Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியாரைப் புரிந்து கொண்டது எப்படி? -மாரி செல்வராஜ்

முதன்முதலில் நான் பெரியாரைப் பற்றி ஒரு முழு நீளப் பேச்சைக் கேட்டேன் என்றால், அது அவர் (என் இணையர்) பேசிய யூடியூப் வீடியோவைத் தான். ஆசிரியர் அய்யாவிடம், பேச்சுப் போட்டியில் சிறந்த பேச்சாளருக்கான விருது வாங்கி இருக்கிறார். அந்த ஒளிப்படத்தையெல்லாம் என்னிடம் காண்பித்தார். பெரியாரைப்பற்றிப் பேசி, இப்பொழுது உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விருது வாங்கி இருக்கிறார். அதற்குப் பிறகு, நிறைய பெரியார் மேடைகளில் அவர்கள் பேசி, நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அப்படிப் பேசிப் பேசி எனக்குள் பெரியாரை விதைத்தவர் என்னுடைய காதலி, என்னுடைய தோழி திவ்யா அவர்கள் அதற்குப் பிறகுதான் நான், பெரியாரை அதிகம் வாசிக்க ஆரம்பித்தேன். பெரியாரைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதுவரைக்கும் எனக்குப் பெரியார் என்பவர், ‘தொண்டு செய்து பழுத்த பழம், தூயதாடி மார்பில் விழும்’, ‘அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், அவ்வளவுதான்’ என்று நான் நினைத்துக் கொண்டிருந்த காலகட்டம் ஒன்று இருந்தது. அதை உடைத்து, பெரியார் என்னென்ன காரியங்கள் செய்திருக்கிறார் என்று சொன்னார். அவருடைய வீட்டுக்குச் சென்றால், பெரியார் புத்தகங்கள் தான் அதிகமாக இருக்கும். எனக்கு அது புதிதாய்த் தோன்றியது. அப்போது. அது காலத்தின் கட்டாயமா? என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஏன் அந்த வீட்டுக்குள் போனேன் என்பது எனக்குப் புரியவில்லை.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து
கொண்டோம்  !

நீங்கள் எல்லோரும் நம்ப மாட்டீர்கள். இரண்டு பேருமே ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோம். நான் அவர்கள் வீட்டுக்குள் தங்கு தடையின்றிப் போனேன். எல்லோரும் ஆச்சரியப்பட்டுக் கேட்டார்கள். ‘‘எப்படி உன்னை உள்ளே விட்டாங்க? உனக்கு எப்படி பொண்ணு கொடுத்தாங்க?’’ என்று. காரணம், அந்த வீட்டுக்குள் பெரியார் இருந்தார்!

திருநெல்வேலியில் வளர்ந்த ஒரு பையனுக்கு – எங்கேயோ தென்கோடி கிராமத்தில் நிறைய வேலிகளுக்குள் சிக்கிக் கிடந்த ஒரு பையனுக்கு – சேலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணும், ஓர் அம்மாவும் பிரம்மாண்டமாகக் கல்யாணம் நடத்தி வைக்கிறார்கள். ‘இது எப்படி சாத்தியமாயிற்று?’ என்று நினைத்தார்கள்.

நான், என் அப்பாவை அழைத்துக் கொண்டு போய் பெண் கேட்கவில்லை; என் அம்மாவை அழைத்துக்கொண்டு போய் பெண் கேட்கவில்லை; என் நண்பர்களை அழைத்துக்கொண்டு போய் பெண் கேட்கவில்லை; ஏன், யாரையுமே அழைத்துக்கொண்டு போய் பெண் கேட்கவில்லை.

‘‘நீ கிளம்பி வா’’ என்று சொன்னார்கள். உடனே நான் கிளம்பிச் சென்றேன். எந்தத் தைரியத்தில் நம்மைக் கூப்பிடுகிறார் என்று நினைத்துக் கொண்டு போனேன்.

நான் சேலத்திற்குச் செல்வது
அதுதான் முதன்முறை!

‘‘எங்கள் வீட்டுக்கு வந்து என்னுடைய அம்மாவிடம் பேசு’’ என்று என்னை அழைத்தார். அவர்கள் வீட்டுக்குச் சென்றால், எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்று நினைத்தேன். நான் சேலத்திற்குச் செல்வது அதுதான் முதன்முறை.

சேலம் மாதிரியான ஊருக்குப் போகிறோமே என்று நினைத்தேன். அந்தக் காலகட்டம்தான் நானும், திவ்யாவும் எங்கள் காதல் குறித்துப் பேச ஆரம்பித்த காலகட்டம். அப்போதுதான் பற்றி எரிந்துகொண்டிருந்தன வடமாவட்டங்கள். ஜாதி மறுப்புத் திருமணங்கள், நாடகக் காதல்களாக அறிவிக்கப்பட்டு, அந்த நாடகத் திருமணங்களை நிறுத்துவதற்காக, எல்லா குடிசைகளும் கொளுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நான் திவ்யாவினுடைய வீட்டுக்குச் சென்றேன். அப்போது என் மனதுக்குள் பயமும், நடுக்கமும், ஒருமாதிரியான பரிதவிப்பும் இருந்தன. நாம் சரியான முடிவுதான் எடுத்திருக்கிறோமா? அல்லது கொஞ்சம் ஆர்வக் கோளாறாகச் செயல்படுகிறோமா? என்றெல்லாம் தோன்றியது.

அவர்களுடைய வீட்டில் பெரியார் படம் மாட்டி வைக்கப்பட்டிருந்தது!

திவ்யா, பேருந்து நிலையத்திற்கு வந்து, என்னை அழைத்துக்கொண்டு, அவர்களுடைய வீட்டுக்குச் சென்றார்கள். ஒரு மிகப்பெரிய யுத்தத்துக்குத் தயாராக நான் போனேன். என்ன சொல்வது? எப்படியெல்லாம் பேசுவது? எப்படி ஓடுவது? எப்படி தப்பிப்பது? எவ்வளவு கன்ட்ரோலாக இருக்க வேண்டும் என்று, என்னை நானே தயார் செய்துகொண்டு போனேன். உள்ளே போனவுடன், நிமிர்ந்து பார்த்தபோது, அவர்களுடைய வீட்டில் பெரியார் படம் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் நான் யோசித்தேன், நாம் தப்பித்துவிடுவோம் என்று!

கோவில்கள், சிலைகள் என்பவைகள் இந்துக்கள் என்பவர்களுக்குப் பொதுவான இடங்களே தவிர எந்த ஜாதிக்கும், தனி உரிமை உடையவை அல்ல. ஆதலால் கர்ப்பக் கிரகத்திற்குள் பார்ப்பான் தவிரவேறு யாரும் போகக் கூடாது என்ற தடை நிபந்தனை 100-க்கு 97 பேர்களான மக்கள் சமுதாயத்திற்கு அவமானமாகும். – ‘விடுதலை’, 24.11.1969

அதற்குப் பிறகு, அவர்களுடைய அம்மா வந்தார். அன்றையிலிருந்து அந்த வீடு என்னுடைய வீடாக மாறிவிட்டது. எனக்குள்ளே எந்தப் பிரச்சினையும் வரவில்லை. அதற்குப் பிறகு, எல்லா எதிர்ப்புகளையும் அவருடைய அம்மாவே பார்த்துக் கொண்டார்கள். அவர்களுடைய உறவினர் வீடுகளுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அவர்களுடைய உறவுகள், சொந்த பந்தங்கள் எல்லோரிடமும் அவர்களே பேசி, அவர்களே முடிவு செய்து, எனக்கு இந்தப் பையனைத்தான் பிடித்திருக்கிறது என்று திவ்யா சொன்னபோது, கிட்டத்தட்ட இரண்டு பேருமே நிறையப் பேரோடு உரையாடினோம். அது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது எனக்கு!

ஓர் அம்மா தன் மகளுக்காக, தன் மகள் இந்தப் பையனை விரும்புகிறார் என்றவுடன், அதை எதிர்க்கக்கூடிய எல்லா வீடுகளுக்கும் என்னை அழைத்துக்கொண்டு போனார்; என்னை அமர வைத்து, நான் என்ன செய்கிறேன், என்னுடைய திட்டங்கள் என்ன? நான் எந்த மாதிரியான வீடுகளில் இருந்து வருகிறேன் ஆகிய எல்லாவற்றையும் பேசக்கூடிய சுதந்திரமும் அந்த வீடுகளில் இருந்தது.

பெரியாரை வாசிக்கும் போதுதான்
எனக்கு ஒரு விஷயம் புரிந்தது!

எனக்கு அது பெரிய அனுபவமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. ஒரு புத்தெழுச்சியாக எனக்கு இருந்தது. அதற்குப் பிறகுதான், தீவிரமாகப் பெரியாரை வாசிக்க ஆரம்பித்தேன் பெரியாரை வாசிக்கும் போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? ஏனென்றால், பெரியாரைப் பற்றி ஒருவரிடம் பேசிவிட்டுப் போனீர்கள் என்றால், ஒரு நாள் கடப்பதற்குள், இன்னொருவர் நம்மிடம் வந்து பெரியாருக்கு எதிராகப் பேசுவார். சரி, அவரை நாம் சமாளித்துவிட்டுச் சென்றால், இன்னொருவர் வந்து குழப்பமான முறையில் நம்மிடம் வந்து ஆலோசனை செய்வார்.

பெரியாரைப் புரிந்து கொள்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. பிறகுதான் நான், பெரியாரைப் படிக்கப் படிக்க, ஒரு கட்டத்துக்குப் பிறகு அவரை நான் மெட்டப்பர் (Metaphor) ஆக மாற்றிக் கொண்டேன். பெரியாரை எப்படிப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன் என்றால், பெரியாரை நம் வாழ்க்கையில் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. ஆனாலும், அவர்கள் இல்லை என்றால், நம்மால் வாழ முடியாது, அது யார் என்றால், நம்மோடு வாழ்கின்ற ஒரு பெண்ணைப்போல. அது அம்மாவாக இருக்கலாம்; அது தோழியாக இருக்கலாம்; காதலியாக இருக்கலாம்; அக்காவாக இருக்கலாம்; பெரியாரை நான் அந்த வகையில்தான் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.

நம்மைப் பாதுகாக்கக் கூடிய
உணர்வைக் கொடுப்பார்!

பெரியாரை வாசிக்க வாசிக்க, ஓர் ஆத்திரம் ஏற்படும். சில நேரத்தில் என்ன இப்படிப் பேசுகிறாரே? என்று தோன்றும். அது நம்முடைய அம்மாவிடம் நமக்குத் தோன்றி இருக்கும். சில நேரங்களில், நம்மைப் பாதுகாக்கக் கூடிய உணர்வைக் கொடுப்பார். அந்தப் பாதுகாப்பும் நம்முடைய அம்மாவை ஞாபகப்படுத்தும். சில நேரங்களில், நம்மைச் சுதந்திரத்தை நோக்கி நகர்த்துவார். அந்தச் சுதந்திரம், நம்முடைய தோழிகள் கொடுத்ததாக இருக்கும். ‘‘போய் அடிடா’’ என்று சொல்வது போன்று இருக்கும். இப்படி எல்லா வகையிலேயும் பெரியாரை வாசிக்க வாசிக்க, நான் புரிந்துகொண்டது என்ன
வென்றால், நம்முடைய சுதந்திரத் தன்மை, சமத்துவத்
தன்மை, சகோதரத்துவம், சமூக நீதி எல்லா
வற்றையுமே ஒற்றைச் சொல்லாக்கக்கூடிய
வர்கள் நம்மிடையே வாழக்கூடிய பெண்கள்தாம்! அது அம்மாவாக இருக்கலாம்; அக்காவாக இருக்கலாம்; தங்கையாக இருக்கலாம்; தோழியாக இருக்கலாம்; நம்முடன் படிக்கக்கூடிய தோழிகளாக இருக்கலாம். இவர்கள் எல்லோரையும் நாம் எப்படிக் கையாளுகிறோம்; அவர்கள் நம்மை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.

எப்படிப் பார்த்தாலும், நம்மிடையே ஆதிக்க மனநிலை வந்துவிடும். ஆனால், அவர்கள் அதற்காக ‘ஃபைட்’ செய்வார்கள். நாம் அவர்களை ஒவ்வொரு காலகட்டத்திலேயும், நீங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வகுத்துப் பார்த்துக் கொண்டே இருப்போம். ஏதாவது ஒரு வகையில், நாம் அவர்களுக்குப் புத்தி சொல்லிக்கொண்டே இருப்போம். ஆனால், அவர்கள் சில சமயங்களில் அதை மீறுவார்கள். அதை மீறும்போது, அவர்கள் மேல் நமக்குக் கோபம் வரும். ‘‘நான் இந்த அளவுக்கு அன்பு செலுத்துகிறேன், உன்னை நம்புகிறேன், ஆனால், நீ இப்படிப் பேசுகிறாயே’’ என்று கோபம் வரும்.

இப்படித்தான், நிறைய இடத்தில், அவரைப்பற்றி வாசிக்கும்போது நிறைய குழப்பங்கள் வந்திருக்கின்றன. இப்படி ஏன் சொன்னார்? அவை எல்லாவற்றையும் வாசிக்க வாசிக்க, புரிந்து கொள்ளப் புரிந்து கொள்ள நிலையானது எது என்று எதிர்நோக்கி நகரும் போதுதான், எனக்குப் புரிந்தது.

நாம் மேலோங்கி இருக்கிறோம், நாம் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்பதை உணரவே முடியாது!

நிலையானதாக என்னை மேம்படுத்து
வதாகத்தான் இருந்தது. அவர் கடைசியாகக் கொண்டு போய்ச் சேர்த்த இடம், என் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொள்
வதற்கு, என் வாழ்க்கையைச் சுதந்திரமாக மாற்றிக் கொள்வதற்கு, எனக்கு இருக்கக்கூடிய
அக முகங்களை நான் புரிந்து கொள்
வதற்கு, இதற்குள்ள மேன்மையான ஆதிக்க மனநிலையை முறியடித்து, ஒவ்வொரு தளத்திலும் நின்று, ஒவ்வொரு புள்ளியிலும் நின்று, நான் என்னைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு. பெருமாள் முருகன் அய்யா இங்கே சொன்னார் அல்லவா, ‘‘நீ சிந்தி, நான் சொன்னது தவறா, சரியா? என்று. சரி என்றால், எடுத்துக்கொள், தவறு என்றால் விட்டுவிடு’’ என்று! அந்தக் கோணத்திலிருந்து நான் பார்க்க ஆரம்பித்தேன். இலக்கியத்தில் எப்படி என்று தெரியாது. கட்சி, இயக்கங்களில் எப்படி என்று தெரியாது. அதற்குப் பிறகுதான் – திரைப்படத் துறையில் இருக்கும் போதுதான், சினிமா மாதிரியான, துறைக்குள் பெரியாரைப் பற்றி பரந்துபட்ட தெளிவான பார்வைகள் இருக்கின்றன; குழப்பமான பார்வைகளும் இருக்கின்றன.

(17.1.2026 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் திருநாள் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை)