வந்தேமாதரம் பாடல் விழாவை அரசுத் துறைகளும், தனியார் நிறுவனங்களும், ஒருங்கிணைந்து கொண்டாடும்படி மோடி அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் என்பவர் வந்தே மாதரம் 150ஆம் ஆண்டு விழாவைப் பள்ளி கல்லூரிகளில் நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அக்டோபர் 1, 2025 அன்று ஒன்றிய அமைச்சரவை இந்தக் கொண்டாட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஒன்றிய அரசின் பண்பாட்டுத் துறை அனைத்து மாநில அரசுகளுக்கும், ஒன்றிய பிரதேசங்களுக்கும் ஓராண்டு தொடர் நிகழ்வுகளைக் கொண்டாட 18 பக்கங்கள் கொண்ட செயல்திட்டம் (Plan of Action) மற்றும் பரிந்துரைகளை வழங்கியது. முதற்கட்டமாக, இப்பாடல் ஒளிபரப்பப்படுவதுடன், அனைத்து மக்கள் பிரிவினரும், பள்ளி – கல்லூரி மாணவர்கள், ஆர்வலர்கள் பங்கேற்புடன் இப்பாடல் பாடப்படும்; பரப்பப்படும். “வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பும் பாடப்படும்” என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது. பள்ளி – கல்லூரிகளுக்குள் இப்பாடலைக் கொண்டு செலுத்துவதை பாஜக அரசு முக்கிய வேலைத் திட்டமாகக் கருதி இம்முயற்சிகளை மேற்கொண்டது. எதிர்காலத்தில் ஹிந்துராஷ்டிரத்தை அமைக்க இந்தத் தலைமுறையை மூளைச் சலவை செய்ய இம்முயற்சி எடுக்கப்படுகிறது.
ஆனந்தமடம் நாடகத்தின் இறுதியில் ”இப்போது நமக்கு எதிரிகள் யாரும் இல்லை. ஆங்கிலேயர்கள் நமது நண்பர்கள்! அவர்கள் தங்கள் அதிகாரங்கள் அனைத்தையும் விஷ்ணு கடவுளுக்கே காணிக்கையாக்கி இருக்கிறார்கள்!” என்று பேசுகிறார் சத்யானந்தா.
பங்கிம் சந்திர சாட்டர்ஜி
ஆங்கிலேய அரசின் கீழ், துணை மாவட்ட ஆட்சியராக, மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியவர். அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர்ப்பாளர் அல்ல. ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டியதாகவும் அவர் கருதவில்லை.
ஆனந்தமடம் புதினத்தின் கடைசி வரிகள், “the Sanatan virtue could only be restored under the rule of English man as king. They have become successful by eliminating Muslim rule. So the Sanatan should not wage war against them, and now should allow the English reign continue”
(ஸநாதன தர்மம் ஓர் ஆங்கிலேயன் அரசனாக இருக்கும் போதுதான் மீண்டும் நிலை நிறுத்த முடியும். ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களின் ஆட்சியை வெற்றிகரமாக வேரறுத்து இருக்கிறார்கள். ஆகவே, ஸநாதனிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் தொடுக்கக் கூடாது. இப்போது ஆங்கிலேய ஆட்சி தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும்.”)

துறவிகளின் தலைமைத் தலைவர், ‘ஆங்கிலேயர்கள் நமது கூட்டாளிகள்’ என்றும் ‘அவர்களை எதிர்த்து எந்தச் சக்தியும் வெற்றி கொள்ள முடியாது’ என்றும் கூறுகிறார். இது பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆங்கிலேய ஆதரவு நிலைப்பாட்டைக் காட்டுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில்தான் ஸநாதன தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்த முடியும் என்று நம்புகிறார். உண்மை இப்படி இருக்க, வந்தே மாதரம் பாடல் சுதந்திரப் போராட்டத்திற்காக எழுதப்பட்டது என்று பித்தலாட்டம் செய்கிறார்கள்.
பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1882இல் ஆனந்தமடம் நூலை முஸ்லிம்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் நோக்கில் எழுதியதற்கு, அக்காலத்தில், நவாப்புகளின் ஆட்சியில் பார்ப்பனர் மேலாதிக்கம் ஆட்டம் கண்டுவிட்ட சூழலால் எழுந்த எரிச்சல் காரணமாக இருக்கலாம் – என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நீண்ட காலமாக முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்த ஸநாதனவாதிகள் ஸநாதன தர்மத்தைக் காக்க ஆங்கிலேயர்களுடன் கைகோக்கத் தயாராக இருந்தனர். இந்த அரசியல் மற்றும் சமூகச் சூழல் ஆனந்தமடம் புதினத்தில் பிரதிபலிப்பதாகக் கருதலாம் என்கின்றனர் அறிஞர்கள்.
1938இல் சென்னை மாகாணத்தில் பிரதமராக இராஜகோபாலாச்சாரியார் பொறுப்பேற்றார். சட்டப்பேரவைத் தலைவராக ஆந்திராவின் கிழக்குக் கோதாவரி மாவட்டப் பகுதியைச் சேர்ந்த புலுசு சாம்பமூர்த்தி என்பவர் இருந்தபோது, அவையில் வந்தேமாதரம் பாடல் பாடப்பட்டது. இதை எதிர்த்து முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கடுமையாகக் குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, பிரதமர் இராஜகோபாலாச்சாரியார் ஒரு சமாதான நடவடிக்கையைப் பரிந்துரைத்தார். காலை 11.00 மணிக்கு அவை அலுவல் தொடங்குவதற்கு முன்னதாகவே வந்தேமாதரம் பாடலைப் பாடி விடலாம் என்றார். அதுமட்டுமன்றி, வேண்டுமானால் வந்தே மாதரம் பாடலுடன் மற்ற மதப் பாடல்களையும் சேர்த்துப் பாடலாம் என்றார். இதை முஸ்லிம்கள் ஏற்கவில்லை. ஆகவே, வந்தேமாதரம் பாடல் கைவிடப்பட்டது. இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். இராஜகோபாலாச்சாரியாரைப் பொறுத்தவரையிலும் கூட, வந்தே மாதரம் பாடல் ஹிந்து சமயம் சார்ந்த பாடல் தான்.
தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக வந்தே மாதரம் பாடலை ஏற்கச் செய்து விட வேண்டும் என்ற முயற்சி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பும் இருந்து கொண்டிருக்கிறது. 1998இல், பாஜக ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ‘சரஸ்வதி வந்தனா’ பாடல் பாடப்பட்டது. இது நாடு முழுவதும் எதிர்ப்பலையை உருவாக்கியது.
2006இல் வந்தே மாதரம் பாடலின்
100ஆம் ஆண்டு விழாவிற்கு எதிர்ப்பு!
2006ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் வந்தே மாதரம் பாடலுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பகல் 11.00 மணிக்கு அனைத்துக் கல்வி, நிறுவனங்களிலும் அப்பாடலை விருப்பமுள்ளவர்கள் பாடலாம் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் உத்தரவிட்டார். வந்தே மாதரம் பாடலைப் பாட இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. தமிழ்நாடு அரசு பாடலைப் பாடுவதை மாணவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில், பல மாநிலங்களில் மாணவ-மாணவியரை அன்றைய தினம் பள்ளிக்கு அனுப்புவதைப் பெற்றோர்கள் தவிர்த்தனர்.
2006ஆம் ஆண்டு, அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்தேமாதரம் பாடல் இசைவட்டுகளாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. விருப்பமுள்ளவர்கள் பாடலாம் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். “வந்தே மாதரம் பாடுவதை ஏன் கட்டாயமாக்கவில்லை?” என்று குரல் எழுப்பினர். பள்ளி, கல்லூரிகளில் இப்பாடலைப் பாட வேண்டும் என்று 2006இல் ஒன்றிய அரசு வலியுறுத்தியதற்குக் கடுமையான எதிர்ப்பு பல்வேறு கட்சிகளிடம் எழுந்தது.
தமிழ்நாட்டில், மயிலாடுதுறையில் ஏ.வி.சி கல்லூரி (தன்னாட்சி) தன் எதிர்ப்பை மிகச் சரியாகப் பதிவு செய்தது. சரியாக 11.00 மணிக்கு ஒட்டுமொத்த கல்லூரி மாணவர்களும் கல்லூரியை விட்டு வெளியேறினார்கள். கல்லூரியின் இரும்பு வாயிற் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. இதை ஆசிரியர்களும் கல்லூரி நிருவாகமும் எதிர்பார்க்கவில்லை. இது ஹிந்துத்துவாவாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை அளித்தது. கல்லூரி முதல்வருக்கு மயிலாடுதுறை நகரத்திலிருந்து அரசியல் பிரமுகர்களின் ஆவேசக் குரல்கள் எச்சரிக்கை விடுத்தன. கல்லூரி நிருவாகத்தில் உள்ள பிற உறுப்பினர்கள் எரிச்சல் அடைந்து முதல்வரிடம் கேள்வி எழுப்பினார்கள். ஏ.வி.சி கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் மீது விசாரணை வந்தது. மாணவர்களின் போராட்டத்தைக் கல்லூரி நிருவாகத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. வந்தேமாதரம் பாடலுக்கு நூறாம் ஆண்டு விழா நடைபெற்ற போது, சரியாக பகல் 11 மணிக்குக் கொண்டாட இந்திய ஒன்றிய அரசு அழைப்பு விடுத்த நிலையில், அதே நேரம் சரியாக 11.00 மணிக்கு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வாயிலை இழுத்து மூடி, ஒட்டுமொத்தமாக வெளிநடப்புச் செய்து, வேலை நிறுத்தம் செய்து, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் என்பது மிக முக்கியமான செய்தி.
1947 ஆகஸ்ட் 15 அன்று, ஆச்சார்யா கிருபளானியின் மனைவி சுசேதா கிருபளானி அரசியலமைப்புச் சட்ட அவையில் “வந்தே மாதரம்” பாடலைப் பாடினார்.
நீதிமன்றம் சென்ற ஸநாதனிகள்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தேசியப் பாடல் பற்றி எதுவும் சொல்லவில்லை. 2019ஆம் ஆண்டு, வந்தேமாதரம் பாடலைத் தேசிய கீதமாக (National Anthem) அல்லது தேசியப் பாடலாக (National Song) ஏற்க வேண்டும் என்று டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால்,
டில்லி உயர்நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 27 ஜூலை 2019.)
2022 நவம்பர் மாதம், டில்லி உயர்நீதிமன்றத்தில் “ஜன கண மன” மற்றும் “வந்தேமாதரம்”…. ஆகிய இரண்டும் ஒரே நிலையில் மதிக்கப்படும் என்று நரேந்திர மோடி அரசு பதிவு செய்தது.(டைம்ஸ் ஆப் இந்தியா, 7 நவம்பர் 2022.).
‘ஜனகனமன’…
எனத் தொடங்கும்
தேசிய கீதத்தை விட
அவர்களுக்கு
‘வந்தே மாதரம்’
பாடலே முக்கியமானது.
கோபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பள்ளிகளிலும் மற்றும் அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தார். அதனடிப்படையில், 2017 ஜூலை மாதம் 25ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மற்றும் தொழிலகங்களிலும் வாரம் ஒரு முறை ‘‘வந்தே மாதரம்’’ பாடலைப் பாடவும், இசைக்கவும் கட்டாயமாக்கியது. மேலும், அரசு அலுவலகங்களிலும் தொழிலகங்களிலும் மாதம் ஒரு முறை இப்பாடல் பாடப்பட வேண்டும் என்றும் கூறியது.
2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று உத்தரவிட்டவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமன்த் லட்சுமண கோக்கலே (Hemant Lakshman Gokhale) ஆவார். இந்த உத்தரவின் காரணமாக, தமிழ்நாடு அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மற்றும் தொழிலகங்களிலும் வாரம் ஒரு முறை ‘‘வந்தே மாதரம்’’ பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்கும் விதிகளில் மாற்றங்களைச் செய்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘‘வந்தேமாதரம் பாடல் முழுவதுமாக நிகழ்ச்சிகளில் பாடப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார். இது 1950இல் அரசியல் அமைப்புச் சட்ட அவை எடுத்த முடிவுக்கு எதிரானது. வந்தே மாதரம் மூலப் பாடலில் ஆறு பத்திகள் உள்ளன. அவற்றைப் பாடுவதற்கு அனுமதி இல்லை.
1937இல் காங்கிரஸ் செயற்குழு முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாட பரிந்துரை செய்தது. 1937 அக்டோபர் 26ஆம் தேதி ஜவஹர்லால் நேருவுக்கு கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய பரிந்துரைக் கடிதத்திலும் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாட பரிந்துரைக்கப்பட்டது. அந்த இரண்டு பத்திகள் மட்டுமே தேசியப் பாடல் (National song) என ஏற்கப்பட்டது. அதுவே இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதைத்தான்
அறிவிப்பும் செய்தார். ஆனால், இன்று ஆளும்
பா.ஜ.க. ஒன்றிய அரசு வந்தே மாதரம் பாடலைப்
பாடும்படி அறிவுறுத்துகிறது. இது இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த தலைவர்களின் கருத்துக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் ஏற்படையதல்ல என்று எதிர்ப்பு வலுத்து வருகிறது. n





