Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் மீதான “பேரிடி” வீழ்த்தப்பட்டது எப்படி? முனைவர் க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராம பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம்

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கிட சமூக மற்றும் கல்வி (Socially and Educationally) அடிப்படையில் அளவீடு செய்திடல் வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.

அதன் அடிப்படையில்தான் தாழ்த்தப் பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கிடும் முறை கடைப் பிடிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு:

தமிழ்நாடு அரசு சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்கண்டவாறு இடஒதுக்கீடு செய்துள்ளது.

தாழ்த்தப்பட்டோர்          –       18%

பிற்படுத்தப்பட்டோர்        –       50%

பழங்குடியினர்              –       1%

பொதுப்பிரிவு               –       31%

இதன்படி  69%  இடஒதுக்கீடு தற்போது நடைமுறையிலுள்ளது.

1979 – 80இல் இடஒதுக்கீடு:

தாழ்த்தப்பட்டோர் 18% பிற்படுத்தப் பட்டோர்  31%, பொதுப்பிரிவு 51%,  ஆக 49%  இடஒதுக்கீடு. பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 31% இடஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட திரு. ஏ.என்.சட்டநாதன்  தலைமையிலான குழு தனது பரிந்துரையில், பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில்  வளர்ச்சி பெற்றோருக்கு பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்பு தேவையில்லை என்ற ஒரு கருத்தைத் தெரிவித்தது.

பொருளாதார அளவுகோல்:

இதன்படி, ஆண்டு வருமானம் ரூ.9000/-க்குக் கீழ் பெறுவோர் மட்டும் பிற்படுத்தப்பட்டோர் என்றும், ரூ.9000/- மற்றும் அதற்கு மேல் பெறுவோர் முன்னேறிய பிரிவாகக் கருதப்பட வேண்டும் என்றும் இடஒதுக்கீட்டுக்குப் பொருளாதார அளவுகோல் (அரசியல் சட்டத்திற்கு எதிரானது) அன்றைய அ.தி.மு.க. அரசு – அதன் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அரசாணை மூலம் கொண்டு வந்தார்.  அரசாணை, சமூக நலத்துறை G.O.எண் : 1156 நாள் 2/7/1979.

1979  ஜூலை 2  அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு அடுத்த நாளே 03.07.1979  அன்றைய ‘விடுதலை’ நாளேட்டில் விரிவான அறிக்கை ஒன்றை எழுதி, இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.  சமூக நீதியை அழிக்கத் துடிக்கும் பார்ப்பனச் சூழ்ச்சி என்று தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தனது எதிர்ப்பைக் காட்டினார்.

திராவிடர் கழகம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்து உடன் திரும்பப் பெறவேண்டும் என்றும் எச்சரித்தார்.

பார்ப்பனர்கள் சூழ்ச்சி:

இடஒதுக்கீட்டிற்குப் பொருளாதார  அளவுகோலைப் புகுத்திட, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்பனர்கள் “பகீரத” முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்திட்ட பெருந்தலைவர் காமராசர், பக்தவத்சலனார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் ஆரியச் சூழ்ச்சிக்கு அடிபணியாது, அரசியலமைப்புச் சட்டப்படி சமூக – கல்வி ரீதியாக என்ற அளவுகோலின் படி சமூக நீதியைக் காத்து நிலைநாட்டினர்.

1952இல் முதலமைச்சர் பொறுப்பேற்ற ராஜகோபாலாச்சாரியாரே செய்யத் துணியாத ஒன்றை, அண்ணா பெயரிலான அ.தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் செய்திருப்பது பெரும் அக்கிரமம் என்று ‘விடுதலை’ நாளேடு எழுதியது.

ரூ.9000/- வருமான வரம்பால் ஆபத்து:

ஆண்டு வருமானம் ரூ. 9000 என்ற பொருளாதார அளவுகோலின் படி மாதம் ரூ.750/- வருமானம் வந்தால் அக்குடும்பத்திற்குப் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கிடையாது.  ஒரு கட்டடத் தொழிலாளியின் ஒரு நாள் ஊதியம் ரூ.20  மனைவிக்கு ரூ.18 (1979–80களில்) என்றால் வருமான வரம்பு ஆணைப்படி இவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது.  தூய்மைப் பணியாளரின் ஊதியம் ரூ. 750/-க்கு மேல் ஆகும்.  இவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கிடையாது.

சமூக நீதி வழங்கிட உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டுத் திட்டத்தில் ரூ.9000/-  பொருளாதார அடிப்படையிலான வருமான வரம்பாணை மூலம் பெரும் பின்னடைவும் நேர் எதிரான விளைவும் உருவாகும். அது பார்ப்பனர்களுக்கே முழுப்பயன் தரும்.

எனவே, இவ்வருமான வரம்பாணை உத்தரவினைப் பிற்படுத்தப்பட்டோருக்கு விழுந்திட்ட “பேரிடி” என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிவு செய்தார். ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகளை ஓரணியில் சேர்த்தார். அடுக்கடுக்காய்ப் பலமுனை எதிர்ப்புப் போராட்டக் களங்களை உருவாக்கினார்.

ரூ.9000/- வருமான வரம்பாணையை ஒழித்திட திராவிடர் கழகம் மேற்கொண்ட மாநாடுகள்- தீர்மானங்கள் – போராட்டங்கள் :

03.07.1979 அன்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்குப் பேரிடி என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை எழுதினார்.

04.07.1979 பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்களுடன் ஒரு நாள் இடைவெளியில் அவசரச் சந்திப்பை நடத்தினார். பிரச்சனையின் ஆபத்தை விளக்கமாக எடுத்துரைத்தார்.

1979  ஜூலை 14,15  இரண்டு நாள்கள் சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமினர். அரசியல் கட்சியினர், சமுதாயத்தலைவர்கள் சங்கநாதம் புரிந்தனர்.

22.07.1979 சென்னையில் மாபெரும் பிற்படுத்தப்பட்டோர் பேரணி நடத்துவது என்ற மாநாட்டின் தீர்மானப்படி எழுச்சிப் பேரணி சென்னையில் நடந்தது.

நாடே அதிர்ந்தது; ஆளும் அ.தி.மு.க அரசு அதிர்ச்சிக்கு ஆளானது!

17.09.1979 தஞ்சையில் மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி வருமான வரம்பாணைக்குத் தீ வைக்கும் போராட்டத்தை 26.11.1979 அன்று நடத்திட திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அறிவித்தார்.

01, 23.11.1979 இரண்டு நாள்கள் போராட்ட வீரர்களின் பட்டியலை நேரில் சென்று பெற்றிட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

ரூ.9000/- வருமான வரம்பாணை நகல் எரிப்புப் போராட்டம்

திராவிடர் கழக மத்திய நிருவாகக்குழு அறிவித்தபடி 26.11.1979 அன்று ரூ.9000/- வருமான வரம்பாணைக்குத் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு, அதன் சாம்பலை அஞ்சல் உறையில் வைத்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மூட்டை மூட்டையாக அனுப்பப்பட்டது. சமூக நீதியைக் காத்திட தமிழ்நாடு அரசின் அரசாணையைக் கொளுத்தி அரசுக்கே சாம்பல் அனுப்பப்பட்டது.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு இடம் மட்டும் வெற்றி பெற்று, எஞ்சிய 37 இடங்களில் தோற்ற பின்பு அதிர்ந்து போன அ.தி.மு.க. அரசு, உடனே  21.01.1980 அன்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மேற்கண்ட வருமான வரம்பாணையை எதிர்க்கும் காரணத்தைக் கேட்டது. திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களின் விளக்கத்தை நேரில்  கேட்டறிந்த அன்றைய முதலமைச்சர் டாக்டர். எம்.ஜி.ஆர். தெளிவு பெற்றார்.  தோல்விக்கான காரணத்தையும் புரிந்து கொண்டார்.

24.01.1980 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ரூ.9000/- வருமான வரம்பாணை ரத்து செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

01.02.1988 அன்று தமிழ்நாடு அரசு வருமான வரம்பாணையைக் கீழ்க்கண்ட ஆணையின் மூலம் திரும்பப் பெற்றது.

தமிழ்நாடு அரசு அரசாணை எண்: G.O.72, சமூகநலத்துறை, 1.2.1980

அதே நாளில் 31% பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தி அதற்கான அரசாணையை வெளியிட்டது.

தமிழ்நாடு அரசு அரசாணை எண்: G.O.73, சமூகநலத்துறை, 1.2.1980

சமூக நீதி வரலாற்றில் இட ஒதுக்கீட்டில் ஒரே பிரச்சனைக்கு  ஒரே நாளில் இரண்டு அரசாணைகள் – ஒன்று, ஏற்கெனவே இருந்த அரசாணைக்கு எதிரான அரசாணை. மற்றொன்று, அதே பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கப்படும்  அரசாணை. இந்த வரலாற்றை உருவாக்கிய சமூகநீதி வரலாற்றின் தளகர்த்தர்தான் திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். இனிமேல் இத்தகு சாதனைக்கு உரியோர் யாருமில்லை என்கிற உலகச் சாதனைக்கு உரியதாகும்.

தமது அரசு போட்ட உத்தரவு தவறு என்பதை உணர்ந்து திரும்பப்பெற்றும், கேட்காமலேயே இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தியும் ஆணையிட்ட பெருமகன் டாக்டர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்திட முடிவு செய்து அதன்படி 10.02.1980 அன்று நாடெங்கும் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தியவர்தான் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

ஆக, பிப்ரவரி 1ஆம் நாள் (1988) பிற்படுத்தப்பட்டோருக்குப் பேரிடியான பொருளாதார வரம்பாணையை நீக்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்ட நாளாகும். இந்நாளில் சமூகநீதிக்கு வரும் அறைகூவல்களை எதிர்கொண்டு வெல்வோம் என உறுதி ஏற்போம்; சமூகநீதி காப்போம்! n