Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கற்றுக்கொள்ளும் இயந்திரங்கள்… முனைவர் வா.நேரு

ஒரு குழந்தை தீக்குள் விரலை விடக்கூடாது என்பதை எப்படிக் கற்றுக்கொள்கிறது? பெரியவர்கள் ‘தீ சுடும்; விரலைத் தீக்குள் விட்டால் புண்ணாகிவிடும். சுட்டுவிடும்’ என்று சொல்வதால் கற்றுக்கொள்ளும் அல்லது குழந்தையே ஓரிருமுறை தீக்குள் விரல்படும்போது சுடுவதைக் கண்டு, சுடுவதை உணர்ந்து தீக்குள் விரலை விட்டால் சுடும் என்பதைக் கற்றுக்கொள்ளும். ஆனால், ஓர் இரும்புத் தகடை அல்லது ஓர் இயந்திரத்தை தீக்குள் வைத்தால், அது சுடும் என்பதை இயந்திரம் தானாகக் கற்றுக்கொள்ளுமா? இயந்திரம் தனக்குத்தானே தீக்குள் போகக்கூடாது என்பதைக் கற்றுக் கொண்டு அது தானும் போகாமல் மற்றவர்களுக்கும் போகக்கூடாது என்பதைச் சொல்லுமா? என்னங்க, இது என்ன கேள்வி என்று கேட்கத் தோன்றுகிறதா?…

இயந்திரம் தானாகக் கற்றுக்கொள்ளும், மற்றவர்களுக்கும் சொல்லும் என்னும் புரட்சியைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி இருக்கிறது. எப்படி? சரி, ஒரு குழந்தை தீக்குள் விரலை வைத்தால் என்ன நிகழ்கிறது? தீயில் விரல் பட்டவுடன் அது மூளைக்குச் செல்கிறது. மூளையில் இருக்கும் நரம்பியல் அமைப்பு அதனை உடனடியாகப் புரிந்து கொண்டு தீ சுடுகிறது. உடனே கையை எடுத்து விடு எனக் கட்டளை இடுகிறது. தீயிலிருந்து விரலைக் குழந்தை எடுத்து விடுகிறது. நமது மூளையில் இருக்கும் நரம்புகளின் கட்டமைப்பு போல ஓர் இயந்திரத்திற்குள் செயற்கையாக நரம்புகளின் கட்டமைப்பை ஏற்படுத்தினால், நமது மூளை உணர்ந்து சொல்வது போல இயந்திரமும் சொல்லும். அதைத்தான் செயற்கை நுண்ணறிவு சாத்தியப்படுத்தி இருக்கிறது. அதற்குச் செயற்கை நுண்ணறிவில் கொடுத்திருக்கும் பெயர் ‘மெசின் லேர்னிங்’ அதாவது இயந்திரக் கற்றல், இந்த ‘மெசின் லேர்னிங்’ பற்றிப் பக்கம் பக்கமாக இணையத்தில் தகவல்களும், யூடியூப் காணொளிகளும் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் வாசித்துப் பார்க்கலாம்; கேட்டு உணரலாம்.

சென்ற பாம்புக்கடி கட்டுரையில், பாம்புக்கடி நஞ்சினை முறிப்பதற்குச் செயற்கை நுண்ணறிவுப் பிரிவான ‘டீப் லேர்னிங்’ மூலமாக இது சாத்தியமாகி இருக்கிறது எனக் குறிப்பிட்டோம். இயந்திரம் தானாகக் கற்றுக் கொள்வது ‘மெசின் லேர்னிங்’, அதில் இருக்கும் ஒரு முறையே (Process) டீப் லேர்னிங் என்னும் ஆழ்ந்து கற்றல் ஆகும்.

1940களில் கம்ப்யூட்டர் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பல ஆண்டுகள் அதில் பயன்படுத்தப்பட்ட மொழி என்பது ‘மெசின் லாங்குவேஜ்’. அதாவது இயந்திர மொழி என்பது பைனரி மொழி. அதாவது 0 மற்றும் 1 என்பதாகும். சுவிட்ச் போடுகிறோம். விளக்கு எரிகிறது. விளக்கு எரிவது 1. அதை அணைப்பது 0. இப்படித்தான் 0 & 1 இந்த இரண்டு எண்களை மட்டும் வைத்து இயந்திர மொழி உருவாக்கப்பட்டது. இப்படித்தான் மனிதர்கள் முதன்முதலில் கணினி என்னும் இயந்திரத்தோடு உரையாட ஆரம்பித்தார்கள். அதனிடம் இதைச் செய். அதைச் செய் என்று கட்டளையிட ஆரம்பித்தார்கள்.

அதற்குப் பின்னால் பேஸிக், பாஸ்கல், போர்டான், கோபால் போன்ற கணினி மொழிகள் உருவாக்கப்பட்டன. சி, சி++, ஜாவா போன்ற மொழிகள் வந்தபிறகு மிகப் பெரிய மாற்றங்கள் வந்தன. எத்தனை மொழிகள் வந்தாலும் கணினிக்குப் புரிந்த ஒரே மொழி இயந்திர மொழி அதாவது, 0 & 1. நாம் கணினி வழியாகப் படம் அனுப்புவது, பாடம் அனுப்புவது எப்படி நாம் அனுப்பினாலும் அவை இயந்திரத்திற்கு 0 & 1 ஆக மாற்றப்பட்டுத்தான் – இயந்திர மொழியின் மூலமாகத் தான் இன்றைக்கும் புரிந்து கொள்கிறது.

அதுபோல 80, 85 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைக்குச் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புக்குப் பின்பு இயந்திரக் கற்றல் என்பது வந்திருக்கிறது. அதனுடைய ஒரு முறையான ஆழ்ந்து கற்றல் (டீப் லேர்னிங்) என்பது குழந்தை, நெருப்பு சுடும் என்று கற்றுக்கொள்வது போலத் தனக்குக் கொடுக்கப்படும் தகவல்களைப் பெற்று அதிலிருந்து கற்றுக்கொள்கிறது. அதைக் கற்றுக்கொண்டு நமக்குச் சொல்கிறது.

ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை எடுத்துக்கொள்வோம். அது ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இருதய மருத்துவமனையான அதிலே இதுவரை ஒரு இலட்சம் இருதய நோயாளிகள் அறுவை சிகிச்சை மற்றும் இருதய நோய்க்கான சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அந்த 1 இலட்சம் நோயாளிகளின் மருத்துவக் குறிப்பு, இ.சி.ஜி., ஸ்கேன் போன்ற ஆய்வகப் பரிசோதனை முடிவுகள், கொடுத்த மருந்துகள் போன்ற அனைத்தும் தகவல்களாக கணினியில் ஏற்றப்பட்டுள்ளன. இப்போது ஒரு புதிய நோயாளி அந்த மருத்துவமனைக்கு வருகிறார் என்றால், இவருக்கு இ.சி.ஜி., ஸ்கேன் போன்றவை எடுத்துச் செயற்கை நுண்ணறிவு டீப் லேர்னிங் முறையைப் பயன்படுத்தினால், அது ஏற்கெனவே இருக்கும் ஒரு இலட்சம் நோயாளிகளின் தகவல்களிலிருந்து ஒன்றொன்றாக எடுத்து, புதிய நோயாளியோடு ஒப்பிட்டு இவருக்கு இருக்கும் பிரச்சனைக்கான தீர்வினை.. மருந்து மாத்திரையில் சரி செய்துவிடலாமா? அல்லது இருதய அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டுமா? போன்ற பரிந்துரைகளை நோயாளிக்குக் கொடுத்துவிடும். மனித மூளையைப் போல டீப் லேர்னிங் பல்வேறு தகவல்களை ஆராய்ந்து, எது சரியான தீர்வு என்பதைத் தானாகக் கொடுக்கிறது. ஆனால், 50, 100 தகவல்களைக் கொடுத்துவிட்டு, தீர்வு கேட்டால் இது துல்லியமாகத் தராது. ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான தகவல்களைக் கொடுத்துவிட்டுத் தீர்வு கேட்டால், ஆராய்ந்து சரியாகக் கொடுக்கும்.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நாளில் (06.02.2026) ‘மருத்துவ உலகில் புரட்சி செய்யும் ‘AI’ என்னும் தலைப்பில் சன் டிவி செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. அதில் ‘மனித மரபணுக்களில் உள்ள ரகசியங்களைக் கண்டறிந்து நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கணிக்க, கூகுள் அறிமுகம் செய்த ஆல்பா ஜினோம் ‘AI’ கருவி பயன்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு.

மனித DNAவில் உள்ள 300 கோடிக்கும் அதிகமான மூலக்கூறுகளை ஆய்வுசெய்து, ஒருவருக்கு வரக்கூடிய நோய் அபாயங்களை முன்கூட்டியே எச்சரிக்கிறது.

புற்று நோய், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற பாதிப்புகளை மரபணு ரீதியாகக் கண்டறிந்து ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சையை வழங்க இது பெரிதும் உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள செய்தியைப் பாருங்கள்.

300 கோடிக்கும் அதிகமான மூலக்கூறுகளை ஆராய்ந்து… இப்படி ஆராய்வதற்குச் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு பல நன்மைகளைக் கொடுத்தாலும் அது எவ்வாறு பயன்படுத்தப்படப் போகிறது என்பது மிகப்பெரும் கேள்விக்குறி. பிப்ரவரி 28 என்பது இந்திய அறிவியல் தினம். இந்த அறிவியல் தினத்தில் நாம் எழுப்பும் கேள்வி, இந்தியாவில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்படுகிறதா? என்னும் கேள்வி
யாகும். இல்லை என்பதுதான் பதில். அதிலும் ஒன்றிய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு, மதம் என்ற போர்வையில் அறிவியல் மனப்பான்மை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கற்பனைக் கதைகளுக்கு உயிரூட்டி, அதனை உண்மையென மக்களை நம்பவைக்கும் செயலுக்காக அறிவியல் கருவிகள் இந்தியாவில் பயன்படுகின்றன. நாளும் வரைமுறையற்றுத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் வழியாக ஆயிரக்கணக்கான மூடநம்பிக்கைகள் மக்கள் மனதில் விதைக்கப்படுகின்றன.

“மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து, நன்மை, தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்” என்றார் தந்தை பெரியார் (விடுதலை 27.3.1951)

இப்போது மனிதன் என்பதைத் தாண்டி இயந்திரங்கள் பொருள் மற்றும் செய்திகளை ஆராய்கின்றன. நன்மை, தீமை என்ன என்பதை மனிதர்களுக்கு இயந்திரங்கள் எடுத்துச் சொல்கின்றன. ஆனால், அவற்றைக்கட்டுப்படுத்தும் – இயக்கும் நிலையில் இருக்கும் மனிதன் என்னவாக இருக்கிறான்? என்னவாக இருப்பான் என்பதுதான் கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.

அறிவியல் முன்னேற்றம் எளிய மனிதர்களுக்குப் பயன்படவேண்டும். துன்பத்திலிருக்கிற மனிதர்கள் தங்கள் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளை அறிவியல் மனப்பான்மையே கொடுக்கும். அதற்குப் பகுத்தறியும் தன்மை வளர்க்கப்பட வேண்டும்; எதிலும் கேள்வி கேட்கும் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும். ஆனால், கேள்வி கேட்பவர்கள், உண்மையை அறிய விரும்புகிறவர்கள் நம்பிக்கை என்னும் அடிப்படையில் அடக்கி வைக்கப்படும் நிலைமைதான். இந்தியாவில், ஏன் உலகத்தின் பல பாகங்களிலும்கூட நீடிக்கிறது.

இந்திய ஒன்றியத்தில் தந்தை பெரியாரின் உழைப்பால் தமிழ்நாடு தனித்து நிற்கிறது. ‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்னும் நோக்கம் கொண்ட திராவிட மாடல் அரசு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்னும் நோக்கில் செயல்படுகிறது. இந்திய அறிவியல் தினமான
பிப்ரவரி 28ஆம் நாளை, அறிவியல் மனப்பான்மை குறித்து விழிப்புணர்வு கொடுக்கும் நாளாக நாம் கொண்டாட வேண்டும். அந்த நாளில் மதங்களின் பேரால்
பரப்பப்படும் மூடநம்பிக்கைகளால் எளிய மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கவேண்டும்.

செயற்கை  நுண்ணறிவு முறையான ஆழந்து கற்றல் (Deep Learning) போல மக்கள் மத்தியில் மதத்தின் அனைத்துப் பாதிப்புகளையும் அக்குவேறு ஆணிவே
றாகப் பிரித்துப்போட்டு, அவற்றின் போலித்தனத்தை உலகுக்கு அறிவித்தவர், பரப்பியவர் தந்தை பெரியார் அவர்கள். ‘மெய்ப்பொருள் அறிவதற்கான தூண்டு
தலைக் கொடுத்தவர் தந்தை பெரியார். எனவே, பிப்ரவரி 28ஆம் தேதி, அறிவியல் தினத்தை ஆராய்ச்சி நாளாக, எதையும் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் நாளாக நாம் கொண்டாட வேண்டும். ¾