மானமும் அறிவுமே மாந்தர்க்(கு) அழகன்றோ!
ஆனவரை நாமும் அருந்தொண்டை ஆற்றியே
வாழ்வில் உயர்வோம்! வசைகள் புறந்தள்ளித்
தாழ்வை அகற்றுவோம்; தன்மானம் கற்பித்த
அய்யா பெரியார் அறிஞர்நம் அண்ணாவும்
மெய்யாய் உழைத்திட்ட மேன்மைக் கலைஞருமே
நல்வழி காட்டினர்! நற்றமிழர் உய்ந்திடவே
எல்லார்க்கும் எல்லாமும் என்றும் கிடைத்திடவே
சாதி, மதவெறி, சனாதனத் தீயாவும்
மோதி மிதித்திடுவோம்; மூடநெறி நாம்விலக்கி
வெல்லும் பகுத்தறிவால் வெற்றி குவிப்பதற்கே
ஒல்லும் வகையான் உயர்பணிகள் மேற்கொள்வோம்!
மண்ணுலகில் பொய்விதைக்கும் மந்திரங்கள் கற்பனையே!
பெண்ணுரிமை வேண்டுவோம்! பேய்பூதம் ஏமாற்றே!
இன்பத் திராவிடத்தின் ஏற்றமிகு சிந்தனையால்
வென்றுமே நாளும் விழிப்புணர்வை உண்டாக்கி
நாட்டில் சமத்துவத்தை நாட்டுவோம்! நாடிவரும்
கேட்டையே வீழ்த்தக் கிளர்ந்தெழுவோம்! பொல்லாத
சாத்திரம் என்றும் சடங்கென்றும் ஏய்க்கின்ற
தீத்திறத்தை மாய்ப்போம்! திராவிடத்தால் நாமெழுவோம்!
கோயில், விழாக்கள், குடமுழுக்கில் மூழ்கியே
நாயினும் கீழாய் நடுத்தெருவில் நிற்பதெலாம்
ஏனோ? இழுக்கன்றோ? என்றெண்ணும் மாண்பிழந்தே
கூனல் மதியார் கொடுங்கரவை நம்புவதோ?
ஆற்றல் இழந்தே அருந்துயரை ஏற்பதுவோ?
மாற்றம் விளைத்தே மதிநலன் காத்திடுவோம்!
முன்னேற்றம் ஏதுமின்றி மூலையில் தள்ளிவிட
இன்னல் இழைத்துமே இன்புறும் வெய்யரை,
மும்மொழியை இங்கே திணிக்க முயல்வாரை
நம்மினத்தின் வெம்பகையாம் நஞ்சனைய ஆரியத்தின்
கொட்டம் அடக்கிக் குடியரசின் கட்டமைப்பைத்
திட்டமிட்டுக் காப்போம்! திராவிடத்தால் வெல்வோமே!





