Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திகட்டாத தித்திப்பூட்டிய திராவிடர் திருநாள் கொண்டாட்டமும் ‘பெரியார் விருது’ வழங்கும் விழாவும்! வை.கலையரசன்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலை, இலக்கியங்களுடன் பெருமைமிகு வாழ்வை நடத்திய தமிழர்களின் பண்பாடு ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் சிதைந்து ஆரியப் பண்பாட்டுக்கு அடிமையானது. தமிழ்க் கலைஞர்கள் அவமதிக்கப்பட்டார்கள்.

சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்குப்பின் கலை இலக்கியத் துறைகளில் தமிழர்களின் சுயமரியாதை மீட்டெடுக்கப்பட்டது.

கலை பண்பாட்டுதுறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், கலை இலக்கியவாதிகளைப் பெருமைப்படுத்தவும் திராவிடர் கழகம் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் என்னும் கலை பண்பாட்டு அறக்கட்டளையை 1995ஆம் ஆண்டு தொடங்கியது.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 32 ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய கலைச் சிறப்புகளைப் பாதுகாக்கும் பணியிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

2012 ஆம் ஆண்டு முதல் திராவிடர் திருநாள் என்னும் பெயரில் பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு விழாவை பண்பாட்டுத் திருவிழாவாகக்  கொண்டாடி வருகிறது. தமிழிசை, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், செவ்வியல் மக்களிசை, தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டுகள், வேடிக்கை விளையாட்டுகள் ஆகியவை இடம் பெறும் வண்ணம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் கலை, இலக்கியம், திரை, விளையாட்டு, சூழலியல், சமூக செயல் பாடுகள், மருத்துவம், அறிவியல் போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்காற்றி, சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு ‘பெரியார் விருது’ம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் 32 ஆம் ஆண்டு விழாவும் திராவிடர் திருநாளான பொங்கல் விழாவும் 17.01.2026 அன்று நடைபெற்றன

முதல் நாளிலேயே தோரணங்கள், கழகக் கொடிகள், கரும்பு அலங்காரங்கள், ஒளிவிளக்குகள் என்று ‘பெரியார் திடல்’ களை கட்டிவிட்டது.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள் 17.01.2026 அன்று மாலை 4 மணியளவில் தொடங்கின. விழுப்புரம் மரபுக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை பெரியார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலையருகில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் ஆகியோர் முன்னிலையில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அங்கிருந்து பறை இசையுடன் ஊர்வலமாகப் பெரியார் திடலுக்கு வந்து பறை இசை, மயில் ஆட்டம், உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தினார்கள். கழகத் தோழர்கள் நிகழ்ச்சியைக் கண்டும் ஆடிப் பாடியும் மகிழ்ந்தனர். பின்னர் தொடர்ந்து, பெரியார் வீர விளையாட்டுக் கழகம் நடத்திய சிலம்பம் மற்றும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை தோழர்கள் பறையிசைக்கேற்ப நடனமாடிக் களித்தனர்.

தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மரபுக் கலைக் குழுவினர் பறை மற்றும் பெருவங்கிய முழக்குடன், இன எழுச்சிமிக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினர். அதனைத் தொடர்ந்து கிராமியப் பாடல்களுடனான ஒயிலாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திய விழுப்புரம் மரபு கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் சசிகுமார், மற்றும் இசை ஆசிரியர் பாடகர் சுரேஷ் உள்ளிட்ட கலைஞர்களுக்கு சிறப்புச் செய்யப்பட்டது. வீர விளையாட்டு சாகச நிகழ்ச்சிகளை நடத்திய பெரியார் வீர விளையாட்டுக் கழக மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டன.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் படத்திறப்பு

திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து, பெரியார் காட்சியகத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் சென்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, எருமை மாட்டுக்கு வாழைப்பழம் ஊட்டப்பட்டது. கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும் வாழைப்பழம் ஊட்டினார்.

எம்.ஆர்.ராதா மன்ற மேடையில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் முக்கியப் பகுதியான ‘பெரியார் விருது’ வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்கத்தில் காலம் சென்ற புரட்சிப் பாவலர் ஈரோடு தமிழன்பன் படத்தை கழகத் தலைவர், பெரியார் விருதாளர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். ‘பெரியார் விருது’ வழங்கும் நிகழ்ச்சியை கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்துச் சிறப்பித்தார். கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று உரை நிகழ்த்திச் சிறப்பித்தார். தமிழ்நாடு அரசின் பெரியார் விருது பெற்ற, கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி நிகழ்ச்சியின் தொடக்கவுரையை வழங்கி, விருதாளர்களை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து ‘பெரியார் விருது’ வழங்கும் நிகழ்வு தொடங்கியது. முதலில் சமூக நீதிச் சிந்தனையுடன் செயல்பட்டு தமது படைப்புகளால் பல்வேறு சமூக அவலங்களை வெளிப்படுத்தி வரும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்குப் பெரியார் விருது வழங்குவதாக அறிவிப்புச் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரியார் விருதுக்கான கருத்துரைக் காணொலி திரையிடப்பட்டது. அதன் பிறகு கழகத் தலைவர் பொன்னாடை பெருமாள் முருகன் அவர்களுக்கும் அணிவித்து, நினைவுப்பரிசு, ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார். தொடர்ந்து, பெருமாள் முருகன் ஏற்புரை வழங்கினார்.

(ஏற்புரை அடுத்த இதழில்)

பின்னர், தமது திரைப்படங்களால் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்து, முற்போக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சாதனைகள் படைத்து வரும் திரைப்பட இயக்குநர் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்குப் பெரியார் விருது அறிவிக்கப்பட்டது. அதே போல் அதற்கான கருத்துரைக் காணொலி திரையிடப்பட்டது. இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பொன்னாடை அணிவித்து ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார். அதையடுத்து மாரிசெல்வராஜ் ஏற்புரை ஆற்றினார். (ஏற்புரை அடுத்த இதழில்) இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவையும், உற்சாகத்தையும் கொடுத்துச் சிறப்பித்தனர்.

தமிழர் தலைவர் பாராட்டுரை

இறுதியாக கழகத் தலைவர், ”யார் சொல்வதையும் நம்பாதீர்கள். உன் அறிவு என்ன சொல்கிறது? அதைக் கேள்” என்று சொன்னவர் தந்தை பெரியார் என்றும், ”சுதந்திர நாட்டில் பார்ப்பான் இருக்கலாமா? பறையன் இருக்கலாமா? உயர்ந்தவன் இருக்கலாமா? தாழ்ந்தவன் இருக்கலாமா? எல்லோரும் மனிதர்களாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார் பெரியார் என்றும், எழுத்து, கலை மூலம் மக்களுக்குத் தேவையான கருத்துகளை வீரியத்துடன் கொண்டு செல்கிற எழுத்தாளர் பெருமாள் முருகன், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகிய இருவரும் தனிமனிதர்கள் அல்ல, திராவிடர் இயக்கம் அவர்களுக்குப் பின்னால் இருக்கிறது. இவர்களை எங்கள் தோள் மீது ஏற்றி வைத்துப் பாராட்டுகிறோம். தொடர்ந்து உங்கள் பணிகளைச் செய்யுங்கள்” என்று வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார். பெரியார் வீரவிளையாட்டு வீரர்களுக்குச் சான்றிதழ்களை கழகத் தலைவர் வழங்கினார்.

அடுத்து, கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திய விழுப்புரம் மரபுக் கலைக்குழுக் கலைஞர்களுக்கு பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புச் செய்தார். இறுதியாக, அனைவரும் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். இப்படியாக 2026 ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் சிறப்பாக நடந்து முடிந்தது. கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து அரங்கம் நிறைந்து, மேல் மாடத்திலும் (பால்கனி)யிலும் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, திராவிடன் நிதி மேலாளர் து.அருட்செல்வன் நன்றி கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார்.

பொங்கல்
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் தலைமையில், தந்தை பெரியார் சிலையின்முன்பு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வை தோழர் ஓவியச்செல்வன் ஒருங்கிணைத்தார்.