விஞ்ஞானிக்கும் . . .

ஜூன் 16-30

பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கிச் சோதித்துக் கையெழுத்துப் போட்டார். பிறகு ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டுப் பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்றுப் பார்த்தார். அவர் அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். பரவாயில்லை அய்யா, டிக்கெட்டைத் தேட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்தார்.

அப்பொழுதும் தனது சூட்கேசைத் திறந்து அய்ன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறிப் பார்த்தார். அப்பொழுதும் கிடைக்கவில்லை .

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். அய்யா, தாங்களோ உலகப் புகழ் பெற்ற பெரிய விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால்தான் என்ன? ஏன் வீணாகத் தேடிக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்று மீண்டும் சமாதானப்படுத்தினார்.

அய்ன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, உங்களுக்குப் பரவாயில்லை. நான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..! என்றார்.

– சந்திரன் வீராசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *