Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நாடாளுமன்ற வரலாற்றில் தலைகுனிவான நிகழ்வு !

கே :  கமல்ஹாசன் அவர்களின் நாடாளுமன்றக் கன்னிப் பேச்சுப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

     – பா.வேல்முருகன்,  புதுச்சத்திரம்.

ப :   சிறப்பானது என்றும், கருத்தாழம் கொண்டது என்றும் எமது அறிக்கையில் (7.2.2026) குறிப்பிட்டிருக்கிறோம். அருள்கூர்ந்து ‘விடுதலை’யைப் படியுங்கள். முழு விளக்கமான பதில் கிடைக்கும்.

கே: தூயசக்தியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்ட பின்பு, எப்படி வெளியில் தலைகாட்டுவார்கள்?

– சு. குமரேசன், அறந்தாங்கி

ப :   ஊடக வெளிச்சத்தினை நம்பி, இப்படி பல வாண வேடிக்கைகள், பட்டாசு – புகை மாசு, ஒலிமாசு உள்பட செய்வார்கள், அவ்வளவு தான்!

கே :  டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நடந்த குளறுபடி கவனக்குறைவால் நடந்ததா? அல்லது அரசுக்கு அவப்பெயர் உருவாக்குபவர்களின் சதியா? அரசு புலனாய்வு செய்வது கட்டாயமல்லவா?

– க. விமலா, வாணியம்பாடி

ப :   சரியாகத் திட்டமிடாமல் அறிவிப்புகள் வந்ததன் காரணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட குளறுபடிகள் வருங்காலத்தில் நிகழ இடமளித்து விடக்கூடாது!

கே:   ‘‘படிப்பதிலும், எழுதுவதிலும் இளைய சமுதாயம் கவனம் செலுத்தினால் செல்பேசியின் மோகம் தவிர்க்கப்படும்’’ என்று மேனாள் தலைமைச் செயலர் இறையன்பு அவர்களின் கருத்து பற்றித் தங்கள் கருத்து என்ன?

– எஸ். குணசேகரன், வண்டலூர்

ப :   அதைக் கொஞ்சம் மாற்றியும் சொல்லலாமே! ‘‘செல்பேசி கவனச்சிதறல் தவிர்க்கப்படுவதற்கு படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் பெருக்குக!,’’

      ‘காலக்கொல்லி’யாக ‘செல்பேசிகள்’ ஆகிவிட்டன – குறிப்பாக இளைஞர்களுக்கு.

கே :  “வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் கட்டுமானப் பணிகளுக்கும், பல தொழில் நிறுவனங்களுக்கும் ஆதாரமாய் இருப்பதால், அவர்களை வெறுக்காது நன்றியுடன் பார்க்க வேண்டும்” என்று பி.ஜே.பி. தமிழ்நாடு மாநில மேனாள் தலைவர் அண்ணாமலை கூறுவது சரியா?

– வெ. சங்கீதா, ஆத்தூர்

ப :   அண்ணாமலை கூற்று சரியானதல்ல. அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இங்கு யாரும் அவர்களை வெறுக்கவில்லை. அதற்குச் சான்று, வெளிமாநிலத்துத் தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்திலிருப்பதை விட, தமிழ்நாட்டில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக அவர்களே கூறுகின்றனரே!

கே :  நாடாளுமன்றத்திற்கு மோடி வராமல் தவிர்த்ததும், அவைத் தலைவர் அதற்கு முட்டுக் கொடுத்ததும் நாடாளுமன்ற மாண்புக்குக் களங்கம் அல்லவா?

– கு. செல்வராணி, குடந்தை

ப : நிச்சயமாக – நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு – தலைகுனிவான ஒன்று – என்றும்!

கே :  ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. இன்னமும் விடாமல் பிடிக்க முயற்சிப்பதன் நோக்கம் என்ன?

– மு.பாண்டியன், வந்தவாசி

ப :   பா.ஜ.க.வின் ‘திருவிளையாட’லின் ஓர் அங்கமே இது! அவர்கள் உடைப்பார்கள், இணைப்பார்கள்; பிறகு வெளியேறும் நிலையைஉருவாக்குவார்கள் – எல்லாம் ‘வித்தைகளே!. கடைசியில் குத்தகைக்கும் வாங்கிவிடுவார்கள்! அவ்வளவுதான்!

 

கே :  மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும்படி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கேட்டுக் கொண்டுள்ளது சரியா?

– துரை.கண்மணி, கோவை

ப :   அரசின் கொள்கைக்கு விரோதமாகவே அவர் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்தான் இவ்விதி – அறிவுரை இப்படி அறிவிப்பது, நாட்டை மத அடிப்படையில் துண்டாடுகிறார் என்பது தவிர வேறென்ன?

 

கே :  ‘இண்டியா கூட்டணி’க் கட்சிகள், தமிழ்நாட்டில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் எத்தனை என்பது பற்றி கலந்தாய்வில் தெரிவிப்பதற்கு மாறாக, பொதுவெளியில் பேசிவரும் நிலையில், தாங்கள் அவர்களுக்குக் கூற விரும்புவது என்ன?

– ந.வெங்கடேசன், முண்டியம்பாக்கம்

ப :   ‘தலை’ இருக்க ‘வால்’ ஆடக்கூடாது. அப்படி நடப்பது ஏற்கத்தக்கதல்ல. இதிலும் ‘ஆரியமாயை’ என்ற ஒட்டடை புகுந்து விளையாடுகிறது போலும்!