ்சை மாநகராட்சித் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் (திமுக), மாநகரச் செயலாளரும், தஞ்சை மாநகராட்சி மேயருமான சண்.இராமநாதன்,
மேனாள் அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், தி.மு.க.உயர்நிலைச் செயல் திட்டக்குழு உறுப்பினர், மேனாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தி.மு.க. உயர்நிலைச் செயல் திட்டக்குழு உறுப்பினர் குததாலம் பி.கல்யாணம், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்
ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

மாநாட்டின் சிறப்புரையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி.,
உரையாற்றுகையில், சமூகநீதியின் அடிப்படையையே குழிதோண்டிப் புதைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் தொடர்ந்து ஒன்றிய பாசிச பா.ஜ.க.அரசு -ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களுக்கு துணைபோகும் சதியைத் தோலுரித்துக் காட்டினார்.

மாநாட்டின் நிறைவுப் பேருரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் நடக்கும் போராக வருகின்ற சட்டமன்றத் தேர்தல் இருப்பதால், ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்து ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றும், மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றும்,
வரலாற்று வெற்றியை இந்தக் கூட்டணி அடைந்தே தீரும் என்றும், உரையாற்றியதுடன், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கத்தைக் கண்டித்து, மார்ச் 3ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களின் முன் திராவிடர் கழகம் சார்பில், ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தஞ்சையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பலத்த கரவொலிக்கிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

மாநாட்டுக்கு வருகை தந்து பெருமைசேர்த்த அனைத்து அணி பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் பாராட்டைத் தெரிவித்து, மிகுந்த பாதுகாப்புடன் தோழர்கள், இல்லம் சென்றடைய வேண்டும் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

மாநாட்டில் மதுரை முனியசாமி தனது இல்லத்திறப்பின் போது பொது மக்களால் வழங்கப்பட்ட நிதியை பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவரிடம் வழங்கினார். வழக்குரைஞர் சி.அமர்சிங்கின் பெயரன்கள்

இந்திரஜித், அன்புச்செழியன் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
இத்துடன் மாநாடு இனிதே முடிவுற்றது.

திராவிட மாணவர் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன் இணைப்புரை வழங்கினார்.

மாநாடு சரியாக இரவு 9.10 மணிக்கு
முடிந்தது.  தஞ்சை மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் ஆ.பிரகாஷ் நன்றி கூறி நிறைவு செய்தார்.

மாநாட்டின் தீர்மானங்களும் தமிழர் தலைவர் அவர்களின் உரைகளும் தமிழ்நாட்டிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைத் தந்துள்ளன.

இம்மாநாடு இன்றைய சூழலில் மதவெறி அபாயத்தைத் தடுக்க, திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டியதன் தேவையை எடுத்து உணர்த்தியுள்ளது.