Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வீர சிவாஜியின் கோழை வரலாறு-மருத்துவர் இரா.கவுதமன்

பேஷ்வாக்கள் அனைவரும் சித்பவன் பார்ப்பனர்களே! மராத்தியப் பேரரசில் சிவாஜி காலத்திலேயே ஆளும் வர்க்கமான அதிகாரப் பதவியாக ‘பேஷ்வா’ என்றும் ‘முக்யப் பிரதான்’(பிரதம அமைச்சன்) என்னும் பதவியைப் பிடித்த இவர்கள் நாளடைவில் அதிகாரம் முழுவதையும் கைப்பற்றிக் கொண்டனர். பேரரசை உருவாக்கிய சிவாஜி, அவன் மகன் ராஜாராம், அவன் பேரன் சாஹு ஆகியோரின் காலத்திலும் பேஷ்வாக்கள் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. மதத்தின் பெயராலும் (ஹிந்து அரசு) உயர் ஜாதி ஆதிக்கத்தாலும் மக்களும் இவர்களுக்கு அடி பணிந்தார்கள், மராத்தி மொழி பேசும் மராத்தியர்கள் ‘சூத்திரர்கள்’(சிவாஜி உள்பட) என்றே வகைப்படுத்தப்பட்டனர். சிறந்த போர் வீரர்களான அவர்கள் வீரத்தால் விளைந்த பேரரசாக மராத்தியப் பேரரசு விளங்கினாலும் அவர்களும் பேஷ்வாக்களின் அதிகாரத்திற்குக் கீழேதான் இருக்க வேண்டிய நிலைதான் அந்நாட்டில் நிலவியது. ‘முக்கியப் பிரதான்’ என்று அதிகார மய்யமாகத் திகழ்ந்த அவர்கள் நாளடைவில் நாட்டிற்கே அரசனாகி ‘பேஷ்வாக்கள் ராஜ்யத்தை நிறுவினார்கள். ஹிந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட சித்பவன் பார்ப்பனர்களால் ஆளப்பட்ட ஒரு முழுமையான பார்ப்பனர் ஆட்சி மராட்டியத்தில் உருவானது.
(ஆதாரம் பேஷ்வாக்கள். விக்கிப்பீடியா).

பேஷ்வாக்கள்தான் உண்மையில் மராட்டியத்தில் மன்னர்களை விட அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர். பேஷ்வாக்கள் சித்பவன் பார்ப்பனர்கள் (RSS தலைவர்கள் – ‘சர் சங்க் சாலக்’ இருவரைத் தவிர அனைவருமே ‘சித் பவன்
பார்ப்பனர்கள்’தாம்) சிவாஜிக்குப் பிறகு சிறிது காலம் ஆண்ட ராஜாராம் காலத்திலும், பிறகு சிவாஜியின் பேரன் சாஹு காலத்திலும் அரசர்கள் வெறும் பொம்மைகளாகவே இருந்தனர். அரசராக இல்லாவிட்டாலும் அரசருக்கு உள்ள அதிகாரம் முழுவதையும் பேஷ்வாக்களே கைப்பற்றிக் (de facto) கொண்டு ஆட்சி செய்தனர். (ஆதாரம்: மராட்டியப் பேரரசு, விக்கிப்பீடியா.)

1707இல் முகலாயப் பேரரசன் அவுரங்கசீப் மறைவுற்றான். பாபர் காலத்தில் ஆரம்பித்த முகலாயப் பேரரசு அதற்குப் பிறகு அழிவின் விளிம்புக்குச் சென்றது. அவுரங்கசீப் காலத்திலேயே சிவாஜி பல கோட்டைகளை வென்று மராட்டியப் பேரரசுக்கு அடி கோலினான். ஆறே ஆண்டுகள் ஆண்ட சிவாஜி மரணமடைந்ததும் அவன் மகன் சம்போஜி அவுரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டான். பேரன் சாஹுவும் கைதானான். ஆனால், அவுரங்கசீப் மறைவுக்குப் பின் சாஹு விடுதலை செய்யப்பட்டான். மராட்டியம் திரும்பிய சாஹு திறமையற்றவனாக இருந்தான். பாலாஜி விஸ்வநாத், தானாஜி ஜாதவ் என்ற இரண்டு சித்பவன் பார்ப்பனர்கள் பேஷ்வாக்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் சொன்னவாறெல்லாம் மன்னன் சாஹு ஆடினான். அதிகாரம் முழுதும் பேஷ்வாக்களிடமே குவிந்திருந்தது. ‘கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்தாற் போல்’என்பதற்கேற்ப போராடிப் போராடி சிவாஜி உருவாக்கிய பேரரசு, அவன் காலம் முதலே சித்பவன் பார்ப்பனர் அதிகாரத்திலேயே நடந்தது. (ஆதாரம்: பேஷ்வாக்கள் – விக்கிப்பீடியா)

சித்பவன் பார்ப்பனரான ‘பட்’குடும்பமே வழிவழியாக ‘பேஷ்வாக்களாக உருவாகினர். மராட்டிய அரசர்களைப் பொம்மைகளாக ஆட்டி வைத்து அதிகாரம் முழுவதையும் தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டிருந்த பேஷ்வாக்களை, ஆங்கிலேயர்கள் ‘சதிக் கூட்டம் (confederacy)’என்றே அழைத்தனர். பெயருக்கேற்பவே ‘கூடாரத்தில் புகுந்த ஒட்டகம்’கதையைச் சரித்திரத்தில் பேஷ்வாக்கள் நிகழ்த்திக் காட்டினர். சிவாஜி 1674-80 வரையிலும், சம்போஜி 1681-89 வரையிலும், ராஜாராம் 1689-1700 வரையிலும், தாராபாய் 1700-07 வரையிலும், சாஹு 1707-47
வரையிலும், இரண்டாம் ராஜாராம் 1747-77 வரையிலும் மராட்டியத்தை ஆண்டனர். மெதுவாக பிரதம மந்திரியாக நுழைந்த பேஷ்வாக்கள் இரண்டாம் ராஜாராம் ஆட்சிக்குப் பிறகு மராட்டியப் பேரரசின் மன்னர்களாகவே அமர்ந்து ஆட்சி செய்யத் துவங்கி விட்டனர். இந்த மண்ணின் முதல் முழுமையான பார்ப்பனர் ஆட்சி உருவானது.

1749இல் மராட்டியப் பேரரசின் கடைசி மன்னன் சாஹு மரணமடையும் தறுவாயில் பேஷ்வாவாக இருந்தவன் பேஷ்வா ‘விஸ்வநாத் பட்’ மகன் ‘பாலாஜி பாஜிராவ்’ என்ற சித்பவன் பார்ப்பான். அது வரை அரசனாக இல்லாமலேயே அதிகாரம் செலுத்தி வந்த பேஷ்வா, சாஹுவிற்குப் பின் மராட்டியப் பேரரசின் மன்னனாகவே ஆகிவிட்டான். (கூடாரத்தில் தலை நீட்டிய ஒட்டகக் கதை போல) இந்த நாட்டில் அமைந்த முதல் முழுமையான பார்ப்பனர் ஆட்சி பேஷ்வாக்கள் ஆட்சிதான். மராட்டியப் பேரரசு வடக்கே பெஷாவரிலிருந்து, தெற்கே தஞ்சை வரை பரவியிருந்தது. ஆனால், டெல்லியில் முகலாயர்கள் ஆட்சி! அதற்கு முன்பே இரண்டாம் ராஜாராம் ஆட்சியில் பேஷ்வா ‘விஸ்வேஷ்வராவ்’டில்லி மேல் படையெடுத்தான். டில்லியை வென்றால் இந்தத் தீபகற்பம் முழுமையும் சித்பவன் பார்ப்பனர்கள் ஆட்சியில் கொண்டு வர வேண்டுமென்பதே அவனின் நோக்கமாக இருந்தது. ஆனால், அப்பொழுது ஆப்கானிலிருந்து டில்லிவரை முகலாயர்கள் கையில் இருந்தது. ஆப்கானில் துராணி பேரரசு ஆட்சி! பேஷ்வாவின் படையெடுப்பை அறிந்த ஆப்கான் மன்னன் அகமத் ஷா அப்தாலி பானிபட்டில் 1761இல் பேஷ்வாவின் படையை நிர்மூலமாக்கினான். ‘மூன்றாம் பானிபட் போர்’என்றழைக்கப்பட்ட இப்போரினால் பேஷ்வாக்கள் அதிகாரப் பரவல் தடுக்கப்பட்டது. (‘பேஷ்வாக்கள்’விக்கிப்பீடியா)

மராட்டியப் பேரரசின் கடைசி வாரிசான (சிவாஜியின் கடைசி வாரிசும் ஆன) அரசன் சாஹு 1749இல் இறந்தான். அவனுக்குக் குழந்தை இல்லாததால், ராமராஜ் என்ற மராத்தியன் தத்தெடுக்கப்பட்டு மராத்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான். வாய்ப்புக்குக் காத்திருந்த சித்பவன் பார்ப்பனர்கள் ‘நல்ல சமயமிது நழுவவிடாதே’என்ற சொலவடைக்கேற்ப அப்போது பேஷ்வாவாக இருந்த ‘பாலாஜி பாஜிராவ்’(1740) ராமராஜை இரவோடிரவாகக் கைது செய்து ‘சதாரா’ சிறையில் அடைத்து விட்டு, தானே மராட்டிய மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். பேஷ்வா பாலாஜி பாஜிராவ் (1740-1761), 1752இல் முகலாயப் பேரரசருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். அதன்படி உள்நாட்டிலிருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ அந்நியர்கள் படையெடுத்து வந்தால் முகலாயர்களுக்கு, மராட்டியம் உதவ வேண்டும் (கவனியுங்கள்! இதே சித்பவன் பார்ப்பனர்களால் உருவாக் கப்பட்ட R.S.Sதான் இன்று இஸ்லாமியர்களை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்று கூறுவதோடு நில்லாமல் அவர்களை அடித்தும் கொல்கிறது!) என்றும் அதற்குப் பதிலாக வடமேற்குப் பகுதிகளான ‘தென் சர்தேஷ்முகி‘யில் வரி வசூலிக்கும் உரிமையையும், ஆக்ரா, ஆஜ்மீரின் வருமானம் முழுவதையும் பேஷ்வாக்கள் பெற்றுக்கொள்ளும் உரிமையும் முகலாய மன்னன் பேஷ்வாக்களுக்கு வழங்கினான். இப்படித்தான் வீர மறவர்களான ‘சூத்திர‘மராட்டியர்கள் ஆட்சி, பார்ப்பனர் ஆட்சியாக உருமாறியது. (ஆதாரம்: www.diarnondtamil.com)

1740 முதல் 1761 வரை ஆண்ட பேஷ்வா பாலாஜி பாஜிராவ் டில்லி முகலாய மன்னனோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படிதான் ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த ‘துராணிப் பேரரசி‘ன் அரசனான அகமது ஷா அப்தாலி டில்லியைப் பிடிக்கும் நோக்கில் படையெடுத்து வரும் வேளையில், டில்லி சுல்தான் பேஷ்வாவை உதவிக்கு அழைத்தான். மராட்டிய பேஷ்வாவும் பானிபட் என்னுமிடத்தில் அப்தாலியை எதிர்த்துச் சண்டையிட்டான். 1761இல் நடந்த இந்தப் போர் வரலாற்றில் ‘மூன்றாம் பானிபட் போர்’எனக் குறிப்பிடப்படுகிறது. இப்போரில் பேஷ்வாவின் படை பெருந்தோல்வியைத் தழுவியது. மராட்டியம் திரும்பிய பேஷ்வா தன்னுடைய மிகப் பரந்த மராட்டியத்தை நிருவாகம் செய்யமுடியாமல் சங்கடப்பட்டான். நிருவாக வசதிக்காக ஹோல்கர், சிந்தியா, போன்ஸ்லே பகுதிகளைக் குறு நில மன்னர்களிடம் ஒப்படைத்தான். பேஷ்வாக்கள் ஆட்சியில் பார்ப்பனர்களே அனைத்து அரசுப் பணியிலும் நிறைந்திருந்தனர். அரசாங்கமும் அவர்கள் பிடியில், அதிகாரமும் அவர்கள் பிடியில். அதனால் கீழ் ஜாதி மக்கள் கடுமையான ஜாதியக் கொடுமைக்கு ஆளானார்கள். (ஆதாரம்: பேஷ்வா பாலாஜி பாஜிராவ்@www.diamondtamil.com)

(தொடரும்…)