ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, கல்விதான் மிக முக்கியமான சாதனம். கல்வி அறிவுதான் இன்று உலகை வானளாவ உயர்த்தி இருக்கிறது. நம்நாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துருவாக்கம் செய்யப்பட்டு திராவிடர் நாகரிகம் – திராவிடர் இனத்தின் சிறப்பு உலகில் முதலிடம் பெற்றுச் சிறக்கிறது.
கல்வி அழியாத செல்வம்; ‘பிச்சைபுகினும் கற்கை நன்றே’ என்று கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கற்றோர் கல்விமான் எனப் புகழப்பட்டனர்.
அச்சிறப்புமிக்க கல்வி திராவிடர்களுக்குக் கிடைக்காவண்ணம் வந்தேறிகளான ஆரிய இனத்தார் திட்டமிட்டுச் செய்துவிட்டனர். எதைக் கொடுத்தாலும் சூத்திரருக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று மறுக்கப்பட்டது.
சமுதாயப் புரட்சியாளர் தந்தை பெரியார் இக்கொடுமை கண்டு கொதித்துப் போராடினார். 5000 ஆண்டுகளுக்கு முன்பே கற்ற இனம், இன்று கற்கும் தகுதியை இழந்துவிட்டது ஏன்? என்று சிந்தித்தார். ஆரியர்களின் வேதமதம் – ஸநாதன மதம் (இந்து மதம்) தான் இதற்குக் காரணம். அதைப் பாதுகாக்கவே கடவுள், மத, புராண – இதிகாசம், சாஸ்திரங்கள், ஜாதியக் கண்டுபிடிப்புகள் என்று கணித்திட்டார்.
தந்தை பெரியாருக்கு முன் பலர் உழைத்திருந்தாலும் பெரியாரின் பேருழைப்பு பெரிய காரணமாக விளங்கியது. கல்வி கற்கும் உரிமை இன்று ஓரளவு கிடைக்கும் நிலை உருவாகி – அது பெரிதாக – கல்வியானது கடல்மடை திறந்தாற்போல் திராவிட ஆட்சியால், திராவிட மாடல் திட்டங்களால் முன்னேற்றம் பெற்று, இன்றைக்கு தமிழ்நாடு கல்வியில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தமிழர்கள் தலைசிறந்த அறிஞர் பெருமக்களாக உலகெங்கும் மிளிர்கிறார்கள். மருத்துவம் – பொறியியல் உலகம் தமிழ்நாட்டைப் பார்த்து வியக்கிறது.
சமூகநீதி எனும் தந்தை பெரியார் உருவாக்கிய வகுப்புரிமைக் கொள்கை (இட ஒதுக்கீடு) – தாழ்த்தி ஒடுக்கி வைக்கப்பட்டவர்களைத் தலையில் சுமந்து உயர்த்துகிறது. இந்தியாவிலேயே திராவிட மாடல் ஆட்சியின் கல்வி மற்றும் இன்ன பிற சாதனைகள் அனைத்தும் உலகத்தை வியக்க வைக்கிறது; இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது.
பார்ப்பனர்கள் இந்திய ஒன்றியத்தை ஆளும் தங்களது பார்ப்பன ஜனதா கட்சியின் ஆட்சியைக் கொண்டு, தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கண்ணைக் குருடாக்கி, சமூகநீதியைப் புதைகுழிக்கு அனுப்பி, பார்ப்பனரல்லாத மக்களுக்குக் ‘கல்லறை’ கட்டும் பணியைச் சலிப்பின்றிச் செய்து வருகின்றனர்.
பெயர் பொதுப்பிரிவு இ.பி.வ. பட்டியல் இனத்தவர் பழங்குடி இனத்தவர்
IIM, அகமதாபாத் 104 0 0 0
IIM, பெங்களூரு 104 2 1 0
IIM, கொல்கத்தா 86 0 0 0
IIM, கோழிக்கோடு 22 2 1 0
IIM, இந்தூர் 104 0 0 0
IIM, லக்னோ 84 2 1 0
IIM, ஷில்லாங் 20 0 0 0
தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்கலாம் என்ற ஆரியர் சூழ்ச்சியை நீதிக்கட்சி ஆட்சி ஒழித்தது. வகுப்புரிமையை 1921லேயே தொடங்கி 1928இல் இருந்து நடைமுறைக்குக் கொண்டுவந்தது. அதுதான் இன்று 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ளது. அதுவும் நீதிமன்றத் தலையீட்டால் பாதிக்கப்
படாதவாறு அரசமைப்பு சட்டத்தின் 9ஆம் அட்டவணைப் பாதுகாப்பில் உள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. நூற்றுக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள், பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்த தமிழர்கள் உலகெங்கும் சென்றிருப்பதோடு, வென்று காட்டுகிறார்கள். உலகிலேயே உயர்தர மருத்துவத்தை அரசு சேவையாக தமிழ்நாடு தருகிறது.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை மக்கள் நலம் காக்கத் தோற்றுவிக்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து உயர்சிகிச்சை பெற ஆண்டுக்கு 15 இலட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் புள்ளிவிவரம் தருகிறார்.
இவ்வளவு சிறப்போடு – கல்விப் பணி நடக்கும் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய ஒன்றிய அரசின் நிதி – கல்விக்கு மட்டும் 2152 கோடி; மற்றும் 3554 கோடி என இருவகை நிதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டி நான்காண்டுகளுக்கு மேலான நிலையில், தற்போதுதான் அதன் கட்டுமானப் பணியைத் தொடங்கியுள்ளனர்.
மருத்துவத் துறையையே மரணமடையச் செய்துள்ள இந்திய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் “நீட்” மூலம் சமூகநீதியின் கழுத்தை நெறித்து, இடஒதுக்கீட்டை ஒழிக்கும் பணி நடக்கிறது. மேற்படிப்புக்கு “நெஸ்ட்” தேர்வு என்றும் நீளுகிறது.
மருத்துவத் துறையின் துணைப் படிப்புகளான – இலட்சக்கணக்கான வேலைவாய்ப்பு உள்ள – பாராமெடிக்கல் படிப்புகளுக்கும் ‘நீட்’ கொடுவாள் நீட்டப்பட்டிருக்கிறது. தற்போது இரண்டு படிப்புகளுக்கு என்று முதலில் அறிவித்து இருக்கிறார்கள். இதை எதிர்த்து கடந்த 31.1.2026 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதுநிலை பட்டமேற்படிப்புக்கு N.R.I. ஒதுக்கீடு என்று, வெளிநாட்டு இந்தியர் பெயரில் உள்நாட்டு இந்தியர்கள் 497 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கொடுமை நடைபெறுகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘நீட்’ தேர்வால் லஞ்சம் ஒழிக்கப்படும் என்றது, இன்று அதன் மூலம் இலஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
மேற்கண்டவற்றில் முதல் நான்கு நிறுவனங்களில் ST, SC, OBC – 0%. GENERAL – 100%
எஞ்சிய மூன்று நிறுவனங்களில் ST, SC, OBC – 0.5%, GENERAL – 99.5%
இந்த வகை 497 பேர்களும் 4.23 கோடி கட்டணம் செலுத்துகிறார்கள். இவர்கள் EWS எனும் பொருளாதாரத்தில் அரிய வகை நலிவடைந்தவர்கள் – அதாவது ஆண்டுக்கு 8 இலட்ச ரூபாய் வருமானம் வரக்கூடியவர்கள். அந்த 8 இலட்ச ரூபாய் வருமானத்தில் 4.23 கோடி கட்டிப் படிப்பதை பி.ஜே.பி அரசு லஞ்சத்தை ஒழிக்கும் திட்டம் என்கிறார்களே, இதைவிட ஏமாற்று வேலை வேறு எங்கும் நடந்ததுண்டா?
இவ்வளவு அவலம் தாண்டவமாடும்போது இடியென இன்னொரு செய்தி. அகில இந்திய அளவில் நடைபெறும் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்று IIM என்பதாகும். பெயரின் விரிவாக்கம், The Indian Institute of Management என்பதாகும். இதன் மேலாண்மைப் படிப்புக்கான நிறுவனங்கள். இவை தகுதி – திறமை மிக்க பணியாளர்களைக் கொண்டு வருபவை ஆகும்.
இந்த உயர்கல்வி நிறுவனத்தில் நாடெங்கும் உள்ள ஏழு நிறுவனங்களில் SC, ST, OBCயினர் எவ்வளவு பேர் பணிபுரிகிறார்கள். எவ்வளவு பேர் பொதுப்பிரிவினர் என்பதை கீழ்க்காணும் அட்டவணையைப் பார்த்தால் தெரியும்.
இது மேலாண்மைப் படிப்பு நிறுவனத்தில் மட்டும். இதுபோல் மருத்துவம், பொறியியல் என மற்றைய நிறுவனங்களில் இனிதான் தெரியும்.
அரசியல் அமைப்புச் சட்டம் ST, SC, OBC மக்களுக்கு வழங்கியுள்ள சமூகநீதியை ஆளும் இந்திய ஒன்றிய பார்ப்பன அரசு கிள்ளுக்கீரையைப் போல கிள்ளி எறிகிறதே! சட்டத்தின் முன்பு பதவியேற்பு உறுதி செய்தவர்கள் சட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கலாமா?
மாநில அரசிடமிருந்த கல்வி உரிமை 42ஆம் சட்டத்திருத்தம் மூலம் அவசரநிலை காலத்தில் ஒன்றிய அரசுக்கு ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்றது. ஆனால், ஒத்திசைவு இம்மியும் இன்றி ஒன்றிய அரசுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு சமூகநீதிக்கு அநீதி தொடர்கிறது.
இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மாநில அரசுக்கே கல்வி திரும்ப வேண்டும். சமூகநீதியும் -அரசியல் சட்டமும் சங்கிகளின் சதியிலிருந்து காப்பாற்றப்பட மக்கள் மன்றம் கிளர்ந்தெழட்டும்! மக்கள் ஆட்சி மலரட்டும்! n





