– மாதவி
விடிந்தால் தீபாவளி! இரவு மணி எட்டு! வீட்டுக்குத் திரும்பவே பயமாயிருந்தது ரிஷிக்கு. காரணம் மனைவி ரேகா. இருந்தாலும் புது பங்களா வீட்டிற்குள் போய்த்தானே ஆகவேண்டும்? வெளியேவா படுப்பது? உள்ளே சென்றான் ரிஷி.
வைர நெக்லஸ் எங்கே? குரலில் எதிர்பார்ப்பின் ஏமாற்றம். அவ்வளவு உஷ்ணம்!
ப்ளீஸ்…. கொஞ்சம் பொறு!
என்ன பொறு? போன வருடம் ப்ராமிஸ் பண்ணுனீங்க! இந்த வருடம் தீபாவளிக்கு நிச்சயமாய் வாங்கித்தரேன்னு சொன்னீங்க! இப்ப நாளைக்கு, நாளைக்கு, கொஞ்சம் பொறுன்னு…. ஏமாத்தப் பார்க்கறீங்களா? தலைவிரி கோலமாய், கண்ணகி போல் ஒருகை நீட்டி நியாயம் கேட்டாள்.
ஏய்… ஏமாத்தப் பார்க்கிறேனா? நானா! உன்னையா? பட்டுப்புடவை ஒரு டஜன் அடுக்கி வைச்சிருக்கே! அப்படியிருந்தும் இல்லவே இல்லைனு அழுதே! நாற்பதாயிரம் ரூபாய்க்கு ரெண்டு பட்டுப்புடவை வாங்கித் தந்தேனா இல்லையா?
ஆமாம்…. பெரிசா வாங்கித் தந்தீங்க! டாலடிக்குதா? டல்லடிக்குது! என் தோழி லதா என்னைவிட குறைச்ச சம்பளம்! பேங்கில் சீனியர் ஆபிஸர்! ரெண்டு லட்ச ரூபாய்க்கு ரெண்டு பட்டுப்புடவை எடுத்துட்டா! அதைக் கட்டிட்டு ஒரு நிகழ்ச்சிக்கு வந்தா பாருங்க….. -எல்லார் கண்ணும் அவ மேலே! நான் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் மேனேஜர், நீங்க வாங்கிக் கொடுத்த டல்லடிக்கிற பட்டுப்புடவையில் வேலைக்காரி மாதிரி நின்றேன்.
போறாததற்கு அவ என்னிடம் ஒரு அய்ஸ்க்ரீம் ப்ளீஸ்னு ஆர்டர் போட்டாள்! அவ திமிருக்கு நானென்ன பண்ணுவேன்?
உங்களால் தானே எனக்கு இந்த நிலைமை! இருக்கறதிலேயே விலை உயர்ந்த பட்டுப்புடவையை எடுத்துத் தந்திருந் தால் இந்த அவமானம் எனக்கு வந்திருக்குமா? இத்தனைக்கும் மாசம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறேன். எல்லாத்தையும் வாங் கிக் கொட்டிக்கிட்டு, எனக்கு வைரத் தோடு, வைர நெக்லஸ் வாங்கித் தராம ஏமாத்துறீங்க? எல்லாப் பணத் தையும் என்ன செய்றீங்க? ஏதா வது சின்னவீடு வச்சிருக்கீங்களா?
என்னடி வாய்க்கு வந்தபடி பேசறே! என் கோபத்தைக் கிளப்பி அறை வாங்காதே.
அறையா? ஆம்பளைங்கிற திமிரா, இல்லே…. யாராவது கொடுக்கற தைரியமா?
என் பணம் பூரா எங்கேயோ…வெள்ளமா பாயுதோ! என்று ஒப்பாரி வைத்தாள்.
இந்த அருமையான பணக்கார ஏரியாவில் சீனா பளிங்கு சலவைக்கல், பர்மா தேக்கு, ஜெர்மன் கண்ணாடி போட்டு பளபளன்னு வீடு, பங்களா சைஸில் கட்டின வகையில் கடன், பேங்க் லோன் ஆறரை கோடி, மாசம் வட்டி கைமாத்துக் கடன்னு உன் சம்பளமும், என் சம்பளத்தில் பாதியும் போகுது! ப்ளீஸ் புரிஞ்சுக்க.
ஆயிரம் காரணம் சொல்றீங்க, ஆனால் போன மாசம் புதுசா கார் வாங்கினீங்களே…
அது எப்படி? பொய் சொல்றீங்களா? யாரிடம் ஏமாத்தறீங்க என்று சட்டைக்காலரைப் பிடித்துவிட்டாள். பொறுமையிழந்து ஓங்கி ஓர் அறைவிட்டான்! வெளியே பெரிதாய் வெடிவெடிக்கும் ஓசையையும் மீறிக்கேட்டது ரேகாவின் அழுகைச் சத்தம்.
வீட்டு நெலமையப் புரிஞ்சுக்கத் துப்பில்லை; வாயில் வந்தபடி பேசுறியா?
நீயெல்லாம் ஒரு புருஷனா? பெண்டாட்டிக்கு வைர நெக்லஸ் வாங்கித் தரத் துப்பில்லை. யாரோ சின்னவீட்டுச் சிறுக்கிக்கு வாங்கிக் கொடுத்தியா? என்று சீறினாள்.
உன்னோடு பேசினால் தினம் நரகம்தான் என்றபடி ஏசியை ஆஃப் செய்து, ஜன்னலைத் திறந்து வைத்தான். பங்களாவைச் சுற்றி வட்டமாய் ஒரு தோட்டம்! தோட்டத்திலிருந்து ஜில்லென்ற காற்று முகத்தில் வீச, புத்துணர்வு வந்தது. – வெளியே ஒரு புஸ்வாணம் வான் வரை செல்ல, சாலையில் கார்கள் போக, தோட்டத்து டியூப்லைட் அருகே வெளியே – இரண்டுபேர் கணவன் மனைவி _ பிச்சைக்காரர்கள்!
கணவன் கேட்டான். புள்ளே…. என்ன அந்த மரத்தடியில் ஒதுங்கப்படாதா? தூறல் போடுதுல்ல! கையில் ஒரு பேப்பர் பேக், அதனுள் தலைகீழாய் உள்ளே கவிழ்த்துப் போடப்பட்ட ப்ளாஸ்டிக் கவர்!
தூறல் நின்னுடும்! என்றவள் தலைமாட்டில் மஞ்சள் துணியால் மூடப்பட்ட ஒரு பாட்டில், மற்றும் ஒரு மிக்சர், வடை, பூந்தியடங்கிய பார்சல்!
என்னது மஞ்சள் பை?
அடுத்த தெருவில் ஒரு வீட்டில் வேலை பார்த்தேன்! தீபாவளி வேலை! அந்தம்மா ரூபாயும் மிக்சர், வடை, பூந்தியும் தந்தாங்க! என்ன வேலை பார்த்தே? பாத்திரம் தேய்ச்சேன்! விறகு….
விறகு?…… சொல்!
விறகு பிளந்தேன்!
கையைக்காட்டு! பிச்சைக்காரன் மனைவியின் கையை இழுத்துப் பார்க்க…..
கை காய்ச்சிப் போயிருந்தது!
என்ன புள்ளே இது?
நீ நல்ல வேட்டி கட்டி எம்புட்டு நாளாச்சு… நமக்கென்ன தீபாவளியா? பொங்கலா? காசு கெடைக்கிற நாள்ல கொண்டாடிக்க வேண்டியதுதான். இந்தா புது வேட்டி. இத இப்பவே கட்டிக்க மச்சான்.
உனக்கு?
எனக்கு வேணாம் மச்சான்!
ஏன் வேணாம்? இதைப்பாரு புத்தம் புது புடவை! மூட்டை தூக்கி நூறு ரூபாய்க்கு வாங்கினேன்.
நூறு ரூபாய்க்கு எதுக்கு மச்சான்? அய்ம்பது ரூபாய்க்கே நல்ல சேலை கிடைக்குதே.
போ…. புள்ளே! பிச்சைக்காரப் புத்தி உனக்கு! நீயும் விலை உயர்ந்த நல்ல சேலையக் கட்டக்கூடாதா?
நீயும் இன்னக்கே கட்டு புள்ள… நமக்கு இன்னக்கிதான் விஷேசம்… என்று ஒரு குறும்புப்பார்வை பார்த்தான். இருவருக்கும் தமது முதல் நாளின் நினைவு மனதுக்குள் ஒரு நிமிடம் ஓடியது.
போ…. மச்சான்! இன்னக்கித் தூக்கம் போச்சு என்றாள்.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்குப் பொறாமையாய் இருந்தது.
ஒன்றுமேயில்லாத பிச்சைக்காரர்கள், எல்லாமிருப்பதுபோல் மகிழ்ச்சியாய் இருக்க, இங்கே எல்லாமிருந்தும் மகிழ்ச்சி? மனது வலித்தபடியே…. ஜன்னல் கதவை அகலத் திறந்து வைக்க,
ஜன்னலைச் சாத்துங்க என்று கத்தினாள் ரேகா.
மாட்டேன் என்ற ரிஷியைத் தள்ளிவிட்டு ஜன்னலைச் சாத்தினாள்.தூக்க மாத்திரை போட்டுத் தூங்கப் போறேன் என்று குப்புறப்படுத்தாள், என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான் ரிஷி.