சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் உரிமைகளும் பிரச்சினைகளும்” என்ற ஒருநாள் மாநில அளவிலான கருத்தரங்கம், சென்னை -இராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரியில் 19.2.2008 அன்று காலை 10 மணிமுதல் நான்கு அமர்வுகளாக நடைபெற்றது. தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் மற்றும் புதுக் கல்லூரி ஆசிரியர் சங்கம் ஆகியவை இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின. இக்கருத்தரங்கு, சிறுபான்மை முஸ்லிம், கிறித்துவர்களால் நடத்தப்படுகின்ற கல்வி நிலையங்களில் இன்று நிலவக்கூடிய பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதுடன், இந்திய அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட உரிமைகளையும் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த சிறுபான்மையினர் உரிமைகளையும் பறிக்கக் கூடிய ஓர் அசாதாரணச் சூழ்நிலையை இன்றைய சுயநலமிக்க அதிகார வர்க்கமும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதே இக்கருத்தரங்கின் நோக்கம். இக்கருத்தரங்கில் பங்கேற்று நிறைவு உரையாற்றிய நாம், “இந்தச் சமுதாயம் மேலும் பலனடைந்து சிறப்பாக அமைவதற்கு, அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, மேலும் செய்ய நினைக்கும் போதெல்லாம் நீதித்துறை மீடியா(ஊடக)த்துறை போன்றவை தடையாக உள்ளன.
மதப் போதகர் டி.ஜி.எஸ். தினகரன் மறைவு – பால் தினகரனுக்கு ஆறுதல் கூறுகிறார் ஆசிரியர்.
ஆகையால் நீதித்துறை, மீடியா(ஊடக)த்துறை போன்றவற்றின் தடைகளைக் களைவதன் மூலமே மேலும் பல்வேறு வாய்ப்புகளை இந்தச் சிறுபான்மையினர் பெற முடியும். அதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து உரையாற்றினோம்.
இந்தக் கருத்தரங்கில் மத்திய தகவல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் க.பொன்முடி, பேராசிரியர் மு.நாகநாதன் (துணைத் தலைவர், திட்டக்குழு, தமிழ்நாடு அரசு), தோழர் ஆர்.நல்லகண்ணு (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) தோழர் ஆறுமுக நயினார், (இந்திய மார்க்சிஸ்ட் கட்சி) மற்றும் கே.எம்.காதர் முகைதீன் (தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) பேரா.ஜவாஹிருல்லா (தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்) ஆகியோர் பங்கேற்றதுடன், சட்ட வல்லுநர்கள், கல்வி யாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.

பொதுவுடைமை இயக்கத் தலைவர் இரா.நல்லகண்ணு அவர்களுக்குப் பாராட்டு…
பேராசிரியர் கே.ராமச்சந்திரா அவர்கள் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆகியோரின் மருத்துவர். தமிழர்கள் மருத்துவத்துறையில் முன்னேற வேண்டும் என்று அரும்பாடுபட்டவர். சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல புதிய துறைகள் உருவாகக் காரணமாகத் திகழ்ந்தவர். அவரது பெயரால் அமைக்கப்பட்டு இருந்த பேராசிரியர் டாக்டர் கே.ராமச்சந்திரா அறக்கட்டளைப் பொழிவு தொடக்க விழாவும், சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் கே.ராமச்சந்திரா படத்திறப்பு விழாவும், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக மாணவர்களுக்குப் புற்றுநோய் மருத்துவத்தில் அவர் பெயரால் தங்கப் பதக்கம் வழங்கும் விழாவும் சென்னை மருத்துவக் கல்லூரியில் 20.2.2008 புதன் அன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்றன, இவ்விழாவில். பங்கேற்று பேராசிரியர் கே.ராமச்சந்திராவின் உருவப்படத்தைத் திறந்து வைத்தோம். மேனாள் தமிழ்நாடு அமைச்சர் கே.அய்யாறு வாண்டையார் தலைமை வகிக்க, மருத்துவக் கல்வி இயக்குநர் பேராசிரியர் டி.பி.கலாநிதி தங்கப்பதக்கத் திட்டத்தைத் தொடங்கி வைக்க, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்க்காடு வீராசாமி அறக்கட்டளைச் சொற்பொழிவினைத் தொடங்கி வைத்தார்., மும்பை டாடா நினைவு மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பர்வீஷ் ரீக் அவர்கள் அறக்கட்டளைப் பொழிவு ஆற்றினார்.

டாக்டர் கே.இராச்சந்திரா படத் திறப்பு (சென்னை மருத்துவக் கல்லூரி 20.02.2008)
அன்று மாலை தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களின் தாயார் பவுனாம்பாள் படத்தினை சென்னை கடற்கரை சாலை வானொலி நிலையத்திற்கு எதிரில் உள்ள சமூக நலக்கூடத்தில் திறந்து வைத்து உரையாற்றினோம். கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் உள்ளிட்டோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர். இறுதியாக நாம் உரையாற்றுகையில் பவுனாம்பாள் அவர்கள் நேரடியாக திராவிடர் கழகத்திற்குத் தொடர்பு இல்லை என்றாலும், மறைமுகமாக தோழர் வில்வநாதன் மற்றும் பிரபாகரன் ஆகியோரை இயக்கத்திற்கு வழங்கி உதவியிருக்கிறார் என்றும், வில்வநாதன் இளைஞர் அணியில் சேர்ந்து அமைதியான கட்டுப்பாடான இளைஞராகச் செயல்பட்டு, அவரது உழைப்பால் மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பதையும் தெரிவித்து உரையாற்றினோம்.

தென்சென்னை இரா.வில்வநாதன் தாயார் படத் திறப்பு (மயிலாப்பூர் 20.02.2008)
எனது வகுப்பு நண்பரும், கிறிஸ்துவ மதப் போதகருமான டி.ஜி.எஸ்.தினகரன் பிப்ரவரி 20 அன்று இயற்கை எய்தினார். மறுநாள் காலை இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினோம். அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் எங்கள் பள்ளிக் கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து உரையாற்றினேன். இறுதியாக விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டதையும் நினைவு கூர்ந்தேன். மகன் பால் தினகரன் அவர்களிடம் ஆறுதல் தெரிவித்துவிட்டு திரும்பினோம். நம்முடன் தென்சென்னை மாவட்டத் தலைவர் உள்ளிட்ட தோழர்கள் வந்திருந்தனர். அன்று மாலை செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாகாண மாநாட்டு 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு உழைத்த தோழர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை சென்னை பெரியார் திடலில் நடத்தினோம்.
1929 செங்கற்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டின் 80ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்கும், 240 பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் தந்தை பெரியார் சிலை திறப்பதற்கு அறிவிப்பை வெளியிட்டதற்கும் நன்றி பாராட்டு விழாவையும் சேர்த்து, அதே செங்கற்பட்டில் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக்கூடிய மாபெரும் மாநாட்டை 18.2.2008 அன்று நடத்தினோம். அது பற்றிய செய்திகளை கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம்.
கூரை வீட்டில் குடியிருப்பவன் அங்கு மாடி வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறான், அந்த கூரை வீட்டை அடியோடு தரை மட்டமாக்கி அஸ்திவாரமே புதிதாகப் போட வேண்டும். இது எங்கள் பாட்டன் காலத்திலிருந்து, முன்னோர்கள் காலத்திலிருந்து இருந்து வருகிறது. இதை ஒழிக்க மாட்டேன். ஆனால் மாடி வீடு கட்ட வேண்டும் என்றால் அது எப்படி முடியக் கூடாத காரியமோ அதுபோல்தான் நமது கடவுள், மதம், …புராணம், இலக்கியம் ஆகியவைகளை வைத்துக் கொண்டு நம் இழிவு மானமற்ற தன்மை நீங்க வேண்டுமென்பது மாகும்.
– ‘விடுதலை’, 10.03.1969
மாபெரும் மாநாடாக நடைபெற்ற இவ்விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்குப் பாடுபட்ட, உழைத்திட்ட திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுக்கு 21.2.2008 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் பாராட்டு விழாவை நடத்தினோம். வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன். கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை முன்னிலை வகித்தார்.

முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டு 80ஆம் ஆண்டு விழா சிறக்க உழைத்திட்ட தோழர்களுக்குப் பாராட்டு….
விழாவிற்கு சிறப்பான தம் பங்களிப்பை வழங்கிய பல்லாவரம் நகர் மன்றத் தலைவர் பி. கருணாநிதி (தற்பொழுது பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது), மிகச் சிறப்பாக மேடை மற்றும் அலங்கார வளைவுகளை வடிவமைத்த ஓவியர் ஜே.பி.கிருஷ்ணா, செங்கல்பட்டு நகர தி.மு.க. செயலாளர் அன்புச்செல்வன், புத்தகங்களைத் தொகுக்கப் பேருதவி புரிந்த மு.நீ.சிவராசன், பொறியாளர் சுந்தரராஜுலு, முனைவர். ச.இராசசேகரன், மேலாளர் க.சரவணன் உள்ளிட்ட தோழர்களைப் பாராட்டிச் சிறப்பித்தோம்.
பாராட்டுப் பெற்ற தோழர்கள் தங்களது விழா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பின், இறுதியாக நாம் உரையாற்றும் போது, தமிழினத்தின் மீட்சிக்காக ஆட்சி நடத்தி வரும் கலைஞரின் கரத்தை வலுப்படுத்த திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று உறுதி கொண்டும், செங்கல்பட்டு விழா தொடர்பான ஆவணத் தொகுப்பு ஒன்று தனியே வெளியிடப்படும் என்றும், பெரியார் படிப்பகத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் அறிவித்தோம்.
இதே நாளில் டெல்லியில் கூடிய ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் தற்போது உள்ள நீதிபதிகள் எண்ணிக்கையில் 5 பேரை அதிகப்படுத்தி 26லிருந்து 31ஆக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை பற்றிய 1956ஆம் ஆண்டு சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 1986ஆம் ஆண்டு அதற்கு முன் உச்ச நீதிமன்றத்தில் 18 நீதிபதிகள் என்ற எண்ணிக்கை 26ஆக (தலைமை நீதிபதி உள்பட) உயர்த்தப்பட்டது. இதுகுறித்து அறிக்கையை வெளியிட்ட நாம், நாடு முழுவதும் மொத்தம் உள்ள உயர்நீதிமன்ற 877 நீதிபதிகளின் பணியிடங்களுக்கு 593 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி அதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தற்போது உள்ள நியமன முறை அதாவது கொலிஜியம் நியமன முறை மாற்றப்பட வேண்டும் என்றும், தேசிய நீதித்துறை தேர்வு கமிஷன் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃ.ப்.எஸ்., அய்.ஆர்.எஸ். போன்று இந்தியன் ஜுடிசியல் சர்வீஸ் கமிஷன் என்ற சுதந்திரமான அனைத்துப் பிரிவு மக்களின் போதிய பிரதிநிதிகளும் அடங்கிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டோம்.
அப்போது தமிழ்நாட்டில் இருந்த மூன்று மூத்த நீதிபதிகளில் தலைமை நீதிபதி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அடுத்த நீதிபதி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அடுத்த மூத்த நீதிபதி ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். எனவே, ஒருவர் கூட இதில் தமிழர் இல்லை என்பதால் இந்த முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
மேலும் மத்தியில் சட்டத்துறை அமைச்சராக ஒரு பார்ப்பனர் இருப்பதால் தொடர்ந்து சமூக நீதி புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினோம். முதலமைச்சர் இதில் தலையிட்டு நீதித்துறையில் நிலவும் சமூக நீதிக்கு எதிரான நிலைமை குறித்து பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
தமிழ்நாடு அரசின் 2008ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை பெரியார் திடலில் 22.2.2008 அன்று நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்று தோழர் நல்லகண்ணு அவர்கள் கொள்கைச் செம்மல், தியாகத்தீயில் புடம் போட்ட தங்கம் என்று பாராட்டுரை வழங்கினோம். இந்நிகழ்விற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(நினைவுகள் நீளும்)





