
வேலூரைச் சேர்ந்த கனகசபை என்னும் ‘மானத்தமிழர்’ பெரியாரின் நல்ல நண்பர்களில் ஒருவர். அவருக்கும் பத்மா அம்மையாருக்கும் மகளாக 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் பிறந்தவர் அன்னை மணியம்மையார். பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி. தனித்தமிழ் ஆர்வலர் அன்னை கு.மு.அண்ணல்தங்கோ காந்திமதி என்ற பெயரை, அரசியல்மணி என்று மாற்றம் செய்தார்.
அம்மையாரின் தந்தை கனகசபை நலம் விசாரித்து பெரியாருக்குக் கடிதம் எழுதுவது வழக்கம். ஒருமுறை பெரியாரிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், கூட இருந்து உதவி செய்ய யாருமில்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனைப் படித்த கனகசபை துடித்துப் போனார்.
அதன் விளைவாய் 1943ஆம் ஆண்டு முதல் மணியம்மையார், பெரியாரின் அணுக்கச் செயலாளராக, தொண்டராகப் பணியாற்றத் தொடங்கினார். ஏற்கெனவே பெரியாரின் கொள்கைகளாலும் போராட்டம் நிறைந்த வாழ்க்கையாலும் ஈர்க்கப்பட்ட அம்மையார் இந்தப் பணியினை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார்.
பெரியார் மற்றும் இயக்கம் தொடர்பான வரவு – செலவுக் கணக்குகளைக் கவனித்துக் கொள்வது, பெரியாரின் சொற்பொழிவுகளுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துத் தருவது, பெரியாரின் சொற்பொழிவுகளைக் குறிப்பெடுப்பது, கூட்டங்களில் புத்தகங்கள் விற்பது – இவைதான் அம்மையாரின் முதன்மைப் பணிகளாக இருந்தன.
தந்தை பெரியாருக்கு உடல் நலம் குன்றியபோது, செவிலியராய் மாறி, சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது, உணவு கொடுப்பது போன்ற பணிகளைச் செய்தார்.
இதுபற்றி பின்னாளில், மணியம்மையார்,
“அவர் தொண்டுக்கு முழுக்க, முழுக்க என்னை ஆளாக்கி, அவர் நலத்தைக் கண்ணெனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே மனதில் நிறுத்தி, அந்தக் குழந்தைக்கு ஊறு நேராவண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கொண்டேன்” என்று குறிப்பிட்டார்.
இளம்வயதில் ஒரு முதியவருக்குத் தாயானது அம்மையாரைத் தவிர, வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை!
பெரியாருக்கு உதவியாளர் என்ற வட்டத்துக்குள் நின்று விடாமல், மிகச்சிறந்த சொற்பொழிவாளராக, எழுத்தாளராக அம்மையார் விளங்கினார். நாகம்மை யாருக்குப் பிறகு பெரியாருக்குப் பின்னால் பெண்களைத் திரட்டுவதில் பெரும்பங்கு கொண்டார். 1944ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ ஏட்டில் “இரண்டும் ஒன்றே” என்ற தலைப்பில் கந்தபுராண இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். மேலும், நாட்டு நடப்புகள் குறித்த தனது கருத்துகளை அவ்வப்போது ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டு வந்தார்.
1948ஆம் ஆண்டு மொழி உரிமைப் போர் நடந்தது. கும்பகோணத்தில் நடந்த போராட்டத்துக்கு அம்மையார் தலைமை தாங்கினார். தடையை மீறியதாகக் கைது செய்யப்பட்ட அம்மையார் பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் சிறையில் மூன்று மாதம் தண்டனை அனுபவித்தார். 1949ஆம் ஆண்டு சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலுக்குத் தலைமை தாங்கி நடத்தினார்.
இதே ஆண்டில் ஜூலை 9ஆம் நாள் தந்தை பெரியார் மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இதுவரை கே.அரசியல்மணி என்று அழைக்கப்பட்ட அம்மையாருக்கு ஈ.வெ.ரா.மணியம்மை என்று பெயர் சூட்டினார் பெரியார்.
பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விமர்சனங்கள் எழுந்தன. பெரியார் எதிர்ப்பாளர்கள் இதனைக் கொச்சைப்படுத்தி எழுதியும், பேசியும் வந்தனர். ஆனால், பெரியார் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தான் எடுத்த முடிவில் மிகத் தெளிவாக இருந்தார்.
தனது இத்திருமணம் பற்றி பெரியார் அவர்கள்,
“மனைவி வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயக்க நலனை – பொதுத் தொண்டாகக் கருதி
எனக்கொரு துணை வேண்டுமென்று என்னுடைய பாதுகாப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி
எனக்கு உதவியாளராக, உற்ற நண்பராக இருக்க வசதி செய்து கொள்கிறேன்” என்றார்.
சில காலத்திற்குள் விமர்சனங்களும், சர்ச்சைகளும் குறைந்தன.
திருமணத்திற்குப் பிறகு அம்மையார் தீவிர இயக்கப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். 1954ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக பெரியாரால் நியமிக்கப்பட்டார். அதோடு ‘விடுதலை’ இதழின் பதிப்பாசிரியராகவும், வெளியீட்டாளராகவும் பணியாற்றினார்.
1958ஆம் ஆண்டு “இளந்தமிழா புறப்படு
போருக்கு” என்ற கட்டுரையைப் பிரசுரித்ததற்
காக, அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் மணியம்மையாருக்கு பதிப்பாசிரியர் என்ற வகையில் 100 ரூபாய் அபராதம் விதித்தது நீதிமன்றம். ஆனால், அம்மையார் அபராதத்தைக் கட்ட மறுத்து 15 நாள் சிறைத் தண்டனை அனுபவித்து, தான் ஒரு சிறந்த, தன்மானமிக்க பத்திரிகையாசிரியர் என்பதை நிரூபித்தார்.
தந்தை பெரியார் சிறையில் இருந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இயக்கத்தை வழிநடத்தினார் . பெரியார் ஜாதி ஒழிப்புப் போராட்டம் நடத்தியபோது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது இயக்கத்தை வெளியில் இருந்து
நடத்தும் பொறுப்பை பெரியார் மணியம்மையாரி
டம் ஒப்படைத்திருந்தார்.
இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்ற இரு தோழர்கள் சிறையிலேயே வீரமரணம் அடைந்தார்கள். இதில் ஒருவர் சடலத்தைக் கொடுத்த நிருவாகம், இன்னொருவர் சடலத்தைக் கொடுக்க மறுத்தது. இதனால் கோபம் கொண்ட அம்மையார் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று அப்போதைய முதலமைச்சர் காமராசர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப்பேசி இருவர் சடலத்தையும் பெற்றார். ஒருவர் உடலை சிறைக்
குள்ளேயே புதைத்து விட்டார்கள். இருந்தாலும் தோண்டியெடுத்து வாங்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தி நல்லடக்கம் செய்தார்.
திருச்சியில் கல்வி நிலையங்களையும், மகளிர் காப்பகத்தையும் தொடங்கிய தந்தை பெரியார் அதன் நிருவாகத்தை அம்மையார் கையில் ஒப்படைத்தார். அவர் ஆற்றிய பணிகளால் இன்று அந்த நிறுவனங்கள் ஆல்போல் வளர்ந்துள்ளன. காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அனாதைக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக அக்காலத்திலேயே ஒரு பெருந்தொகையை வங்கியில் போட்டு வைத்தார்.
1973ஆம் ஆண்டு திராவிடர் இயக்கத்
துக்குப் பெரிய சோதனை ஒன்று வந்தது. தந்தை பெரியார் மறைந்தார். 1974ஆம் ஆண்டு
ஜனவரித் திங்கள் 6ஆம் நாள் மணியம்மையார் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரு மிகப் பெரிய சமூகச் சீர்திருத்த இயக்கத்துக்குப் பெண்ணான தானே, முதல் முறையாகத் தலைமையேற்றார். பெரியார் அவர்கள் ஒவ்வொன்றுக்கும் நல்ல வழிமுறைகள், செயல் திட்டங்கள், கொள்கை விளக்கங்கள், பயிற்சிகள் நமக்குத் தந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதன் படியே ஒரு நூலிழை கூடப் பிறழாமல் இயக்கம் நடக்கும் என்று அன்னை மணியம்மையார் உறுதியளித்து, அதன்படியே தனது பணியினைத் தொடர்ந்தார். தனது சிறந்த சொற்பொழிவுகளாலும், நிருவாகத் திறமையாலும் தான் தலைமைப் பதவிக்கு ஏற்றவர்தான் என்பதை நிரூபித்தார்.
இராவண லீலா
தலைமைப் பொறுப்
பேற்ற அடுத்த ஆண்டில்
இராவண லீலாவை அறிவிக்கிறார் மணியம்மையார். பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் இதுகுறித்து மடல் எழுதுகிறார். எந்த
வொரு போராட்டத்தையும் முறைப்படுத்தி நெறிப்படுத்திச்
செய்யும் பயிற்சி பெரியாரிட
மிருந்து அவருக்கு வந்திருக்
கிறது. மணியம்மையார் அன்றைய பிரதமர் இந்திரா
காந்திக்கு.
“உங்கள் தந்தையே உங்களுக்கு எழுதியது
நியாபகம் இருக்குமென்று நினைக்கிறோம். அதையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இராம லீலா நடத்துவது தென்னாட்ட
வராகிய எங்களைப் புண்படுத்துகிறது. அவை புராணக் கதைகள். இன்று நாம் அனைவரும் ஒரே நாட்டவர் என்பது உண்மையெனில், நீங்கள் இராம லீலாவைக் கொண்டாடக் கூடாது. நிறுத்த வேண்டும்” என்று எழுதினார்.
இதற்கு இந்திரா காந்தியும் குடியரசுத் தலைவரும் பதில் தரவில்லை. இராம லீலா நடத்துவதற்கு ஆதரவான செய்திகள் அதிகமாக வரத் தொடங்கின. அப்படியே நடந்தாலும் பிரதமரும் குடியரசுத் தலைவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் மணியம்மையார் வலியுறுத்துகிறார். ஆனால், அந்த ஆண்டும் வழக்கம்போல பிரதமரும் குடியரசுத் தலைவரும் கலந்துகொண்டனர்.
அதையடுத்து இராவண லீலாவை அறிவிக்கிறார் மணியம்மையார். பெரியார் நினைவு நாளான திசம்பர் 24க்கு அடுத்த நாள் இராவண லீலா நடத்தப்படும் என்பதைக்
கேள்விப்பட்ட இந்திரா காந்தி, மணியம்மையாரின் கடிதத்தை அலட்சியப்படுத்தி விட்டோமோ, என அப்போது எண்ணுகிறார். அதன்பிறகு இந்திரா காந்தி மணியம்மையாருக்குப் பதில் அனுப்புகிறார். இராமாயணம் ஆரியர் – திராவிடர் போர் என்பதெல்லாம் கிடையாது என்று சொல்லி இந்திரா காந்தி, இராவண லீலா நடத்தக்கூடாது என்றும் கூறுகிறார். அதை மணியம்மையார் கண்டுகொள்ளவில்லை. இராவண லீலாவுக்கு முந்தைய நாள் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டார்.
ஆனால், அறிவித்தபடியே பெரியார் நினைவு நாளுக்கு அடுத்த நாள் மணியம்மையார் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ, பெரியார் திடலில் இராவண லீலா நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு நிகழ்வு நடக்கிறது என்று ஆர்ப்பரித்துக் கொண்டாடிய ஒரு நிகழ்வாக – இந்தியாவே திரும்பிப் பார்த்த ஒரு நிகழ்வாக இராவண லீலாவை அன்னை மணியம்மையார் நடத்தினார். அன்றைய போராட்டத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். பஞ்சாபில் இருந்து அம்பேத்கரிய இயக்கங்கள் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பினார்கள். “இந்த ஆண்டு நீங்கள் நடத்துங்கள், அடுத்தாண்டு நாங்கள் நடத்துவோம்” என்று அறிவித்தார்கள்.
ஒரு மாபெரும் தலைவரின், தத்துவஞானியின்
உடலையும் உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அதற்குப் பின்னர் அவர் உருவாக்கிய இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அவரது கொள்கையைப் பரப்ப வேண்டிய பணி, அவர் தொடங்கி வைத்த சமுதாயப் பணிகளைத் தொய்வின்றி நடத்த வேண்டிய பணி, இதுதவிர உரிமைக்கான போராட்டம் என்று தன் வாழ்க்கையையே போராட்டமாக அமைத்துக் கொண்ட மணியம்மையார் 1978ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் காலமானார்.
இப்படிப்பட்ட அன்னை மணியம்மையார் பற்றித் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறுகையில், “மணியம்மையார் தந்தை பெரியாரைக் காத்தார்; அவரது இயக்கத்தைக் காத்தார்; தமிழ் இனத்தைக் காத்தார். சாதாரண உதவியாளராகத் தனது வாழ்வைத் தொடங்கி ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவியாக வாழ்ந்தபோதும் தனக்கென்று அவர் எதனையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. தந்தை பெரியார் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எழுதி வைத்த சொத்துக்களைக்கூட அவர் இயக்கத்தின் பொதுச் சொத்தாக மாற்றினார்.
நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு வரை வாழ வைத்து, அதற்குப் பிறகு அய்ந்து ஆண்டு காலம், தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணியை, அவர் போட்டுத் தந்த பாதையில் எந்தவிதச் சபலத்திற்கும் ஆளாகாமல் செய்து முடித்து, வரலாற்றில் இப்படிப்பட்ட புரட்சித் தாயை இந்த நாடு கண்டதில்லை என்று அறிவாளிகளும், ஆய்வாளர்களும் வியக்கும்வண்ணம் வாழ்ந்தவர் நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் ஆவார்கள்.
உலகில் எந்த ஒரு தாயும் இவ்வளவு ஏச்சையும், பழிப்பையும், அவதூறையும், ஏளனத்தையும், கேலி- கிண்டலையும், அவமானத்தையும் சுமந்திருப்பார்களா?
‘திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயரே தவிர, மற்றபடி இது இயக்கத்தின் பாதுகாப்புக் கருதிச் செய்யப்படும் ஓர் ஏற்பாடே ஆகும்’ என்று தலைவர் தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டதே உண்மை நிலையாகும்.
அய்யாவுக்குச் செவிலியராக, அம்மா இறுதி
வரை வாழ்ந்த வாழ்வு தியாக வாழ்வு!
ஒருவர் பொன்னையும், பொருளையும், பதவியையும், புகழையும் ‘தியாகம்’ செய்யலாம்; ஆனால், அம்மா அவர்கள் அய்யாவைக் காப்பாற்ற முதலில் தம் ‘இளமையையே’ தியாகம் செய்தார்கள்!
பிறகு ‘மானத்தை’யும் கூட தியாகம் செய்தார்! இனமானம் தன்மானத்திலும் பெரிது; பொதுவாழ்வுக்கு வருபவர் மானம் பாராது தொண்டு செய்ய வேண்டும் என்ற தந்தை பெரியார் வகுத்த இலக்கணத்தின் பேரிலக்கியமாகத் திகழ்ந்தார்!
தாயற்ற சேய்களுக்குத் தாயாக விளங்கினார் அன்னையார். அதில் நானும் ஒருவன்!
‘அனாதைகள்’ என்று எவரும் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன், மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளைக்கூட, உடல் நலம் இடந்தராத நிலையிலும் அன்னையார் அவர்கள் எடுத்து வளர்த்து ஆளாக்கினார்கள்.
‘நன்றி பாராட்டாதத் தொண்டு’ என்ற தந்தையின் மற்றொரு இலக்கண விதிக்கும் இலக்கியமானார்கள்! எளிமை, வீரம், அடக்கம், சிக்கனம் இவை, அவர்களிடம் ஒன்றுக்கு மற்
றொன்று போட்டி
யிட்டு நின்றன!
உடல் சோர்வு உற்ற நிலையிலும் உள்ளச் சோர்வு என்றுமே அம்மா அவர்களிடம் கிடையாது!
தந்தை பெரியார் என்ற மாபெரும் இமயம் சாய்ந்த பிறகு தலைமை தாங்கி, கட்டிக் காத்தாரே; அது வரலாறே பெருமை கொள்ள வேண்டிய அதிசயச் சாதனை!
அவர் வாழ அவருக்கும் ஒரு சில பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக (அம்மாவுக்குத் தெரியாது பிறகே அவர்கட்குத் தெரிந்தது) அய்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சொத்துகளையும் ஓர் அறக்கட்டளையாக்கி கல்வி அறப்பணிக்கே அதனை விட்டுச் சென்றார்கள்!
அந்த அறக்கட்டளையில் அம்மா ரத்தபாசத்தைக் காட்டவில்லை. அய்யா அவர்களைப் போலவே கொள்கைப் பாசத்தையே கொட்டினார்!
இதைவிட ஒப்பற்ற பெருமனம் வேறு இருக்க முடியுமா?
அய்யாவின் சிக்கனத்தைத் தோற்கடிக்கக் கூடியது – அம்மாவின் சிக்கனம். ஆம், அய்யாவிடம் கற்றதுதானே அது!
கைவிடப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றி ஏற்பாடுகளைச் செய்தபோது, கருணைத் தாயாக அவர்கள் காட்சியளித்தார்கள்!
சென்னை, பெரியார் திடலில் அய்ந்து மாடிக் கட்டடத்தை எழுப்பி, நெருக்கடி கால நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்ட போதும், தளராது செய்த பணிகளால் அவர் ஒரு சரியானத் தலைவர், நிலையான தொண்டு செய்து நிலைத்தவர் என்ற வைர வரிகளுக்குச் சொந்தமானார்கள்!
என் சொந்த அன்னையை அறியாத நான், அய்யாவை அறிவுத் தந்தையாக ஏற்றுக் கொண்ட அந்த அன்னையை என் அறிவு அன்னையாக ஏற்றுக் கொண்டவன்.
அம்மா அவர்களின் சொல்லாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், அறிவு ஆற்றல், கொடை ஆற்றல், தொண்டு ஆற்றல் ஆகிய பல்வகை ஆற்றலை நாடு அறிந்தது; நானிலம் வியந்தது!
அய்யாவும், அம்மாவும் காட்டிய வழியிலே எங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
திராவிடர் கழக வரலாற்றில் அம்மாவின் ஆளுமைத் திறனும், அளப்பரிய தியாகங்களும் என்றும் நிலைத்து நின்று வழிகாட்டும்.
வாழ்க அன்னை மணியம்மையார் ! w




