பெரியார் தனிமனிதரல்லர்; அவர் ஓர் சிந்தனை முறை. அவர்nகொடுத்த மிகப்பெரிய கொடை ‘பகுத்தறிவு’. தந்தை பெரியார் அறிவியல் மனப்nபான்மையை (Scientific Temper) வாழ்வியலாகக் கொண்டவர். மூடநம்பிக்கைகள், ஜாதியக் கட்டமைப்புகள் மற்றும் மதவாதச் சங்கிலிகளில் பிணைக்கப்பட்டிருந்த தமிழ்ச் சமூகத்தை விடுவிக்க அவர் கையாண்ட மிகச்சிறந்த ஆயுதம் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற அறிவியல் கேள்விமுறைதான். அறிவியல் மனப்பான்மை என்பது ஆய்வகங்களில் சோதனைக் குழாய்களைக் கையாள்வது மட்டுமல்ல; அது அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் செய்திகளையும், நம்பிக்கைகளையும் ஆதாரங்களின் அடிப்படையில் அணுகுவதாகும்.
பெரியார் அறிவியலை வெறும் கண்டுபிடிப்புகளாகப் பார்க்காமல், ஒரு சிந்தனை முறையாகப் பார்த்தார். மனிதன் தன் அய்ம்புலன்களையும், ஆறாம் அறிவையும்
பயன்படுத்தி உண்மையைத் தேடுவதே அறிவியல் மனப்பான்மையின் தொடக்கம் என்று அவர் கருதினார். பெரியாரின் தத்துவத்தில் ‘கேள்வி கேட்டல்’ என்பது வெறுமனே விவாதிப்பதற்கல்ல; அது ஒரு மனிதனின் விடுதலையோடு தொடர்புடையது. எவையெல்லாம் மனிதனின் சுயமரியாதையைப் பாதிக்கிறதோ, அவற்றையெல் லாம் அவர் தயங்காமல் கேள்வி கேட்டார்.
பெரியார் மதங்களை எதிர்த்ததற்கு முக்கியக் காரணம், அவை அறிவியல் வளர்ச்சிக்கும், கேள்வி கேட்கும் பண்பிற்கும் முட்டுக்கட்டையாக இருந்ததே ஆகும். அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்தில் கூட, ஆதாரமற்ற கதைகளையும் சடங்குகளையும் மக்கள் அப்படியே பின்பற்றுவதை அவர் கடுமையாக விமர்சித்தார். மதங்கள் கூறும் புராணக் கதைகள் மற்றும் அற்புதங்களை அறிவியல் தர்க்கங்களின் அடிப்படையில் உடைத்தார் பெரியார். உதாரணமாக, மனித உடல் அமைப்புக்கு முரணான புராண உருவங்களை அவர் கேலி செய்தார், “உன் அறிவுக்குப் பொருந்துவதை மட்டும் ஏற்றுக்கொள்” என்பதே அவரது அறிவுரையாக இருந்தது. இது மக்களைச் சிந்திக்கத் தூண்டியது.
மதம் ‘தலைவிதி’ என்று சொல்லும் இடத்தில், அறிவியல் ‘காரண-காரியம்’ (Cause and Effect) என்று பேசுகிறது. மக்கள் தங்கள் வறுமைக்கும், தாழ்வுக்கும் கடவுளைக் காரணம் காட்டியபோது, பெரியார் அதைச் சமூகக் கட்டமைப்பின் கோளாறு என்று அறிவியல் பூர்வமாக விளக்கினார்.
கடவுள் பெயரால் மனிதன் இழிவுபடுத்தப்படுவதை அவர் கண்டார். “கடவுள் இருந்தால் ஏன் தீண்டாமை இருக்கிறது? ஏன் ஒருவன் உயர்வாகவும் ஒருவன் தாழ்வாகவும் கருதப்படுகிறான்?” என்ற அடிப்படை கேள்வியின் மூலமே அவர் தனது நாத்திகக் கொள்கையை முன்வைத்தார். பெரியார் ஜாதியையும் தீண்டாமையையும் ஒரு சமூக நோயாகக் கருதினார். ஒரு மருத்துவர் நோய்க்கான மூல காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்துவது போல, பெரியார் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்குப் பின்னால் உள்ள ‘ஆதிக்கம்’ என்ற வைரஸைக் கண்டறிந்தார். சுயமரியாதை என்பது ஓர் உளவியல் சார்ந்த அறிவியல் அணுகுமுறை. ஒரு மனிதன் தன்னைத் தாழ்ந்தவன் என்று கருதும் மனோபாவத்தை மாற்றினால் மட்டுமே அவனால் முன்னேற முடியும் என்பதை அவர் உணர்ந்தார். இது இன்று நவீன உளவியலில் ‘Self-Esteem’ என்று அழைக்கப்படும் கருத்தாக்கத்துடன் ஒத்துப்போகிறது.
பெண்களைப் பிள்ளை பெறும் இயந்திரங்களாகப் பார்த்த சமூகத்தில், பெரியார் பெண்களின் உடல்நலம் மற்றும் உரிமை குறித்து அறிவியல் ரீதியான கருத்துகளை முன்வைத்தார். 1930களிலேயே பெரியார் கருத்தடை(Birth Control) பற்றிப் பேசினார். இது வெறும் மக்கள் தொகை பெருக்கத்தைக் குறைக்க மட்டுமல்ல; பெண்களின் உடல் நலத்தைப் பேணவும், அவர்கள் வீட்டுச் சிறையிலிருந்து வெளிவரவும் அவசியம் என்றுவாதிட்டார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான உயிரியல் வேறுபாடுகள் அறிவார்ந்த திறனில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை அவர் வலியுறுத்தினார். திருமணச் சடங்குகளில் நிலவியபுரோகித ஆதிக்கத்தை நீக்கி, சுயமரியாதைத்திருமணங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், திருமண முறை ஒரு கேள்வியின் விளைவாக உருவான புரட்சியாக மாறியது. பெரியார் எழுப்பிய கேள்விகள் ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் பாதிக்கவில்லை; அவை முழு சமூகக் கட்டமைப்பையும் கேள்விக்குள்ளாக்கின.
எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதை அவர் ‘இனிவரும் உலகம்’ என்ற புத்தகத்தில் துல்லியமாகக் கணித்திருந்தார். கையில் அடங்கும் தொலைப்பேசி (Cell phones), கம்பியில்லாத் தகவல் தொடர்பு ஆகியவை பற்றி அவர் அன்றே பேசினார். சத்துக்கள் அடங்கிய மாத்திரைகள் மூலமே மனிதன் பசியாறிக் கொள்ளும் காலம் வரும் என்றார். சடங்குகளுக்காகவும், விழாக்களுக்காகவும் நேரத்தை வீணடிப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார். காலத்தைச் சேமிப்பதே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அறிவியல் ரீதியான வழியாகும் என்று விளக்கினார்.
கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல; அது ஒரு மனிதனைச் சுதந்திரமாகச் சிந்திக்க வைக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார். பள்ளிகளில் மதப் போதனைகளுக்குப் பதிலாக, அறிவியல் பாடங்களுக்கும், உலக நடப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் போராடினார். பெரியார் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அச்சு இயந்திரங்களுக்கு ஏற்பவும், நவீன காலத்திற்கு ஏற்பவும்மொழி மாற வேண்டும் என்ற அவரது எண்ணம் அறிவியல் ரீதியான எளிமையாக்கலாகும் (Simplification). தந்தை பெரியார் ஒருபோதும்தன்னை ஒரு விஞ்ஞானி என்று சொல்லிக் கொண்டது இல்லை. ஆனால், அவர் ஒரு சமூகவிஞ்ஞானி. சமூகத்தில் படிந்திருந்த அழுக்குகளை அகற்ற அவர் பகுத்தறிவு என்னும் ஆய்வகத்தைப் பயன்படுத்தினார். தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியிருந்த அறியாமை மற்றும் அடிமைத்தனத்தை வேரோடு பிடுங்கிஎறிய ‘கேள்வி’ என்னும் ஆயுதத்தை ஏந்தியவர்தந்தை பெரியார். இன்று நாம் அனுபவிக்கும் சமூக நீதி, இட ஒதுக்கீடு மற்றும் பெண்களுக்கான உரிமைகள் பலவும் அன்று அவர் கேட்ட “ஏன்?” என்ற ஒற்றைக் கேள்வியில் இருந்து தொடங்கியவைதான். “எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்காமல் ஏற்காதே” என்ற அவரது ஒற்றை முழக்கம், பல நூற்றாண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை உலுக்கி விழிப்படையச் செய்தது. அவரது சிந்தனைகள் இன்றும் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்: “யார் சொன்னாலும், எங்குப் படித்தாலும், நானே சொன்னாலும் உன் அறிவுக்குப் பொருந்தாத எதையும் ஏற்காதே!”
இன்றைய 21ஆம் நூற்றாண்டில், போலிஅறிவியல் (Pseudo science) மற்றும் வதந்திகள்பரவி வரும் சூழலில், பெரியாரின் ‘கேள்விகேட்கும் பண்பு’ நமக்கு மிகவும் அவசியமானது. அறிவியல் மனப்பான்மை என்பது வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்துவது அல்ல; மாறாக, எதையும் ஆதாரத்தோடு அணுகும் மனப்பக்குவம்; அதுவே பெரியார் நமக்கு விட்டுச் சென்ற மிகப்பெரிய
சொத்து! n





