Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சிந்தையை அள்ளும் செந்தேன் துளிகள்…வை.கலையரசன்

நூல் குறிப்பு:
நூலின் பெயர் : நன்னெறி நாற்பது
ஆசிரியர் : புலவர் வெற்றியழகன்
முதற் பதிப்பு : 2025
பக்கங்கள் : 32; விலை : ரூ.50/-
வெளியீடு :
தனித்தமிழ்ப் பதிப்பகம்
21, இரண்டாம் முதன்மைச் சாலை
கிருட்டினன் நகர், குரோம்பேட்டை (கிழக்கு)
சென்னை-600 044

புலவர் வெற்றியழகன் அவர்கள்  எளிய உருவில் இருக்கும் மாபெரும் இலக்கிய ஆளுமை. தொல்காப்பியத்தை முழுதும் கற்று ஆய்வு செய்து பரப்புவதைப் பெருந்தொண்டாகச் செய்து வருபவர். சீரிய சிந்தனையாளர், நூற்றுக்கணக்கான மரபுக் கவிதைகளையும், இலக்கணப் படைப்புகளையும் உருவாக்கியவர். இசைத்தேன் என்னும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்புகள் மிகச் சிறப்பான இசைப்பாடல் தொகுப்பு.

வறுமை காரணமாக, பள்ளிக் கல்வியைக்கூட தொடர முடியாமல் இடையில் படிப்பை நிறுத்திவிட்டு, பெட்டிக்கடையில் பணியாற்றி வந்த இவர், தமது ஆர்வம் காரணமாக தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைப் படித்துத் தெரிந்து, தெளிந்து, பின்னர் நேரடியாகத் தேர்வு எழுதி, புலவர் பட்டம் பெற்றவர்.

ஒவ்வொரு வாரமும் பெரியார் திடலில் புதுமை இலக்கிய தென்றல், பெரியார் நூலக வாசகர் வட்டம் அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பவர். பெரியார் திடலில் இராவண காவியம், தொல்காப்பியம், திருக்குறள் போன்றவை குறித்து தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர்.

அவரது புதிய படைப்புதான் இந்த ‘நன்னெறி நாற்பது’ என்னும் நீதி நெறிநூல் ஆகும். 40 பாடல்களில் மனித வாழ்க்கைக்குத் தேவையான முக்கியச் செய்திகளை செய்யுள்களாக எளிய தமிழ்ச் சொற்களால் ஆக்கியுள்ளார்.

அவரது முன்னுரையில், ‘‘நான் இதுவரை சொன்னவையெல்லாம் திருக்குறளின் சிறப்புகள்தாம்.

நன்னெறி நாற்பது என்னும் எனது நாற்பத்து ஓராவது நூலினது சிறப்புகள் இல்லை.

எளிய நடையில் எல்லோர்க்கும் புரியும் முறையில் கவிதையை வடித்து வழங்கியிருக்கின்றேன்.

செய்யுள் வகையுள் இணைக்குறள் ஆசிரியப்பா மிக மிக எளிதானது. நான்கு சீரில் தொடங்குதல் வேண்டும்; இடையிடையில் நான்கு மூன்று இரண்டு நான்கு – சீர்கள் என்று குறைந்தும் கூடியும் அமையலாம். நான்கு சீர்க்கு மேல் ஓரடியில் சீர்கள் அமைதல் கூடாது. முடிக்கும் பொழுது நான்கு சீரில் முடித்திடுதல் வேண்டும். இறுதி அடிக்கு முன்னடி – மூன்று சீரில் அமைத்தல் வேண்டும். எதுகை மோனைகள் கட்டாயம் இல்லை; அமைந்தால் சிறப்பு.

இன்னுமோர் எளிமையான செய்யுள் உண்டு. அது குறள் தாழிசை (குறட்டாழிசை) ஆகும். அஃது ஈரசைகளைக் கொண்ட அஃதாவது தேமா புளிமா கருவிளம் கூவிளம் என்ற நிலையிலேயே அமைதல் வேண்டும். அடியும் இரண்டு அடிகளே. முதலடியில் நான்கு சீரும்; அடுத்த அடியில் நான்கு சீரும் அமைதல் வேண்டும்.

ஏகாரத்தில் முடிந்தால் இரண்டு அடிக்கும் ஒரே விதமான எதுகை அமைதல் வேண்டும். பொழிப்பு மோனை அமைந்தால் சிறப்பானதாகும்.

எழுத எளிதானது, பாட அழகானது எல்லாமே காய்ச்சீராக அமைவது தரவுக் கொச்சகக் கலிப்பா,

இது, நாலடித் தரவு, ஆறடித் தரவு, எட்டடித் தரவு என்று மூன்று வகை உண்டு நாலடித் தரவுக்கு ஒரே விதமான நான்கு எதுகையும்; ஆறடித் தரவுக்கு ஒரேவிதமான ஆறு எதுகையும் எட்டடித் தரவுக்கு ஒரே விதமான எட்டு எதுகையும் தேவைப்படும்.

இவற்றுள் நாம் விதிவிலக்காக இரண்டடித் தரவு என்று ஒன்றனையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரே விதமான இரண்டு எதுகை போதுமானது. இவை அனைத்துக்கும் பொழிப்பு மோனை அமைந்தால் சிறப்பாகும்.

நன்னெறி நாற்பது – ஆகிய இந்த நூலில் நாலடித் தரவுக் “கொச்சகக் கலிப்பாவை மட்டுமே. நாற்பது செய்யுள்களையும் பாடி நான் அமைத்துள்ளேன்.’’ என்று செய்யுள் வடிப்பது குறித்த இலக்கணத் தகவல்களைத் தருகிறார்.

மதமென்னும் நஞ்சதனை

மழைத்துளியும் அருந்தாதே!

பதமாகக் கவிழ்த்துவிடு

பாழான சாக்கடையில்!

சதிசெய்து நமைப்பிரிக்கும்

சாதிக்கு மதமேதாய்!

புதுமாந்தன் ஆகிவிடு

புதைத்திடுவாய் சாதிமதம்!

ஜாதியைப் பற்றி…

சாதியெனும் நோயதனைச்

சார்ந்தணைத்துக் கொள்ளாதே!

சாதியெனுங் கொடுவாளால்

சரிக்காதே உன்தலையை!

சாதியது கொடியவெறி

சற்றேனுங் கொள்ளாதே!

சாதிவெறி சாய்த்துளது

சாக்காட்டில் கோடியென!

தீண்டாமை குறித்து…

தீண்டாமை எதுவுமில்லை

தீண்டாமல் வாழ்வாயா?

தீண்டாமல் நிலம்பொழுதை

தீவளியை நீர்வெளியை?

தீண்டாமல் மனைவிமக்கள்

சீர்செய்யும் மருத்துவரைத்

தீண்டாமல் வாழ்வாயா?

சிந்திப்பாய்! தீண்டிடுவாய்!

விதி என்னும்…

விதியென்றே ஒன்றில்லை

வீணாக நம்பாதே!

சதிவலையில் நீசிக்கிச்

சாம்வரையில் வெம்பாதே!

மதியுண்டே உன்னிடத்தில்

மறக்காமற் பயன்படுத்து!

விதியென்னும் பொய்க்கனவு

விரைந்ததுவும் ஓடிவிடும்!

பகுத்தறிவு மட்டுமே ஒளிவீசும்!

பகுத்தறிவு ஒன்றேதான்

பகர்மாந்தர்க் கடையாளம்!

பகுத்தறிவே இல்லாதான்

பாருயிருள் விலங்காவான்!

பகுத்தறிவே மடமையினைப்

பற்றியெரி தீயாகும்!

பகுத்தறிவே மாந்தனுக்குள்

பகலவனாய் ஒளிவீசும்!

பகுத்தறிவு ஒன்றேதான்

பண்பாட்டு நெறிசெலுத்தும்!

தகுதியினைத் தேடிவந்து

தானளிக்கும் இதுவுறுதி!

பகுத்தறிவே அற்றவனைப்

பயித்தியமே என்றிடுவார்!

பகுத்தறிவுப் பேரொளியைப்

பாரெல்லாம் பாய்ச்சிடுவாய்!

கடவுள் என்பது புரட்டு

கல்கடவுள் ஒருபோதுங்

காப்பாற்ற வரமாட்டார்!

புல்கட்டில் நெல்லுதிர்க்கப்

புத்தியினைச் செலுத்தாதே!

பல்கோடி உயிரினங்கள்

பரமனையே நம்பவில்லை!

கல்புல்லா காப்பாற்றும்

கடுமுழைப்பே காப்பாற்றும்!

கடவுளென்ற ஒருபொருள்தான்

கழறுதற்கே இல்லையன்றோ!

படமெதுவும் கடவுளில்லை

பாதையிலே வீசிவிடு!

கடவுளரை நம்பினாலே

கழிமலமாய் ஆகிடுவாய்!

கடமைகொண்டு நீயுழைத்தால்

கனகமலை ஆகிடுவாய்!

இறப்பதுவும் பிறப்பதுவும்

இயற்கையென்ப துணர்ந்திடுவாய்!

சிறப்புடனே வாழ்வதற்குச்

சிந்தனையைக் கொண்டிடுவாய்!

இருக்கின்ற நாள்களிலே

ஏழையர்க்கே உதவிடுவாய்!

மறக்காமல் தமிழுணர்வை

மண்டைக்குள் பதித்திடுவாய்!

வாழ்வியல் நெறியையும் பகுத்தறிவுச் சிந்தனை
யையும் தூண்டும் செய்யுள்கள் அடங்கிய இந்நூல் அனைவரது கரங்களிலும் இருக்கவேண்டிய ஒன்றாகும். மாணவர்களுக்கு பரிசளிக்க சிறந்த நூல். n