கழகம் காத்துக் கரும்புலியாய்க்
கடமைசெய்த
அம்மா வாழ்க!
ஆரங்கள் அலையலையாய் வந்து வீழும்!
அய்யாவின் தோள்சுமந்து நொந்து தாழும்!
ஓரத்தில் மலைதோன்றும் மாலை சேர்ந்து!
ஒளிவட்டம் ஒவ்வாதே விலகிச் சென்று
தூரத்தில் அமர்ந்தன்னை நூற்கள் விற்பார்!
சூடிடவோர் இதழ்கிள்ளி எடுத்தார் இல்லை!
தாரத்திற் கொருமாலை போடச் சொல்லித்
தவறியென்றும் சொன்னதில்லை அந்தப் பாவி!
ஆரமெல்லாம் மணந்தொளிரும் பெரியார் சீரை
அன்னையள்ளி மோந்திடுவார் ஆவல் துள்ளி!
வாரத்திற் குழுவார்போல் உழைத்து ழைத்தும்
வருஞ்சீரில் பங்கேற்காத் தாய்மைத் தொண்டு!
பாரத்தைச் சுமக்கவந்த வேலை யாளாய்
யாதுமற்றார் எளிமையுற்றார் பலவும் பெற்றார்!
நேரத்தில் உணவளிக்கும் செவிலித் தாயாய்
நீள்வாழ்வை தந்தைபெற வாய்த்த பேறு!
மூட்டைமு டிச்சோடு கிளம்பு தற்கு
மூச்சணிய மாய்நிற்கத் தடுத்த தென்ன?
நாட்டிற்க வர்செய்த நல்ல தொண்டா?
நம்மக்கள் மேற்பொழிந்த அருட்பெ ருக்கா?
ஊட்டமெனப் பெற்றமணி யம்மை தொண்டால்
உயிரிருத்திப் பெரியாரும் நீடு வாழ்ந்தார்!
பாட்டுக்கு வேந்தனன்று குயிற்சு வட்டில்
பதிந்திட்ட மெய்க்கூற்றை மேலே கண்டோம்!
துடித்தேங்கும் இளமையின்பைத் துறந்து விட்டுத்
தொண்டுசெய்த பொடிப்பெண்ணை அன்னை யென்றே
அடியேன்யான் அழைக்காதே வேறு என்ன
அடைதந்து அழைப்பேன்யான்? அறிகில் லேனே!
படிப்பார்கண் குளமாகிப் பதைக்க வைக்கும்
பாவேந்தர் பாராட்டைப் படிப்போ ருக்கே!
வடித்தநற் காப்பியமாம் எங்கள் அன்னை
மணியம்மை வாழ்வெமக்குப் பாட மாகும்!
பற்றெல்லாம் பெரியார்மேல் படிப்பில் இல்லை!
பகுத்தறிவுப் பாதைசெல்லத் தூண்டுஞ் சிந்தை!
பெற்றதந்தை பேரிடராய் மறைந்த பின்னே
பெரியாரின் தொண்டிற்குத் தந்தார் தன்னை!
பெற்றாளாய்த் தனைவரித்துப் பெரியார் தம்மைப்
பிள்ளையெனப் பேணுதற்கு வந்தார் அன்னை!
உற்றாள்பேர் சொல்லாதே அம்மா வென்றே
உயிர்வாழ்ந்த நாள்வரைக்கும் அழைத்தார் அய்யா!
அன்னைமணி யம்மைசீர் நீடு வாழ்க!
அய்யாவின் தொண்டைப்போல் நிலைத்து வாழ்க!
தன்னையெண்ணாத் தாதியராய்ப் பெரியார் காத்துத்
தமிழருக்கு வாழ்வளித்த தாயார் வாழ்க!
கண்ணையிமை காத்தாற்போல் கழகம் காத்துக்
கரும்புலியாய்க் கடமைசெய்த அம்மா வாழ்க!
வன்திறத்தார் வீரமணி தலைமை யேற்க
வழிசமைத்த மணியம்மை வாழ்க! வாழ்க!




