Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாழ்நாள் முழுவதும் பொது நலத்திற்காகவே வாழ்ந்தவர் தந்தை பெரியார்!-எழுத்தாளர் பெருமாள்முருகன்

1990 ஆம் ஆண்டுகளில் பெரியாரை மறுவாசிப்பு செய்யக்கூடிய எழுச்சி ஓர் இயக்கம் போல, நவீன இலக்கியவாதிகளிடம் கருத்தொன்று பரவியது. அந்தக் காலகட்டத்தில் தான் நானும் பெரியாருடைய எழுத்துகளை வாசிக்க வேண்டும் என்று ஆர்வமுற்று அவற்றை வாசிக்கத் தொடங்கினேன். ஏனென்றால், நான் செயல்பட்ட அந்த மார்க்சிய இயக்கம், ‘‘மார்க்சியமா? பெரியாரியமா?’’ என்ற தலைப்பிலேயே ஒரு புத்தகம் வெளியிட்ட இயக்கம். அதில் காரல் மார்க்ஸ் அவர்களின் படத்தைக் கம்பீரமாகவும், பெரியாருடைய படத்தை அவருடைய தலை லேசாகத் தொய்வானது போலவும் அட்டைப்படம் போட்டு வெளியிட்ட ஓர் இயக்கம்!

பெரியாரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு எனக்குத் தோன்றியது!

‘திராவிட இயக்கக் கலாச்சாரம்’ என்றே ஒரு தொடரையும் அந்த இயக்கப் பத்திரிகை வெளியிட்டது. அந்தப் பின்னணியில் வந்தவன் நான். ஆனால், 1990ஆம் ஆண்டுகளில் பெரியாரை வாசிக்க ஆரம்பித்த பிறகு, என்னுடைய மனோபாவம், என்னுடைய கருத்தோட்டம் முழுவதுமாக மாறின. நாம் பெரியாரை வாசித்து, ‘அவர் சொல்வதிலிருந்து முடிவு செய்ய வேண்டும்; பெரியாரை நாம் புரிந்து கொள்ள வேண்டும்’ என்ற உணர்வு எனக்கு அப்போது தோன்றியது.

பறையர்கள் என்ற பட்டம் மாறி, ஆதித்திராவிடர்கள் ஆகி இப்போது அரிஜனங்கள் என்கிற பட்டம் வந்தது போல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழிய குறையும் இழிவும் நீங்கிவிடாது. விபசாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும், தேவதாசி, தேவர் அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால்
அவர்களுக்குச் சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை. – ‘குடிஅரசு’, 10.01.1937

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நான் பெரியாரைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டு வருகிறேன். அப்படி வாசித்து வரும்போது, பெரியாருடைய பல பரிமாணங்கள் எனக்குப் புரிய வருகின்றன. உண்மையில் நான் பெரியாரை விமர்சிக்கக் கூடிய அளவுக்கு, அல்லது பெரியார் மீது என்னுடைய பார்வையை வைக்கக்கூடிய அளவுக்கு, என்னுடைய கருத்துகளை வைத்துப் பேசக்கூடிய அளவுக்கு இன்னும் தயாராகவில்லை என்றுதான் நினைத்துக் கொள்கிறேன். பெரியாரைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதுதான் நாம் முதலில் செய்ய வேண்டியது என்று நான் நினைக்கிறேன்.

பெரியாருடைய வாழ்க்கை

முழுவதுமே பொது வாழ்க்கை !

கிட்டத்தட்ட பெரியாருடைய வாழ்க்கை முழுவதுமே பொது வாழ்க்கைதான். பெரியார் அவர்கள், வ.உ.சி. அவர்களிடம் கப்பல் வாங்குவதற்குப் பணம் திரட்டிக் கொடுத்த தகவல் பற்றி எல்லாம் இப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றி சில பேர் சர்ச்சை எல்லாம் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். ‘சுதேசி ஸ்டீம்’ என்ற அந்தப் புத்தகத்தை ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிக் கொண்டிருந்த போது, நான்தான் இந்தத் தகவலை அவருக்குச் சொன்னேன். ‘‘அப்படியா? இப்படி ஒரு தகவல் இருக்கிறதா?’’ என்று அவர் கேட்டார். ‘‘நான் படித்த நூலில் இருந்து அதற்கு ஆதாரம் இருக்கிறது’’ என்று எடுத்துக் காட்டினேன். பிறகு, தன்னுடைய நூலில் அதை அவர் சேர்த்துக் கொண்டார்.

1905ஆம் ஆண்டிலிருந்து நீங்கள் பெரியாருடைய வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட வாழ்க்கை முழுவதுமே அவர் பொதுச் சமூகத்திற்காக வாழ்ந்தவர். அந்த வாழ்க்கையில், நாம் ஏதாவது ஒரு பகுதியில், ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பேசியதை மட்டும் எடுத்துக்கொண்டு, ‘‘இதுதான் பெரியார்’’ என்று காட்டிவிட முடியாது. அவருடைய முழு வாழ்க்கை, அவருடைய பேச்சுகளாகவும், உரைகளாக
வும், எழுத்துகளாகவும் நம் முன் இருக்கின்றன. அவற்றை நாம் வாசித்து, முதலில் பெரியாரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அந்த உணர்வை நான் 1990களிலேயே பெற்றேன். அன்றிலிருந்து பெரியாரை இன்றைக்கு வரைக்கும் விடாமல், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், எதற்காகவாவது தொடர்ந்து வாசித்துக் கொண்டேதான் இருக்கின்றேன். அப்படி வாசிக்கும் போது, பலவிதமான புரிதல்கள் ஏற்படுகின்றன. எமக்கு ஏற்கெனவே இருந்த கருத்துகள் மாறுகின்றன.

தன்னுடைய 90 ஆம் வயதில் கூட…

எப்போதுமே பெரியாருடைய பகுத்தறிவுப் பார்வை என்பது புதியவற்றை ஏற்றுக்கொள்ளுதல்! பல பேர் தேங்கிப் போய்விடுவார்கள். தங்களுடைய 20 வயதில் 25 வயதில் என்ன கருத்துக் கொண்டிருந்தார்களோ, அதே கருத்தையே, தங்களுடைய 60 வயதிலும் கொண்டிருப்பார்கள். ஆனால், பெரியார் அப்படியல்ல; தன்னுடைய 90ஆம் வயதில் கூட, அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கணினி என்ற ஒரு கருவி வந்திருக்கிறது என்றவுடன், அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிச் சென்று பார்த்தவர்.

நவீன காலத்தில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப மாற்றங்கள், அதன் மூலமாக வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், இவற்றை எல்லாம் பார்த்து, அதை வரவேற்றவர். அப்படிப்பட்ட மனநிலை பெரியாருக்கு இருந்தது. ஆகவே, பெரியாரை நாம் புரிந்து கொள்வது என்பது மிக மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் தொடர்ந்து பெரியாரை வாசித்துக் கொண்டே வரும்போது, வித விதமான கருத்துகள் எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

(17.1.2026 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாள் நிகழ்வில்
ஆற்றிய உரையிலிருந்து)