வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர்நீ அண்ணா!
முனைச்சொல்லாய்க் குத்தீட்டிக் கூர்ப டைத்து
முட்கூராய்ச் சொல்வடித்த உலைநீ அண்ணா!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த திறம்நீ அண்ணா!
அணைச்சொல்லாய் அறிவார்க்கும் நீர்ப்ப ரப்பாய்
அருந்தமிழை அகம்முழுக்க நிறைத்தாய் அண்ணா!
கொடைச்சொல்லாய்க் கலைஞரெனும் நற்றி றத்தைக்
கொற்றவனாய்ப் படைத்தளித்த கோநீ அண்ணா!
விடைச்சொல்லாய்த் தமிழ்நாடு என்ற பேரை
மீட்டெடுத்துத் தாய்மகிழத் தந்தாய் அண்ணா!
மடைச்சொல்லாய் மனுவடைத்த கதவு டைத்து
மதிநிறைக்கக் கல்விதந்த நதிநீ அண்ணா!
படைச்சொல்லாய் அடிமையுற்ற தமிழ ருக்குப்
பகையறுக்கும் பனங்கருக்கு வாள்நீ அண்ணா!
கலைச்சொல்லாய்க் கழகமென்னும் கவிதை தன்னைக்
காவியமாய்ப் படைத்தளித்த கவிநீ அண்ணா!
தலைச்சொல்லாய்த் தலைநிமிர்த்தித் தமிழ ரெல்லாம்
தன்மானம் போற்றவைத்த தலைநீ அண்ணா!
அலைச்சொல்லாய்ப் பெரியாரின் படைக்க ளத்தின்
அணுக்கதிரின் ஆயுதமாய் அமைந்தாய் அண்ணா!
நிலைச்சொல்லாய்த் தமிழேந்தும் நெஞ்ச மெல்லாம்
நீக்கமற நின்றொளிர்வாய் நீயே அண்ணா!
தகைச்சொல்லாய்த் தன்மானம் தமிழர் கொள்ளத்
தத்துவமாய்ப் பெரியார்சொல் உரைத்தாய் அண்ணா!
பகைச்சொல்லாய் ஆரியத்தைப் பதைக்க வைத்துப்
பழமடமைப் புராணத்தோல் உரித்தாய் அண்ணா!
தொகைச்சொல்லாய் உணர்வூடாய் உறைந்தி ருந்து
தூண்டுகோலாய்த் துலங்கவைத்த துணைநீ அண்ணா!
நகைச்சொல்லாய்த் தாழ்ந்திருந்த தமிழி னத்தை
நாடாள உயர்த்திவைத்த நலம்நீ அண்ணா!
எதிர்ச்சொல்லாய் இந்தியினைப் புறம்வி ரட்டி
இருமொழியால் பயிற்றுவித்த எளிமை அண்ணா!
கதிர்ச்சொல்லாய் வடமொழியைக் களையெ டுத்துக்
கனித்தமிழால் அரங்கொளிரக் கதைத்தாய் அண்ணா!
முதிர்ச்சொல்லாய் அவைநின்று திராவி டத்தின்
முகமாகி முழக்கமிட்ட அரிமா அண்ணா!
அதிர்ச்சொல்லாய்ப் பகையணைத்தே ஆட்சி வென்று
அய்யாவின் தாள்படைத்த அடக்கம் அண்ணா!
புறச்சொல்லாய்ப் புன்னகையால் வெம்மை கூட்டிப்
புடைத்தெழும்பும் நரம்பூடாய்ப் பாய்ந்தாய் அண்ணா!
மறச்சொல்லாய் மதிபொதிந்தே மடியா வீரம்
வழிந்தோட வாய்ப்பீந்த சுனைநீ அண்ணா!
திறச்சொல்லாய்த் திராவிடத்தின் திருவி ளக்காய்த்
திக்கெட்டும் புகழ்சமைத்த ஒளிநீ அண்ணா!
அறச்சொல்லாய் அருஞ்சொல்லாய் அகம்நி றைந்தாய்!
அன்னைக்கு நேர்ச்சொல்லாய் நீயே அண்ணா!
அசைச்சொல்லாய் தற்புகழ்ச்சி பேசா தாராய்
அணிசேர்ந்தார்க் கழகூட்டி ஒளிர்ந்தாய் அண்ணா!
திசைச்சொல்லாய்ப் பகைநெஞ்சில் இடம் பிடித்துத்
திராவிடத்தைத் திக்கெட்டும் சேர்த்தாய் அண்ணா!
விசைச்சொல்லாய் தமிழ்ப்படையின் தலைமை யேற்று
வீறுகொண்டு தடைகிழித்து முளைத்தாய் அண்ணா!
இசைச்சொல்லாய்க் கேள்செவியை நனைத்தாய் அண்ணா!
இன்சொல்லின் உறவாகி இனித்தாய் அண்ணா!
கதைச்சொல்லாய்க் காலமதி மறவா திங்கே
கற்சிலையாய்க் கல்வெட்டாய் நிலைத்தாய் அண்ணா!
விதைச்சொல்லாய் நெஞ்சநிலம் விழுந்த வித்தாய்
விழுதுவிட்டு ஆலமெனக் கிளைத்தாய் அண்ணா!
சுதைச்சொல்லாய் ஒளிர்திறத்தால் புகழை வென்றாய்!
சுட்டசங்காய் நெஞ்சமுற்றே மிளிர்ந்தாய் அண்ணா!
உதைச்சொல்லாய்ப் பகைமிரட்டும் பெயர்நீ அண்ணா!
உதிகதிராய்ப் பகையிருளைக் கிழித்தாய் அண்ணா!
திரைச்சொல்லாய் திக்கெல்லாம் பறந்தே நீண்டு
தென்னவரின் திறன்வியக்கச் செய்தாய் அண்ணா!
நரைச்சொல்லாய் நாவினிக்கும் உன்பேர் சொல்ல!
நறுங்குணங்கள் நிறைகூடுன் நெஞ்சே அண்ணா!
பறைச்சொல்லாய் ஆரியத்தின் மாயை நீக்கப்
பழந்தமிழர் மரபிசையாய் ஒலித்தாய் அண்ணா!
துறைச்சொல்லாய்க் கரைவிளக்கம் ஆனாய் அண்ணா!
தொலையாது கரைசேர்த்தாய்! மீண்டோம் அண்ணா!
இடைச்சொல்லாய் இணைந்தெம்மின் பொருண்மை மாற்றி
இனியதொரு மறுமலர்ச்சி தந்தாய் அண்ணா!
உடைச்சொல்லாய் வந்தெம்மின் மானங் காத்தும்
உணர்வூட்டி இழிவெதிர்க்க வைத்தாய் அண்ணா!
குடைச்சொல்லாய் உனைத்தலைமேல் கொண்டோம் நாங்கள்!
குடிகாத்த வெண்கொற்றக் குடைநீ அண்ணா!
நடைச்சொல்லாய் முடம்நீக்கிச் சிறகைத் தந்தாய்
நாற்றிசையும் பறந்துசென்றோம் நாங்கள் அண்ணா! n





