Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மகிழ்வும் நிறைவும் தந்த துபாய் பயணம்!-கி.வீரமணி

அமீரகம் (United Arab Emirates) என்ற கூட்டாட்சி நாடு, ஏழு மாநிலங்களைக் கொண்ட இயற்கையை வென்ற நாடு ஆகும்! அதன் ஏழு மாநிலங்கள் அபுதாபி, அஜ்மான், துபாய். ஃபூஜெய்ரா, ராஸ் அல்-கைமா, ஷார்ஜா, உம்அல்குவெயின் ஆகியவையாகும். அங்கு செயல்பட்டு வந்த அமீரகத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அவர்கள் நடத்தும் விழாவிற்கு நம்மை அழைத்திருந்தனர்.

நாமும் பிப்ரவரி 24 முதல் 28ஆம் தேதி வரை சுற்றுப் பயணத்தை ஃபூஜெய்ரா (Fujairah) மாநிலம் (குமரி போல) தவிர, மற்ற ஆறு மாநிலங்களுக்கும் சென்று, தமிழ்ப் பெருமக்களின் பேராளர்களைச் சந்தித்துத் திரும்பினோம். பல்வேறு மகிழ்வான நிகழ்வுகளைக் கொண்ட இந்தச் சுற்றுப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.

சென்னை – பன்னாட்டு விமானத் தளத்திலிருந்து 24.02.2008 அன்று பிற்பகல் 2.10 மணிக்கு தாய் ஏர்வேஸ் மூலம் புறப்பட்டு துபாய் பன்னாட்டு விமானத்தளத்தை அடைந்த நம்மை, விமானத் தளத்தின் பணியாளர் வரவேற்று, மஜிலீஸ் என்ற அமைப்பின் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அமீரகத் தமிழமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் மூர்த்தி (தொழிலதிபர்) அவர்களின் தலைமையில் அதன் பொருளாளர் அப்துல் லத்தீப், திருமதி லத்தீப், தொழிலதிபர் சந்திரசேகர் ஆகியோர் வரவேற்றனர். கூட்டமைப்பின் துபாய் தலைவர் அமுதரசன், பொருளாளர் எஸ்.நசீம், அமீரகத் தொழிலதிபர் சந்திரசேகர் அவர்களுடன் எம்மை வரவேற்று, மலர்ச்செண்டு கொடுத்தார். அவரைத் தொடர்ந்து அமீரகத் தமிழ் கூட்டமைப்புகளின் சார்பில் அருள் (மருத்துவ மாணவர்) (பின் பக்கீத்குரூப்), சைபுதீன், செயலாளர் அமீரகக் கூட்டமைப்பு, துபாய்) அன்பழகன் (தலைவர் துபாய் நண்பர்கள் கூட்டமைப்பு) ரகுராஜ் (சுடர் வம்சம் கூட்டமைப்பு), சிவ்ஸ்டார் பவன் கோவிந்தராஜ் (வாமலை வளர் தொழில் கூட்டமைப்பு), ஷேக் அலாவுதீன் (கமர்ஷியல் பேங்க் துபாய்),எஸ்.கே. மூர்த்தி (தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம் சார்ஜா), சிவகுமார் (டார்விஷ் இஞ்சினியரிங் கம்பெனி, அஜ்மான்), அருணகிரி (மேனேஜர், புரோபயர் பாதுகாப்பு கன்சல்டண்ட் துபாய்), எஸ்.ஏ.பாபு (ஆபரேசன் மானேஜர், மெசர்ஸ் சேப்கார்டு சேப்டி மற்றும் செக்யூரிட்டி எஞ்சினியரிங், துபாய்), சதீஷ்குமார் (மூத்த பொறியாளர்), மெசர்ஸ் புரோபயர் சேப்டி கன்சல்டண்ட், துபாய்), பாஸ்கர் (துபாய் சிவில் டிபன்ஸ்), நசீர் தாவூத் (மெக்கானிகல் எஞ்சினியர், மெசர்ஸ் தெர்மோ எல்.எல்.சி.). விநோத் ஜெய்சன் (ரிலேஷன்ஷிப் எக்சிகியூடிவ் மெசர்ஸ்
அய்.டி.முத்ரா சொல்யூசன், துபாய்) ஆகியோர் பங்கேற்றனர். துபாய் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கார் மூலம் துபாய்க்கு அருகிலுள்ள மாநிலமான சார்ஜா மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு உள்ள சகாரா ஓட்டலில் இரவு தங்கி ஓய்வு எடுத்தோம். பல நண்பர்களும் வந்து உரையாடிச் சென்றனர். எம் குடும்ப நண்பர் துபாய் டாக்டர் எம். முத்துசாமி குடும்பத்தினர் தொலைப்பேசியில் நலம் விசாரித்து, அடுத்து சந்திப்பதாகக் கூறினார்.

ஓட்டலில் தங்கிய நிலையில், துபாயிலிருந்து தமிழ் – மலையாள ஒலிபரப்பான சக்தி எஃப்.எம். என்ற வானொலியின் செய்தியாளர் அனுராதா அவர்கள் எம்மிடம் தொலைப்பேசியில் பேட்டி (இரவு மணியளவில்) எடுத்து, உடன் ஒலிபரப்பினார். இதன் மூலம் அமீரகம் முழுவதும் எமது பயணம் அறிவிக்கப்பட்டது.

மறுநாள் 25.2.2008 காலை 11 மணி அளவில் புறப்பட்டு (கார் மூலம் சுமார் 150 மைல்களுக்குமேல் உள்ள) எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியை அடைந்தோம்.

எம்முடன்  அமைப்பின் தலைவர் மூர்த்தி, வாசு ஆகியோர் வந்தனர்.

பகல் 2 மணியளவில் அபுதாபியில் ஓட்டல் அஞ்சப்பரில் மதிய விருந்தின்போது, அப்பகுதி பிரமுகர்கள், பொறுப்பாளர்களான திருவாளர் நடராசன் (இவர் இந்தியச் சங்கத்தின் முன்னாள் தலைவர்) ஆடிட்டர் ராஜேந்திரன், திருமதி நடராசன் ஆகியோர் நம்முடன் கலந்துரையாடினர்.

உணவு விடுதியின் மேல் மாடியில் உள்ளூர்ப் பிரமுகர்கள் பலரும் வந்து, உரையாடி மகிழ்ந்தனர்.

பிறகு நடராசன் அவர்களின் மகள் – மருமகள் திருமதி கணேசன் வீட்டில் சற்று நேரம் ஓய்வு எடுத்த பிறகு மாலை தேநீர் விருந்து
முடித்து, மாலை அபுதாபி நகரின் (அதுதான் அய்க்கிய அரபு நாடுகள் UAE / யின் தலைநகர
மாகும்) அங்கே அழைத்துச் சென்று-நகரில் முக்கியப் பகுதிகளையும் கடற்கரை. தீவுகள், முதலியவற்றையும் சுற்றிக்காட்டி விளக்கினர்.

பிறகு இரவு 10 மணியளவில் அராபிய அமைப்பின் கூட உணவு விடுதியில் அபிதாபி தமிழ் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளரும் மெர்குரி கிளீனிங் கம்பெனியின் நிருவாக இயக்குநருமாகிய சிக்கந்தர் பாட்சா சலீம் அவர்கள். இரவு விருந்தளித்தார். ஆடிட்டர் ராஜேந்திரன், வாசு, மூர்த்தி முதலிய அனைவரும் எங்களுடன் கலந்து கொண்டனர். பின்னர் கார் மூலம் இரவே சுமார் (உள்ளூர் துபாய் நேரம்) இரவு 2 மணி அளவில் ஷார்ஜாவுக்குத் திரும்பினோம்.

மறுநாள் 26.2.2008 காலை ஏ.எஸ்.மூர்த்தி அவர்களுடன் புறப்பட்டு அடுத்த மாநிலமான உம் அல்குவெயின் Umm Al Qawain (UAE) சென்றடைந்தோம்.

அங்கே உள்ள புராதனச் சின்னமான கோட்டை, பழைய வாள்கள் மற்றும் அராபிய மன்னர் பயன்படுத்திய போர்க் கருவிகள் இவற்றைப் பாதுகாத்து வரும் உம்அல்குவெயின் அரசு மியூசியத்தின் இயக்குநர் (டைரக்டர்) அல்யாமுகம்மது அல்காஃப்லே அவர்கள் எம்மையும்,
எம் துணைவியார் மோகனா அம்மையார் மற்றும் வந்திருந்த அனைவரையும் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.

உம்அல்குவெயினில் உள்ள தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்களில் முக்கியப் பிரமுகர் (திரு.அப்துல்காதர் இந்தியாவுக்குச் சென்றுள்ளபடியால்) ஏ.சையத் அஹமது கபீர் அவர்கள் (இவர் உம்அல்குவெயின்
பீச் ஹோட்டல் முக்கிய நிருவாகி ஆவார்) மிகுந்த அன்புடன் அந்த இயக்குநர் அம்மையாரிடம் எங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கு அவர்களை வரவேற்று தேநீர் விருந்தளித்து, அந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிக் காட்டியதோடு, மிகப் பழம் வரலாற்றை அழகான ஆங்கிலத்தில் அந்த இயக்குதர் அம்மையார் விளக்கினார்.

அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டு, அதே ஊரில் வேறு பகுதியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி இங்கிலீஷ் ஸ்கூல் (The English School) மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து (சுமார் 120 பேர்) பாண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்றனர். முதல்வர், மாணவிகள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.

எங்களை வரவேற்று ஆங்கிலத்தில் ஒருவரும்,
தமிழில் ஒரு ஆசிரியையும் சிறப்பாகப் பேசி நல்வரவேற்பளித்து பள்ளியைச் சுற்றிக் காட்டினர்.

நான் ஆங்கிலத்தில் அந்த ஆசிரியர்கள், மாணவர்களிடையே சுருக்கமாக ஒரு 10 மணித்
துளிகள் உரையாற்றினேன்.  பள்ளி நூலகத்திற்கு நூல்களையும், பெரியார் திரைப்படக் குறுந்தகடு
களையும் நன்கொடையாக வழங்கினோம்.

அப்பள்ளியின் முதல்வர் எலிசபெத் செரியன் அவர்கள் தேநீர் விருந்தளித்தார். மாணவிகள் ஆர்வமாக நம்மிடம் கையொப்பம்  (Autograph) கேட்டனர்.

ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்து படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவி, சில கேள்விகளைக் கேட்டு நம்மிடம் விளக்கம் பெற்றார்.  பிறகு நன்றி கூறி விடை பெற்றபின், அவ்வூரின் பிரபல மீன் காட்சியகம் என்ற ஆராய்ச்சி நிலையத்தின் (Fushalir Aquarium and State Research Centre) – கடல் ஓரத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள அமீரகம் முழுவதற்கும் உள்ள ஒரே ஒரு முக்கிய ஆராய்ச்சி நிலையத்தின் – மூத்த ஆராய்ச்சியாளர் மாத்தன் சாமுவேல் அவர்கள் எம்மை வரவேற்று, முழுவதையும் சுற்றிக் காட்டி விளக்கினார். பிறகு அந்த ஆராய்ச்சி மய்யத்தின் இயக்குநர் (ஷேக்) அப்துல் ரசாக் ஏ.அன்வாய் அவர்கள் (இவர் U.A.E.யின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளத்துறையைச் சார்ந்த மூத்த அதிகாரி) தனது அலுவலக அறையில் எங்களை வரவேற்று, தேநீர் விருந்தளித்து, கல்விப் பணிகள், சமுதாயப்
பணிகள் பற்றி பல செய்திகளைக் தெரிந்து கொண்டதோடு. தான் சென்னைக்கு வந்திருந்
ததையும் பேச்சில் குறிப்பிட்டு மகிழ்ந்தார்!

அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, 1.30 மணியளவில் விடை பெற்றுக் கொண்ட பிறகு.

உம்அல்குவெயின் பீச் ஹோட்டலில் மதிய விருந்தினையும் கலந்துரையாடல் நிகழ்வையும் நசீர் அவர்களும் அவ்வூர் தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்கள் பலரும் இணைந்து அளித்தனர். அந்த ஓட்டலின் உரிமையாளர் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் நாங்கள் ஓட்டலுக்கு வந்தவுடன், எமக்குப் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்று, வணக்கம் கூறி, தங்கி உண்டு மகிழ்ந்து செல்ல வேண்டுமென கனிவுடன் வேண்டுகோளும் விடுத்தார்.

பிறகு சுமார் 3.30 மணியளவில் பகல் விருந்து, கலந்துரையாடல் முடித்து, அங்கே உள்ள ரம்மியமான கடல் ஓரத்திலுள்ள ஓர் அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின்பு, மாலை 6 மணியளவில் தேநீர் விருந்து முடித்து அடுத்த மாநிலமான ராஸ்அல்கைமாவிற்கு கார் மூலம் பயணமானோம். சுமார் 8 மணியளவில் அங்குள்ள இந்தியன் அசோசியேஷன் கட்டடத்தில், ராஸ் அல்கைமா தமிழ் மன்றத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அங்குச் சென்றவுடன் அதன் முக்கியப் பொறுப்பாளர்களான தலைவர் மகம்மது அபீப், செயலாளர் எம்.பூபதி மற்றும் அமீர் அலி, ஆசிரியர் ராம்தாஸ், நாச்சியார்கோயில் திருவாரூர் ஊர்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

பூபதி அவர்களது வரவேற்புரைக்குப் பின்னர்,
தலைமை தாங்கிய பொறியாளர் அபீப் அவர்கள்,
மிக அருமையானதோர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில் “பெரியாருக்குப்பின் இயக்கத்தின்   தொண்டு மாறாமல் உள்ளது; அரசியலுக்குப் போகாமலேயே தமிழ்நாட்டில் அரசியல் சக்தியை நிர்ணயிப்பவராக தந்தை பெரியார் விளங்கினார். அவர் போட்டுத் தந்த பாதையில் ஒரு பெரும் முக்கிய சக்தியாக, அந்தத் தாய்க் கழகத்தினை வளர்த்து வழி காட்டி வருகிறார்கள்.

அந்த இயக்கம் இல்லாவிட்டால் நாம் எவரும்
இவ்வளவு முன்னேற்ற நிலையை அடைந்து இப்படி வசதியாய் வந்திருக்க மாட்டோம்” என்றார்.  இறுதியில் நாம் ஏற்புரையை வழங்குமுன்,
ஆசிரியர் ராம்தாஸ் அவர்கள், கழகத்தால் தாம் பயன் பெற்றது எப்படி என்று விளக்கிப் பேசி நன்றி கூறினார்.

பிறகு சுமார் 9.30 மணியளவில் ‘மகராஜா’ உணவகத்தில் முத்தமிழ் மன்ற முக்கியப் பொறுப்
பாளர்கள் இரவு உணவு விருந்து அளித்தபின் அனைவரிடமும் விடை பெற்று, இரவு 1.30 மணி
யளவில் ஷார்ஜா ஓட்டலுக்குத் திரும்பினோம்.

மறுநாள் (27.2.2008 அன்று) காலை பொறியாளர் சி.அருணகிரி அவர்கள் (சீனியர் மேனேஜர், டெக்னிக்கல்) அஜ்மான் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றார். (இவர் சேவ் வேர்ல்டு இஸ்டர்நேஷனலின் பொது மேலாளரும்கூட!

அய்க்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அஜ்மான் மாநிலத்தின் கல்விக் குழு உறுப்பினரும்
அஜ்மான் எஜுகேஷனல் சோன் டைரக்டருமான (ஷேக்) ஓபைத் சைஃப் அல் மத்ரூஷி அவர்களைச் சந்தித்து, அவருடன் அந்நாட்டுப் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி முறைபற்றி
உரையாடினோம். அன்புடன் எம்மை வரவேற்ற கல்வி இயக்குநர், தேநீர் விருந்து அளித்ததோடு, இரண்டு முக்கிய கல்வி விளக்கம் அடங்கிய நூல்களை வழங்கி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் பணிகள்பற்றிக் கேட்டறிந்தார்.

அதன் பிறகு, அஜ்மானில் ஏ.எஸ்.மூர்த்தி
முக்கியப் பொறுப்பேற்று நடத்தும் நிறுவனங்களுக்
குச் சென்று பார்வையிட்டோம். (பின்பக்கீத் குழுமம்) சென்றபோது, அங்கே மூர்த்தி அவர்கள்
அன்புடன் வரவேற்றார். அங்கு பல நிறுவனங்களில்
பணிபுரியும் தோழர்களை அறிமுகப்படுத்திய பின் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். பகல் விருந்தளித்தார். சிவ் ஸ்டார் ஓட்டல் அதிபரும் வள்ளலுமான கோவிந்தராஜன் அவர்களும் கலந்து கொண்டார்.

அதன்பிறகு மூர்த்தி அவர்களின் மகன் மருத்துவக் கல்லூரி மாணவர் அருள் அவர்கள், பாம்பீச் பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை 5 மணியளவில் அங்குள்ள நண்பர் அக்பர் ஏற்பாட்டில் கடலூரிலிருந்து கப்பல்கள், மீன் பிடி படகுகளில் பணிபுரியும் (நம் குடும்ப நண்பர்களும் அதில் உண்டு) பலரைச் சந்தித்து உரையாடினோம். அவர்கள் அனைவரும் கடல் நீரை உள்ளே கொண்டுவந்து அமைக்கப்பட்ட வாய்க்கால் போன்ற பகுதியில் கடலின் ஒரு பகுதியைக் காட்ட படகில் சவாரி செய்து, உலகின் ஏழு முக்கிய ஓட்டல்களில் ஒன்று ‘புர்ஜ்அல் அரபு’ என்பதை அருகில் சென்று கடலில் காட்டியதோடு, 1500 அறைகள் ஓட்டல் கட்டப்படுவதையும் காட்டி, அந்தக் கலந்துரையாடலைப் படகிலேயே முடித்து 7 மணி
அளவில் திரும்பிக் கொண்டு வந்து விட்டனர்.

பிறகு பிரபல தொழிலதிபரும் E.T.A. என்ற (Emirates Trading Agency) என்ற பிரபல தொழில் நிறுவனங்களின் தலைவரும், பன்னாடுகளிலும் தொடர்பு கொண்ட கல்வி வள்ளலான திரு.சலாவுதீன் அவர்கள் இல்லத்தின் இரவு விருந்தினை எங்களுக்கு அளித்தார். இனமுரசு சத்யராஜ் அவர்களையும் அழைத்து, கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அனைவரும் பல்வேறு செய்திகள் பற்றியும், நமது கல்விப் பணிகள் இயக்கப் பணிகள் பற்றியும் உரையாடினோம். தாம் இலங்கையில் இருந்தபோதே தனது தந்தையாருடன் அறிமுகமானவர் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளாளர் ஞான.செபஸ்தியான் அவர்கள் மூலம் பல்வேறு பணிகளை அறிந்துள்ளேன் என்று கூறி, மிகுந்த அன்புடன் உபசரித்து உரையாடி குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி, வழியனுப்பி வைத்தார்.

பிறகு சுமார் 9 மணியளவில் தங்கும் விடுதிக்குத் திரும்பினோம்.

(நினைவுகள் நீளும்)