பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, ‘‘ஆயிரம் கனவுகளின் விமானம்’’ என்ற பிரம்மாண்டமான விண்வெளி சார்ந்த நிகழ்ச்சியை இந்தியா புத்தகச் சாதனை மற்றும் ஆசியா புத்தக சாதனை முயற்சியாக வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்வு, இளம் தலைமுறையினரிடையே விண்வெளி, புதுமை மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 27 பள்ளிகள் மற்றும் 2 பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து 1932 மாணவர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இது கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக ஆரா ஏரோஸ்பேஸ் குழுவினரால் தள ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் பங்கேற்பாளர்களின் பதிவு மற்றும் கைமுறையில் கிளைடர் (Glider) உருவாக்கும் பயிற்சி நடைபெற்றது. மாணவர்கள் குழுவாக இணைந்து தங்களது படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு மற்றும் குழுப்பணித் திறன்களை வெளிப்படுத்தி, கைமுறைக் கிளைடர்களை வடிவமைத்துத் தயாரித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டிரோன் விமானக் காட்சி நிகழ்ச்சி சிறப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா.வெ.இராமச்சந்திரன் அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கியது.
அவர் சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்று அறிமுகம் செய்தார். மாணவர்களின் பெரும் பங்கேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவையே வெற்றிக்கான வழிகாட்டிகள் என வலியுறுத்தினார்.
முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட திரு. டி. கே. சுந்தரமூர்த்தி, ஓய்வு பெற்ற விஞ்ஞானி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பெங்களூரு, தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று உரையாற்றினார். வாழ்க்கையை ரசித்தபடியே எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், அறிவைச் சேமிப்பது எதிர்காலத்திற்கான முதலீடு போன்றது என்றும் விளக்கினார். சந்திரனில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்ட இந்தியாவின் சந்திரயான் திட்டத்தின் பெருமையை எடுத்துரைத்த அவர், மாணவர்கள் ISROவில் சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்தில் பங்களிக்க வேண்டும் என ஊக்கமளித்தார்.
IIT திருப்பதி – தொழில்நுட்பப் புதுமை மய்யத்தின் (TIH) டாக்டர் அபிஜித் தேவானந்தம், புதுமை மற்றும் நடைமுறை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நிறுவனம், அளிக்கும் ஆதரவினைப் பாராட்டினார். மாணவர்கள் தங்களுக்கென ட்ரோன்களை உருவாக்க வேண்டும் என்றும், புதுமையான யோசனைகளுடன் திட்டங்களை முன்னெடுக்க மாணவர்களுக்குத் தொழில் முனைவோராக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
செயற்குழு உறுப்பினர் முனைவர்
வீ.அன்புராஜ் கிளைடர் பறப்பைத் தொடங்கி வைத்தார். மேலும், 2019 ஏப்ரல் 21 அன்று PMISTஇல் 15 பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட ‘‘SKI NSLV மணியம்மையார் செயற்கைக்கோள்’’ மூலம் பெற்ற ஆசியா புத்தக சாதனையை நினைவுகூர்ந்தார். விண்வெளிப் பொறியாளர்களுக்கு வானமே எல்லை அல்ல என்றும், சரியான கட்டமைப்பு இருந்தால் எதையும் பறக்கச் செய்ய முடியும் என்றும் கூறி மாணவர்களை ஊக்குவித்தார். தொடர்ந்து, முதன்மை விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனை நிறுவனத்தின் தீர்ப்பாளரான எஸ்.சகாயராஜ், சாதனை அறிவிப்பை வெளியிட்டார். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான கைமுறைக் கிளைடர்கள் பறக்கவிடப்பட்ட சாதனையாக, 1932 மாணவர்கள் 966 கிளைடர்களைப் பறக்கவிட்ட சாதனைக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றதாக அறிவித்தார். இந்தச் சாதனை, இந்தியா மற்றும் ஆசியா புத்தகச் சாதனை நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின், விண்வெளி பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் அய். கார்த்திக் சுப்ரமணியன் அவர்களின் நன்றியுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,
ஆரா ஏரோஸ்பேஸ் மதுரை நிறுவனத்தால் FPV மற்றும் வேளாண் ட்ரோன் காட்சிகள், மேலும் RC ட்ரோன் பந்தயங்கள் நடத்தப்பட்டன.
‘‘ஆயிரம் கனவுகளின் விமானம்’’ நிகழ்ச்சி, மாணவர்கள் பெரிய கனவுகளைக் காணவும், தைரியமாகப் புதுமைகளை முயற்சிக்கவும், விண்வெளித் துறையில் உள்ள பரந்த வாய்ப்புகளை ஆராயவும் ஊக்கமளித்தது. இந்நிகழ்வு, எதிர்காலப் பொறியாளர்கள் மற்றும் புதுமையாளர்களை உருவாக்கும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக இணை – துணைவேந்தர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா.பி.கே.ஸ்ரீவித்யா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
75. மலேரியாவிற்கு காரணம் கசுமாலமும், அதில் பிறக்கும் கொசுவும். கொசுவிற்குக் காரணம் குப்பை, குப்பையில் கொசு முட்டையிடுகிறது;
குஞ்சு பொரிக்கிறது. அதன் மூலம் மலேரியா வந்துவிடுகிறது. மலேரியாவை தடுக்க மேற்கண்ட குப்பைகளை ஒழிக்க வேண்டும். அதுபோல, ஜாதி ஒழிப்புக்காரர்கள் அங்கே போக வேண்டும். எங்கே கொசு உற்பத்தியாகிறதோ அங்கே போக வேண்டும். ஜாதிக்கு கசுமாலம் கடவுள், அதற்கு கசுமாலம் சாஸ்திரம், புராணம்; ஜாதிக்கு கசுமாலம் அதன் பாதுகாப்பாளர்கள். இத்தனை பேரையும் ஒழித்தால்தானே கொசு (ஜாதி நோய்) வராமலிருக்கும்?
கடவுளை வைத்துக் கொண்டு கொசுவை (ஜாதியை)
ஒழிக்க வேண்டும் என்றால் எப்படி ஒழிக்க முடியும்?
– நூல் : ‘சாதியை ஒழிக்க வழி’, 16.09.1961





