Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பஞ்ச பூதங்களால் உருவானதா உலகம்?-மஞ்சை வசந்தன்

படித்தவர்கள், அதுவும் அறிவியல் படித்தவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள்கூட இந்த உலகம் பஞ்சபூதத்தால் ஆனது என்கின்றனர்; நம்புகின்றனர்.

படிக்காதவர்கள் நம்பலாம், சொல்லலாம். அது அறியாமை. ஆனால், விஞ்ஞானிகள்கூட அதையே சொல்கிறார்களே அது எவ்வளவு பெரிய அறியாமை!

பஞ்ச பூதம் என்றால் என்ன?

பஞ்சம் என்றால் அய்ந்து.

பூதம் என்றால் தனிமம்  (Element)

பஞ்ச பூதங்கள் (அய்ந்து தனிமங்கள்) எவை?

  1. நீர் (அப்பு), 2. நெருப்பு (அக்னி),
  2. காற்று (வாயு), 4. நிலம் (பூமி),
  3. வான் (ஆகாயம்)

தனிமம் (பூதம்) என்பது என்ன?

தனித்தன்மை உடையது; மற்றொன்று கலவாதது; மற்ற சேர்மப் பொருள்கள் உருவாகக் காரணமானது; அடிப்படையானது. அதாவது மற்றவை உருவாக இது காரணமாக இருக்குமே தவிர, இது உருவாக மற்றது காரணமாக இருக்காது. அதுவே தனிமம். அதுவே பூதம். அவ்வகையில் நோக்கின் மேற்கண்ட அய்ந்தும் தனிமங்களா? (பூதங்களா?) உறுதியாய் இல்லை. முதலில் நீர் (அப்பு) என்ற பூதத்தை எடுத்துக் கொள்வோம்.
மனிதன் திருடுகிறான்; பொய் பேசுகிறான்;

பாடு படாமல் வயிறு வளர்க்க பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; ஜாதியை விட்டுத் தள்ளுவ தில்லை; ஆனால் ஜாதியை விட்டு ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் ஜாதியை விட்டுத் தள்ளி விடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள். – ‘குடிஅரசு’, 20.12.1936

நீர் என்பது தனிமமா? (பூதமா?)

நீர் என்பது அறிவியல் நோக்கிலும், உண்மையிலும் அது சேர்மம். சேர்மம் என்றால்
இரண்டோ அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தனிமங்களோ சேர்ந்து உருவாவது.

நீரைப் பிரித்தால் ஹைட்ரஜன் + ஆக்ஸிஜன் என்ற இரண்டு வாயுக்களாகப் பிரியும். ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் அழுத்தத்திற்கு உட்படுத்தினால் அது நீராக மாறும். இதை எந்த இடத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் நிரூபித்துக் காட்டலாம். ஆக, நீர் என்பது ஆக்ஸிஜன் என்ற காற்றும், ஹைட்ரஜன் என்ற காற்றும் சேர்ந்து உருவாக்குவது. எனவே, நீர் என்பது ஒரு சேர்மம்.

நீர் உருவாகவே இரண்டு வாயுக்கள் தேவை என்னும்போது, இது எப்படி உலகம் உருவாக அடிப்படையாக அமைய முடியும்? இதுவே, மற்றவற்றால் உருவாக்கப்படும் போது, இது எப்படி மற்றவை உருவாக அடிப்படையாக இருக்க முடியும்? எனவே, நீர் உருவா
வதற்கே இரண்டு வாயுக்கள் அடிப்படை
யாகத் தேவைப்படும் போது, நீர் உலகு உருவாக அடிப்படையென்பது அறியாமை
யல்லவா? எனவே, நீர் என்பது ஒரு பூதம் (தனிமம்) அல்ல என்பது தெளிவாகிறது.

தீ (அக்னி):

தீ என்பது ஒரு பூதம் என்று பஞ்சபூத தத்துவம் சொல்கிறது. இதைவிட ஒரு பைத்தியக்காரத்தனம்; அறியாமை; முட்டாள்தனம், அறிவின்மை உலகில் வேறு இருக்கவே முடியாது.

காரணம் ‘தீ’ என்பது ஒரு பூதமே அல்ல; பொருளே அல்ல. தீ என்பது ஓர் ஆற்றல். ஆற்றல் என்பது முன்னமே இருக்கின்ற பொருளினின்று உருவானதேயன்றி அது மற்றொன்று உருவாக அடிப்படைப் பொருளாய் அமைவதில்லை.

செப்புக் கம்பிகளுக்கு இடையில் காந்தக் கட்டையைச் சுழற்றினால், செப்புக் கம்பியில் மின் ஆற்றல் (மின்சாரம்) உருவாகும். அந்த மின்சாரம் ஒரு பொருள் அல்ல; அது ஓர் ஆற்றல்.

செப்புக் கம்பிகளுக்கு இடையிலே காந்தக் கட்டையைச் சுழற்றுவதை நிறுத்தினால், செப்புக் கம்பியில் மின்சாரம் உருவாவது நின்றுபோகும்.

எனவே, ஆற்றல் என்பது தற்காலிகமாய் எழக்கூடியது. நிரந்தரமானதோ, பொருளோ அல்ல.

மிதிவண்டியில் (சைக்கிளில்) ‘டைனமோ’ வைத்திருப்பார்கள். ‘டைனமோ’ என்பது என்ன? டைனமோவைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே செப்புக்கம்பிச் சுருள் இருக்கும் நடுவிலே காந்தக் கட்டையிருக்கும். காந்தக் கட்டையைச் சுழற்றவே அதை மிதிவண்டிச் சக்கரத்தில் சாய்க்கிறார்கள். மிதிவண்டிச் சக்கரம் சுற்றச் சுற்ற, டைனமோவின் தலைப்பகுதிச் சக்கரம் சுற்றும், அது சுற்றச் சுற்ற அதனோடு இணைக்கப்பட்ட காந்தக்கட்டை சுற்றும். காந்தக்கட்டை செப்புக்கம்பிச் சுருள்களுக்கிடையே சுற்றுவதால், செப்புக்கம்பியில் மின்சாரம் உருவாகி, அது அங்கிருந்து ‘வயர்’ மூலம் ‘பல்பில்’ இணைக்கப்பட்டு அது எரியும். சைக்கிள் சக்கரத்தைச் சுற்றாது நிறுத்தினால் மின்னாற்றல் வெளிப்படாது. விளக்கும் எரியாது. ஆக, மின்சாரம் என்பது ஓர் ஆற்றலேயன்றி அது ஒரு பொருள் அல்ல.

ஒரு கருங்கல்லையும், இன்னொரு கருங்கல்லையும் உரசினால் அதிலிருந்து தீ வரும். அந்தத் தீ ஒரு பொருளா? இல்லை, அது ஓர் ஆற்றல். உரசினால் வெளிவரும், உரசவில்லையென்றால் வெளிவராது.

‘தீ’ நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்கு எரிபொருளும், ஆக்ஸிஜனும் தேவை. இந்த இரண்டில் எந்தவொன்று இல்லையென்றாலும் தீ மறைந்து போகும். ஆக, தீ என்பது திடீரென வெளிப்படக்கூடிய ஓர் ஆற்றலே தவிர, அது ஓர் பொருள் அல்ல.

அத்தீ உருவாவதற்கே வேறு பொருள் அடிப்படையாய் இருக்கும்போது, இது மற்ற பொருள்கள் உருவாக அடிப்படை என்பது அறிவுக்கு உகந்த கருத்தா? ஆற்றலைப் பொருள் என்பது முட்டாள்தனமல்லவா?

எனவே, தீ என்பது ஒரு பூதம் (தனிமம்) என்பதும் அது பிற பொருள்களை உருவாக்குகிறது என்பதும் தவறான கருத்தாகும்.

காற்று (வாயு):

வளிமண்டலத்தில் (காற்று மண்டலத்தில்) இருக்கக்கூடிய காற்று ஒரு பூதம் (தனிமம்) என்பது அறியாமை. காரணம், காற்று மண்டலத்தில் பல வாயுக்கள் உள்ளன. ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு போன்று பல. ஆக, வாயு என்பதே பல காற்றுகள் சேர்ந்து உருவான ஒரு கலவை. அப்படியிருக்க அதை ஒரு தனிப்பொருளாகவும், அது மற்றவை உருவாக அடிப்படையென்பதும் அறியாமையல்லவா?

கதம்ப மாலை உருவாக ரோஜா, முல்லை, மல்லி, சாமந்தி என்று பல பூக்கள் தேவையாய் இருக்கும்போது அது ஓர் சேர்மம். அதாவது பலவகைப் பூக்கள் சேர்ந்து உருவானது. அப்படியிருக்க அந்த மாலைதான் தோட்டத்திற்கு அடிப்படையென்று சொல்லலாமா? அந்த மாலை உருவாகவே பல மலர்கள் தேவைப்படுகின்றபோது, அந்த மாலைதான் தோட்டத்தை உருவாக்குகின்றது என்று சொன்னால் அது அறியாமையல்லவா?

ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற பல சேர்ந்துதான் காற்றே உருவாகிறது என்னும் போது, காற்று எப்படி மற்றவை உருவாக ஓர் அடிப்படைப் பொருளாக இருக்க முடியும்? அது எப்படி மற்ற பொருளை உருவாக்க முடியும்?

எனவே, வாயு (காற்று) ஓர் சேர்மமேயன்றி தனிமம் (பூதம்) அல்ல. அது உருவாகவே பலது வேண்டும். அது சேர்ந்து எதையும் உருவாக்குவதில்லை.

பூமி (நிலம்):

பூமி ஒரு பூதமாக (தனிமமாகக்) கூறப்படுகிறது. இது மிகப் பெரிய அறியாமை. பூமி ஒரு தனிப்பொருள் அல்ல. பல பொருள்கள் சேர்ந்தே பூமியை உருவாக்குகின்றன.

இரும்பு, செம்பு, பித்தளை, அலுமினியம், தங்கம், வெள்ளி, ஈயம் என்று பல உலோகப் பொருள்களும், நிலக்கரி, ஜிப்சம், கந்தகம், சுண்ணாம்பு என்று பல அலோகப் பொருள்களும் இன்னும் எண்ணற்றக் கனிமப் பொருள்களும் சேர்ந்ததே பூமி. இப்படி பூமி உருவாவதற்கே நூற்றுக்கணக்கானவை தேவைப்படும்போது, பூமி எப்படி அடிப்படைப் பொருளாக (தனிமமாக) இருக்க முடியும்?

பூமி என்பது ஒரு சேர்மம். அது மற்றவற்றிற்கு அடிப்படையல்ல. எனவே, அது ஒரு பூதம் என்பது தவறு.

ஆகாயம் (வான்):

உலகிலேயே உயர்ந்த அறியாமை ஒன்று உண்டு என்றால் அது ஆகாயம் ஒரு பூதம் என்று சொல்வதுதான். ஆகாயம் என்றால் வெறுமை. அதாவது ஒன்றுமில்லை என்று அதற்கு அர்த்தம். ஒன்றுமில்லாதது எப்படி ஒன்றை உருவாக்கும்? வான் என்பது (ஆகாயம் என்பது) வெற்றிடம். அதில் ஆங்காங்கே பூமி போன்ற கோள்களும், சூரியன் போன்ற விண்மீன்களும் மிதக்கின்றன. ஒன்றுமே இல்லாத வெறுமை மற்றவை உருவாக அடிப்படை என்பது அறியாமையல்லவா?

ஆக, மேற்கண்ட அய்ந்துமே பூதங்கள் அல்ல என்பது மிகத் தெளிவாகிறது.

பஞ்ச பூதங்கள் எனப்படும் பூமி, நீர், வாயு, தீ, ஆகாயம் என்ற அய்ந்தில் ஆகாயம் என்பது ஒன்றுமில்லை (வெறுமை). ஒன்றுமில்லை என்பது ஒரு பொருளாகவும் முடியாது, பூதமாகவும் முடியாது. அது பிறவற்றை உருவாக்கும் அடிப்படையாகவும் அமைய முடியாது.

அடுத்து, ‘தீ’ என்பது ஓர் ஆற்றல்; அது பொருளல்ல. பொருள்களிலிருந்து உருவாகும் தற்காலிக வெளிப்பாடு. அது சேர்ந்து எதையும் உருவாக்காது.

மூன்றாவது வாயு. அதுவே பலது சேர்ந்த சேர்மம், எனவே அது மற்றவை உருவாக அடிப்படையல்ல. நீர் என்பதும், பூமி என்பதும் அவ்வாறே சேர்மங்கள்.

ஒன்றுமில்லாததையும், ஆற்றலையும், சேர்மங்களையும் பூதங்கள் (தனிமங்கள்) என்பது எவ்வளவு பெரிய அறியாமை! விஞ்ஞானிகள்கூட கூறுகிறார்களே! வெட்கப்பட வேண்டாமா?

ஆக, இப்பூமி பஞ்சபூதச் சேர்க்கை என்பதும், இப்பூமியிலுள்ள எல்லாம் பஞ்சபூதச் சேர்க்கை என்பதும் அறவே தவறான அறிவுக்கொவ்வா கருத்துகள் ஆகும்.

அப்படியென்றால், பஞ்சபூதத் தத்துவம் என்பது அடிமுட்டாள் தனமான கருத்தே தவிர, அறிவுக்கும், அறிவியலுக்கும் உண்மைக்கும் உகந்ததல்ல!   n